Showing posts with label பிராமி. Show all posts
Showing posts with label பிராமி. Show all posts

Saturday, 14 May 2022

அசோகன் கல்வெட்டு – முதல் பத்து தம்மலிபிகள்

Site seminar moment at Dhauli


சமீபத்தில் கடந்த 2022 ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை கலிங்கம் பற்றி ஒரு பேச்சு கச்சேரி நடத்தியது. எட்டு தலைப்புகளில், தமிழில் கலிங்க (ஒடிசா மாநில) வரலாறு, கல்வெட்டு, சிற்பம், கோயில் கலை போன்றவை காட்சிகளோடு பேசப்பட்டன. இதில் மௌரிய மன்னன் அசோகன் கல்வெட்டும், மகாமேகவாகன வம்ச மன்னன் காரவேலன் கல்வெட்டும், நான் பேசிய தலைப்புகள்.

காரவேலன் கல்வெட்டின் விளக்கம் இங்கே

மௌரிய மன்னன் அசோகனின் கல்வெட்டை இப்போது பார்க்கலாம்.

அசோகனின் கல்வெட்டுகளை பாறை முகங்களிலும், தூண்களிலும் குகைச்சுவர்களிலும் பரதகண்டத்தின் பல இடங்களில் காணலாம். பெரும்பான்மையான கல்வெட்டுகளின் மொழி பிராகிருதம்; லிபி பிராஃமி. காஷ்மீரத்தில் மான்ஷேரா, ஷாபாஸ்காரி எனும் இடங்களில் காணும் அசோகன் கல்வெட்டுகளின் மொழி பிராகிருதம்; ஆனால் லிபி கரோஷ்டி. இன்றைய ஆஃப்கானிஸ்தானத்தில், கந்தஹார் எனும் நகரில் அசோகன் கல்வெட்டு கிரேக்க மொழியிலும் அரமேயிக் மொழியிலும் அவற்றின் லிபிகளில் காணலாம். அலெக்ஸாண்டரின் படையெடுப்பினால் எகிப்து முதல் ஆஃப்கானிஸ்தானம் வரை கிரேக்க மொழி ஆட்சி மொழியாகிவிட்டது. அதற்கு முன் பாரசீக மொழியின் ஆட்சி மொழியாக நிலவியது அரமேயிக் மொழி. இங்கெல்லாம் இருப்பவை 14 தம்மலிபிகள். சில அதிகாரிகளுக்கு கட்டளைகள்; சில மக்களுக்கு அறிவுரைகள்; சில உபதேசங்கள்; சில கோரிக்கைகள்; அனைத்தையும் அசோகன் பொதுவாக இட்ட பெயர் தம்மலிபி. 

தௌலி பாறை முகம் 


தௌலி கல்வெட்டு

புவநேச்சுரம் நகரின் அருகில் தயா என்னும் நதியின் கரையில், தௌலி எனும் இடத்தில் பிராகிருத மொழியில் பிராமி லிபியில் உள்ள அசோகனின் கல்வெட்டுகளில் மற்ற இடங்களில் காணும் ஒன்று முதல் பத்தாம் தம்மலிபியும், பதினான்ங்காம் தம்மலிபியும் உள்ளன. பதினொன்றாவது பன்னிரண்டாவது பதிமூன்றாவது தம்மலிபிகள் தௌலியில் இல்லை. மற்ற இடங்களில் உள்ள இம்மூன்று தம்மலிபிகளில், தான் கலிங்கம் மீது தொடுத்தப்போரையும் அதனால மாண்டவரின் பெருந்தொகையும் அதனால் தான் மனம் வருந்தியதும் விவரமாக எழுதிய அசோகன், கலிங்க மக்களுக்கு தன் வருத்தத்தையோ மனமாற்றத்தையோ நினைவூட்ட விரும்பவில்லை போலும்.

தேவாநம் பிய பியதசி லாஜா ஏவம் ஆஹ” என்பது பல தம்மலிபிகளின் தொடக்க வரி. தேவர்களுக்கு பிரியன், பிரியதரிசி (கண்ணுக்கு இனியவன்) ராஜன் இதுவே செப்பினான்” என்று பொருள். கலிங்க பிராகிருதத்தில் ரகரம் லகரமாக மருவியதால், ராஜா லாஜா என்று மருவியது.

அசோகன் என்று தன்னை குறிக்காமல் “தேவாநம் பிய பியதசி” என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிடும் காரணம் தெரியவில்லை. மத்தியபிரதேசத்து ஜான்சி நகரம் அருகே உள்ள குஜ்ஜரா கல்வெட்டில் “தேவானம் பிய பியதசி ராஜா அசோக” என்றும்; கர்ணாடக மாநிலத்து ஹம்பி நகரம் அருகே உள்ள மஸ்கி கல்வெட்டில் “தேவாநம்பிய அசோக” என்றும் குறிப்பிட்டதால் மட்டுமே, இவனுடைய உண்மை பெயர் அசோகன் என்று அறிகிறோம்.

