Thursday 1 May 2014

வெள்ளைக்காரரா?

மதுரைக்கு செல்லும் வழியில் விழுப்புரத்திற்கு அருகே உள்ள் சில இடங்களை பார்க்க ஆசை. இவற்றுள் கீழ்வாலை ஒன்று. செஞ்சி செல்லும் வழி. அங்கே பெருங்கற்கால பாறை ஓவியங்கள் உள்ளன. சென்னையிலிருந்து என் கார் எடுத்து நண்பர்கள் விசுவநாதன், கருணாகரனுடன் சென்றேன். மத்திய உணவு அருந்தாமல், வழியில் மரத்தடி கடையில் கேப்பை கூழும் அவித்த கடலையும் சாப்பிட்டோம். நெடுஞ்சாலையோரத்தில் ஒரு வீட்டு வாசலில் காரை நிறுத்தினோம். திரும்பி வந்தால் தரையில் பல மட்டைகள். ”என்ன இது?” சந்தேகமாக பார்த்தேன். ஒரு கறுநிறத்து மூதாட்டி, “தென்னை மட்டை தென்னை மட்டை,” என்றார். தென்னை மட்டை கொஞ்சம் பெரிசாக இருக்குமே என்ற சந்தேக பார்வையை தப்பாக புரிந்துகொண்டார்.

விசுவநாதன்:“தென்னை மட்டையை மூணா வெட்டி காய வைச்சிருக்காங்க.” தமிழில் தான். 

மூதாட்டிக்கு என் மேல் சந்தேகம். “வெள்ளைக்காரரா?” விசுவிடம் வினவினாள். அவர் பல்லிளித்தார். கருணா குலுங்கி சிறித்தார்.

ஒரு கூடை சன்லைட்க்கு மிகவும் நான் குறைச்சல். எந்திரன் ரஜினி, சின்னகௌண்டர் விஜய்காந்த், மூன்றாம் பிறை கமல் அவ்வளவு சிவப்போ வெளுப்போ இல்லை. பாறை ஓவியத்து பாறை நிறம். நான் இப்பெண்மணிக்கு ஜார்ஜ் புஷ் போன்று தெரிந்தது கொஞ்சம் 
விசித்திரமாய் இருந்தது.

விசு : “இல்ல இல்ல நம்ம் ஊர்தான்”.

மூதாட்டி “தமிழ் தெரியாதா?”

கருணாவின் குலுங்கல் அதிகரித்தது.

எனக்கு தெரிந்த தமிழில் கொஞ்சம் பேசி, என் ஆரியத்தன்மையை குறைத்து திராவிட குணத்தை கொடியேற்றினேன். மசியவில்லை மூதாட்டி. கூட்டணித்தலைவரை பார்த்த சுப்ரமண்ய சுவாமி போல், நரேந்திர மோதியை சந்தித்த சாகரிகா கோஷை போல், நவரசத்தில் நான்கைந்து ரசங்கள் அவர் குரலிலும் பாவத்திலும் துடித்தன.

லண்டன் மிடுக்குடன் காரில் ஏறினேன்.

அடுத்த நாள், விழுப்புரத்தில் கைலாசநாதர் கோவில் சென்று வெளியே வரும் போது, ஒரு பிச்சைக்கார மூதாட்டி பின் தொடர்ந்தாள். “சேட்டு, சேட்டு, ரெண்டு ரூபா குடு சேட்டு, நல்லா இருப்ப,” என்றார்.

“கிராமத்திலிருந்து ஊருக்கு வந்தா மரியாதை கெட்டுபோச்சு,” என்றார் கருணா. குலுங்காமல். மதுரை போகும் வழியில் தமிழனாக மாறிவிடுவேனோ என்ற ஏக்கத்துடன் வண்டி ஏறினேன்.

சில மாதங்களுக்கு முன் தென் நெல்லை அருகே திருப்பேரை கோவிலில், அர்ச்சகர் என்னுடன் மராட்டியில் பேசத் தொடங்கினார். கேரளத்தில் ஓரிருவர் எனக்கு தெரியாத ஹிந்தியில் பேச்செழுப்பினர். டெல்லி மிடுக்கு உண்டாகவில்லை.

