Friday 9 May 2014

சொதி சாப்பாடு

நிறத்தில் மோர்குழம்பை போல் இருக்கும். சுவையில் நிகரில்லை. திருநெல்வேலியில், அல்வாவின் முந்தோன்றிய மூத்த குழம்பு: சொதி.

பிராமண குடும்பங்களில் இதெல்லாம் செய்யமாட்டார்கள். ஒன்று, கேள்விபட்டதே கிடையாது. இரண்டு, பூண்டு சேர்க்கமாட்டார்கள். காந்தி தலைமையில் சுதந்திரம் கிடைத்ததோ இல்லையோ, ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெணை வாங்கும் உரிமையோடு, பல பிராமண குடும்பங்களுக்கு, என் பெற்றோரின் தலைமுறைக்கு, 1950-களில் வெங்காயம் சுவைக்கும் உரிமை கிடைத்தது. அப்பொழுதெல்லாம் விசா கிடைக்காமல் பூண்டு வாசலிலேயே காத்து தவம் கிடந்தது.

என் தலைமுறையில், சப்பாத்தி குருமா, சோளே படூரா, சாட், போன்ற பிற்படுத்த வடக்கிந்திய உணவுகளுக்கு உள்ளே வர அனுமதி கிடைத்தது. பாட்டி தலைமுறை வெங்காயத்துக்கே விசா தறவில்லை. ஹிந்து மதத்திலிருந்து காங்கிரஸ் மதத்திற்கு மாறிவிட்ட எங்கள் தாய்தந்தையர் வெங்காய்துக்கு பூனூல் போட்டதை பார்த்து எங்கள் தலைமுறை பூண்டுக்கும் பூணூல் போட்டு பாரதியாரின் கனவை நினைவேற்றினோம். புஹாரி ஹோட்டலில் அக்கௌண்ட் வைத்து அண்டாகுண்டா காலியாக்கும் பிராமணரில் நான் ஒருவன் இல்லை.

ஆனால் உஷாராக 15% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது : வாரம் ஒருமுறைதான் செய்வார்கள். (என் தாய் புஷ்பா, மாசத்துக்கு ஒரு மசாலா தோசை வாங்கித்தருவதும், பக்கத்து வீட்டில் கேட்டு ஏதோ தக்காளி கிச்சடி) அதாவது சாதாரணமாக வீட்டில் செய்யும் சாம்பார், ரசம், கூட்டு வகைகளில் பூண்டு இருக்காது. பூரிக்கு செய்யும் உருளைக்கிழங்கை தவிற, கூட்டுபொரியல் வகைகளில் வெங்காயமும் சேராது.


நண்பர் வெங்கட் இல்லத்தில் முதல் முதல் சாப்பிட்ட பழக்கம். அவர்கள் சைவ பிள்ளைமார். வெங்கட் அம்மா சாரதா. என் தம்பி ஜெயராமன் சிறு வயதில் சாரதா பவனில் தின்று வளர்ந்தவன். நானும் சென்னைக்கு வந்தபின் அவர்கள் வீட்டில் தின்று கொழுத்திருக்கிறேன். பூண்டுள்ள சமையலில் சொதி மிகவும் பிடிக்கும். சொதியும், (garlic bread) கார்லிக் பிரெட்டும் தான் பிடிக்கும் என்று சொல்லலாம் : மற்றபடி எனக்கு பூண்டு பிடிக்காது. குருமாவிலும் புலாவிலும் பொறுத்துக்கொள்வேன்.

சொதியை சோற்றில் கலந்தால் மட்டும் போதாது. உருளைக்கிழங்கு வருவல் கவரி வீச, இஞ்சி சட்டினி உடைவாள் தாங்க, உருளைக்கிழங்கு பொரியல் மௌலி புனைந்தால் மட்டுமே சொதி அறுசுவை அரியணை ஏறும். இந்த பட்டாபிஷேக காட்சியை இந்திரா அம்மா கைவரிசையில் கீழே காணலாம். அவர், சாரதா அம்மாவை கேட்டு செய்தது.

மஞ்சள் நிறத்தில் சொதி; கிண்ணத்தில் இஞ்சி சட்டினி; வெண்டைக்காய் கறியமுது; தக்காளி சாற்றுமமுது; உருளை-வெங்காய மசாலமுது

முதன் முதலில் இந்திரா அம்மா சமையல் செய்ய வந்த பொழுது, பூண்டின்றி ரசமும் (வைணவச்சொல்: சாற்றும் அமுது, சாத்துமது) வெங்காயமின்றி காய்கறிகளும் (வைணவச்சொல்: கறியமுது, கறமது) செய்யவேண்டும் என்று ஆஞ்கை பிறப்பித்தோம். குழப்பத்தோடும் பரிதாபத்தோடும் எங்களை பார்த்தார். இப்பொழுதெல்லாம், சீராமிளகு சாத்துமது, வாழைக்காய் கறமுது  என்று சகஜமாக சொல்கிறார். 

மற்ற சமையல் பதிவுகள்






No comments:

Post a Comment