வடநாட்டில் குப்தர் காலத்தில் (கிபி ஐந்தாம் நூற்றாண்டு) பிராமி வழக்கொழிந்து தேவநாகரி லிபியாக வடிவம் மாறியது. அதே காலத்தில் தென்னகத்திலும் ஸம்ஸ்கிருத பிராமி கிரந்த லிபியகவும் தமிழ் பிராமி வட்டெழுத்தாகவும் வடிவம் மாற, தென்னகத்திலும் பிராமி வழக்கொழிந்தது. ஆங்கிலேயர் வரும் வரை அது மறக்கப்பட்ட லிபியே. ஜேம்ஸ் பிரின்ஸெப் என்பவரின் விடாமுயற்சியால், பிராமிலிபி மீண்டு அறியப்பட்டு, பாரத நாட்டின் அறுநூறு ஆண்டுக்கால வரலாறு உலகிற்கு கிட்டியது. அது ஒரு தனிக்கதை.

முதலில் பிரின்ஸெப், பின்னர் ஹொரேஸ் வில்ஸன் இவ்விருவரும் அசோகனின் கல்வெட்டை மொழிபெயர்த்துள்ளனர். வில்ஸனின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில், எனக்கு புரிந்த அளவில் தமிழாக்கம் செய்துள்ளேன். கல்வெட்டு நசிந்த இடங்களையும் தெளிவிலா இடங்களையும் **** சின்னம் குறிக்கும். சில வரிகளில் இவ்வாறு எழுத்தோ சொல்லோ நசிந்திருப்பினும், வேறு கல்வெட்டிலிருந்து சொற்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிராக்கேட்டுக்குள் ( ) இவை அடக்கம். பிராகிருத “ந”வை பல இடங்களில் இயல்பாக தமிழில் “ன” என்று எழுதியுள்ளேன்.

முதல் பத்து தம்மலிபிகள் இந்த கட்டுரையில். மற்ற நான்கு தம்மலிபிகளும், தௌலி சிறப்பு தம்மலிபியும் அடுத்த கட்டுரையில். 

தம்மலிபி 1

(அயம் த(ம்மலிபி) (****)சி பவதசி தேவானாம்பியே(ன பியதசினா) லாஜோ (லிகபி ஹிதம் நோ கிச்சிஜீ)வம் ஆலபீது பஜப (ஹிதவ்யம் ந பி ச சமஜே. கடவியே) பஹுகுலம் (ஹி) தோசம் சமேஜச. தகதி தேவானாம்பியே பியதசி ராஜா தகதி அதி பிசு) ஏகசா சமாஜசா சதுமதா தேவானாம்பியச பியதசினே லாஜினே (புரா) மகானனபசி( மகானச = சமையலரை) தேவானாம்(பியச) பிய(தசினே லாஜினே அனுதிவசம்) பஹூனி பாண சதசஹாசனி ஆலபியிசு சுசுபதாயே சே அஜ அதா  இயம் தம்மலிபி லிகிதா (ததா) தின்னி (ஏவ பண ஆ)லபிய (சுபாதாய துவேம மோரா ஏகே மிகே ந செ பிசு மிகே நோ துவம் ஏதானி பிசு ) தின்னி பாணானி (***) பஞ்சா நோ ஆலபியசந்தி || 1 ||

தம்மலிபி 1 தமிழாக்கம்

இந்த ***மலையிலுள்ள தம்மலிபி தேவர்களுக்குபிரியன் கண்ணுக்கினியவன் அரசன் எழுதுவித்தது. இங்கு எந்த ஜீவனை கொல்வதற்கும் தடை. சமாஜங்களிலும் (திருவிழாக்களிலும்) செய்ய கூடாது. பல சமாஜங்களில் கொடுமைகள் நடப்பதை தேவானாம்பிரிய பியதசி ராஜன் பார்க்கிறான். ஆனால சில ஸாதுமத சமாஜங்களையும் தேவாநம்பிரிய பியதசி ராஜன் பார்க்கிறான்.

முன்பு தேவானாம்பிரிய பியதசி ராஜன் சமையலரையில்  அனுதினம் பல நூறு ஆயிரம் பிராணிகள் உணவுக்கு பலியிடப்பட்டன. இந்த தம்மலிபியால் இரண்டு மயில் ஒரு மான் ஆக, மூன்று மிருக பலிகளே அனுமதி. எதிர்காலத்தில் இந்த மூன்று பலிக்கும் தடை விதிக்கப்படும்.

சொற்பொருள் விளக்கம்

மோரா (பிராகிருதம்) =  மயூர (சம்ஸ்கிருதம்) = மயில்

கிச்சிஜீவம் = கிஞ்சித்து ஜீவன் = ஒரு ஜீவன்

பஹூனி பாணி = பஹுனி பிராணி = பல பிராணிகள்

ஆலபிய = கொல்லப்பட்டு

மகானசி = சமையல் அறை

அநுதிவசம் = தினமும்

பாணானி = பிராணானி = பிராணிகள்

மிகே = ம்ரிகம் = மான் 

தம்மலிபி 2

ஸவதம் விஜிதே தேவானாம்பியஸ பியதசினே லா(ஜினே ஏவாபி அந்தஅத சோடா பாண்டிய சதியபுதோ **** கேதலபுதோ **** தம்பபண்ணி) அந்தியோகெ நாம யோன லாஜா வ பி (அரண்ய) தச அந்தியோகச சாமந்த லாஜனேசவத தேவானாம்பியச பியதசினோ (லாஜ துவே சிகிச்சகதா மனு)ஷ சிகீசா ச பசு சிகீசா  ச (ஓஷ)தானி (ச) அன்னி முனிசோபகானி (ச) பசுண் ஓபகானி சஅதத நாதி  சவத ஹாலபிதா ச லோபபித ச *** மூலானி (ச பலானி ச அத ட நாதி சவத ஹாலாபிதா ச லோபாபிதா ச மதேசு *** உடுபானானி ச கானாபிதானி லுகானி சலோபபிதானி படிபோகாயே ப (ம)னுஷானாம் || 2 ||