டெக்ஸாஸில் நான் மெக்ஸிகனாக அவதரித்துள்ளேன். என்னிடம் யாராவது வந்து, மெக்ஸிக மக்கள் பேசும் இஸ்பானிய மொழியில், பேச்செழுப்புவார். ஆங்கிலத்தில் தடுமாரி பதிலுவேன். அவர்கள் என்னை லண்டன் ஆசாமி என்று சந்தேகப்பட்டதில்லை. மற்ற இந்திய நண்பர்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரு வெள்ளைக்கார மாணவி “நீ ஈராக்கா? ஈரானா?” என்று ஒரு முறை கேட்டாள். “இந்தியா,” என்றேன். பல முறை மன்னிப்பு கேட்டாள், இதில் என்ன மன்னிப்பு, தவறு ஒன்றும் இல்லை என்றேன். அவர் விளக்கினார்; ஒரு ஈரானியரை தப்பாக ஈரக்கியரோ என்று கேட்டதால் அவருக்கு தாங்கொணா கோவம் வந்துவிட்டதாம்.

வேறு ஒரு முறை. ஒரு சக மாணவன் வீட்டுக்கு சென்றேன். டெக்ஸாஸ் வெள்ளையன். பேச்சுக்கு நடுவே, “நீ ஹிந்துவா?” என்றான். ஆமாம், என்றேன். “முகமது உங்கள் கடவுளா?” என்றான். இல்லை, என்றேன். “உங்கள் கடவுள் பெயர் என்ன?” என்றான். “பல தெய்வங்கள் உள்ள மதம்,” என்று இழுத்தேன். இது தேராத கேஸ், என்று பரிதாபப்பட்டு விட்டுவிட்டான். 

ஓசாமா பின்லாடனை தேடி, கல்கத்தாவில் அமெரிக்க குண்டு விழாதது பெரும் அதிசயம்.

அரிசோனாவில் வேலை பார்த்த பொழுது, ஃபிலிப்பைன்ஸில் பிறந்து அமெரிக்க குடிமகனாகிய ஒருவர், அதே கம்பெனியில் வேலை பார்த்தார். “ஹிந்துக்கள் கற்களை வழிபடுவீராமே? நிஜமாகவா?” என்றார். “காகிதம், துணி, மாடு, மரம், கார், கம்ப்யூட்டர், புத்தகம், பேனா, செங்கல் எல்லாம் வழிபடுவோம்,” என்றேன். மெக்ஸிகன் மொழியில் பேச்செழுப்பாதது மிச்சம்.

ஒரு முறை, நீச்சல் வகுப்பு ஆசிரியை – என் வயது பெண் – “உன் பெயர் எது  “கோ”வா? “பு” வா?” என்றார். சீனதேசத்தில் பிறந்த மற்றொரு நீச்சல் ஆசரியர் நான் இரும்பு வேகத்தில் நீந்தும் பொழுது, உர்ச்சாக படுத்த, “கோ கோ கோபு” என்பார். இதனால் வந்த வினை.

“என் நிஜப்பெயர் தெய்வசிகாமணி திருஞானசம்பந்தம்,” என்று பதில் சொல்ல ஆசை. அந்த பல்கலைகழகத்தில் ஒரு மாணவருக்கு அந்த பெயர் – அவர் பெயரைக் கண்டால் அமெரிக்க பேராசிரியர்களுக்கு சிம்ம சொப்பனம்.



கீழ்வாலை மூதாட்டி பல நினைவுகளை மறதிக்குழியிலிருந்து தோண்டி எடுத்தார்.

1 comment:

  1. சிறப்பான பதிவு. வயிறு குலுங்க சிரித்தேன். விஸ்‌காந்‌ஸின் மாகாணத்தில் வெள்ளையர்கள் மட்டுமே நிறைந்த ஒரு பகுதியில் ஒருவன் என்னை ஒசாமா என்று அழைத்தான். நான் "ஹெலோ ஹிட்லர்" என்று மரியாதை செய்தேன். அவனுக்கு இரும்பகத்தன்மை புரிந்து மறுமொழி கூறுவான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. :)

    ReplyDelete