Wednesday 25 December 2013

இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள்

இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள். பழைய யுகத்தை மாற்றி புதிய யுகத்தை உருவாக்கினார். உலகில் ஏதோ ஒரு மூலையில், படாடோபம் இன்றி பிறந்து, இளைய பருவத்தில் எவரும் செய்யாத சாதனைகள் புரிந்து, வியந்து பின் தொடர்ந்த ஒரு சீடர் கூட்டத்தை உருவாக்கினார்.

தான் ஞான இருளில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணராமலிருந்த உலகத்திற்கு சிந்தையும் மனமும் பெரிதளவும் மாறும் வகையில் சொல்லாலும் செயலாலும் புதுமை செய்து, ஞான ஒளி வீசி மங்காப்புகழ் பெற்றார்.

தனக்கு முன்னர் வந்த பல சான்றோரின் கருத்தை அவர் மறுத்தார். தான் ஒரு யுகப்புருஷர் என்று உணர்ந்ததால், சில நேரம் ஆணவமும் திறமைகர்வமும் அவர் பேச்சிலும் செயலிலும் ஜொலித்தது. ஆனால் தனக்கும் எல்லை உள்ளதை அறிந்து தன்னடக்கதையும் அவர் தெரிவித்தார்.

அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரத்த சதை வாரிசுகள் ஏதும் இல்லை. ஆனால் அவர் கொள்கைகளின் வாரிசு இல்லாத நாடே இல்லை.

தன் வாழ்நாளில் பல சோதனைகளை சந்தித்தார். எதிர்ப்புகளும் வந்தன. ஒரு சில மாமேதைகளுக்கு மட்டுமே அவருடை வாக்கியங்களும் கொள்கைகளும் புதுச்சிந்தனைகளும் அன்று புரிந்தது. அவர் காலத்தில் இப்படி ஒருவர் இருந்தார் என்று உலகத்தின் மற்ற சமூகங்கள் அறியவில்லை. இன்றோ அவர் உலகம் போற்றும் மாமனிதர்.

டிசம்பர் 25 – ஜகத்குரு ஐசக் நியூட்டனின் பிறந்தநாள்.



No comments:

Post a Comment