Monday 10 November 2014

தும்பியின் ஏளனம்

நெய்தல் மலர்


வாரிதி விளிம்பின் வைகல் எழுமுன்
காரிருட் கங்குல் படகே செலுத்தி
நெடுவலை வீசி பரிதியோன் அள்ள
நெய்தல் பிரிந்த மீனவ நண்ப
நெய்தலும் பரிதியும் நன்னிலத்து உளதே
மீனொடு மீண்டு நுன்குடி புகுமுன்
தேனொடு மீள்வோம் யாமே மீனவன்

குறிப்பு

கேரள மாநிலத்து வயநாட்டில்  தாய்லாந்து என்னும் ஷியாம தேசத்து பட்டயா அமரி ஒஷன் சத்திரத்தில் (Hotel Amari Ocean Pattaya Thailand)கண்ட ஆம்பல் மலரின் இந்த புகை(எண்ணிம? digital) படத்தை முகநூலில்(ஃபேஸ்புக்) ஆழ்வார்ப்பேட்டைவாசி விகே ஸ்ரீநிவாசன் பகிர்ந்திருந்தார். ஒரு கவிதை தோன்றியது. இந்த மலரின் பெயர் அறிய பழனியப்பன் வைரத்தின் கற்கநிற்க வலைப்பதிவை தேடினேன். ஆம்பலுக்கு நெய்தல் என்ற பெயரும் உள்ளதை கண்டதும் ஒரு சிலேடையும் எண்ணத்தில் உதித்தது. பள்ளிப்பருவத்தில் தமிழ்ப்பால், குறிப்பாக தமிழ்கவிதைப்பால், காதலும் ரசனையும் வளர்த்த மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி தமிழ் ஆசிரியர் வசந்தகுமாரிக்கும், கல்லூரி நாட்களில் தங்கள் தமிழ் ரசனையால் என் தமிழ் ரசனையை வளர்த்த திருவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரி சக மாணவருக்கும், சங்ககால கவிதையின் நுட்பத்தையும் இயக்கத்திறனையும் உவமையையும் விளக்கிய ஜெயமோகனுக்கும், இக்கவிதை சமர்ப்பணம்.

படத்தை பயனிக்க அனுமதி தந்த விகே ஸ்ரீநிவாசனுக்கும், கவிதையை மிகவும் ரசித்த கீதா சுதர்ஷனத்துக்கும் நன்றி.

திருத்தம்
கேரளத்து வயநாட்டில் பல நெய்தல் மலர்களை சத்திரத்தில் கண்டினும் களித்தினும் க்ளிக்கினும், இந்த நெய்தல் மலர் தாய்லாந்து விடுதியில் கண்டதென நண்பர் விகே ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். ஷியாமதேசத்தை பற்றி இப்படி எதிர்பாராமல் வாய்ப்பு அமைந்தது!

மற்ற கவிதைகள்
1. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை
2. சொல்லணிக் கொன்றை
3. செல்வத்துள் செல்வம்
4. மல்லை சிற்பியர் வாழ்த்து
5. வராஹமிஹிரரின் அகத்தியர் துதி

4 comments:

  1. அன்புடையீர்,
    படம் அற்புதமாக உள்ளது. திரு வி.கே ஸ்ரீனிவாசனுக்கு நன்றி. கவிதை சிறப்பாக உள்ளது.தமிழ் இலக்கணம் தெரியாது. ஆகவே கவிதையை என்னால் விமரிசிக்க இயலாது. சங்க காலத்து நூல்களில் உள்ளது போலவே உள்ளது என்று மட்டும் என்னால் சொல்ல இயலும். தங்களது இப்பதிவு மூலம் பழனியப்பன் வைரம் அவர்களின் வலைப்பதிவுக்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. தங்களது பதிவுகளை அவ்வப்போது படிப்பது உண்டு. நல்ல தரமான வலைப்பதிவு என்று சொல்வேன்.
    ராமதுரை (அறிவியல்புரம்)

    ReplyDelete
  2. ராமதுரை ஐயா,

    கவிதையை நீங்கள் ரசித்ததில் சந்தோஷம். நான் இலக்கணம் பார்த்து எழுதவில்லை, இலக்கணச் சாயலையும் இலக்கிய சாயலையும் முயற்சித்துள்ளேன், அவ்வளவே.

    இந்த வலைப்பதிவை நீங்கள் படிப்பது தெரியும். தேம்ஸ் கூவம் பதிவில் பின்கருத்திட்டுள்ளதை படித்தேன். பாராட்டுக்கு நன்றி. எழுதும் பொழிதின் பெரிதுவக்கும் தன்பதிவை படித்தேன் எனகேட்ட தாய்.

    ReplyDelete
  3. பூப்பூவாய்ப் பலதாவும்
    வண்டல்ல நின் கேண்மை.
    கார்க்கடலில் படகேறும்
    வலையல்ல நின்கருவி
    நீர்நிலை வற்றிட்டும்
    நின்றுறவு பேணும்
    கொட்டியும் ஆம்பலும்
    நெய்தலே நின்தலை.


    ReplyDelete
    Replies
    1. அற்புதம். கவிதைக்கு கவிதையாக பின்பதிவு. நல்ல வாழ்த்துக்கு நன்றி. (அடுத்த முறை பெயரையும் தெரிவிக்கவும்)

      Delete