பிறவாமை
நன்று, பிறந்தால் உன்னை மறவாமை நன்று என்று ஔவை சிவனிடம் வேண்டுவதாக திருவிளையாடல்
சினிமா வசனம் நினைவிருக்கலாம்.
தீண்டாமை ஒழிப்பது நன்று, ஊரெங்கும் தோண்டாமை நன்று.
பாதாள குழாய்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் பாதாள சாக்கடைகள் கட்டி
அதனால் காலரா போன்ற வியாதிகளும் குறைந்ததால் சென்னையிலும் பாதாள சாக்கடை அமைக்க அக்காலத்து மதறாஸ்
ராஜதானி அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து பாரதத்தில் எங்கும், முதலில்
பெருநகரங்களிலும், பின்னர் மற்ற நகரங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள்
தொடங்கின.
இன்று
2016ஆம் ஆண்டிலும் பல நகரங்களில் தெரு ஓரங்களில் திறந்த சாக்கடைகளை பல நகரங்களில் காணலாம்.
மழைநீர் வடியவும் இல்லங்களின் கழிவு பொருட்களையும் இவையே அகற்றுகின்றன. சென்னையில்
மட்டும், குடிநீர் கொண்டுவரும் குழாய்களும், மழைநீர் வடியும் குழாய்களும், தனியாக சாக்கடை குழாய்களும் சாலைகளின் கீழே தோண்டி நிறுவப்பட்டவை.
எப்பொழுதாவது இவை உடைந்து குடிநீர் குழாய்களில் சாக்கடைநீர் வரும் அவலமும் புதிதல்ல.
செய்திகளையும்
வரலாற்றையும் விட நாம் கதைகளில் ஆர்வமும் ஈடுபாடுமுள்ளவர் என்பதால், அசோகமித்திரனின்
தண்ணீர் கதையில் இச்சம்பவங்கள் வரும் என்றும்
வாசகரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரம்ப
காலத்தில் மின்சார கம்பிகளும், தொலைப்பேசி கம்பிகளும், தெருவோர கம்பங்களில் பூட்டப்பட்டன.
பின்னர் இவையும் பாதாள குழாய்களில் புதைக்கப்படன. இணையதளத்துக்கான கண்ணாடிகம்பி குழாய்களும்
அவ்வாறே. கேபிள் டிவி கம்பிகள் மட்டுமே மரங்களை தழுவிக்கொண்டு கோலோச்சுகின்றன.
புதிதாக
சாலை போட்டால் சில நாட்களிலேயே அங்கே மின்சாரத்துறையோ தொலைப்பேசித் துறையோ குடிநீர்
சாக்கடை துறையோ அங்கும் தோண்டி சாலையை பாழாக்கும் என்பது இந்திய ஜனநாயக மரபு. ஒப்பந்த
நிறுவனங்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆதியோரின் கிம்பளத்தில் இது முக்கிய பங்கு
என்பது மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள யதார்த்தம்.
எந்த சாதி?
சாக்கடைகளை
கழுவ துப்புறவு தொழிலார் இறங்குவதும், அவ்வப்போது ஓரிருவர் விஷவாயுகளால் இறப்பதும்
சோகமான யதார்த்தங்கள். . நாவல்கள் கிடக்கட்டும், அசோகமித்திரன் எழுதாத பல சினிமாக்களிலும்
இச்சம்பவங்களுள்ளன.
சில
சாதி மக்களே சாக்கடையில் இறங்கி பணிசெய்வார்கள் – அவர்களை பற்றிய புள்ளிவிவரம் நாளிதழ்களிலோ
பத்திரிகைகளிலோ என்றும் அச்சிடப்படாது; ஆனால் அவர்களெல்லாம் பட்டியல் சாதியகள் என்பது
அனைவரின் பொது நம்பிக்கை. சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் மேல் சாதிகளை குறிப்பாக பிராமணர்களை
பழி சொல்ல ஒரு முக்கிய காரணமும் இதுவே.
ஒரு
கேள்வி மட்டும் எழுவதில்லை. மேலைநாடுகளில் பாதாள சாக்கடையில் யாரும் இறங்குவதோ உடல்நனைத்து
வியாதியால் தவிப்பதோ விஷவாயுவால் இறப்பதோ நாம் கேள்விப்படுவதேயில்லை. அதே போல் பாரதத்தில்
தோண்டுவதே என் பிறப்புரிமை என்று பலரும் நம்புவது ஏன்? கூடவே நின்று குழிபறித்தால்
அவன் துரோகி. கூலி வாங்கி குழிபறித்தால் அது அரசாங்கம்.
