Friday 22 April 2022

ஒளி பெருக வீழ்ந்த மரக்கிளைகள்

நேற்று நான் வசிக்கும் கங்காநகர் தெருக்களில் சென்னை மாநகராட்சியால் சில மரக்கிளைகள் வெட்டப்பட்டன. கோடைக்காலம் தொடங்குகிறது, ஏன் நிழல் தரும்மரங்களை வெட்டுகிறீர்கள், என்று அவர்களை கேட்டப்பொழுது, “உங்கள் காலனியில் வசிப்பவர் ஒருவர் அரசாங்கத்திற்கு மனுகொடுத்துள்ளார். இந்த மரக்கிளைகளால் தெருவிளக்கின் வெளிச்சம் மறைக்கப்படுகிறது. அதனால் மரக்கிளைகளை வெட்ட எங்களுக்கு ஆணை,” என்று விளக்கி, ஒரு மாமரத்தில் சில கிளைகளை வெட்ட, கீழே இருந்த என் காரை நகர்த்தச் சொன்னார்.

தெரு விளக்கு ஒளி கிடைக்க வெட்டப்பட்ட மரக்கிளைகள்





அவர் காட்டிய மாமர கிளைகள் ஒரு விளக்கின் ஓரம் இருந்தாலம், மரத்தின் மறுபக்கம் இருந்த விளக்கில் அந்த இடம் நல்ல வெளிச்சத்திலேயே இருக்கும். இதை சுட்டிக்காட்டிய போது, கவுன்சிலர் இப்போது தான் இதை வெட்ட சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு, அவர் ஆட்களை மரம் வெட்ட ஆணையிட்டார். மற்ற தொண்டர்கள் என்னை நேராக முகம் சந்திக்கவில்லை. வெட்டியவுடன் அந்த இயந்திரத்தின் மேலே இருந்தவர் லேசாக புன்னகைத்து, அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு, இயந்திர வாகனத்தோடு நகர்ந்துவிட்டனர்.


நாற்பது வருடங்களாக எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த தெருவிளக்கும் ஒரு வேப்பமர-புங்கைமர ஜோடியின் கிளைகளுக்கிடையே ஒளிவீசும். வார்தா புயலில் பாதி மரம்; 2021 புயலில் மீதி மரம் விழுந்துவிட்டது; மிஞ்சி நின்றது பின்னர் வெட்டி எடுத்து செல்லப்பட்டது.


ஜூலை 2021 வெட்டப்பட்ட மரக்கிளைகள்


2015ல் மரக்கிளை வெட்டும் முன்

சில மாதங்களுக்கு முன் எங்கள் தெருவிலிருந்த இரு மரங்களை இதேபோல் வெட்டினார்கள். அப்பொழுது நான் கேட்ட பொழுது, பழைய சாலையை பெயர்த்து புதிய சாலை போடும் இயந்திரம் நுழைய இந்த மரக்கிளைகள் தடையாக இருப்பதாகவும், அந்த இயந்திரம் நுழைய மரக்கிளைகளை வெட்டவேண்டும் என்றும் கூறினர். சாலைகள் சிறப்பாக போடப்பட்டன; அந்த மரமில்லா இடம் நிழலில்லாமல அகன்று தெரிகிறது.

நாற்பது ஆண்டுகளாக எங்கள் தெருவில் இருளினால் எந்த அசம்பாவிதமும் நடந்த நினைவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

அனுபவ கட்டுரைகள் - என் சரிதம்


No comments:

Post a Comment