சீன
தேசத்திலிருந்து பாரதம் வந்த பயணிகள் ஃபாஹியனும், யுவான் சுவாங்கும், முகமது பின் துக்ளக்
ஆட்சி காலத்தில் வந்த அரபு பயணி இபின் பதூதாவும், கடல்வழி வந்த வாஸ்கோ ட காமாவும்,
கொலம்பசும் இந்தியாவில் பள்ளிப் புத்தகங்களிலேயே நமக்கு பழக்கமான பெயர்கள். பின்னர்
தனியாக வரலாறு படித்த நம்மில் சிலருக்கு மார்க்கோ போலோ, அல் பெருணி, டொமிங்கோ பெயஸ்
போன்ற பயணிகளின் பெயர்களும் தெரிந்தவையே. வரலாற்றில் ஆயிரக்கணக்கில் வணிகர்களும் புனித
யாத்திரிகரும், நாடோடியும் இருக்க, இச்சிலரின் பயண நூல்களே அவரவர் புகழுக்கு காரணம்.
சமீபத்தில் காஞ்சியிலிருந்து சீனம் சென்ற போதிதருமரும் பிரபலமாகி வருகிறார்.
டார்வினின் கடற்படை நூலிலிருந்து ஒரு பக்கம் |
மேலுள்ளவரில்
பதூதா இஸ்லாமிய நீதிநூல் பண்டிதர். அதனால் பல நாடுகளில் அவர் காஜி (நீதிபதியாக) பணிபுரிந்தார்.
சீனர் இருவரும் பௌத்த நூல் தேடி வந்தவர். போலோ வணிகர்.
அல்
பெரூணி தனித்து நிற்கிறார். ஏன்? அவர் ஒரு விஞ்ஞானி. அவரது “இந்தியா” நூல் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல.
அது ஒரு அறிவியலாற்றுப்படை.
விஞ்ஞானிகளே
அபூர்வம். அவர்கள் பயணம் செய்வது அதை விட அபூர்வம். அதிலும் பயணநூல் எழுதுவதும், அந்து
இன்றும் நிலைப்பதும் மாபெரும் அபூர்வம். இவ்வகையில் அல் பெரூணி வரண்டக்கடலில் ஒரு தீவாக
திளைக்கிறார்.
பதினேழாம்-பதினெட்டாம்
நூற்றாண்டில் இது மாறியது. ஆங்கில கலபதி ஜேம்ஸ் குக், உலகம் சுற்றிய முதல் விஞ்ஞானி
என்று சொல்லலாம். பிறகு ஜெர்மனியிலுருந்து ஒரு மிகப்பெரிய மேதாவி தென் அமெரிக்காவிற்கு
சென்றார்.
அலெக்ஸாண்டர்
ஃபான் ஹம்போல்ட்! அக்காலத்தில் பல கப்பல் பயணக்கதைகளும் நூல்களும் பிரபலமாயிருந்தாலும்
ஹம்போல்ட் எழுதிய ‘புதியகண்டத்தின் புவிமத்திய
தேச பயணச் சுயசரிதம்’ (Personal Narrative of Voyages to the Equinoctial
Regions) அறிவியல் ஆர்வலருள் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதை படித்தபின் சார்ல்ஸ்
டார்வினுக்கு கடல் பயணம் செய்ய ஆசை மூண்டது. ஆங்கில அரசு அக்காலத்தில் உலகின் எல்லா
நிலங்களையும் சீராக அளந்து வரைபடம் செய்யும் பணியில் இருந்தது. இதற்கு, கேப்டன் ஃபிட்ஸ்ராய்
(Fitzroy) தலைமையில் “பீகிள்” என்ற கப்பலுக்கு நிதியும் கருவிகளும் கொடுத்து, தென்
அமெரிக்காவின் வரைபடம் செய்யும் பணிக்கு அனுப்பியது. மாப்பிள்ளை தோழன் போல் கலபதி தோழன்
என்ற பதவியை உறுவாக்கியது. 1831 ஆண்டு டிசம்பரில் அந்தப்பதவியில் டார்வின் அக்கப்பலில்
சென்று ஐந்தாண்டு கடல் பயணம் செய்தார். பயண நாட்களில் கலபதி கொடுத்த சார்ல்ஸ் லையல்
(Charles Lyell) எழுதிய “புவியியல் அடிப்படைகள்” (Principles of Geology)என்ற நூலை
டார்வின் படித்து, பல நிலங்களை லையலின் தரிசனத்தில் உலகை பார்க்க கற்றுக்கொண்டார்.
அவரது உயிரியல் கருத்துக்கள் உருவாக அந்த தரிசனமே பெரும் அடிப்படையாக விளங்கியது. பூகம்பத்தையும்,
புரட்சிகளும், காட்டுவாசிகளும், புதிய நாகரிகங்களும், எரிமலை தாக்கமும் கண்ணால் கண்டார்.
கடல்வற்றியதால் மாறிய நிலத்தின் அமைப்பை பற்றியும், உயிரினங்களுக்கு இதனால் உருவான
மாற்றங்களையும் அப்பொழுது உணரத்தொடங்கினார்.
டார்வின் நாளேடு குறிப்பு |
இங்கிலாந்து
திரும்பிய பின் “பீகிளில் பயணங்கள்” (Voyages of the Beagle) என்ற ஒரு நூலை எழுதினார்.
