ஏப்ரகாம்
லிங்கனை வெள்ளை மாளிகையில் ஒரு வெளிநாட்டு தூதுவர் பார்க்கவந்தாராம். லிங்கன் தன் காலணியை
துடைத்து கொண்டிருந்தாராம். ஒரு ஜனாதிபதிக்கு இந்த சேவை செய்யக்கூடவா ஆளில்லை என்று
அதிசயித்த தூதுவர், “மிஸ்டர் லிங்கன், உங்கள் ஷூவை நீங்களேவா பாலிஷ் செய்கிறீர்கள்?”
என்று வினவ, “ஏன், உங்களுக்கு யார் ஷூவை பாலிஷ் செய்து பழக்கம்,” என்று லிங்கன் பதிலளித்தாராம்.
தன் கையே தனக்குதவி என்பது அமெரிக்க கலாச்சாரம். தன்னுடைய ஷூவுக்கு என்னை பாலிஷ் செய்ய
கட்டளையிட்டுக்கொண்டே என் அப்பா இந்த கதையை பல முறை சொல்லியுள்ளார். சில சமயம் தானே
பாலிஷ் செய்யும் பொழுதும் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் நான்
ஷூ போடாமல் செருப்பை போட்டுக்கொண்டதற்கு இக்கதை ஒரு முக்கிய உளவியல் காரணமாக இருக்கலாம்.
சில
வருடங்களுக்கு முன் சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹ (குகன்?) “தி ஹிண்டு” ஆங்கில
நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்தவர் அமெரிக்கா
சென்ற போது, ஒரு பெரும் பல்கலைகழகத்தின் பேராசிரியர், ஒரு பெட்டி நிரைய புத்தகங்களுடன்
தன் அலுவலகத்திலிருந்து கார் வரை நடந்து சென்றதை, குறிப்பிட்டார்.
பாரதத்தில் எந்த
கம்யூனிஸ்ட்டும் இதை செய்யமாட்டார் என்று மேலும் கூறி, ஓட்டுனரோ குமாஸ்தாவோ பெட்டி
சுமந்து வர, கட்சி பிரமுகர்களும் கல்லூரி பேராசிரியர்களும் ஸ்டாலினிய சித்தாந்தம் பேசுவார்
என்றும், பேனாவை சுமந்து சட்டைக்கு வலிக்கக்கூடாது என்பதால் மற்றவரிடம் பேனா வாங்கி
எழுதுவதே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் அறவழி என்று கொய்யாப்பழத்தில் கோணி ஊசி வைத்திருந்தார்
குகன்.
சமீபத்தில்
அமெரிக்கா சென்ற போது, தன் இல்லத்திலிருந்து நூறு மைல் தூரமுள்ள ஹ்யூஸ்டன் விமான நிலையத்திற்கு,
என்னையும் எம்பி ஜெயராமனையும் கூட்டிச்செல்ல், தன் காரை ஓட்டிக்கொண்டு வந்து என் மாமா
வரதராஜன். டெக்ஸாஸ் ஏ&எம் (Texas
A&M University) பல்கலைகழகத்தில், மார்க்கெட்டிங் துறை பேராசிரியர். போகும்
வழியில் பெட்ரோல் நிறப்பினோம். அங்கே வைக்கப்பட்டுள்ள சோப்புத்தண்ணியால் கார் கண்ணாடிகளின்
அழுக்கை துடைத்தார். ராமசந்திர குகனின் கதை ஞாபகம் வந்தது. இதோ படம்.
(ஐயம்:
ஹ்யூஸ்டனை கூசுடன் என்றும், டெக்ஸாஸை தெகுசாசு என்றும் தமிழில் எழுதவேண்டுமோ?)
புரட்சி குடிமகன் |
நம்
நாட்டில் ஓட்டுனரோ, பெட்ரோல் கடை ஊழியரோ தான், கார் கண்ணாடி துடைத்து பார்க்கமுடியும்.
ஆனால் அமெரிக்காவில் இது சகஜம். வீட்டில் உண்டபின், நான் என் தட்டை கழுவினால் சமையல்
செய்யும் இந்திராம்மாவோ, எங்கள் இல்லத்து ஸ்வச் பாரதி மேரியம்மாவோ, “விட்டுடுங்க, நீங்க
ஏன் கழுவுறீங்க, நான் செய்கிறேன்,” என்று காம்போதி ராகத்தில் பாடுவார்கள். ஏப்ரகம்
லிங்கனின் மறு அவதாரமாக என்னை உணரும் அத்தருணத்தில், எந்த வெளிநாட்டு தூதுவனும் இல்லையே
என்று ஜன்னல் வழியே ஏக்கத்தோடு எட்டிப்பார்பேன். கம்ப்யூட்டர் துறையிலும் பாத்திரம்
தேய்ப்பதிலும், எனக்கு கிட்டத்தட்ட சமமான ஆண்டுகள் தொழில் அனுபவம்.
