Saturday 26 March 2022

காரவேலன் கல்வெட்டு

 சமீபத்தில் கடந்த 2022 ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை கலிங்கம் பற்றி ஒரு பேச்சு கச்சேரி நடத்தியது. எட்டு தலைப்புகளில், தமிழில் கலிங்க (ஒடிசா மாநில) வரலாறு, கல்வெட்டு, சிற்பம், கோயில் கலை போன்றவை காட்சிகளோடு பேசப்பட்டன. இதில் மௌரிய மன்னன் அசோகன் கல்வெட்டும், மகாமேகவாகன வம்ச மன்னன் காரவேலன் கல்வெட்டும், நான் பேசிய தலைப்புகள்.

மௌரிய அசோகனின் கல்வெட்டை விவரித்து பின்னர் தனி கட்டுரையாக எழுதுவேன்.

இங்கே காரவேலன் கல்வெட்டை பார்போம். அசோகன் கலிங்கத்தின் மேல் போர் தொடுத்தான் என்று நாம் அறிவோம். ஆனால் அவனை எதிர்த்த கலிங்க மன்னனை பற்றியோ வம்சத்தை பற்றியோ எந்த தகவல்களும் இல்லை. கல்வெட்டும் இல்லை. அசோகனின் கலிங்கப்போர் நடந்த சுமார் நூறாண்டுகளுக்கு பின், கலிங்கத்தை ஆண்ட மன்னன் காரவேலன். அவனுடைய கல்வெட்டு ஒன்றே ஒன்று உதயகிரி மலையில் ஹாதிகும்பா (ஹாதி=யானை; கும்பா=குகை) என்னும் குகையின் விதானத்தில் கிடைத்தது. பிராகிருத மொழியில் பிராமி லிபியில் பதினைந்து அடி நீளமும் ஐந்தரை அடி அகலமுமான இக்கல்வெட்டில், பதினேழு வரிகள் இருபது வாக்கியங்களாக அமைந்துள்ளன.

புவநேச்சுரம் நகரின் எல்லையில் உதயகிரி கண்டகிரி என்று இரு மலைகள். கண்டகிரி மலையில் பல சமண குகைகளும், அவற்றுள் தீர்தங்கரர் மற்றும் யக்ஷிகளின் சிற்பங்களும் உள்ளனர். ஒரு சமணகோயிலும் உள்ளது.

உதயகிரி - காரவேலன் கல்வெட்டுள்ள மலை 

காரவேலன் கல்வெட்டு


With THT group and Kharavela inscription

உதயகிரி மலையில் குகைகள் உள்ளன; ஆனால் சமண சிற்பங்கள் ஏதும் இல்லை. ராணிகும்பா என்னும் குகையில் இருக்கும் பல்வேறு சிற்பங்கள் காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தின் சில காட்சிகளை காட்டுவதாக சில கலை வல்லுனர் கருதுகின்றனர். உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் குகைகள் பற்றி பத்ரி சேஷாத்ரியின் உரை காணலாம்.

காரவேலன் கல்வெட்டுள்ள மலை மேல் ஒரு சைத்தியத்தின் அதிட்டனாம் மட்டும் மிச்சமுள்ளது. கல்வெட்டின் பதினேழாம் வாக்கியத்தில் விஜயசக்கரத்தில் குமரி மலையில் காரவேலன் அருகர்களுக்கு ஆலயம் எழுப்பினான் என்று குறிப்பால், இந்த மலைக்கு குமாரிமலை என்ற பெயர் இருந்ததாகவும், அவன் எழுப்பிய அருகர் ஆலயத்தின் எச்சமே இந்த சைத்தியம் என்றும் கருதலாம்.

