Thursday 19 December 2013

கேரள சுவரோவியங்கள்

கேரளக் கோவில்களில் நம்மை புகைப்படம் எடுக்க விடுவதில்லை. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள் கோயில்களில் கூட இதை அனுமதிப்பதில்லை. சன்னிதி மட்டும் அல்ல, சுற்றுப்புற சுவர்களில் உள்ள ஓவியங்களை படம் எடுக்க கூட அனுமதி இல்லை. நாட்டில் மற்ற மாநிலங்களில் இந்த கட்டுப்பாடு இல்லை.

நவம்பர் 29 திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் கருவரையை சுற்றி பல ஓவியங்களை நானும் நண்பர் சிவாவும் பார்த்து ரசித்தோம். வேறு எந்த பக்தருக்கும் இதில் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் மூலவரை தரிசனம் செய்து, ஆசிர்வாதம் வாங்கி கொண்டு, குங்குமம் பூ இத்யாதி பிராசதம் வாங்கினால் போதும் என்று கூட்டத்தோடு முட்டி மோதியபின், ஓவியத்தை கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். திருச்சூர் அருகே உள்ள திரிப்பரையாறு ராமர் கோவிலிலும், திருச்சூர் பூரம் அன்று அலங்கார யானைப்படை மிரட்டும் வடக்கும்நாதன் கோவிலிலும் இதே நிலை. 


நவம்பர் 26 திரிப்பரையாறு ராமர் கோவிலில் வட்டமான கருவரையின் வெளிச்சுவரில் உள்ள நாயக்கர் பாணி ஓவியங்களை முக்கால் மணி நேரம் நின்று ரசித்து பார்த்தப்போது ஒரு அர்ச்சகர் அருகே வந்து “ஆர்க்காலஜியோ?” என்றார். அதாவது : நீ தொல்லியல் துறையில் வேலை செய்பவனா, என்று வினா; இல்லை என்றேன். வடக்கும்நாதன் கோவிலில் மூலவர் சந்நிதியும் அதனருகே சங்கரநாராயணர் சந்நிதியும் வட்டவடிவில் சுவரமைத்து, அச்சுவர்களில் நாயக்கர் காலத்து அல்லது நாயக்கர் பாணி ஓவியங்கள் இருக்கும். சிவ புராணம் தான். சதுர வடிவில் அங்கு ஒரு ராமர் சந்நிதியும் உண்டு. அதன் சுவற்றில் ரவிவர்மா பாணியில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. ராமரும் சகோதரர் மூவரும் மணம் செய்யும் காட்சியில் ராமருக்கும் சீதைக்கும் மட்டும் தலைக்குப்பின் வட்டபிம்பம் இருக்கும். இங்கு அர்ச்சகர் ஆர்க்காலஜியா என்று கேட்கவில்லை.

நவம்பர் 28 கொச்சி நகரில் கொச்சி மன்னருக்கு போர்ச்சுகீசியர் கட்டிக்கொடுத்த மட்டஞ்சேரி அரண்மனையின் படுக்கை அறையிலும் நாயக்கர் பாணி ராமாயண காட்சிகள் உண்டு – புகைப்பட அனுமதி இல்லை. இங்கு ஆர்க்காலஜியினர் நீ அர்ச்சகரா என்று கேட்கவில்லை. கம்பீரமாக ஸ்லோகமோ மந்திரமோ ஓதியிருக்கவேண்டும் – வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டேன்.
நாள் கணக்கில் முன்னுக்கு பின் முரணாக, அனந்தன் சந்நிதியில் பாதியில் விட்டு எழுதுவதால், இப்படியே எல்லா கட்டுரைகளும் எழுதும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் என்னை வேலைக்கெடுத்துக்கொள்ளும் என்று வாசகர் அச்சம் கொள்ள வேண்டாம். வேலை கெடுத்துக்கொள்ளாது. அங்கே இருவரும் பார்த்துக்கொண்டிருக்க, பூசைக்கு நேரமாச்சு இடத்தை காலி செய்யுங்கள் என்று ஒரு அர்ச்சகர் அன்பாக துரத்தினார். முக்கால் மணிநேரத்தில் மீண்டும் திறப்போம் சிறப்பு தரிசனம் காண எல்லீரும் வாரீர் என்று அன்புடன் வேறு ஒரு அர்ச்சகர் அன்பாக அழைத்தார். 

வேலை இருந்ததால் சிவா கான்ஃபரன்ஸுக்கும், வேலை இல்லாததால் ஊர்சுற்ற நானும் அன்புடன் நகர்ந்தோம். அன்ன்பூர்ணா என்று ஒரு சைவ உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்றேன். 70 ரூபாய்க்கு இலைச்சாப்பாடு – பருப்பு, சாம்பார், மோர்குழம்பு, ரசம், தயிர், அவியல், அப்பளம், கூட்டு பொரியல்; இவற்றுடன் சூடாக பொடாசியம் பெர்மாங்கனேட் கலரில் கருங்காலி வெள்ளம். ரசித்து ருசித்து அருந்தினேன்.

அந்த உணவகத்தின் சுவர்களில் பத்மநாபசுவாமி கோவிலின் கருவறை வெளிச் சுவர்களில் உள்ள ஓவியங்களை போலவே, அதே பொலிவுடன், அதே ஓவியர் தீட்டியது போல், பல சிவ விஷ்ணு ஓவியங்கள். புகைப்படம் எடுத்தால் ஆர்க்காலஜியோ என்று வெய்ட்டர் கூட கேட்கவில்லை.

கண்டு ரசிக்கவும். உண்டும் ரசிக்கலாம்.

No comments:

Post a Comment