Friday 6 February 2015

தனி ஒரு மொழி


கிறுத்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த இத்தாலிய பாதிரியார் கான்ஸ்டாண்டைன் பெஸ்ஷி, தமிழை ஆழ்ந்து கற்று, ஆய்ந்து, தேம்பாவணி என்று ஒரு காவியத்தை படைத்து, விவிலியத்தை தமிழுக்கு அளித்து, உயிர்மெய் நெடில்களுக்கு தனிவடிவமும் கொடுத்த மாபெரும் சாதனையாளர். பள்ளியில் தமிழ் படித்த பலருக்கு இது தெரியும், சிலருக்கு நினைவிலும் இருக்கும். இவருக்கு பின் வந்த ஆங்கிலேய பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி குடும்ப இலக்கண நூலை படைத்ததும் தமிழ்பேசும் நல்லுலகம் அறிந்ததே. முன்னூறு நானூறு ஆண்டுகளாக ஐரோப்பிய அமெரிக்க பாதிரியார்கள் உலகெங்கும் கிறுத்துவ மதப்பணி செய்ய பரவியதும், ஆப்பிரிக்க அமெரிக்க ஆஸ்திரேலிய ஆசிய பழங்குடி மக்களிடையே மதப்பணி செய்வதும் உலகறிந்தது.

மதப்பணி மொழிப்பணியாக மாறிய வரலாறு இன்றும் தொடருகிறது.

பிரேஸில் நாட்டின் சில காட்டுவாசி மக்களும் புதுகினியில் சில காட்டுவாசி மக்களும் இன்றும் உலகமயமாக்கத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளவர். கிறுத்தவ பாதிரியார்களின் ஆர்வத்தையும், மொழியியல் மனிதவியல் ஆய்வாளரின் ஆர்வத்தையும் இம்மக்கட் குழுக்களும் இனங்களும் கவர்ந்து வருகின்றன. வெரியர் எல்வின் சிலருக்கு ஞாபகம் வரலாம். (ஆங்கிலத்தில் ராமசந்திர குஹாவும், தமிழில் சிட்டி சுந்தரராஜனும் வெரியர் எல்வினை பற்றி நூல் எழுதியுள்ளனர் – இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை)

பிரஹா என்ற பிரேஸில் நாட்டு காட்டுவாசி மக்களின் மொழி இதுவரை மொழியியல் ஆய்வாளருக்கு புதிராக இருந்தது. அந்த மொழியை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று திணறி நின்றனர். எப்படியோ புரிந்துகொண்டு விவிலியத்தை அம்மொழியில் எழுதி மதப்பணி செய்ய, டேனியல் எவரெட் என்பவர் ஒப்புக்கொண்டார். மொழியியல் என்ற துறை இருப்பதே அவருக்கு அப்பொழுது தான் தெரியும். மதப்பணி செய்யும் ஆர்வர்த்தில் கல்லூரியில் சேர்ந்து மொழியியலில் துரையில் பட்டம் வாங்கி, பிரஹா மக்களுடன் 1977ஆம் ஆண்டு வாழச் சென்றார்.

மதப்பணியை விட அவருக்கு மொழியியலே ஆர்வம் தூண்டியது. மத நம்பிக்கை இழந்தார். நாத்திகரானார். இவ்வகை மனமாற்றம் புதிதல்ல – கிறுத்துவ பாதிரியாக விரும்பி, ஏதேதோ படித்து, நாடும் நகரமும் திரிந்து, பல புதிய கலாச்சார விஞ்ஞான பொருளாதார கருத்தக்களை புரிந்துகொண்டு நாத்திகராக மாறியவர்கள் தாம் இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வு மையமான ராயல் சொசைட்டியின் அஸ்திவார ஜாம்பவான்கள் – சார்லஸ் டார்வினை போல். 

விஞ்ஞானம் வேறு மதம் வேறு என்று இரண்டையும் விட்டுக்கொடுக்காதவர்களும் உண்டு, கால்டுவெல், திருச்சி பிஷப் ஹீபரை போல்.