சைத்தியத்தின் அதிட்டனாம் 


இந்த கல்வெட்டை கிபி1825ல் ஸ்டெர்லிங்க் கண்டுபிடித்தான். கர்ன்ல் கிட்டோ என்னும் கிழக்கி இந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரி பிரதி எடுத்தான். அப்பொழுது இந்த லிபி அடையாளம் தெரியாத புதிராகவே இருந்தது. இந்த லிபியை பல கல்வெட்டுகளை படித்து மீட்டுதந்த ஜேம்ஸ் பிரின்சப், 1837ல் காரவேலன் கல்வெட்டை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தான். 1861 இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது. துறை தலைவர் கர்னல் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் 1877ல் இந்த கல்வெட்டை இன்னொரு பிரதி எடுத்தான். 1880ல் அதை ராஜேந்திர லால் மித்ரா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, 1888ல் பகவான் லால் இந்திராஜி காரவேல மன்னனின் பெயரை அடையாளம் காட்ட, இதன் சிறப்பு தெரியவந்தது. 1895 முதல் 1942 வரை பியூலர், ஃப்ளீட், ஜெய்ஸ்வால், பானர்ஜி, பாருவா, டி.சி. சர்கார் ஆகியோர் பல சொற்களிலும் பொருளிலும் பாடபேதங்களை பதிவிட்டனர்.

ஏன் இத்தனை பாட பேதங்கள்? காரவேலன் காலத்து பிராகிருதம் எங்கும் வழக்கில் இல்லை. பிராகிருத சொற்களுக்கு சமமான சம்ஸ்கிருத சொற்களை யூகித்து பொருளை புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் முனைந்தனர். கல்வெட்டில் சில சொற்களும், ஒரு சில சொற்களில் சில எழுத்துக்களும், அழிந்துவிட்டன. இப்பிரிதியின் படத்தில் புள்ளியுள்ள எழுத்துக்கள் அழிந்துபோனதற்கு அடையாளம்.

காரவேலன் கல்வெட்டு இந்திய வரலாற்றில் பெரும் முக்கியம் பெற்றது.

அதுவே ஒரு கலிங்க மன்னனின் மிக தொன்மையான கல்வெட்டு. (இன்று பிகார் என்று அழைக்கும் மகத நாட்டு மன்னன் அசோகன் ). காரவேலன் தோன்றிய மகாமேகவாகன வம்சத்தின் ஒரே கல்வெட்டு. இதில் கிடைக்கும் பல வரலாற்று தகவல்கள் வேறு எந்த கல்வெட்டிலோ நூலிலோ செப்பேட்டிலோ இல்லை.

மேலும், ஒரு மன்னனின் ஆட்சியாண்டுகளை வரிசையில் கூறி ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்ந்த முக்கிய போர்களை, அரசபணிகளை, சாதனைகளை, வாழ்க்கை சம்பவங்களை கூறும் அபூர்வ கல்வெட்டு.

அர்த்த சாத்திரத்தில் சானக்கியன் போற்றும் பிரஞாபன லேகன (”பொது அறிவிப்பு”) விதிகளுக்கு காரவேலன் கல்வெட்டு தனிச்சிறப்பான சான்று என்மனார் அறிஞர். சானக்கியன் கூறும் ஆறு குணங்களையும் இதில் காணலாம்.

  • அர்த்தக்கிரமம் (சீரான அமைப்பு )
  • சம்பந்தம் (பொருத்தம்)
  • பரிபூரணதா (முழுமை)
  • மாதுர்யம் (இனிமை)
  • ஔடர்யம் (கம்பீரம்)
  • ஸ்பஷ்டவம் (தெளிவு)

ஆட்சியாண்டை தவிற 103ம் ஆண்டு, 113ம் ஆண்டு, 165ம் ஆண்டு என்று சில குறிப்புகள் உள்ளன. இவை கலியாண்டாகவோ சக ஆண்டாகவோ இருக்க வாய்ப்பில்லை. காரவேலன் சமண மதத்தை  சேர்ந்தவன் என்பதால் மகாவீர யுகத்தையும் அந்த ஆண்டுகணக்கையும் குறிப்பதாக அறிஞர் கருதுகின்றனர். கடைசி ஜைன தீர்த்தங்கராரான வர்தமான மகாவீரர் பரிநிர்வாணம் (மரணம்) அடைந்த ஆண்டு முதல் தொடங்குவது இந்த மகாவீர யுகம். அதற்கு சமமான கிறுத்துவ ஆண்டை கல்வெட்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.

