Thursday 15 August 2013

“காணாமல் போன” திரிபுராந்தகீசுவரர் கோவில்

காஞ்சிபுரத்தில் பல கோவில்கள் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களாலோ, அடுத்த சிலநூற்றண்டில் விஜயநகர் மன்னர்களாலோ நாயக்கர்களாலோ கட்டப்பட்டவை. முற்காலத்து செங்கல் கோயிலகளை கற்றளியாய் (கருங்கல் கோயில்களாய்) இம்மன்னர்கள் மாற்றியுள்ளனர். ஆனால் சில 8,9ஆம் நூற்றாண்டு பல்லவ கோவில்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் ஸிவெல் என்ற கலெக்டரால் பாழடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரியா எழுதிய “பல்லவ கட்டடக்கலை” என்ற புத்தகத்தில் இவற்றின் புகைப்படங்களும், சிற்பங்களின் ஓவியங்களும், கோவில் வரைபடங்களும் உள்ளன. நான் பலமுறை இக்கோவில்களுக்கு சென்றுள்ளேன். ஒரு முறை நண்பர் அரவிந்த் வெங்கட்ராமனுடன் சென்று, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், பூட்டியக்கோவில்களை திறக்க, பிறவாதீசுவரர், ஐராவதேசுவரர், முக்தேசுவரர் ஆகிய பல்லவ கோவில்களையும் கண்டேன்.

ரியா புத்தகத்தில் “திரிபுராந்தகீசுவரர் கோவிலை” குறிப்பிட்டு ஆறு ஓவியங்களும் ஒரு புகைப்படமும் தந்துள்ளார். அந்த கோவில் “கச்சப்பேசுவரர் கோவிலிற்கும் பெரிய சிவன் கோவிலிற்கும் (அதாவது ஏகாமரேசுவரர்)” நடுவில் உள்ளதாக குறிப்புள்ளது. ஆனால் திரிபுராந்தகீசுவரர் கோவிலை ஊர் மக்களுக்கும் தெரியாது; சில தொல்லியல் துறையினருக்கும் தெரியவில்லை. அப்பெயரில் ரியா குறிக்கும் தெருக்களில் அப்படி ஒரு கோவிலும் இல்லை. அமரீசுரர், ஜ்வரஹரேசுரர், தான் தோன்றீசுரர் ஆகிய சில சிவன் கோவில்களும், சில முருகன் கோவில், அம்மன் கோவில் போன்றவையும் உள்ளன. இவை எவற்றிலும், அலெக்ஸாண்டர் ரியா புத்தகத்தில் உள்ள சிற்பங்கள் இல்லை.

ஆகஸ்டு 5ஆம் நாள், கச்சப்பேசுரர் தொடங்கி இத்தெருக்களில் அலைய, அமரேசுரர் கோவிலை கண்டேன். இதற்குமுன், உபதலைவர் பரமசிவம் தெருவில் வாசற்கதவு மூடப்பட்ட கோவிலை கண்டு அதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. சுவரை எட்டிபார்த்தால், உடற்பயிற்சி கருவிகள் கோவில் வளாகத்தில் தெரிந்தன, ஆனால் கோவில் சுவர் தெரியவில்லை. இந்த சிறுவீதியில் பல்லவரின் கோவில் இருக்காது என்று எண்ணி மேலும் கீழும் நடக்க, அமரேச்சுரர் கோவில் அடைந்தேன். வாசல் பூட்டியிருந்தது. ஆனால் கோவிலின் வடக்கு சுவரை கம்பிக்கதவு வழியாய் பார்த்தேன். கீழேயுள்ள ரியாவின் வரைப்படத்துடன் ஒப்பிட்டபொழுது, சுவரில்லுள்ள சிற்பங்கள் எல்லாம் அழிந்துவிட்டாலும், விமானம், கோஷ்டம், ஒரத்து யாளிகள், நந்தி மண்டபம், பலிபீடம் இது தான் காணாமல் போன திரிபுராந்தகீசுவரர் என்று எனக்கு தோன்றியது. புகைப்படங்களை கீழே ஆங்கிலப்பதிவில் காணவும்.   கோவில் மூடியிருந்ததால் பின்சுவரையும், தென்சுவரையும் பார்க்கவில்லை, படமெடுக்கவில்லை.

துக்காச்சிக்கோவிலில் சோழர் ஓவியத்தை கண்டுபிடித்த நண்பர் விசுவநாதனுக்கு, படங்களை காட்டினேன். பலமுறை பார்த்தபின் அவரும் அமரேசுவரர் கோவில் தான் திரிபுராந்தகீசுவரர் கோவில் என்ற கருத்தை ஏற்று, இதை வலையில் உடனே பதிவு செய்யச் சொன்னார். மணற்கல்லில் இல்லாமல் செங்கலில் இருப்பதால், தொல்லியல் துறை இதை தன் பாதுகாப்பின் கீழ் கொண்டு வராமல் இருக்கலாம் என்பது அவர் கருத்து.

சிற்பங்கள் சிதைந்தாலும், கோவிலின் அமைப்பு அற்புதம் - பல்லவர்காலத்து அழகு இன்றும் மிளிர்கிறது. அதையாவது, பாதுகாக்க வேண்டும்.


No comments:

Post a Comment