Sunday 15 November 2015

சீன பொருளாதார சீர்திருத்தம் – வழிகாட்டிய ஜப்பான்

டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights எனும் நூலிலிருந்து இன்னுமோர் பகுதி. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் மாவோ சேதுங்கின் ஆட்சிக்குப்பின், அதிபரான டெங்க் சாவோபிங்கின் ஆட்சியில், மாவோயிச பொது உடைமை கொள்கைகளை அவர் தகர்த்து மூலதன பொருளியல் கொள்கைகளை வரவேற்று நடத்திய சீர்திருத்தங்களை விவரிக்கிறார்கள்.

-----நூல் பகுதி ஆரம்பம்----

மாவோ அமல்செய்த பொது உடைமையின் விளைவுகள் ஏமாற்றம் தந்தன. அவரது முப்பது ஆண்டு ஆட்சியின் இறுதியில், சீன பொருளாதாரம் வளரவில்லை. சில இடங்களில் தேய்ந்தது.

மாவோ இறந்த பின், 1978ஆம் ஆண்டில் நாடே வரட்சியில் வாடியது. வற்றிப்போன மண்ணை ஏராலும் டிராக்டராலும் உழ முடியவில்லை. பஞ்சம் நாட்டை வாட்டியது. வயிற்றுப்போக்கு, என்சிஃபலாட்டீஸ், ஹெபடைடிஸ் என்று பல நோய்கள பறவி மக்களை வாட்டின. லட்ச கணக்கிள் பஞ்சம் பிழைக்க மக்கள் நாடோடி நகரம் தேடி அலைந்தனர். ஷாங்காய் நகரத்திற்குள் இந்த லட்சங்கள் வரமல் தடுக்க படைகள் திரண்டன. பஞ்சத்தின் காட்சிகளை படத்தில் பார்த்து, ஆளும் கட்சியின் செயற்குழு கண்ணீர் விட்டு கதரி அழுதனர்.

மிகக்கடுமையாக உழைத்து உழுதாலே பயிர் வளரும் நிலமை. தம் உழைப்பில் தலைவர்கள் வாழ்ந்து லாபம் பெறுவதை சீன உழவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கு லாபமின்றி உழைக்க மறுத்தனர். பழைய வழிமுறைகள் வேண்டும் என்று கோரினர். பொது உடைமையும் மாவோயிசமும் சட்டமானதற்கு முன், சீன தேசத்தில் நிலவிய வழிமுறைக்கு “குடும்ப பொறுப்பு” முறை என்று பெயர். அதன் படி விளைச்சலில் ஒரு பகுதியை அவர்களே வைத்துக்கொள்ளலாம், விற்று லாபம் பெரலாம். பஞ்சத்தின் கடுமையால் அரசு அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர். ஆயினும், தமக்கு ஏதாவது நிகழ்ந்தால் தம் பிள்ளைகளை மற்றவர் பேணி வளர்க்க சபதம் எடுக்கவேண்டும் என்று பல உழவர்கள் வலியுறுத்தினர். அவ்வாறே ஊர்கட்டுப்பாடாக உழவர் சமூகங்கள் சபதம் செய்தன.

[கோபுவின் வரலாற்று குறிப்பு ஏன் இந்த பயம்? 1960களில் மாவோ தற்காலிகமாக சர்வாதிகாரத்தை தளர்த்தி ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சுதந்திர சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தார். சில மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் மனதில் உறுதி கொண்டு மார்க்ஸிஸத்திற்கும் மாவோயிஸத்திற்கும் மாற்றுக்கருத்துக்களை சொன்னார்கள். டெங்க் சாவோபிங் போன்ற கட்சி தளபதிகளும் இக்கருத்துக்களை உரைத்தனர். தன் சர்வாதிகாரத்திற்கு ஆபத்தை உணர்ந்த மாவோ, அவர்கள் அனைவரையும் புரட்சிக்கு துரோகிகள் என்று பழித்து, மாணவர்களிடம் பெரும் கிளர்ச்சியூட்டி, பெற்றோரை முதியோரையும் தாக்கும் வெறிச்செயலை தூண்டினார். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆசிரியர்களும் எழுத்தாளரும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியே இல்லாத உழவு மற்றும் பட்டரை வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதை கலாச்சார புரட்சி என்று பெயரிட்டார் மாவோ. அந்த கசப்பான நினைவுகள் பல உழவர்களின் நினைவில் இருந்தது. இந்த அரசு தளர்த்தலும் அது போலாகிவிடுமா என்ற அச்சம் உழவர்களை வதைத்தது.]