எனக்கு பிராகிருதமோ சம்ஸ்கிருதமோ தெரியாது. தமிழில் ததிங்கிதோம் தான். நான் தொல்லியல் நிபுணனும் அல்லன். சமணமும் தெரியாது. கடைசி நான்கு வரிகளில் வரும் பல சொற்றொடர்களும் வர்ணனையும் சமண தத்துவம், நூல்கள், வரலாறு ஆழ்ந்து அறிபவர்க்கே சரியாக விளங்கும் என நினைக்கிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில், எனக்கு புரிந்த அளவில் தமிழாக்கம் செய்துள்ளேன்.

---------

வரி 1 

நமோ அர்ஹந்தானாம் | நமோ சர்வ சித்தானாம்
ஐரேன மகாராஜேன மகாமேகவாகனேன
சேதிராஜவம்ச-வதனேன பசத-சுப-லகனேன சதுரந்த-லூடன-குண-உபேதேன 
கலிங்காதிபதினா-சிரி-காரவேலேன

அருகருக்கு வணக்கம். அனைத்து சித்தருக்கும் வணக்கம்

ஐ மகாமேகவாகனன், மகாராஜன், கலிங்க அதிபதி,  சேதிவம்ச வர்தனன், சுப லக்ஷணம் உடையவன், நாற்திசையும் புகழ் பரவிய குணவான், செம்மேனியன் திரு காரவேலனால்  பதினைந்து வருடம் இளவரசனுக்கு தகுந்த விளையாட்டுகள் விளையாடப் பெற்றன.

வரி 2

பாண்டரச-வசானி சிரி-கடார-சரீர-வதா- கீடிதா
குமார-கீடிகா | ததோ லேக-ரூபா-கணனா-வவஹாரா-
விதி-விசாரதேன சவ-விஜாவதாதேன நவ-வசானி
யோவராஜ(ம்) பசாசிதம் | சம்பூண-சதுவீசதி-வசோ
ததானி வதமான-சேச-யோவனாபிவிஜயோ ததீயே

அதன் பின், எழுத்து(லேக) பணம்(ரூபா) கணக்கு(கணணம்), நிர்வாகம் ஆகிய கலைகளில் வல்லவனால் ஒன்பது வருடம் யுவராஜனாய் ஆளப்பெற்றது.

இருபத்திநான்கு வயது கடந்தபின், தன் இளமை (யோவனா) போர் வெற்றிகளால் செல்வம் பெருக, கலிங்க ராஜவம்சத்து மூன்றாம் (ததியே=த்ருதீய) அரசனாக மகாராஜ அபிசேகம் செய்யப் பெற்றான்.

வரி 3

கலிங்க-ராஜவம்சே-புரிசயுகே மகாராஜாபிசேசனம்
பாபுனாதி | அபிசிதமதோ ச பதமே வசே வாத-
விஹத கோபுர-பாகர-நிவேசனம் படிசங்காரயதி
கலிங்கநகரி-கிபீரம் சீதல-தடாக-பாடியோ ச
பந்தாபயதி சவூயான-படிசந்தபனம் ச

முதல் (பதமே=பிரதமே) வருடம் முப்பதியைந்து (பனதிசாஹி=பஞ்சத்ரிம்ஷதி) நூறாயிரம் (சத-சஹஸ்ர) செலவில், புயலால் முறிந்த (வாத-விஹத) கோபுரம் பிராகாரம் (பாகர) கட்டடம் (நிவேசனம்) சீரமைத்து தடாக கரைகள் சீரெழுப்பி  மக்களை மகிழ்வித்தான்.

வரி 4

காரயதி பனதிசாஹி-சட-சஹசேஹி பகதியோ ச ரஞ்சயதி | 
துதியே ச வசே அசிதயிதா சாதகணிம் பசிம-திசம் ஹய-கஜ-நர-ரத-பஹுலம்-தண்டம் படாபயதி கன்ஹ-பேம்னா-கதாய ச சேனாய 
விதாசதி அசிக-நகரம் | ததியே புனவசே

இரண்டாம் (துதியே=த்விதீயே) வருடம் சாதகர்ணி (மன்னனை) கருதாமல் மேற்கு திசையில் குதிரை(ஹய) யானை(கஜ) நர(கால்நடை வீரர்) தேர்(ரத) பலர் கொண்ட சேனை அனுப்பி கிருஷ்ணவேணா நதி அடைந்து அசிக நகரம் கைபற்றினான்.