சொற்பொருள் விளக்கம்

யோன லாஜா =  யவன ராஜா

சோட = சோழ

சதியபுதோ = சத்தியபுத்திர (அதியமான் என்று ஒரு யூகம்)

கேதலபுதோ = கேரளபுத்திர = சேர

சவத =  சர்வத்ர =  எங்கும்

சிகீசா =  சிகிச்சை =  மருத்துவமனை

பசு =  பஷு = விலங்கு (மாடு மட்டுமல்ல)

ஔஷதம் = மருந்துச் செடி

மூலானி = மூலிகை செடிகள் (மூலிகை செடிகள்)

பலானி = பழங்கள்

கூபம்  =  கிணறு

தம்மலிபி 2 தமிழாக்கம்

தேவானாம்பிரிய பியதசி ராஜன் வென்ற எங்கும் அதேபோல் சோழ பாண்டிய சதியபுதோ கேதலபுதோ தம்பபண்ணி (ஆகிய நாடுகளிலும்) யோன (யவன) ராஜன் அந்தியகோ, அதே போல் அந்தியகனுக்கு சமீப எங்கும் (நாடுகளிலும்),

தேவானாம்பிரிய பியதசி ராஜன் இரண்டு சிகிச்சை (மருத்தவமனை) திட்டம் செய்கிறான்,  மனுஷ (மனித) சிகிச்சை, பசு (விலங்கு) சிகிச்சை. மனிதருக்கும் விலங்கிற்கும் ஔசதம் (மருந்துச்செடிகள்) கிடைக்காத இடங்களில்

கொண்டுவந்து (ஹாரிதா) செடிகள் நடப்படுள்ளன (ரோபிதா). வேர்களும் பழங்களும் எங்குஎங்கு கிடைக்கவில்லையோ, அங்கெல்லாம் கொண்டுவந்து நடப்பட்டுள்ளன. விலங்கும் மனிதரும் பரிபோகிக்க (புசிக்க) சாலைகளில் (பதி2ஷு) கூபங்கள் (கிண்றுகள்) தோண்டப்பட்டு (கா2னாபிதா), மரங்கள் (வரசா=விருக்ஷா=விருட்சங்கள்) நடப்பட்டுள்ளன

தம்மலிபி 3

தேவானாம்பியே பியதசி லாஜா ஹேவம் ஆஹ துவாதச வசா பிசிதேன மே(**=மயா)  இயம் ஆனதம் ச(வத) விஜிதே சாமேயுத (ச) லஜுகே ச (பதே)சிகே ச பஞ்சசு பஞ்சசு ****  வசேசு அனுசம்யானம் நிகமாவு **** அத அன்னயேபி கம்மனே ஹேவம் இமயே தம்மானுசாதிய (யதா அன்யய பிகம்மானே ஸாது மாதா (ச) பிதா (ச) சுசுச (மிதா)சந்(துத) நாதிசு ச பம்பன சமனேஹி  (ச) ஸாது தானே ஜிவேசு (ஸாது) அனாலம்பே ஸாது அபவியதி அபபண்டதா ஸாது பரிசப ச (**அன்ய)தியதானி ஆனபெயிசித) (ஹே)துதே ச வியம் தெ ச || 3 ||

துவாதச வசா = துவாதச வர்ஷம் = பன்னிரண்டாம் ஆண்டு

இயம் =இதம் = இது

ஸவத = ஸர்வத்ர = எங்கும்

பஞ்சசு வசேசு = பஞ்சஷு வர்ஷேஷு = ஐந்து வருடத்தில்

பம்பன சமனே = பிராமண சமணர்

ஸாது = சிறந்தது / நல்லது

மிதா = மித்ரா = மித்திரர் (நண்பர்)

சந்ததி = உறவினர்

நாதி = ஞாதி = தெரிந்தவர்

அபவியதி = அல்ப வித்தம் = சிறிய செலவு

அபபண்ட = அல்ப பண்டம் = சிற்சில பொருட்கள்

தம்மலிபி 3 தமிழாக்கம்

தேவானாம்பிரிய பியதசி ராஜனின் (மகுடம் சூடிய) பன்னிரண்டாம் வருட கட்டளை. ராஜ்ஜியம் எங்கும்  ஐந்து ஐந்து வருடம் யுதர், ரஜ்ஜுகர், பிரதேசிகர் இந்த தம்மலிபி தெரிவிக்கவும் மற்ற செயல்களுக்கும் உலா செல்லவேண்டும்.மாதா பிதாவை மதிப்பது சிறந்தது. நண்பர் உறவினர்  தெரிந்தவருக்கும் பிராமண சமணர்களுக்கும் பரிசு வழங்குவது ஸாது.

விலங்குகளை கொல்லாதது ஸாது. சிறிதே செலவும் (வியதா) சிறிதே பொருட்செல்வமும் (பாண்டம்) ஸாது. மந்திரிக்குழு (பரிஷத்) இதை யுதருக்கும் கணங்களுக்கும் எடுத்துரைக்க கட்டளையிடவேண்டும்.