தன் முன்னோடி ஹம்போல்ட்டின் நூலைப்போலவே டார்வினின் நூலும் புகழ்பெற்று, மற்ற விஞ்ஞானிகளை
பயணம் மேற்கொள்ள தூண்டியது. டார்வினின் கடல் பயணத்தையும், இவ்வகையில் பயணித்தவரில்
மூவரின் பயணத்தையும் “டார்வினின் கடற்படை”(Darwin’s Armada) என்ற ஐயன் மெக்கல்மான்
(Iain McCalman) நூல் வர்ணிக்கிறது. ஜோசஃப் ஹுக்கர் (Joseph Hooker), தாமஸ் ஹக்ஸ்லி
(Thomas Huxley), ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்(Alfred Russel Wallace), ஆகிய இம்மூவரின்
ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சி விதிகளின் அஸ்திவாரமாக விளங்கின.
டார்வின்
ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசு. மற்றமூவரும் அப்படியில்லை. அவர் ஓவ்வொருவரின் கதையும்,
பயணமும், பணியும், ஆய்வும் வியப்பூட்டுபவை. ஹுக்கர் தாவரவியல் மேதை. டார்வின் தென்
அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சென்றார். ஹுக்கரோ ஜேம்ஸ் ராஸ் (Captain James
Ross) என்ற புகழ்பெற்ற கலபதியின் கப்பலில் அண்டார்ட்டிக்காவிற்கும் “வாட்டும் தனிமைத்தீவு”
என்றழைக்கப்பட்ட கெர்கூலன் தீவிற்கும் பின் ஆஸ்திரேலியாவிற்கும் சென்று தனக்குமுன்
எந்த விஞ்ஞானியும் பார்க்காத செடிகளையும் பாசிகளையும் கடவாழ் ஜந்துக்களையும் பார்த்தும்
சேகரித்தும், வித்தியாசமான ஆய்வுகளை செய்தவர். கலபதி ராஸ் காந்த வட துருவத்தில் கொடி
நாட்ட முதல் மனிதர் என்பதும், பூகாந்த கோட்பாடுகளை ஆய்வதிலும் காந்த தென்துருவத்தில்
கால்வைக்கும் ஆவலிலும் செயல்பட்ட விஞ்ஞானி எனபது குறிப்பிடத்தக்கது.
ஹக்ஸ்லி
பிற்காலத்தில் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் நடுவான “அறியாநிலை”
(Agnosticism) என்ற கோட்பாட்டை போதித்தவர். கட்டுரை எழுதியும் உரைகள் நடத்தியும் ஒரு
முக்கிய அறிவுஜீவியாக செயல்பட்டவர். கடல்வாழ் ஜந்துகளை சேகரித்து பல ஆய்வுகளை செய்த
இவர், வடகிழக்கு ஆஸ்திரேலியாவிலும் புதுகினி தீவுகளிலும் வீரபிரதாபங்களை செய்து, ஒரு
அட்டகாசமான் காவியக்காதல் கதையை வாழ்ந்து, பிற்காலத்தில் டார்வினின் கொள்கை பிரச்சார
பீரங்கியாக புகழ்பெற்றார்.
சார்ல்ஸ் டார்வின் - ஆல்ஃப்ரட் வாலஸ் |
வாலஸ்
பெயரை என் வலைப்பதிவிற்கு சூட்டியுள்ளேன். அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளென்.
மேலும் பல எழுதுவேன். 1836 இல் இங்கிலாந்து
திரும்பிய டார்வின், அடுத்த இருபது ஆண்டுகளக்கும் தன் “பரிணாம வளர்ச்சி” கொள்கையை ரகசியமாகவே
வைத்திருந்தார். லையலையும் ஹுக்கரையும் பிரியா நண்பராய் கொண்டு அவர்களைப்போல் சிலருடன்
மட்டுமே இதை பகிர்ந்த்துகொண்டார். அக்கொள்கையை நூலாய் வெளிவிடும் முன் அசைக்கமுடியாத
ஆதாரங்கள் வேண்டும் என்று எண்ணி, இருபது ஆண்டுகள் ஆய்வு செய்து ருசுக்களை சேகரித்தார்.
1859இல் இந்தொனீசியாவிலிருந்த வாலஸ் ஒரு கட்டுரையை டார்வினுக்கு அனுப்பி கருத்துக்கோரினார்.
தான் இருபது வருடம் காத்து வளர்த்து பெருநூல் தொகுப்பாக வெளியிட விரும்பிய தத்துவத்தை,
ரத்தினச்சுருக்கமாய் ஒரு கட்டுரையில் வாலஸ் எழுதியதை கண்டு, இடி தாக்கியது போல் மனமுடைந்து
போனார் டார்வின். நண்பர்கள் லையலும் ஹுக்கரும் ஒரு சமரச யுக்தி செய்து டார்வின், வாலஸ்
இருவரும் எழுதியதாக ஒரு கட்டுரையை லின்னேயன் சங்கத்தில் வாசித்தனர். இதன் பின்னரே டார்வினின்
பரிணாம வளர்ச்சி இன்று நாம் அழைக்கும் விதி, “இயற்கையின் தேர்வு முறையால் தோன்றிய்
உயிரின வகைகள்” (On the Origin of the Species by means of Natural Selection) என்ற
தலைப்பில் வெளிவந்து உலக சரித்திரம் படைத்தது.
டார்வினை
அறைகுறையாக அறிந்த வாசகரும் அறிவியல் ஆர்வலரும் இம்மூவரை பற்றி பெரிதும் கேள்விப்பட்டிருக்க
மாட்டார். நால்வர் பயணக்கதையையும் சொல்லும் “டார்வினின் கடற்படை” நான் மிகவும் ரசித்து
படித்த நூல்.
அக்டோபர்
8, புதன் கிழமை, இந்நூலை தியாகராய நகரில் தக்கர் பாபா பள்ளியில், காந்தி நிலையத்தில்
நான் மாலை 6:45 மணிக்கு விமரிசனம் செய்கிறேன். அனைவரும் வருக.
No comments:
Post a Comment