Tuesday 10 August 2021

அளிந்தது நெல்லளவு

ஆறு மாதமாக மதிய சாப்பாட்டுக்கு அரிசி அளிந்து, ஊரவைத்து, குக்கரில் பொங்க வைக்கிறேன். அம்மா இருக்கும்போதே சொல்லிக்கொடுத்த பழக்கம். சமையலுக்கு வீட்டில் ஆளில்லாத போது பள்ளி காலத்திலேயே பழகிவிட்டது. கூடவே, பாத்திரம் கழுவவும், துணி தோய்க்கவும் என் பத்து வயதிலேயே அம்மா கற்றுக்கொடுத்தாள். அமெரிக்கா வாழ்க்கையில் இதெல்லாம் உதவியது. 

அரிசியை அளிந்து, அழுக்கு நீரை வடிகட்டும் போது அவ்வப்போது, தூசி, மணல், ஓரிரு சிறு கற்கள், வழி தவறிய தானியம் எல்லாம் மாட்டும். அவ்வப்போது ஓரிரு புழு பூச்சி கூட மாட்டும். ஆனால அமெரிக்காவில் அரிசியில் புழு பூச்சி எதுவும் இருந்த ஞாபகமில்லை. 

பள்ளி பருவத்தில் பாலோ, பாலில் கலந்த போர்ண்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ் அருந்துவோம். அவ்வப்போழ்து சக்கரையிலிருந்த எறும்பு பாலில் மிதக்கும். எறும்பிருந்தால் எறும்பை தூக்கிப்போட்டு விட்டு பாலை குடித்த ஞாபகம். ஈ இருந்தால் பாலையே கொட்டிவிடுவோம், குடிக்கமாட்டோம். பள்ளிக்கால நண்பர்கள், குறிப்பாக அசைவம் சாப்பிடும் நண்பர்கள், இதை நான்வெஜிடேரிய பால், நான்வெஜிடேரியன் காபி, பூஸ்ட் என்று கிண்டலடிப்பார்கள். ஒரு முறை நூட்ரமுல் பொடியில் கறப்பு செத்துகிடந்து. எனக்கு போட்டுக்கொடுத்து நான் குடிக்கும் போது என் தங்கை தம்பிக்கு நூட்ரமுல் பொடி எடுக்கும் போது அம்மா செத்த கறப்பான்பூச்சியை பார்த்து அலரி என்னிடம் குடிக்காதே என்று எச்சரித்தாள். அதன் பிறகு ஒரு வாரம் பாலே குடிக்கவில்லை. ஒரு வருடம் நூட்ரமுல் பார்த்தாலே கொமட்டும், இன்னொருவர் வீடு என்றாலும். 

கல்லூரிகாலத்தில் நான்காம் ஆண்டில் முதல் முதலாக சில நண்பர்கள் நான் அவர்களுக்க பிராஜக்டிற்கு உதவியதற்கு நன்றியாக ராஜபாளையத்தில் கந்தர்வா ஹோட்டலில் விருந்துக்கு அழைத்தார்கள். அனைவரும் அசைவம் நான் மட்டும் சைவம். முதன் முதலில் ஒரு அசைவ ஹோட்டலில் கால் வைத்தேன். நான் ஒரு மேசை, சைவம் சாப்பிட்டேன், அவர்கள் அடுத்த மேசை; அசைவம். நூட்ரமுல் அளவுக்கு மோசமில்லை எனினும், இனிமேல் அசைவ ஹோட்டல் வாசப்படி மிதிப்பதில்லை என்று மனதளவு சொல்லிக்கொண்டேன்.

ஒரு வருடம் கழித்து மேல்படிப்பு படிக்க அமெரிக்கா பயணம். வாரம் மூன்று நாளாவது சப்வே, பிட்சா, பரிட்டோ என்று அசைவமும் விற்கும் கடைக்கு சென்று சாப்பிடவேண்டும். வாங்குவது சாப்பிடுவது சைவமானாலும், அதே மேடையில் அசைவ உணவும் இருக்கும். ஏன் காந்தி, ராமானுஜனெல்லாம் பாரதம் திரும்பிய பின் ஜாதிப்ரஷ்டம் செய்யப்பட்டனர் என்று புரிந்தது. ஒரு வாரம் மாமா பழக்கிவிட்டார். பிறகு நானும் பழகிவிட்டேன். 

ஆனால் அமெரிக்காவில் அசைவ உணவகத்திலும் அசைவ வாசனை வராது. அவர்கள் உணவில் சமைக்கும் போது உப்பை கூட போடமாட்டார்கள் (அதனால் தான் டேபிளில் உப்பு மிளகு தனியாய் இருக்கும்). இந்திய அசைவ சமையலில் முக்கால் வாசனை அதில் சேர்க்கும் மசாலா வகைகள் என்று தெரிந்து கொண்டேன். அதனால் பெரும்பாலும் சகித்து கொள்ள முடிந்தது. மாறாக நம் சைவ உணவுகளின் வாசனை, பல அமெரிக்கர்களை திகைக்க வைத்தன என்று புரிந்தது. நியு யார்க் ஏர்போர்ட்டில் மாமாவின் பெருங்காய டப்பியை மோந்து பார்த்து திணரிப்போன கஸ்டம்ஸ் அதிகாரி, “இதையா உங்கள் சாப்பாட்டில் கலக்கிறீர்கள்?” என்று பரிதாபமும் வியப்பும் கலந்து கேட்டாராம். 

இந்திய உணவுகளை பல நகரங்களில் அமெரிக்கர்கள் விரும்பியே அருந்துகின்றனர். சீன உணவை தவிற, மற்றபடி இத்தாலிய, மெக்சிக, பாரசீக, தாய்லாண்டு, முக்கியமாக எத்தியோப்பிய உணவை.... எல்லாவற்றிலும் சைவம் உண்டு... மிக சுவையாக இருக்கும்... அமெரிக்காவில் தான் எனக்கு அறிமுகம். வடக்கு இந்திய உணவு என்றால் சோளே பட்டூரா, நான், பனீர் பட்டர் மசாலா என்ற ஞான சூனியமாக இருந்தேன். கலிபோர்ணியாவில் தான் முதல் முறை குஜராத்தி உணவு ருசித்தேன். 

பற்பல இடங்களில் இது சைவமா இல்லையா என்று யோசித்து சாப்பிடவேண்டியதும், மதுபானங்கள் காபி டீ போன்ற அன்றாட பண்பாட்டு சின்னங்கள் என்பதும், நான் மீண்டும் பாரதம் திரும்ப பல காரணங்களில் ஒரிரு காரணங்கள். அதற்குள் இந்தியாவிற்கு பிட்சா, சப்வே, பரிட்டோவில்லாம் வந்துவிட்டன. நிற்க. 

இந்த வருடம் ஜனவரி முதல் அரிசி அளிந்து சாதம் வைக்கும் போது ஓரிரு பூச்சி சிக்கும். எறும்பு மிதந்த நான்வெஜிடெரியன் காபி போல் பூச்சி மிதந்த நான்வெஜிடேரியன் அரிசியோ? 

ஒரு மாசத்தில் பூச்சித்தொகை பிரம்மாண்டமாக பெருகிவிட்டது. ஒரு சின்ன டம்பளரில் அரிசி எடுத்து அதை தண்ணீரில் அலம்பும் முன், ஒரு தட்டில் போட்டு, பூச்சி புழுக்களை கொல்லாமல், ஒதுக்கி ஜன்னல்மேல் விட்டுவிட்டு, அரிசி அலம்பலாம் என்று முடிவெடுத்தேன். டம்ப்ளர் அரிசியை ஏழு எட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாக தட்டில் பரப்பி, பூச்சிகளை புழுக்களை ஓரம் தள்ளி, பாக்கி அரிசியை பாத்திரத்தில் கொட்டி... ஒவ்வொரு தட்டு குவியலிலும் ஒரிரு பூச்சி அல்லது புழு என்று ஜூலை மாத ஆரம்பம் சென்றது. ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு தட்டு குவியலிலும் நாலைந்து பூச்சி. புழுக்களெல்லாம் கடைசி இரண்டு தட்டில் மட்டும். அந்த ஜன்னலில் விட்ட பூச்சி எல்லாம் எங்கோ மாயமாக சென்றுவிடுகின்றன. அந்த பூச்சகிள்ளுக்கு முதல் வாரம் ஓரிரு நெல்லை ஜன்னலில் வைத்தேன். ஒரு முறை ஒரு புழுவை மூன்று எறும்புகள் இழுத்து செல்வதை கவனித்தேன். சிபிச்சக்கரவர்த்தி பிரச்சனை. 

எத்தனை பூச்சிகளை விடுவித்தாலும் எப்படியேனும் மிகமிகச்சிறிதான ஓரிரு பூச்சி அலசலில் தப்பித்து, அலம்பும் நீரில் மூழ்கி சாகும். 

சமீபத்தில் சங்கரநாராயணன் ஒரு பதிவில், உழவு பார்க்குமுன் நம் உழவர்கள் செய்யும் அறக்களவேள்வி பற்றி புறநானூற்று குறிப்பும் பராசர ஸ்மிரிதி குறிப்பும் பகிந்ர்ந்தார். இந்த வேள்வி செய்தால் ஏரிட்டு மண்ணை உழும்போது புழுபூச்சிகளை துன்புருத்திய பாவத்திலிந்து விடுபடுவார்களாம். 

கொன்னா பாவம் தின்னா போகும் என்று ஒரு பழமொழி. கோழி ஆடு மாடுக்கு மட்டுமா, புழுபூச்சிக்கும் இது ஒவ்வுமா என்று தெரியவில்லை.

பின் குறிப்பு, ஆகஸ்ட் 12, 2021. அளிந்து என்ற சொல்  புதிது என்று தோழி வல்லபா ஸ்ரீநிவாசன் முகநூலில் கேட்க, பத்ரி சேஷாத்ரி இந்த பதில் எழுதியுள்ளார்:
அளைந்து => அளிந்து. அளைதல் = துழாவுதல். அரிசியை நீரிலிட்டுத் துழாவி, அதில் உள்ள அழுக்குகளையும் பூச்சிகளையும் களைதல். ஐயங்கார் வழக்கு

உதாரணம் ”வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு” - என்ற பெரியாழ்வார் பாசுரம்