நம்
நாளிதழ்களிலும் (உலகெங்கும் தான்) தொலைகாட்சி செய்தியிலும் வரும் செய்திகளை விட வராத
செய்திகளே முக்கியமானவை என்று தோன்றுகிறது. ஓரளவுக்கு மேல் மனிதர்களால் உண்மையை தாங்கிக்கொள்ளமுடியாது
என்று டி.எஸ்.எலியட் சொன்னார். நாள்தோரும் உணர்கிறேன்.
காணாத காட்சிகள்
நான்
அமெரிக்காவில் 1991 முதல் 2000 வரை ஒன்பது வருடங்கள் வாழ்ந்தேன். அந்நாட்டிலுள்ள சாலைகளின்
தூய்மையை நாம் சினிமாவில் பார்த்துள்ளோம். அது மக்களின் ஒழுக்கம் மட்டுமல்ல. அங்கு
சாலை பணி நடந்தால் சரியாக நடப்பதும், தோண்டி புதைகுழிகளை வைக்காமல் விடுவதும் ஒரு காரணம்.
அகலமான சாலைகளையும் அகலமான நடைபாதைகளையும் காணும் போது நம்நாட்டில் இல்லையே என்று ஒரு
ஏக்கம் வரும். தலை வெட்கி குனியும்.
சான் ஃபிரான்சிஸ்கோ - அகல சாலை |
ஃபிலடெல்ஃபியா - சாலையில் பாதாள மூடிகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ - அகலமான நடைபாதை |
1991-2000 காலத்தில் பெரும்பாலும் கேமரா வைத்திருக்கவில்லை. இணையதளமோ வலைப்பூவோ முகநூலோ இல்லை. 2015இல் சுற்றுலா சென்றபொழுது கையில் செல்போன், கேமரா, நடக்கும் பாதைகளில் நடைபாதைகளிலும் சாலைகளிலும் புதைக்கப்பட்ட பாதாள சாக்கடைகளின் மூடிகளை படமெடுத்தேன். அந்நாட்டில் எங்கும் கையில் கடபாரையுடன் ஒருவரையும் காணமுடியாது. சாலைகளில் கொப்பளித்து நிற்கும் சாக்கடை மூடிகளோ, அவலமான நடைபாதைகளோ, ஒன்றும் இல்லை.
இத்தனைக்கும் தொலைபேசி மின்சாரம் இணையதள குழாய்கள் எல்லாம் குடிநீர் சாக்கடை குழாய்களை போல் பாதாள வழியே உள்ளன. பல ஊர்களில் இல்லங்களுக்கு சமையல் எரிவாயு கூட பாதாள குழாய்கள் வழியாகவே வரும். உதாரணத்திற்கு, இந்த படம் – சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நடைபாதையில் தண்ணீர், மின்சாரம், எரிவாயு, தொலைகாட்சி குழாய்களின் நுழைவாயில் மூடிகளை காணலாம்.
சான் ஃபிரான்சிஸ்கோ - நடைபாதையில் பாதாள குழாய்களின் மூடிகள் |
SFWD – San Francsico Water Department – சான் பிரான்சிஸ்கோ குடிநீர் வாரியம்
PG&E Pacific Gas & Electric – பசிஃபிக் கேஸ் & எலெக்ட்ரிக் (தனியார் கம்பெனி)
Street Lighting – நகராட்சியின் தெருவிளக்கு வாரியம்
நகராட்சிகளும் ஊராட்சிகளும் அமெரிக்காவிலெங்கும் சிறப்பாகவே இவற்றை செய்கின்றன. நீட்டி நிற்கும் குழாய்கள், மின்சார கம்பிகள், சாலைக்கு அம்மைவந்தது போல் கொப்பளித்து நிற்கும் சிமெண்ட் மூடிகள், திறந்து வைக்கப்பட்டுள்ள மூடிகள் இதை எங்குமே காணமுடியாது. நகரங்களில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களிலும் இதை காணலாம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மழைநீர் வடிகால பாதாள குழாய் மூடியில் பலகலைகழகப்பெயர் உள்ளது. இது ஒரு தனியார் பல்கலைகழகம். டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலைகழகத்தில் புல்வெளியில் கூட பாதாள குழாய் மூடிகள் சீராக உள்ளன.