வீரமாமுனிவர் கால்டுவெல் போல் அவர் வாழச் சென்றது வேளான் சமுதாயமோ நாகரீகமோ அல்ல. அவர்களோடு வேட்டையாடும் வாழ்க்கையில் இறங்கினார்.

பிரஹா மொழியை கற்றுக்கொண்டார் எவரெட். அதிசயமும் அபூர்வமும் பொங்கி வழியும் மொழி பிரஹா, என்று உணர்ந்தார். சமீப காலங்களில் நோம் சாம்ஸ்கி என்ற அமெரிக்க பேராசிரியரின் கருத்துக்கோட்பாடுகளே மொழியியலின் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, அசைக்கமுடியா உண்மையாக கருதப்பட்டன.

சாம்ஸ்கியின் மொழியியல்

1) எல்லா மனித இனங்களும் ஏதோ மொழி பேசுகின்றன. பிறக்கும் போது குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் இல்லை. ஆனால் சிறு வயதிலேயே பேச குழந்தை கற்றுக்கொள்ளும். இது மனித இனத்திற்கு மட்டுமே உள்ள திறன். மற்ற விலங்குகளுக்கு இந்த திறன் இல்லை.

2) ஒவ்வொரு மொழிக்கும் ஏதோ ஒரு வகை இலக்கணம் உள்ளது. எழுத்தே இல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. இவ்விலக்கணங்களின் பொதுவான அடிப்படை, எல்லா மனிதர்களின் மூளையிலும் உள்ள ஒரு அமைப்பின் விளைவு.

சாம்ஸ்கியின் பொது இலக்கண கொள்கையில் நான் புரிந்துகொண்டதை மிக சுருக்கமாக இவ்விறு விதிகளாய் எழுதியுள்ளேன். இது நான் விக்கிப்பீடியாவில் படித்த சிறுகட்டுரையின் சாராம்சம் மட்டுமே. 

பிரஹா மொழி சாம்ஸ்கியின் கொள்கைகளுக்கு விதிவிலக்காக இருப்பதாக சொல்கிறார் எவரெட். 

நிற்க.

பிரஹா மொழியை கற்ற டேனியல் எவரெட் கூறும் சில விசித்திரங்கள்

(க) எண்கள் இல்லா மொழி

ஒன்று என்ற எண்ணே இல்லையாம்! உலகில் எண் இல்லாத வேறு எம்மொழியும் இல்லை.
சிறிதே வளர்ந்த பழங்குடிகளில்கூட நான்கு ஐந்து வரை எண்கள் இருக்கும். சில மொழிகளில் ஐந்து என்ற சொல்லே பலவின்பாலை குறிக்கும். “கோடானு கோடி” என்று நாம் சொல்வது போல் “ஐந்து” என்பதை அவர்கள் மாபெரும் எண்ணாகவும், “நிறைய”, “பல”, “எண்ணமுடியாத” என்ற பொருளிலும் சொல்வார்கள்.

(ச) நீளா மொழி

ஒரு மொழியில் ஒரு வாக்கியம் சொன்னால், ஒரு சில சொற்களை, சொற்றொடர்களை சேர்த்து, அந்த வாக்கியதை நீட்டலாம். மற்ற மொழிகளில் ஒரு வாக்கியத்திற்கு இது தான் நீளம் என்ற வரையளவு ஏதும் இல்லை. பிரஹா மொழியில் வாக்கியத்திற்கு அளவு உள்ளதாம். அது நீளா மொழி.

(ட) 11 ஒலிகள் 

மூன்று உயிரெழுத்து எட்டு மெய்யெழுத்தும் கொண்ட மொழி – மூன்று உயிரொலி எட்டு மெய்யொலி என்று சொல்வதே தகும் என்று தோன்றுகிறது.