அமெரிக்காவில்
பல வேலைகளை அவரவரே செய்துகொள்ளவேண்டும். பல மாநிலங்களில் பெட்ரோல் கடைளில் காசு வாங்குவதற்கு
தவிர எந்த தொழிலாளியும் இருக்கமாட்டார். நாமே பெட்ரோல் போட்டுக்கொள்ளவேண்டும், காத்தடித்துக்கொள்ளவேண்டும்,
கண்ணாடி துடைக்கவேண்டும். முதன்முறை ஓரிகன் மாநிலத்திற்கு சென்றபோது அங்கே பெட்ரோல்
போட தொழிலாளிகள் இருந்ததை கண்டு ஆச்சிரியப்பட்டேன். அந்த மாநிலத்தில் அது சட்டமாம்.
கட்டாய வேலை வாய்ப்பு திட்டம். மொழியாலும் உணவாலும் உடையாலும் அமைப்பாலும் ஒரே மாதிரி
காட்சியளித்தாலும், மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர், அமெரிக்காவிலும் பல பண்பாட்டு
வேறுபாடுகள் உள்ளன. வாழ்ந்தால் தான் தெரியும். நிற்க.
கார்
கழுவுவதை தவிற வேறு சில தொழில்களும் வரதராஜன் மாமா செய்கிறார். முக்கியமாக தோட்டவேலை.
புல்வெளியற்ற தனிவீடு இல்லை என்று அமெரிக்காவை சோல்லலாம். வீட்டின் முன்னும் பின்னும்
புல் பரவியிருக்கும். ஒரு உயருத்துக்கு மேல் வளர்ந்தால் வெட்டவேண்டும்; இதற்கு ஊராட்சி
சட்டங்கள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வாராவாரம் காசு கொடுத்து வெட்டுவோரும் உண்டு,
தானே வெட்டுவோரும் உண்டு. புல் காய்ந்து விட்டால், செடிக்கடைகளில் பாய் பாயாக விற்கப்படும்
புல் வாங்கிக்கொண்டு வந்து தோட்டம் அமைக்க வேண்டும். புல் வளர (நஞ்சை?) மண் வாங்குவதும்
சகஜம். சில நேரம் மண்ணை இலவசமாக சிலர் தருவர். விளம்பரம் செய்து தானம் நடக்கும், வண்டி
எடுத்து சென்று மண்ணை அள்ளி வந்து தோட்டத்தில் பரப்பிக்கொள்ளலாம். படம் காண்க.
Free Dirt = இலவச மண் |
இருபது
வருடத்திற்கு முன் அங்கு சென்ற போது, தன் தந்தைக்கு கிடைத்த மாத சம்பளத்தைவிட, தோட்டத்துக்கு
மண் வாங்க செலவழித்தேன் என்று கொஞ்சம் சோகம் ததும்ப சொன்னார். சில வருடங்கள் தோட்டத்தின்
ஒரு பகுதியில் புடலங்காய் பூசனி கத்திரி கருவேப்பிலை வளர்த்து மகிழ்ந்தார். இவற்றை
கூட்டு, குழம்பு, கறியமுது என்று மாமி பிரபா சமைத்து நானும் சுவைத்துள்ளேன்; ருசியோ
ருசி. அக்கம்பக்கத்தினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.
என்னளவு
இல்லை எனினும் என்னைப்போல் நளபாக ரசிகர். இவரை போல ரசவிரும்பி யாருமில்லை. காபி டீ
தரவா என்று யாராவது கேட்டால் சூடாக ஒரு கோப்பை ரசம் கேட்டு அருந்தி மகிழ்வார்.
பிரபா மாமி செய்த நளபாகம் |
எண்ணும் எழுத்தும் |
தன்
துறையில் அபாரமான பெயர்கொண்டவர். துறை இலக்கிய பத்திரிகைகளான ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங்,
ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங் ரிசர்ச் இரண்டிலும் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். (இவற்றை,
தலா விற்பனை கலை பத்திரிகை, விற்பனை கலை ஆய்வு பத்திரிகை என்று தமிழாக்கலாமோ?) இரண்டு
பத்த்ரிகைகளிலும் ஆசிரியராக பணிசெய்துள்ளார்.
மச்சச்சேத்துப்பட்டு பல்கலைகழகம் ஐம்பதாண்டில்
தன் லட்சக்கணக்காண மாணவர்களில் தேர்ந்தெடுத்து கௌரவித்த தலைசிறந்த பத்தில் இவரும்
ஒருவர். நூல்கள் நிரம்பி வழியும் அலமாரியை போல் வாங்கிய விருதுகள் நிரம்பி சுவரும்
வழிகிறது. கார் கண்ணாடியை விட நன்றாகவே விருதுகள் மிளிர்கின்றன.
அவர்
பிறந்தநாள் அக்டோபர் இருபது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், மாமா.
Journal of Marketing |
Texas A&M University டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம் |
வரதராஜனின் விருதுகள் அருகில் ஜெயராமன் |
தொடர்பான பதிவுகள்
அன்பளிப்புOn Human Kindness
நான் ரசித்த சில பெயர் பலகைகள்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteGood to read about your uncle ! Happy birthday to him
ReplyDelete
ReplyDeleteVRன் விருதுகளுடன் JR !
போஸ் அருமை பாஸ்.