தம்மலிபி  4

அதிகாதம் அந்தரம் பஹூனி வாச-சதானி வதிதேவ பாணாலம்பே விஹிச ச பூதானாம் நாதீசு அசம்படீபது சமண பாபனேசு அசம்படிபதே சே அஜ தேவானம்பியச பியதசினே லாஜினே தம்மசலனேன பேலிகோஷம் அஹோ தம்மகோஷம் விமான தசனம் (ச) ஹதினி (தசன ச) அக(னி)கந்தானி (ச) அன்னானி ச திவியானி லுபானம் தசயிது முனிசானம் ஆதிசே பஹு ஹி வச சதேஹி நொ ஹூத புலுவே தாதிசே அஜ வதி(தே) தேவானம் பியச பியதசினே லாஜினே தம்மானுசாதிய அனாலம்பே பாணானாம் அவிஹிம்ச பூதானாம் சம்படிபதி சமண பாபனேசு சம்படிபதி மாது பிது சுசுசாம் வா சுசூசா ஏச அன்னெச பகுவிதே தம்மசலனே வடிதே வடயிசதி சேவ.  தேவானம் பியச பியதசிச லாஜ தம்மசலனம் இமம் புதபி ச நதி (ச) ப(னதிக) ச தேவானம் பியச பியதசினே லாஜினே  பவதயிசந்தி யேவ தம்மசலனம் இமம் (சவத) அகேபம் தம்மசி சிலசி ச விதிது (தம்மம்) அனுசாசிசந்தி ஏச ஹிசெ (கம்)மே யா தம்மானுசாசனம் தம்மசலன பிசு நோஹோதி அசிலச செ இமசா அதச வதி அஹீனி ச ஸாது. ஏதாயே அதாய இமம் லிகிதே இமச அதச வதி யுஜந்து ஹீனீ ச நோ ரோசயிதவ்ய. துவாதச வசானியப்ஹிசிடச  தேவானம் பியச பியதசினே லாஜினே  யா லிகிதே || 4 || 

பேரி கோஷம் = பேரிமேள ஒலி

விமான தசனம் = கோயில் / சைத்தியம் தரிசனம்

ஹதினி தசன = யானை தரிசனம்

அகனிகந்தானி = பட்டாசு காட்டி

சுசுச = சுஷ்ருசை = செவிகேட்டு பணிசெய்தல்


தம்மலிபி 4 தமிழாக்கம்

பல நூற்றாண்டுகளாக விலங்கு பலி கொடுபதும், உயிர்களை துன்புறுத்தி, உறவினரிடமும் சமண பிராமணரிடமும் தவறாக நடப்பதும் வழக்கமாகிவிட்டது. தேவானம் பியச பியதசினே ராஜனின் தர்ம அனுசாசனத்தால் பேரிமேள ஒலி தர்ம ஒலியாகியது. நூற்றாண்டுகளாய் நடைபெறாத விமான தரிசனம், யானை தரிசனம், பட்டாசு

தரிசனம், மற்றும் திவ்ய தரிசனம் காட்டி, தேவானம் பியச பியதசினே ராஜனின் தர்ம அனுசாதியத்தால் விலங்கு கொல்லமையும், ஜீவங்களை துன்புறுத்தாதும், உறவினரிடம் மரியாதையும், பிராமண சமணரிடம் மரியாதையும், மாதா பிதாவிடம் சுஷ்ருசையும், முதியோரிடம் சுஷ்ருசையும் நிகழ்கின்றன. இதை போல் மற்ற தர்ம பழக்கங்கள் பெருகியுள்ளன. தேவானம் பிய பியதசி ராஜனின் மகன்களும், பேரன்களும், கொள்ளுப்பேரர்களும் இந்த தர்ம நிலைக்க கட்டளையிடுவார்கள்.

பண்பில்லாதவன் தர்ம வழி செல்லமாட்டான். அதனால் தர்மம் வளர ஓயாமல் போதிப்பது ஸாது.

இதற்காகவே இது எழுதப்பட்டுள்ளது. என் பின்வருவோரும் இவ்வாறு தர்மம் தேயாமல் (ஹீனமாகாமல்) வளர்க்கவேண்டும். தேவானம் பியச பியதசினே ராஜனின் பன்னிரண்டாம் ஆண்டில் எழுதப்பட்டது.

 

தம்மலிபி 5

தேவானம் பியச பியதசினே லாஜினே  ஏவம் ஆஹ கயானே துகர(***) கயானா ஸஸே துகலம் கலேதி ஸே மே பஹுகேகயானே கடே தம் மம புதா வ நாத ச பலன் ச தே(னயெ) அபடியே மே **** ஆவ **** த தேசம் பிஹாபயிஸதி ஸோ துகதம் காச்சதி பாபேஹிஸூபுதாலயேஸு அதிகந்தம் அந்தலம் நோ ஹுதா புலுவா தம்மமஹாமாதா நாம ஸே தே தஸவஸாபிதேன மே தம்மமஹாமாதா கடா தே ஸவ பாசன்டேஸு வியபத தம்மாதிதானீயே --- தம்மவாடியே ஹித சுகாயே ச தம்மயுத ஸா யோனா காம்போசா கந்தாலேஸு லாடிகா பிதேனிகேசு யே வாபி அன்னே அபலந்தா பாடி **** பாபானி பிசாஷு அனதேசு மஹலோகேசு ச ஹித சுகாயே தம்மயுதாயே அபலிபோதாய வியபாடா ஸே பந்தனம் பதஸ பதிவ**ய அபலிபோதயே மோகயே ச இயம் அனுபந்த பஜாதி கடா பிகலேதி வா மஹாலகேதி வா வியாபதா:  ஸே ஹிதா ச பாஹிலேசு ச நகலேசு ஸவேசு ஓலோதனேசு ஏவாஹி பாடானம் வ பாகினீனம் வ அன்னெசு வ நதித சவத வியபடா ச: இயம் தம்ம நிசிடடிவம் தம்மாதிதானே திவ தானஸயுதே வ ஸவ படாவியம் **** தம்மயுதஸி வியபடா இமே தம்மமஹாமாதா இமாயே அதயே இயம் தம்மலிபி லிகிதம் சிலதிதி ஹோது ச மே பஜ அனுவதது || 5 ||