(த) பொதுச்சொல் இல்லை

 பாம்பு என்று கண்முன் உள்ள பாம்பை சொல்லலாம், பொதுவாக பாம்புகளை பற்றி பேசலாம். பிரஹா மொழியில் பொதுவாக இனத்தையோ பொருளையோ பேச சொற்கள் இல்லையாம்!

(ப) காலம் இன்மை

நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் அடிப்படையாக எல்லா மொழியிலும் உள்ளன. பிரஹாவில் நிகழ் காலம் மற்றுமே திகழ்கிறதாம். ” “நேற்று இதை செய்தேன், நாளை இதை செய்வேன்” என்று யோசிக்கும் திறன் இருக்கிறது ஆனால் அவர்கள் கடந்ததை பேசுவதே இல்லை என்கிறார். குறிப்பாக நெடும் பழங்காலத்தையோ தூரத்து எதிர்காலத்தையோ அவர்கள் பேசுவதில்லையாம். இது மொழி விசித்திரம் மட்டும் இல்லை, அவர்கள் பண்பாடு என்கிறார். பேசாத கருத்துக்களுக்கு சொற்கள் உண்டா?

இபிப்பியோ – இது ஒரு பிரஹா சொல். அனுபவத்தை குறிக்கிறது. கண்ணால் பாப்பதும், காதால் கேட்பதும், தானாக அனுபவிப்பதும் அடக்கும் ஒரு சொல் – இதை மற்ற மொழிகளில் எப்படி மொழிப்பெயர்ப்பது? அனுபவத்திற்கு அப்பாற்பட்டதை அவர்கள் பேச விரும்புவதில்லையாம். நம்ப விரும்புவதில்லையாம்.

(ற) கதையோ வரலாறோ இல்லை

 தானாக அனுபவிக்காத சம்பவங்களை மீறி அவர்கள் பொதுவாக எதையும் நம்ப தயாராக இல்லை. இதனால் அவர்களுக்கு கதைகள் மீது விருப்பமில்லை. வரலாற்றை பற்றி கவலையும் இல்லை. இபிப்பியோ இன்றி உலகில்லை. இது மொழியின் கலாச்சார தாக்கமா?

(ங) தெய்வமும் இல்லை

தன் வளர்ப்பு தாய் தற்கொலை செய்ததால் யேசுவிடம் ஆறுதல் தேடினாராம் டேனியல் எவரெட். அதனால் மதப்பணியில் இறங்கினார், பிரஹாவை தேடி அவர்களுக்கு யேசுவை போதிக்க சென்றார். டேனியலின் இபிப்பியோவில் இல்லாத யேசுவையோ (வேறு எந்த தெய்வத்தையோ) அவர்கள் நம்பவும் தயாராக இல்லை, அதை பற்றி பேசவும் விரும்பவில்லை. வானம் பூமி செடி கொடி இவற்றை யார் படைத்தார் என்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. அவையெல்லாம் உள்ளன அவ்வளவு தான், அவற்றை யாரும் படைக்கவில்லை என்று அலட்சியமாக எவரெட்டின் கேள்விகளுக்கு பதிலளித்தனராம்.
அவர்கள் கேட்ட கேள்விகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் இயல்பான இன்பமும் காலபோக்கில் எவரெட்டை பாதித்தது. ஆறுதலுக்காக தான் நம்பிய கடவுளும் வருத்தமில்லாத ஆறுதல் தேவையில்லாத மக்களுக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தாராம் எவரெட். பிரஹா மக்களை பார்த்து அவர் நாத்திகராக மாற்றிவிட்டார்.


எண்கள் இல்லாத மொழி என்பதால் 1,2,3 தவிர்த்து க ச ட த என்று வரிசைபடுத்தி எழுதினேன். ங என்று முடிக்காமல் ஙே என்று முடித்திருக்கலாம். 

தொடர்புடைய பதிவுகள்

1. எவரெட் நேர்காணல் - ஆங்கிலத்தில். இந்த கட்டுரையின் அடிப்படை
2. இபிப்பியோ - காணொளி
3. எவரெட் நாத்திகரானது - ஒலிப்பதிவு

No comments:

Post a Comment