வரி 5

கந்தவ-வேத-புதோ தப-நத-கீத-வாதித-சந்தம்சனாஹி உசவ-சமாஜ-காராபனாஹி ச கீடபய்தி நகரிம் | ததா சவுதே வசே
விஜாதராதிவாசம் அஹத-புவ-கலிங்க-புவராஜ
நிவேசிதி-விதத-மகுட-சபிலதிதே ச நிகித-சத

மீண்டும், மூன்றாம் (ததியே=த்ருதீயே) வருடம் (தலை)நகரத்தில் இசைக்கலை அறிந்தவன் (கந்தவ-வேத-புதோ) நாட்டியம்,பாடல்,இசை,கவிதையால் (தப-நத-கீத-வாதித-சந்தம்)
உற்சவம்(விழா) நடத்தி மக்களை மகிழ்வித்தான். 


மீண்டும், நான்காம்(சவுதே=சதுர்தே) வருடம் எந்த கலிங்கராஜனும் நுழையாத வித்யாதரரின் நகரம் நுழைந்து, ரடிக-போஜகரின் செல்வமும் ரத்தினமும் பரித்து, மகுடமும் பட்டத்து குதிரையும் சாய்த்து, குடையும் (சத்ர) தங்கக்குவளையும் (பீங்கார) ஒதுக்கி, காலடி பணிய வைத்தான்.

வரி 6

பீங்காரே ஹித-ரதன-சாபதேயே சவ-ரடிக-போஜகே
பாதே வந்தாபயதி | பஞ்சமே ச தானி வசே
நந்தராஜ-திவசசத-ஓகாடிதம் தனசுலியவாடா-
பணாடிம் நகரம் பவேசயதி ச... | அபிசிதோ ச
.... ராஜசேயம் சந்தசயந்தோ சவ-கர-வண


ஐந்தாம் (பஞ்சமே) வருடம் நந்தராஜனால் அமைக்கப்பட்ட
தனசுலியவாடா கால்வாயை தலைநகருக்கு கொண்டுவந்தான்

வரி 7 

அனுகஹ-அனேகானி சத-சஹசானி விசஜதி போர-ஜானபதம் | 
சதமே ச வசே பசாசதோ வஜிராகரவதி-குசித-கரினி ஸா மதுகு-பத
பும்னோ...த பா... | அடமே ச வசே மஹதா-சேனாய
(அபதி)ஹத-(பி)தி-கோரதகிரிம்


அபிசேகம் செய்த (ஆறாம் வருடம்) செல்வத்தை (ஷ்ரேயம்) நகர-ஜனபத மக்கள் அனுபவிக்க அவர்கள் பல நூறாயிரம் மதிப்புள்ள வரிகளையும் தானங்களையும் வழங்கினான்

ஏழாம் (சதமே) வருடம் (ராணி)) வஜிராகரவதி சேர்த்த புண்ணியத்தால் தாய் எனும் கௌரவம் அடைந்தாள்

வரி 8

காதபயிதா ராஜகஹ-நப(ம்) பீடபயதி | ஏதினம் ச கம்மபதான-பனந்தேன சம்பித-செனவாகனே விபமு(ஞ்)சிது மதுரம் அபயாதோ 
யமனா-(நதீம்)... | பலவபார

எட்டாம் வருடம் பெரும் சேனையுடன் கோரதகிரி (கழுகுமலை?) பற்றி ராஜகிருஹ மன்னனை (நப=ந்ருப) துன்புருத்தினான். இதை தொடர்ந்து சேனையுடன் யமுனை நதி வரை சென்று மதுரா நகரை விடுவித்தான். பழம்சுமந்த (பலவபார) (கல்ப-விருட்சம்) கபுருக சுமந்து நாலவகை படையுடன் தூபத்திற்கு எல்லா கிரஹவாசிகளாலும் பூஜிக்கப்படும் ஸ்தூபத்திற்கு சர்வகரஹண விழா நடத்தி, ப்ராமண ஜாதியருக்கு பரிசு வழங்கி, அருகர்களை (வணங்கினான்). 