இதெல்லாம் பாரதத்தில் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம் - பாதாள மழைநீர் குழாய் மூடி |
டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம் - புல்வெளியில் பாதாள மூடிகள் |
அட்லாண்டாவில் ஒரு படம். மழைநீர் வடிய சாலையோரம் எவ்வளவு லாவகமாக நடைபாதைகளில் வழிவகுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களும் அரசு வாரியங்களும் ஒத்துழைத்து சீராகவே செய்துள்ளனர்.
அட்லாண்டா - மழைநீர் வடிகால் வழி |
அமெரிக்கா பணக்கார நாடு, இந்தியா ஏழை நாடு என்ற வாதத்தை இவ்விஷயத்தில் நான் ஏற்க தயாராகயில்லை. இந்தியாவில் செல்போன்கள் (அறுபது கோடி செல்போன்கள்) கழிவறைகளை மிஞ்சிவிட்டன என்பவர், இந்திய செல்போன்கள் அமெரிக்க செல்போன்களை மிஞ்சிவிட்டன் என்று சொல்வதில்லை. அமெரிக்க ஜனத்தொகை சுமார் முப்பது கோடி. ஆளுக்கு இரண்டு செல்போன் வைத்திருந்தால்கூட, இந்திய செல்போன் எண்ணிக்கை அமெரிக்காவை மிஞ்சிவிட்டது. அறுபது கோடி மக்களுக்கு செல்போன் வசதி செய்து தர திறனுள்ள நாட்டிற்கா கம்பிகளை புதைக்கவும், குழாய்களை பழுதாகாமல் காக்கவும் திறமையில்லை? ஊழல் அமெரிக்காவிலும் பரவியே உள்ளது. இல்லினாய் மாநிலத்து நான்கு ஆளுநர்கள் ஊழல் செய்ததால் சிறையிலுள்ளனர். முட்டாள்கள் – சட்டம்போட்டு ஊழல் செய்வதே அமெரிக்காவில் சிறந்த ஊழல் வழி. பரவலாகவே நடக்கிறது. ஆனால் என்ன ஊழல் செய்தாலும் தோண்டாமை பலமாக உள்ளது. தீண்டாமை இல்லை.
இங்கு தீண்டாமையை எதிர்த்து கர்ஜிப்போர் எவரும் தோண்டாமையை கிசுகிசுப்பதில்லை.
நரேகா - மன்ரேகா
மன்மோகன் சிங் அரசு கிராமப்புர வறுமையை ஒழிக்கவும், ஏதோ வேலை அமைக்கவும் ஜான் மேனார்ட் கீன்ஸின் கொள்கையை பின்பற்றி, ஜான் ட்ரீஸ் அறிவுறையில் தேசிய கிராமிய வேலை உறுதி சட்டமும் திட்டமும் – National Rural Employment Guarantee Act (NaREGA) நரேகா - வகுத்தது. பின்னர் இதற்கு மகாத்மா காந்தியின் பெயர்வைக்கப்பட்டு, (Mahatma Gandhi NREGA = MaNREGA) மன்ரேகா ஆனது. பஞ்ச காலத்தில் இவ்வகை திட்டங்கள் நியாயமானவை – பக்கிங்ஹாம் கால்வாய் கட்டியதும் அக்காலத்து பஞ்ச நிவாரண திட்டமே. இதை பற்றி நரசையா எழுதிவருகிறார். (பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு ஏமாற்று வேலை என்று ஜெயமோகன் கூறுகிறார். இதை நான் ஏற்கவில்லை.) 1929 இல் அமெரிக்காவில் நடந்த பொருளாதார சரிவை ஈடுகட்ட கீன்ஸ் சித்தாந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூசவெல்ட் இவ்வழியில் பல திட்டங்களை வகுத்தார். “வெறும் குழியை தோண்டி, மீண்டும் அதை மூட வேலை கொடுத்து, அதற்கு சம்பளம் கொடுத்தும், பஞ்ச நிவாரணம் செய்யலாம்,” என்பது கீன்ஸின் வாதம்.