கயானா = கல்யாணம் = சுபகாரியம்

துகலம் = துஷ்கரம் = செய்வது கடினம்

தம்மமஹாமாதா = தர்மமஹாமாத்திரர் = அறம் வளர்க்கும் அதிகாரிகள்

ஸவ = ஸர்வ = அனைவரும்

ஹித = நல்ல

யோனா = யவனம்

கம்போசா = காம்போஜ தேசம்

கந்தாலேஸு = கந்தாரம்

லாடிகா = லாட தேசம்

நகலேசு = நகரேஷு = நகரங்களில்

பாபானி பிசாஷு = பிராமாணி பிக்ஷாஷு = பிராமணரிடமும் பிக்ஷுக்களிடமும்

தம்மலிபி 5 தமிழாக்கம்

தேவானம்பியே பியதசி ராஜன் செப்பினான். கல்யாணம் (நல்ல காரியம்) துஷ்கரம் (கடினமானது). யார் முதலில் நல்ல காரியம் செய்கிறானோ அவன் கஷ்டபட்டே செய்கிறான். நான் பல கல்யாண காரியங்கள் செய்துளேன். என்னை போல் என் மகன்களும் பேரன்களும் அவர்கள் பின்வருவோரும் கல்யாண காரியங்கள் செய்வார்கள். இதில் சிறிது விலகுவோரும். பாவம் செய்வது எளிது. பூர்வகாலத்தில் (என் ஆட்சிக்கு முன்) தர்ம மகாமாத்திரர் என்ற அதிகாரிகள் இல்லை. என்  பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டில் தர்ம மகாமத்திரர் எனும் அதிகாரிகள் நியமித்துள்ளேன். தர்மம் நிலைநாட்ட தர்மம் வளர்க்க ஹிதமும் சுகமும் வளர்த்து கடமையாற்றுகின்றார்.

பணிசெய்பவரிடமும் பிராமணரிடமும் செல்வந்தரிடமும் அனாதைகளிடமும்

முதியோரிடமும் யோன-காம்போஜ-கந்தார தேசத்திலும் மற்ற மேற்கு எல்லை நாடுகளிலும் தர்மம் செய்யவும் ஹிதம் சுகம் வளரவும் துன்பம் நீங்கவும் பணிசெய்கின்றனர்.

சிறைப்பட்டவரில் தகுந்த காரணத்திற்கு - இவருக்கு வயதாகிவிட்டது, இவர்களை நம்பி குடும்பம் இருக்கிறது, இவர்கள் மயக்கப்பட்டவர்கள் என்றோ தகுந்த காரணமிருந்தால் விடுதலை செய்கின்றனர். நகரங்களிலும் ஊர்களிலும் என் சகோதர சகோதரிகளின் அந்தப்புரங்களிலும் மஹாமாத்திரர் கடமைசெய்கின்றனர். அவர்கள் எங்கும் தர்மம் செய்கின்றனர்.

இதற்காக இந்த தர்மலிபி எழுதப்பட்டுள்ளது. என் பின்வருவோர் இதை தொடர்வாராக.