வரி 9

கபுருக ஹய-கஜ-ரத-சஹ யந்தே சவ-
கராவாசி-பூஜி | ...டூ | ...யா சவ-கஹனம் ச
காரயிதும் பமணானம் ஜாதிம் பரிஹாரம் ததாதி
அரஹத ச....... சுவிஜய

வரி 10

தே உபய-ப்ராசி-தடே ராஜ-நிவாசம் மகாவிஜய-
பாசாதம் காரயதி அடதிசாய-சத-ஸஹஸேஹி. 

(ஒன்பதாம் வருடம்) வெற்றிக்கு பின் ப்ராசி நதியின் இரு கரையிலும் மகாவிஜய பிராசாதம் எனும் அரண்மனையை (ராஜ-நிவாசம்) முப்பத்தி எட்டாயிரம் செலவழித்து கட்டுவித்தான்.

தசமே ச வசே தந்த-சந்தி-சா(ம)மயோ
பாரதவச-படானம் மஹீ-ஜயனம்...
காராபயஹதி | ......... பாயாதானம் மணிரதனானி-சஹ
யாதி |  (சஹயாதி ??|| உபலபதே??)

பத்தாம் (தசமே) வருடம் பாரதவர்ஷத்தை மஹீஜயனம் (பெரும்வெற்றி) கொள்ள படைகள் பயின்றன. பிதுடம் என்னும் அவ-ராஜ (பர்மா) தேசம் நுழைந்து கழுதைகள் (கதபன) பூட்டிய ஏரால்(கலேன) வயல் உழுது (காசயதி) தன்னாட்டு நலனிற்காக 113ம் ஆண்டு (தேரசவச-சத) உருவாகிய தமிழ்நாடுகளின் சங்கத்தை (தமிர தேச சங்காதம்) பிளந்தான்(பிந்ததி).

வரி 11

*** (மந்தம்) ச அவ-ராஜ-நிவேசிதம் பிதுடம்
கதபனகலேன காசயதி ஜனபத-பாவனம்
ச தேரசவச-சத-கதம் பிந்ததி தமிர-தஹ-
சங்காதம் | பாரசமே ச வசே ...... ச(ஹ)சேஹி
விதாசயதோ உதராபத-ராஜானோ

பன்னிரண்டாம் வருடம் வடதிசை மன்னர்களை அஞ்சவைத்து மகத கங்கை நதிநீரை யானைகளும் குதிரைகளும் பருகவைத்து, மன்னன் பிரஹஸ்பதிமித்ரனை தன் காலடி பணியவைத்து, நந்த ராஜர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஜீனரின் சிலையை அக்கோயிலில் வணங்கி, அங்க மகத நாட்டு அரண்மனை ரத்தினங்களை கலிங்கத்திற்கு கொண்டுவந்தான்.

வரி 12

*** மாகதானாம் ச விபுலம் பயம் ஜனேதோ ஹதசம்
கங்காய பாயயதி மாகதம் ச ராஜானாம்
பஹ(ஸ)திமிதம் பாதே வந்தாபயதி நந்தராஜ-
நீதம் ச கலிங்கம்-ஜீனம் சந்நீவேசே ***  (கஹ)-
ரத(னா)னி படீஹாரேஹி அங்க-மகத-வசும் ச நேயதி |

வரி 13

*** கேதும் ஜடர-லகில-(கோ)புரானி-சிகரானி
நிவேசயதி சத-விசிகானாம் பரிஹாரேஹி |
அபுதமசரியம் ச ஹதி-நவ-நீதம் பரிஹரதி
***  ஹய-ஹதி-ரதன-மானிகோ பாண்ட-ராஜ (சேதானி
அனேகானி) முத-மனி-ரதனானி ஆஹராபயதி இத சத-ச...

