Wednesday 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்



3 comments:

  1. Kishore Mahadevan6 April 2016 at 11:23

    அருமையான கட்டுரை. இரண்டு முறை படித்துவிட்டேன். மீண்டும் படிப்பேன்.

    ஞானதேவதைகள் பற்றிய குறிப்பு அருமை. அமெரிக்காவில் கிறித்துவ மதத்தில் அல்லாத வேறெங்கும் தேவதைகள் (பெண்டிர்) பற்றிய ஐதீகம் இல்லையென்றே நினைத்திருந்தேன்.

    நானும் அமெரிக்காவை நுண்கலை உணர்வோடு காண முயன்றதில்லை. இந்த நுண்கலை எல்லாம் எனக்கு கடந்த சில ஆண்டுகளில் தானே வந்து தொலஞ்சிருக்கு :-) வார இறுதிகளில் உறக்கம், வெட்டி அரட்டை என்று நேரத்தை செலவழித்து (அழித்து) விட்டேன். ஏழெட்டு முறை சிகாகோ சென்றிருப்பினும் அங்குள்ள அருங்காட்சியகங்களை கண்டதில்லை. அடுத்த முறை செல்லும்போது (சென்றால்) இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன் !

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. கோபு, கட்டுரையை படித்தவுடன் பார்க்க வேண்டும் போலுள்ளது. இந்த முறை போக முடியுமா, தெரியவில்லை! முயலுகிறேன்.

    Thanks for the details. Really interesting.

    ReplyDelete