தம்மலிபி 6 

தேவானம் பியச பியதசினே லாஜா ஹேவம் ஆஹா அதிகந்தம் அந்தலம்

நோ ஹூத புலுவே ஸவம் காலம் அத கம்மே

பதிவேதநா ஸே மயா --- கடே ஸவம்

(காலம் யேஸ்மின) ஸமே அந்தே ஓரோதநஸி கபாகாலஸி வசஸி

***  விநீதஸி உயாநஸி ஸவத படிவேதகா

*** ஜனஸ அதம் படிவேதயந்து மே தி ஸவத

ஜனஸ அதம் கலாமி அம்பி கிஞ்சி முகதே

ஆனபயாமி **** தாபகம் வா ஸாவகம் வா ஏவா

**** மஹாமாதாஹி அதியாயிகே அலோபிதே ஹோதி தஸி அதஸி

விவாதேவ நி கீதி வாஸந்தம் பலிஸயா அநந்தலியம் படிவேதேத

வியே மே தி ஸவத ஸவம் காலம் ஹேவம்

அநுஸதே நாதி பி மே தோ ஸே உதானஸி அத

சந்தீலநாய கடவிய மதேஹி மே ஸவ லோக ஹிதே

தஸ புந இயம் மூலே உதானே **** சந்திலநா

நாதி ஹி கம்மதலம ஸவ லோக ஹிதேன அம் கிச்சி

பலகமாமி ஹகம் கிந்தி பூதாநாம் அந்நநியம் யே ஹந்தீ ஹித கானி

ஸுகயாமி பலதம் ஸ்வகம் ஆலாதயந்து தி ஏதாயே அதயே இயம்

தம்மலிபி லிகித **** சீலதீதிக ஹோது ததா

மே புத******** மே பலகமந்து ஸவலோக

ஹிதாயே துகலே சு இயம் அந்நத அகேந பலகமேந  || 6 ||

தம்மலிபி 6 தமிழாக்கம்

மன்னர்களால் மக்களின் குறைகள் கேட்டு தீர்க்கப்படும் வழக்கம் நெடுங்காலமாக தேய்ந்துவிட்டது.  இப்போது, இது என் கட்டளை. எப்பொழுது, நான் உணவருந்தும் போதானாலும், அந்தபுரத்தில் இருந்தாலும், தேரில் பல்லக்கிலோ உலா சென்றாலும், சோலைகளில் இருந்தாலும், எங்கும் எப்போதும் நான் நியமித்துள்ள பிரதிவேதகர்கள் என்னிடம் வந்து மக்களின் பிரச்சினைகளை கூறலாம். நான் தீர்த்துவைக்கிறேன்.

ஸ்ராவகனிடம் நான் இட்ட ஆணை நிறைவேற்றவோ மகாமாத்திரர்களிடம் ஒப்படைத்த பணியை முடிக்கவோ அமைச்சர் குழுவில் (பரிஷத்) வாதமோ எதிர்ப்போ தோன்றினால் நான் எங்கிருந்தாலும் எனக்கு உடனே தெரிவிக்கவேண்டும்.

மக்கள் நலமே என் கடமை. அனைவரின் நலனை தவிற வேறு நல்ல காரியமில்லை. இம்மையிலும் மறுமையிலும் மக்கள் இன்பமாய் இருப்பதே என் கடமை, இதற்கே இந்த தம்மலிபி எழுதப்பட்டுள்ளது. என் புத்திரரும், பௌத்திரரும், பிரபோத்திரரும் இதை தொடர்வாராக. ஆனால் ஓயா முயற்சியின்றி இதை செய்வது கடினம்.

தம்மலிபி 7

தேவானம்பியே பியதஸி லாஜா ஸவத இச்சதி ஸவ பாசன்டா

வஸெவூ தி ஸவே ஹோத ஸயமன் பாவசுதீ இச்சந்தி முனிஸா

உசாவச சந்தா உசாவச லாகா தே

ஸவம் வா --- ஏகதேஸ கச்சதி விபுலா

பி சஹ தானே அஸ நாதி ஸயமே பாவஸுதீ

******** நிசே பாடம்.   || 7 ||

தம்மலிபி 7 தமிழாக்கம்

தேவானம்பிய பியதசி ராஜன் பல்வேறு மன்றங்களும் (பார்ஷத) தூய எண்ணமும் (பா4வதுத்தி ) தன்னடக்கம் (சம்யமம்) கடைபிடித்து தேசமெங்கும் பரவி வாழவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் மனிதர்கள பலவிதம், வெவ்வேறு விருப்பங்களும் வெவ்வேறு மனப்பான்மையும் கொண்டவர்கள். சிலர் எல்லா கடமைகளையும் செய்வர்; சிலர் ஒரு சில கடமைகளை மட்டும் செய்வர்.

எத்தனை பெரிய தானம் கிடைத்தாலும், தன்னடக்கமும், எண்ணத்தூய்மையும் நன்றியும் உறுதியான பக்தியும் இல்லாமல் வாழும் கீழ்மக்களும் (நீசமான) உண்டு.

தம்மலிபி 8

(அதி)கந்தம் அந்தலம் லாஜனோ வாஹலயாதம் நாம காமிஸா **விய

அந்நாநி ஏதிசானி அபிலா மாநி புவம் திநம் ஸெ தேவாநம்பியே

பியதஸீ  லாஜ  தஸவசாபிஸிதே **** நிகமி ஸம்போதி  தேன

சவதாநாம் தஸனே  ஹிலன்ன பதிவிதனே

ஜநபதஸ ஜநஸ தஸனே தம்மானுஸதி

********  தாதாபயா * அபிலாமே ஹோதி

தேவாநம்பியஸ பியதஸினே லாஜினே பாகே அன்னே || 8 ||

தம்மலிபி 8 தமிழாக்கம்

பூர்வகாலத்தில் மன்னர்கள் விஹார விஜயம் செய்தனர். மான் வேட்டை அதை போல் மற்ற கேளிக்கைகள் அனுபவித்தனர். பத்தாம் ஆட்சி ஆண்டில் பியதசி ராஜன் சம்போதி (புத்தகயா) அடைந்தான். அதன் பின் தம்மவிஜயம் செய்யலானான்.

தம்மவிஜயத்தில் பிராமண சமணர்களை சந்தித்து தானம் வழங்குவதும், முதியவரை தரிசித்து தேவைகளுக்கு பொன் வழங்குவதும், ஜனபதங்களுக்கு சென்று மக்களை தரிசித்து தர்ம போதனை செய்வதும் கேள்விகள் கேட்பதும் நடக்கின்றன.

இதுவே  தேவானம்பிய பியதசி ராஜனுக்கு பிடித்துள்ளது, இது அவன் பாக்கியம்.

தம்மலிபி 9

தேவானம்பியே பியதஸி லாஜா ஏவன் ஆஹா அதி ஜனோ உசாவசம் மங்கலம் கலோதி,  அபாதேசு  **** வி(வாஹேஸூ புதலாபேஸு --- பவாஸஸி **** ஏதயே அந்நயே ஹேதிஸாயே ஜிநே பஹுகம் மங்கலம் (ரோதி ஏத து மஹாதாயோ பஹுகம் ) இதிபிதம்  புதி நிலயிதம் மங்கலம் கரோதி  ஸே கதவியே லே(தே)நோ மங்கலே அபபலே சகோ ஏஸஹேதிஸம் மங்கலம் அயம் --- மஹாபலே **** **** தம்மமங்கலே ததேஸ தாஸ படகஸி ஸம்மாபடிபதி குலுனாம் அபசிதி (பாநேஸு ஸயமேசமந பாபாநாநாம் (ஸாது) தானே ஏஸ அந்நே  --- தம்ம (மங்)கல நாம வதவியே பிதிந பி புதேந பாடிந பி சுவாமிகேந பி (மாதா சந்ததேந அவ படிவேசியேநபி இயம் ஸாது இதம் கதவிய மங்க)லம் அவ தஸ அதஸ நிதாதிய அதி பவுதம் வதே தானே சதிதி ஹேதிஸம் (அதி தாநேஅநுகஹே அதி தம்மதாநே -- தம்மாநுகஹே ( ஸே துக்கோ மிதேந ஸுஹதயேந) ************ ஸபயேந திவி யோவதித தஸி --- பகலநஸி (தம் **** ****) இமேந ******** அலாதயிதவே **************** தஸ அலபி || 9 || 

மங்கலம் கலோதி = மங்கலம் கரோதி = மங்களம் செய்கிறான்

அபாதேஸு = ஆபத்துகளில் = இன்னல் களைய

விவாஹேஸு = விவாகங்களில் = திருமணங்களில்

புதலாபேஸு = புத்ரலாபேஸு = மகன் பிறந்தால்

தாஸ = வேலைக்காரன்

பட = முதலாளி/எஜமான்

குலுனாம் =  குருநாம் = குருக்களுக்கு

அபபல = அல்ப பல = சிறிதே பலன்

மஹாபல = பெரும் பலன்

தம்மலிபி தமிழாக்கம் 9

ஒவ்வொரு மனிதனும் பல மங்கள தருணங்களில் விழா நடத்துகிறான். இன்னல் களையவும், திருமணம் கொண்டாடவும், மகன் பிறப்பும், பயண ஆரம்பமும், மங்களமாய் கொண்டாடும் தருணங்கள். வள்ளல் குணமுடையோன் வேறு பலவித விழாக்களும்  நடத்துவான். அதுவும் செய்யலாம். இவை அற்ப பலனே தரும்; அகங்காரத்தை காட்டும்  விழாக்கள். ஆனால் பெரும் பலன் தரும் மங்கள காரியம், தம்ம காரியம். எஜமானை வேலைக்காரன் மதிப்பது; குருக்களுக்கு மரியாதை செலுத்துவது; உயிர்களுக்கெல்லாம் அன்பு காட்டுவது; சமணருக்கும் (சமந) பிராமணர்களுக்கும் (பாபாந) தானம் தருவது; இவை நல்ல காரியங்கள். இவை தம்மத்தை கொண்டாடும் சிறந்த விழாக்கள். தந்தையை மகன் பூஜிப்பது போல், போற்றத்தக்கது. இந்த தம்மத்தை நிலை நாட்ட தானங்கள் செய்கிறோம்; தானத்தில் சிறந்த தானம் தம்மத்தை கடைபிடிக்கும் தானம். இவ்வாறே தம்மம் செய்து சொர்கம் அடையலாம். தகுந்தவை கொண்டு தம்மம் செய்தால் சொர்க்கம் அடையலாம்

தம்மலிபி 10

தேவானம்பியே பியதஸி லாஜ யஸோ கிதி வா  (மஹாத வா) மந்நதி வா கிதீ வா ************  இச்சதி தத்வயே அந்நதி ஜநே  தம்மசுசுச சுசுச தம் மேதம்மவதம் ( அநுவிதியிதம்ஏத காய (தேவானம்பியே  பியதஸி லாஜா) யஸோ  கிதி இச்சதி ************ பலாகம்மதி  தேவாநம்பியே  (பியதஸி லாஜ ஸவம்பாலதிகாயே கிந்தி ஸகலே அபபலா ஸவே  புவேயதி பலிஸ் **** **** கஜே **************** (அந்ந) அகேந (பராகமே) ஸவம் (பரி) பலிதி தி கு துகேந வா உஸதேந  வா  உஸதேந துகலத || 10 ||

 

யஸோ = யஷ = புகழ்

கிதி = கீர்த்தி

தம்மசுசுச = தர்ம சுஷ்ருசை = அறப்பணி

அபபலா = அல்ப பலன்

பரா கம = பரலோகம் (சொர்கம்) செல்ல

ஸவம் = ஸர்வம் = அனைவரும்

தம்மலிபி 10 தமிழாக்கம்

தேவானம்பிய பியதசி ராஜன் புகழையோ  கீர்த்தியையோ பெரும்பொருட்டாக கருதவில்லை. தம்மவழி நடப்பதே என் புகழும் என் மக்கள் புகழும் என்பதே நெடுங்கால நிலை. ஸாது ஜநங்களின் சேவையே (ஸுஷ்ருஷ = சுசுச) தகும். இது கடமை. இந்த புகழையே தேவாநம்பியன் விரும்புகிறான். மற்ற புகழெதுவும் புகழே அல்ல; அவற்றை தம்மவழி செல்லாதவரும் பெறலாம்; தகாதவரும் அவ்வகை புகழடையலாம்; அப்படி அடையும் புகழ் துக்கமே தரும்.