கலிங்கம் வந்து கோபுரங்களின் சிகரங்களில் கொடிகளை பறக்கவைத்தான். யானைகளும் படகுகளும் கொண்ட அற்புதமான ஆச்சரியமான படைசெலுத்தி பாண்டியமன்னனின் (பாண்டராஜ) பலநூறாயிரம் முத்துமணி-ரத்தினங்களுக்கு விலைபோகும் குதிரை யானை மணிகள் ரத்தினங்களை எடுத்துவந்தான்.

வரி 14

*** சினோ வசீகரோதி | தேரசமே ச வசே சுபவத விஜய-
சகே-குமாரி-பவதே அரஹதே பகிண-சம்சிதேஹி
காய-நிசீதீயாயா யாபுஜவகேஹி ராஜ-ப4தினா சின-
வதானா வச-சிதானா பூஜானுரத-உவாசக-
காரவேல-சிரினா ஜீவ-தேஹ-(சிரிதா) பரிகாதா |

பதிமூன்றாம் வருடம் விஜயசக்கரத்தில் குமாரி மலையில் பூஜையில் வல்லவனான ஜீவதேக இயல்பறிந்த காரவேலஸ்ரீ உடலிலிருந்து ஆன்மாவை விடுதலை (காய நிசீதீயாயா) செய்துகொண்டவரான அருகர்களுக்கு (அரஹதே) ஆலயம் (ஸ்தூபம்? சைத்யம்) எழுப்பினான்

(இங்கே தெளிவில்லை)

வரி 15

*** சுகத-சமண-சுவிஹிதானம் ச சவ-திசானாம்
ஞானினம் தபசி-இசினம் சங்க4யனம் அரஹத-
நிசீதீயா சமீபே பாபா4ரே வராகார-சமுதாபிதாஹி
அனேக-யோஜனாஹிதாஹி.... சிலாஹி சிம்ஹபதா-ராணீ-
சிந்துலாய நிசயானி |

எல்லா திசைகளிலிருந்தும் பல யோஜனை தூரங்களிலிருந்தும் ஞானிகளாம் தபஸ்வி-ரிஷிகளாம் போற்றதகுந்த (சுவிஹித) சமணர்கள், மலைமேல்  அருகன் கோவிலின் அருகே அமைத்த பிராகாரத்தில் சிம்ஹம்பத ராணி சிந்துலா அமைத்த கல் (சிலாஹி) பலகையை வந்தடைந்தனர்

வரி 16

*** படலகே சதரே ச வேடூரிய-கபே-த2பே
பதிடா2பயதி பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி
மு(ரி)கிய-கால-வோசிம்ன ச சோயட2-அங்கம்
சந்திகம் துரியம் உபாத3யதி | கே2ம-ராஜா ஸ
வத-ராஜா ஸ பிக்கு-ராஜா தம-ராஜா பசந்தோ
சுநந்தோ அநுபவந்தோ கலாணானி |

வைடூரியம் பதித்த தூண்கள் கொண்ட அந்த மன்றத்தில் 165ம் ஆண்டு முதல் (பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி) மலிந்து வரும் பன்னிரண்டு அங்கங்களை (சமண புனித நூலகளை) வாசிக்க வைத்தான். இவன் நலம்புரியம் (கேம=க்ஷேம) அரசன், செல்வ (வத=வ்ரத?) ராசன் பிக்கு அரசன் தர்ம அரசன். அந்நூல்களை கேள்விகேட்டு (குறைகேட்டு?) செவிசாய்த்து, அனுபவித்து புரிந்துகொள்பவன்.

வரி 17

....குண-விசேச-குசலோ சவ-பாசந்த-பூஜகோ சவ-
தேவாயதன-சங்காரகாரகோ அபதிஹத-சக-
வாஹன-பலோ சக-தரோ குத-சகோ பவத-சகோ
ராஜசி-வம்ச-குல-விநிஷிதோ மகாவிஜயோ ராஜா-
காரவேல-சிரி |

குணத்தில் சிறந்தவன், எல்லா மதங்களையும் பூஜிப்பவன், எல்லா கோயில்களுக்கும் (சவ-தேவாயதனம்) நன்மைசெய்பவன் (சம்காரகாரக) வெல்லமுடியா படைவாகனம் உடையவன், (தர்ம?வெற்றி?) சக்கரம் உடையவன், ராஜவம்சத்தினரை காப்பவன், மகாவிஜயன், ராஜா காரவேல ஸ்ரீ.