நிற்க. சபதம் செய்த உழவர், தம் கடும் உழைப்பில் பஞ்சத்தை ஓரளவு தவிர்த்தனர். மாவோயிசத்தை நீக்கி, குடும்ப பொறுப்பு முறை சீனமெங்கும் அமலுக்கு வந்தது. முப்பது ஆண்டுகளில் மாவோயிசத்தில் வளர்ச்சி பெறாத வேளான்மை, குடும்ப பொறுப்பு முறையில், பதினாறு ஆண்டுகளில் ஐம்பது சதவிகித வளர்ச்சி கண்டது.
[ இந்தியாவில் இதற்குமுன் பசுமை புரட்சி பரவியது. சீனாவில் பசுமை புரட்சியின் தாக்கத்தை பற்றி நூலாசிரியர்கள் ஏதும் குறிப்பிடவில்லை ]

தாம் வளர்த்த பயிரை தாமே விற்கலாம் என்ற உரிமை கிடைத்தபின், அதாவது, சந்தை பொருளாதாரம் மீண்டும் அறிமுகமான பின், வணிகத்தின் பல தரவுகள் தானாக உருவாகின. உழவர்கள தாமாக மற்ற பணிகளை தொடங்கினர். வீடுகட்டுவதும், பழுது பார்ப்பதும், காய்கனி பயிரை சந்தைக்கு எடுத்துசெல்வதும், வேலைக்கு ஆள் சேர்ப்பதும் சகஜமாயின. 1978இல் விளைச்சலில் எட்டு சதவிகிதமே சந்தைகளில் விற்கப்பட்டன. 1990இல் இது எண்பது சதவிகிதமாக கூடின.

(1978இல்) ஜப்பானின் வளர்ச்சியை காணவும் அங்குள்ள திட்டங்களை புரிந்துகொள்ளவும் சில சீன பொருளியல் பண்டிதர்கள் சென்று, அந்நாட்டின் வளர்ச்சியும் செல்வமும் கண்டு அதிர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பரப்பு குழுத்தலைவர் குறித்துக்கொண்ட புள்ளிவிவரங்கள் - இரண்டில் ஒரு வீட்டில் கார் இருந்தது. 95% மேல் வீடுகளில் தொலைகாட்சி, ஃப்ரிட்ஜ், துணிதோய்க்கும் விசை இருந்தன. மக்கள ஆடைகளை கண்டே அசந்து போனார்; எத்தனை வகை ஆடைகள், எவ்வளவு சுத்தமாக இருந்தன! “நாம் பார்த்த பெண்களில் ஒருவரை போல் இன்னொருவரின் ஆடை இல்லை,” என்று எழுதினார். அதைவிட பெரிய அதிசயம் : “பெண்கள் தினமும் ஆடைகளை மாற்றிக்கொள்கின்றனர்”

-------நூல் பகுதி முற்றும்-------

கோபுவின் குறிப்பு

மாவோவின் சீனாவில், வெளிநாட்டு சினிமா, பத்திரிகை, தொலைகாட்சி எல்லாம் தடைப்பட்டிருந்தன. பாரதத்தில் நாம் ஹாலிவுட் சிங்கப்பூர் ஹாங்காங் படங்களை திரையரங்குகளில் பார்த்துவந்தோம். ஆனால் 1984இல் ராஜீவ காந்தி பிரதமர் ஆகும் வரை, “ஜனநாயகமான” இந்திய அரசுகள் தொலைகாட்சிகளை தடை செய்துவந்தன. சென்னை, கல்கட்டா, பம்பாய், தில்லி, நான்கு மாநகரங்களில் மட்டுமே கருப்பு வெள்ளை தொலைகாட்சி இருந்தது. 1960களில் அமெரிக்காவில் வந்த கலர் டிவியை, 1980களில் அனுமதித்து ராஜீவ் காந்தியின் நிதி அமைச்சர் விபி சிங் வானொலிக்கும் தொலைகாட்சிக்கும் அதுவரை கட்டாயமான லைசன்ஸை ரத்து செய்தார். நம்மால் அன்னாட்டு செல்வத்தை சினிமாவிலும் டிவியிலும் பார்க்க முடிந்தது. ஆனால் அவை பணக்கார நாடு இந்தியா ஏழை நாடு என்ற பிரச்சாரம் ஓயவேயில்லை.

இன்றைய யதார்த்த தேவைகளாக நினைக்கும் கேமரா, டேப் ரிக்கார்டர், ஃப்ரிட்ஜ், ஷேவிங் க்ரீம் போன்ற பொருள்களை வாங்க, அந்நாட்களில் அதிகம் வரிகளால் அதிக விலை கொடுத்தோ, இல்லை கடத்தல்காரர்களின் வணிகத்தையோ வள்ளல்குணத்தையோ நம்பி வாங்கவேண்டும்.

ஆனால் ஜனநாயக நாடாக இருந்ததால், மாவோவின் மாபெருந்தாவல், கலாச்சார புரட்சி போன்ற கொடுங்கோல் தீவினைகளில் நாம் சிக்கவில்லை. ஆடையும் தூய்மையும் நடுத்தரவர்கத்தினருக்கோ பல ஏழைகளுக்கோ கூட பெரும் பிரச்சனையில்லை. நேரு-இந்திரா முப்பத்தைந்து ஆண்டுகளில் சுமாரான ஆடைகளை வாங்கி வாழ்ந்து வந்தோம்.


The English version of this essay is here - Deng Xiaoping and Japan

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment