பிப்ரவரி
25, 2013. மாசி மாதம். “இன்று ஆறு மணிக்கு இஸ்ரோ ராக்கெட் விடுகிறார்கள். நான் போகிறேன். நீ வருகிறாயா?”
என்று என் தம்பி ஜயராமனிடம் கேட்டேன். அதிசயமாக அவனும் சரி என்றான். நண்பர் சிவாவும்,
ஆசிரியர் பாலசுப்ரமணியனும் ஆவலுடன் சேர்ந்துகொள்ள, சென்னையிலிருந்து வடக்கே காரில்
சென்றால் ஸ்ரீஹரிக்கோட்டா அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில், கிளம்பினோம். கொல்கொத்தா
நெடுஞ்சாலையில், சூளுர்பேட்டை அருகே திரும்பி, ஸ்ரீஹரிக்கோட்டாவை நோக்கி காரை திருப்ப,
புலிக்கேட் எனும் பழவேற்காட்டு ஏரியை சுமார் மதியம் இரண்டு மணிக்கு அடைந்தோம். கொக்கு நாரை பெலிக்கன் மற்றும் பெயர் தெரியாத பல
பறவை கூட்டங்களை ஐந்து மணிவரை பார்த்துக்கொண்டு, நீல வானத்தையும் நீர் பரப்பையும் பயிர்
பசுமையையும் ரசித்தோம். போகும் வழியெல்லாம் அங்கங்கே போலீஸ்காரர் நின்றிருந்தனர்.
|
பழவேற்காட்டு பறவைகள் 2013 மாசி மாதம் |
|
பறவை அருங்காட்சியகம் வாசல் பலகை |
|
அருங்காடிசியகத்தில் கிளிஞ்சல்கள் |
ஐந்து
மணிக்கு ராக்கெட் பார்க்க செல்ல, பழவேற்காட்டு பறவை சரணாலயத்து கல்வி நிலையம்
Pulicat Bird Sanctuary – Environmental Education Center, என்று ஒரு கட்டிடம் உள்ளது.
அங்கே ஒரு பாலம் உள்ளது. பாலத்தை தாண்ட அனுமதி சீட்டு வேண்டும், என்று அங்கு போலீஸ்
செக்போஸ்ட்டில் சொல்ல, சீட்டு இல்லாதவர், அருகே உள்ள சாலையோரம் வண்டி நிறுத்தி, அங்கிருந்து
ராக்கெட் புறப்பாட்டை பார்க்கலாம் என்றனர். ஏற்கனவே காரிலும், மோட்டார் பைக்கிலும்,
ஆட்டோவிலும், சுமார் ஆயிரம் மக்கள் வந்திருந்தனர். ஏரிக்கரையோரம் நீண்டு செல்லும் சாலை
என்பதால் வண்டி நிறுத்த நிறைய இடம் இருந்தது. சூளூர்பேட்டையிலிருந்தும் அருகே சில இடங்களிலிருந்தும்
அங்கே வர தமிழக, ஆந்திர அரசு பேருந்துகளும் உள்ளன.
அன்று
மேகமூட்டம் இல்லை. தொடுவான தூரத்தில் செல்போன் கோபுரங்களும் தண்ணீர் தொட்டி கோபுரங்களும்
தெரிந்தன. சுமார் ஆறு மணிக்கு, ஒரு கோபுரம் பற்றி எரிந்தது. செக்க சிவக்க பெரும் அனல்
பிழம்பு! இக்நிஷன்! ஹோ என்று மக்களிடமிருந்து பேரிரைச்சல். ஆனால் ராக்கெட் மட்டும்
சத்தமே போடவில்லை. மெதுவாக செங்குத்தாக புகைமலை சூழ கிளம்பியது. ஒரு சில நொடிகளில்
விலைவாசி வேகத்தில் உயர்ந்தது. சுமார் இருபத்து நான்கு நொடிகளுக்கு பின் எரிவாயு கர்ஜனை
எங்கும் ஒலித்தது. ஒலியின் வேகம் நொடிக்கு 332 மீட்டர். மூன்று நொடிக்கு ஒரு கிலோமீட்டர்
தூரம் என்று வைத்துக்கொண்டால், நாங்கள் ராக்கெட் ஏவிய தளத்திலிருந்து சுமார் எட்டு
கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாய் கணித்தேன். வால்நட்சத்திரன் வால் போல, ராக்கெட்டின்
புகைவால் அதன் பாதையை கோலமாய் காட்டியது. செங்குத்தாய் சென்ற ராக்கெட் வளையத் தொடங்கியது;
கடல் நோக்கி கீழே விழுவது போல் இருந்தது. தோல்வியோ என்று ஐயம் எழுந்தது. இதற்குள்,
மேலே சென்று ஒன்றரை நிமிடம் ஆகிவிட்டது. திடீரென்று ஒரு ஜ்வாலை உண்டானது. மக்கள் பலரும்
திகைத்தனர். Second stage ignition. முதல் பகுதி பிரிந்து விழுந்து, இரண்டாம் பகுதி
பற்றிக்கொண்டு, அடுத்த கட்டம் தொடங்கியது. இது புரிந்ததும் மக்களின் திகைப்பும் மலைப்பாய்
மாறியது – பலர் “Second stage” என்று பேசிக்கொண்டனர். ஆனால் இதற்குள் மிக உயரமாய் ராக்கெட்
சென்றுவிட்டதாலும், இரண்டாம் பகுதியில் எரிவாயு குறைவானதாலும், ஒரு சில நொடிகளுக்கு
பின் ராக்கெடின் புகை வால் வளரவில்லை.
காணவந்தவர்
அனைவரும் சில நிமிடங்களில் கிளம்பிவிட்டனர்.
நாங்கள் கொஞ்ச நேரம் ராக்கெட் பார்த்த
அனுபவித்தில் லயித்துக்கொண்டிருந்தோம். புகையை புகைப்படம் எடுத்தோம். பின்,
புகையுடன் எங்களையும் சில புகைப்படங்கள் எடுத்தோம். ராக்கெட் இருந்த இடத்தில் பௌர்ணமி
நிலா மெதுவாக உதித்தது. இருளவே, சூளூர்ப்பேட்டையில் நல்ல டீ குடித்துவிட்டு சென்னை
திரும்பினோம்.
|
PSLV C-20 Feb 2013 |
|
நான், சிவா, ராக்கெட் புகையை சுட்டிக்காட்டும் நகுபோலியன் பாலு ஐயா
Balu sir pointing to PSLV C-20 vapor trail |
இந்த
பிண்ணணியில், நவம்பர் 5 அன்று, நண்பன் கருணாகரன், மருமகன் ராகுலுடன், மங்கள்யான் ஏவும்
ராக்கெட் பார்க்கச்சென்றேன். இந்தமுறை சூளுர்பேட்டை தாண்டியவுடன் போலீஸ் நிருத்தி அடையாள
அட்டை கேட்டனர். மதியம் 2.30க்கு ராக்கெட் கிளம்பும் என்பதால், காலையிலேயே சென்றுவிட்டோம்.
ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள சுருட்டப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள பள்ளிகொண்ட சிவன்
கோவிலிக்கும், அதன் அருகே நாகலாபுரம் மச்சாவதார பெருமாள் கோவிலுக்கும் காலையில் சென்று
விட்டு, மதியம் ஸ்ரீஹரிக்கோட்டா போக திட்டம். ஆனால் கிளம்ப தாமதம் ஆனதால் நேரே அங்கேயே
போய்விட்டோம். ஏரிகள் நிறம்பியிருந்தன. ராக்கெட் பதட்டமின்றி மீனவர் வலைவீசி ஏரிகளில்
மீன் பிடித்தனர். கொக்குகளும் பெலிக்கன்களும் வலையில்லாமல் மீன் பிடித்தன. உழவர்கள்
வயல்களில் நாத்து எடுப்பதையும் பார்த்தோம். எங்களை தாண்டி பல சுற்றுலா பயணிகள் ஏசி
பேருந்துகளிலும், விஐபிக்கள் கார் ஊர்வலத்திலும் விறைந்தனர். ஓரிருவர் நின்று பறவைகளை
கண்டு ரசித்து சென்றனர்.
பிப்ரவரியில் (தை) பறவைகள் கூட்டம் கூட்டமாய் இருந்தன. விசா கிடைத்து அமெரிக்கா சீனா சென்றிருக்கலாம்,
சில பிரம்மச்சாரி பறவைகளே மிஞ்சின. செக்போஸ்ட்டில் இம்முறை நாங்களே அனுமதி சீட்டு இல்லாத
முதல் பார்வையாளர். 2.30 மணி நிகழ்ச்சிக்கு 12 மணிக்கு வந்துவிட்டோம். பெட்டிக்கடையில்
கடலை உருண்டையும் கமர்கட்டும் வாங்கினோம். பறவை சரணாலாய நிலையத்து தொழிலாளி, உள்ளே
வரச்சொல்லி, அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். விளக்கப் படங்களும், காட்சிப்பொருட்களும்
நன்று. 2 மணிக்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. கையில் டெலிஸ்கோப் இருந்தது – சுமார்
ரகம். தொடுவானத்திலோ மேகமூட்டம். ஒரு சிறுவன் பைனக்குலரில் சரியாக தெறியவில்லை என்றான்.
டெலிஸ்கோப்பும் அப்படித்தான் என்று அவனிடம் கொடுத்தேன். ஒலிம்பிக் தீ வைக்கும் கோபுரம்
போல் ஒன்று தெறிகிறதே அதுதான் ராக்கெட்டா, என்று அவன் தாயார் வினவினார். அது நகராட்சி
தண்ணீர் தொட்டி என்றேன். தெளிவான வானம் இருந்தாலே ராக்கெட் தெரியாது, ஆனால் கிளம்பும்
போது நன்றாய் தெரியும் என்று, இரண்டு நிமிட அனுபவ ஆழம் தந்த தன்னம்பிக்கையில், அவர்களுக்கு
ஆறுதல் கூறினேன். மஹாராஷ்டிரா, ஹரியானா பதிவெண்களோடு கார்கள் வந்து நின்றன. அடுத்தமுறை
ஒரு அண்டா டீ கொண்டு வரலாம், நல்ல வியாபாரம் ஆகும் என்று நன்பர் கருணா கூறினார். பிப்ரவரியில்
என்னுடன் வந்த சிவா, குடும்ப சமேதராய் காரில் வந்தார். டெலிஸ்கோப் இங்கும் அங்கும்
கைமாறியது. தண்ணீர் தொட்டிகளை பார்த்து, ஏதாவது ஒன்று ராக்கெட்டாக மாறுமா என்று ஏங்கி
ஏங்கி பார்த்தோம். முன்பு மண்ணாய் இருந்த நிலம், நீர் நிரம்பி ஏரியாய் இருந்தது. ஏரியில்
நடந்து இன்னும் கால் கிலோமீட்டர் சென்றால் ஒருவேளை நன்றாய் தெரியுமோ என்று சிலர் முழங்கால்
நனைத்தனர். எங்கு வரும், எப்படி வரும், சரியான நேரத்தி கிளம்புமா, வெரும் கண்ணில் தெரியுமா,
டெலிஸ்கோப் வேண்டுமா, புகைப்படம் எடுத்தால் வருமா என்ற கேள்விகளுக்கு, அப்துல் கலாமாக
மாறிய நான் முத்துக்களாய் பதில் உதிர்த்தேன்.
கீழ்வானம்
சிவந்தது. கோபுரம் மீண்டும் எரிந்தது. மக்கள ஆரவாரப் பேரொலி எழுந்தது. ஆரவாரமின்றி
ராக்கெட் எழுந்தது. ஒரு நொடி மட்டும் ஜகஜ்ஜோதியாய் தெரிந்தபின், மேகத்தில் கலந்த புகை
மட்டுமே தெரிந்தது. பத்து நொடிக்கு பின் மேகத்திரையை கிழித்து மேலே வந்தது. பிப்ரவரியில்
ராக்கெட் கண்ணுக்கு தெரியவில்லை எரிவாயுவின் ஜ்வாலை மட்டுமே தெரிந்தது. இம்முறை மங்கள்யான்
ராக்கெட்டை நன்றாகவே காணமுடிந்தது. செங்குத்தாய் ஏறாமல் கொஞ்சம் சாய்ந்து ஏறியது போல்
தெரிந்தது. ஆனால், ஏமாற்றம்! 15 நொடிகளில் மீண்டும் மேகத்தில் மறைந்தது. 90 நொடி கழித்தே
மீண்டும் கண்பட்டது. அதுவரை
எரிவாயு அசரீரியாய் கர்ஜித்தது. இரண்டாம் இக்நிஷன் பார்க்கமுடியவில்லை. புகை வால் முற்றி
ராக்கெட் பார்வையிலிருந்து மறைந்தது. அதன் பாதை வளைவை பார்த்து ஓரிருவர் கீழெ விழுகிறதா
என்றனர். இல்லை, பூமி வளைவதால் அப்படி தெறிகிறது என்றேன்.
புளியோதரை
அருந்தி பள்ளிகொண்ட சிவனையும், பொங்கல் ருசித்து மீனாய் நின்ற திருமாலையும், மினரல்
வாட்டர் குடித்து பெரியபாளையத்து அம்மனையும், பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.
வந்த பிறகே மங்கள்யான் வெற்றிகரமாய் விண்ணை அடைந்தது என்று தெரிந்தது.
பி.எஸ்.எல்.வி என்பது போலார் ஸேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் எனும் ஆங்கில சொற்றொடரின் சுருக்கம்.
போலார் = துருவ மார்கம்
ஸேட்டிலைட் = செயற்கை கோள்
லாஞ்ச் = ஏவல்
வெஹிகிள் = வாகனம்
சி-1, சி-2 என்று வரிசையாக செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏவியுள்ளது. மங்கள்யானை எடுத்து சென்ற ராக்கெட் (ஏவுகணை) சி-25.