கலிங்கம் பேச்சு கச்சேரி - காணொளிகள் 

உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் - பத்ரி சேஷாத்ரியின் உரை 

தொடர்புடைய கட்டுரைகள்

Thursday 17 March 2022

விசித்திரசித்தன் குஸ்ரோ

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தன்னை விசித்திரசித்தன் என்று அழைத்துக்கொண்டான். விசித்திரசித்தன் என்ற விருதுபெயரை மண்டகபட்டு, திருச்சி மலைக்கோட்டை லலிதாங்குர பல்லவேச்சுரம், சென்னை பல்லாவரம் குகை கோயில் ஆகிய குகைகோயில்களில் கல்வெட்டாக பொறித்தான்.

கோயில் கலைகளில் புதுமைகள், சமஸ்கிருத இலக்கியத்தில் ஹாஸ்ய நாடகங்கள் எழுதிய புதுமை, தான் சூட்டுக்கொண்ட விருதுகளில் புதுமை, இசையில் புதுமை என்று பற்பல புதுமைகள் செய்த மகேந்திர பல்லவனுக்கு இந்திய வரலாற்றில் நிகரில்லை. கிண்டலும் எள்ளலும் நையாண்டியும் அவன் படைப்பிலும் சொல்லிலும் துள்ளிவிளையாடின.

ஆனால் மகேந்திரனை மிஞ்சிய ஒரு மன்னன் அவனுக்கு சற்றே ஒரு தலைமுறைக்கு முன்பு பாரசீகத்தை ஆண்டான். குஸ்ரோ அனூசிரவன் எனும் பாரசீக மன்னன் செய்த வரலாற்று நையாண்டிக்கு உலக சரித்திரத்தில் நிகரில்லை. ஆறாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசும் பாரசீக பேரரசும் பாரதத்தின் மேற்கே பெரும் நாடுகள். ஆங்கிலேயர் ஆட்சியால் நமக்கு ரோமாபுரியை தெரிந்த அளவு பண்டைய பாரசீக வரலாறு பரிச்சயமல்ல.

எகிப்தை ஜூலியஸ் சீசர் கைபிடித்த பின், ரோமாபுரி சாம்ராஜ்ஜியம் பெரிதாகியது. கிழக்கில் பாரசீகத்தோடு பல போர்களை நடத்தினர். பாரசீகத்தில் அலெக்சாண்டர் விட்டுசென்ற கிரேக்க ஆட்சி வீழந்து பாரசீக சசானிய வம்சம் பேரரசானது. ரோமாபுரிக்கும் பாரசீகத்திற்கும் இடையே பல போர்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்தன. ஆறாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டினோபிளை தலைநகரமாக கொண்டு ரோமராஜ்ஜியம் கொடிகட்டியது. இத்தாலியில் உள்ள ரோமாபுரி ஐந்தாம் நூற்றாண்டிலே ஜெர்மானிய படைகளால் வீழ்த்தப்பட்டது. கான்ஸ்டாடினோபிளை தலைநகராக கொண்ட நாடு தன்னை ரோம் அல்லது ரூம் என்றே சொல்லிக்கொண்டது. ரோம மன்னன் ஜஸ்டினியன் பாரசீகத்தின் மீது போர் தொடுக்க, பாரசீக மன்னன் குஸ்ரோ பதிலடியாக தன் படையை செலுத்தி ரோம படைகளை வெளியேற்றி, சிரியதேசம் வரை விரட்டினான். அங்குள்ள அண்டியோக் என்னும் நகரத்தை சூழ்ந்து கப்பம் கேட்டான். அண்டியோக் நகரம் கப்பம் கட்ட மறுத்துவிட்டது. அந்நகரை முற்றுகையிட்டு படைகளை வீழ்த்தி நகரத்தில் நுழைந்தான். பொதுவாக தண்டனையாக நகரங்களை அழிப்பது எதிரிமன்னர்களின் வழக்கம். ஆனால் குஸ்ரோ நாட்டின் மன்னன் மட்டுமல்ல நையாண்டி மன்னன். ரோம மக்களுக்கு தாங்களே அறிவிலும் திறனிலும் நாகரீகத்தில் உலகில் மிகச்சிறந்த சமூகம் என்ற கர்வம் இருந்தது. ஆண்டியோக் நகரை தாங்கள் கட்டியதால் அதை நகரமைப்பிலும் கட்டுமான திறத்திலும் கலை அழகிலும் மிகச்சிறந்த நகரம் என்று பெருமைசாற்றி வந்தனர்.