ஆனால் மன்ரேகா பஞ்ச நிவாரண திட்டமல்ல. வேலையின்மை நிவாரணம்; வருமான குறைவு நிவாரணம்; விலைவாசி ஏற்ற நிவாரணம். கிராம மக்கள் நகரங்களுக்கு குடிபெயராமல் கிராமங்களிலேயே வாழ ஒரு திட்டம்.
2014இல் ஆட்சிக்கு வந்தபின் இத்திட்டத்தை நரேந்திர மோதி கிண்டல் செய்தார். “அறுபது ஆண்டு சுதந்திரத்திற்கு பின் குழி தோண்ட கூலி தருவதே உங்களால் முடிந்த சாதனை அல்லவா,” என்று காங்கிரஸை மக்களவையில் கடிந்தார். ஆனால் 2016 நிதி அறிக்கையில் இந்த மன்ரேகா திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்கியுள்ளார்.
வரப்புயர என்றாள் ஔவை. குழி தோண்டுக என்கிறது ஜனநாயகம்.
வரப்புயர என்றாள் ஔவை. குழி தோண்டுக என்கிறது ஜனநாயகம்.
இது மோதியின் திறமையின்மையாக இருக்கலாம். ஆனால் அதைவிட பெரிய ஒரு கசப்பான உண்மை என்று நான் நினைக்கிறேன். ஒரு சில கோடி மக்களுக்கு இதை போன்ற கடினமான கைக்கூலி தொழிலை தவிற வேறு எதுவும் செய்ய திறமையில்லையோ என்று அஞ்சுகிறேன். இல்லை மற்ற திறமைகளை வளர்க்க பொறுமையில்லையோ? அது போன்ற திறமைகளை கற்றுக்கொள்ள வாய்ப்புகளோ வசதிகளோ இல்லையோ? தொழில்நுடபத்தின் அதிவேக முன்னேற்றங்களால், அப்படி தொழிற்கல்வி பெற்றாலும், அது குறுகிய காலத்தில் காலாவதியாகி, வீண்செலவாக மட்டுமே இருக்குமா? தெரியவில்லை.
ஆனால் நகரங்களில் சாக்கடைகளில் குளிப்பதும் விஷவாயுவில் துப்புறவு தொழிலார் உயிரிழப்பதும் சாதியினால் மட்டுமல்ல. சாதி அரசியல் செய்வோருக்கு இது வசதியற்ற உண்மை. இதை பேசாதது அரசின், செய்தியாளரின், நிர்வாகத்தின், அறிவுஜீவிகளின், சமுதாயத்தின் அபார போலித்தனம்.
சுருக்கமாக, தோண்டாமை வந்தால் தீண்டாமையின் ஒரு அம்சம் போகும் என்பது என் வாதம். ஆனால் தீண்டாமை ஒழிந்தாலும் தோண்டாமை விடியாது என்பது என் சந்தேகம். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் தோண்டி நிரப்புவரின் பெருஞ்செல்வம், 2ஜி, 3ஜி ஊழலில் பேசப்பட்டதை விட பெரும் தொகை என்பது என் கணிப்பு.
ஊழல் எழுப்பும் ஆத்திரத்தை யதார்த்தம் தூண்டுவதில்லை.
ஊழல் எழுப்பும் ஆத்திரத்தை யதார்த்தம் தூண்டுவதில்லை.
பாதாள சாக்கடை மூடிகளை நான் எப்போதும் கவனிப்பேன். அவை, ஒன்று சாலையைவிட அரை அடி உயரமாக இருக்கும், அல்லது சாலையைவிட அரை அடி பள்ளமாக இருக்கும்! ந்ம்மால் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப முடியும், பச்சிளம் சிசுவுக்கு சிக்கலான அறுவைச்சிகிச்சைகளை அனாயாசமாக செய்ய முடியும்; அதேசமயம் தரையோடு தரையாக அமைந்த, இடறாத, நேர்த்தியான சாக்கடை மூடிகளை நம்மால் ஏன் போட முடியவில்லை என்பது என்னை எப்போதும் அழைக்கழிக்கும் கேள்வி. அதே கவலையைப் பட இன்னொருவர் இருக்கிறார் என்பது இப்போதைய ஆறுதல் :)
ReplyDeleteசரவணன்