குஸ்ரோ தன் நாட்டு ஸ்தபதிகளை அதிகாரகிகளையும் அண்டியோக் நகரின் ஒவ்வொரு வீடு, வீதி, மாளிகை, கோயில், கிணறு, தோட்டம் என்று ஒன்றுவிடாமல் அளவெடுத்து பதிவு செய்ய கட்டளையிட்டான். பின்னர் பாரசீக நாட்டுக்கு திரும்பிச் சென்று புகழ்மிக்க தெசைபான் நகருக்கு அருகே, இன்னொரு அண்டியோக் நகரை படைக்க கட்டளையிட்டான். ஒவ்வொரு செங்கலும், வீடும், வீதியும், மாளிகையும், கிணறும் குளமும் கோயிலும் அவர்கள் பழைய அண்டியோக் நகரில் எடுத்த அளவுகளை வைத்து ஒரு புதிய நகரத்தை மீட்டுருவாக்கினான். புது நகருக்கு “வெஃ குஸ்ரோ அண்டியோக்” என்று பெயர் வைத்தான். “குஸ்ரோவின் சிறந்த அண்டியோக்” என்பது இதன் பொருள். பழைய அண்டியோக் நகரில் சிறைபிடித்த பல்லாயிரம் மக்களை தன் புதிய நகரில் குடிபுகுத்தினான்.

ரோமாபுரி ராஜ்ஜியத்தையும் அதன் மரபையும் இப்படி குஸ்ரோ நகலெடுத்து நையாண்டி செய்ததுபோல் உலகில் வேறு எந்த அரசனோ அறிஞனோ புலவனோ நையாண்டி செய்ததில்லை என்றே நினைக்கிறேன். நம் காலத்து நையாண்டி நாயகன் டொணால்டு டிரம்பும் கூட வார்த்தையில் மட்டுமே ஜாலம் காட்ட, குஸ்ரோ விசித்திரசித்தரில் இமயமாய் நிற்கிறான்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் அழகில் மெய்மறந்து, பல்லவரை வென்ற சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன், தன் தலைநகர் பட்டடக்கல்லில் பல்லவ சிற்பிகளை அழைத்துபோய் இரு கோயில்களை நிறுவினான் என்று சில அறிஞரின் கூற்று. அதெல்லாம் ஒரு கலை ரசனை. இது வேறு தளம். மகேந்திர பல்லவனுக்கு இந்த குஸ்ரோ கதை தெரிந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பான்.

மௌரிய மன்னன் அசோகன் தன்காலத்தில் அண்டியோக் மன்னனுக்கு தூது அனுப்பினான் என்பது குறிப்பிடதக்கது. குஸ்ரோவுக்கு சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் அசோகன்.

கன்னௌஜ் மன்னன் சர்வவர்மனின் ஒரு மந்திரி சதுரங்கத்தை குஸ்ரோவின் ராஜசபைக்கு அனுப்பினான் என்றும், குஸ்ரோவின் மந்திரி கன்னௌஜ் மன்னனுக்கு பேக்கேமன் என்றும் விளையாட்டை திருப்பி அனுப்பினான் என்றும் விக்கிபீடியா கூறுகிறது. பல்வேறு நாட்டு பண்டிதர்களை தன் நாட்டிற்கு வரவழைத்து குஸ்ரோ ஆட்சியில் கலைகள் ஓங்கின.

கோரா என்னும் வலைதளத்தில் இந்த குஸ்ரோ சாதனையை முதன்முதலில் படித்தேன்.

வரலாற்று கட்டுரைகள்