தொடர்புடைய பதிவுகள்

காரவேலன் கல்வெட்டு 

அந்தியோக நகரம் – விசித்திர சித்தன் குஸ்ரோ 

வரலாறு கட்டுரைகள் 

அசோகன் காரவேலன்கல்வெட்டுகள் – பேச்சு கச்சேரி வீடியோ

Rediscovery of Brahmi, Asoka and Indian history

Saturday, 26 March 2022

காரவேலன் கல்வெட்டு

 சமீபத்தில் கடந்த 2022 ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை கலிங்கம் பற்றி ஒரு பேச்சு கச்சேரி நடத்தியது. எட்டு தலைப்புகளில், தமிழில் கலிங்க (ஒடிசா மாநில) வரலாறு, கல்வெட்டு, சிற்பம், கோயில் கலை போன்றவை காட்சிகளோடு பேசப்பட்டன. இதில் மௌரிய மன்னன் அசோகன் கல்வெட்டும், மகாமேகவாகன வம்ச மன்னன் காரவேலன் கல்வெட்டும், நான் பேசிய தலைப்புகள்.

மௌரிய அசோகனின் கல்வெட்டை விவரித்து பின்னர் தனி கட்டுரையாக எழுதுவேன்.

இங்கே காரவேலன் கல்வெட்டை பார்போம். அசோகன் கலிங்கத்தின் மேல் போர் தொடுத்தான் என்று நாம் அறிவோம். ஆனால் அவனை எதிர்த்த கலிங்க மன்னனை பற்றியோ வம்சத்தை பற்றியோ எந்த தகவல்களும் இல்லை. கல்வெட்டும் இல்லை. அசோகனின் கலிங்கப்போர் நடந்த சுமார் நூறாண்டுகளுக்கு பின், கலிங்கத்தை ஆண்ட மன்னன் காரவேலன். அவனுடைய கல்வெட்டு ஒன்றே ஒன்று உதயகிரி மலையில் ஹாதிகும்பா (ஹாதி=யானை; கும்பா=குகை) என்னும் குகையின் விதானத்தில் கிடைத்தது. பிராகிருத மொழியில் பிராமி லிபியில் பதினைந்து அடி நீளமும் ஐந்தரை அடி அகலமுமான இக்கல்வெட்டில், பதினேழு வரிகள் இருபது வாக்கியங்களாக அமைந்துள்ளன.

புவநேச்சுரம் நகரின் எல்லையில் உதயகிரி கண்டகிரி என்று இரு மலைகள். கண்டகிரி மலையில் பல சமண குகைகளும், அவற்றுள் தீர்தங்கரர் மற்றும் யக்ஷிகளின் சிற்பங்களும் உள்ளனர். ஒரு சமணகோயிலும் உள்ளது.

உதயகிரி - காரவேலன் கல்வெட்டுள்ள மலை 

காரவேலன் கல்வெட்டு


With THT group and Kharavela inscription

உதயகிரி மலையில் குகைகள் உள்ளன; ஆனால் சமண சிற்பங்கள் ஏதும் இல்லை. ராணிகும்பா என்னும் குகையில் இருக்கும் பல்வேறு சிற்பங்கள் காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தின் சில காட்சிகளை காட்டுவதாக சில கலை வல்லுனர் கருதுகின்றனர். உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் குகைகள் பற்றி பத்ரி சேஷாத்ரியின் உரை காணலாம்.

காரவேலன் கல்வெட்டுள்ள மலை மேல் ஒரு சைத்தியத்தின் அதிட்டனாம் மட்டும் மிச்சமுள்ளது. கல்வெட்டின் பதினேழாம் வாக்கியத்தில் விஜயசக்கரத்தில் குமரி மலையில் காரவேலன் அருகர்களுக்கு ஆலயம் எழுப்பினான் என்று குறிப்பால், இந்த மலைக்கு குமாரிமலை என்ற பெயர் இருந்ததாகவும், அவன் எழுப்பிய அருகர் ஆலயத்தின் எச்சமே இந்த சைத்தியம் என்றும் கருதலாம்.

சைத்தியத்தின் அதிட்டனாம் 


இந்த கல்வெட்டை கிபி1825ல் ஸ்டெர்லிங்க் கண்டுபிடித்தான். கர்ன்ல் கிட்டோ என்னும் கிழக்கி இந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரி பிரதி எடுத்தான். அப்பொழுது இந்த லிபி அடையாளம் தெரியாத புதிராகவே இருந்தது. இந்த லிபியை பல கல்வெட்டுகளை படித்து மீட்டுதந்த ஜேம்ஸ் பிரின்சப், 1837ல் காரவேலன் கல்வெட்டை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தான். 1861 இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது. துறை தலைவர் கர்னல் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் 1877ல் இந்த கல்வெட்டை இன்னொரு பிரதி எடுத்தான். 1880ல் அதை ராஜேந்திர லால் மித்ரா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, 1888ல் பகவான் லால் இந்திராஜி காரவேல மன்னனின் பெயரை அடையாளம் காட்ட, இதன் சிறப்பு தெரியவந்தது. 1895 முதல் 1942 வரை பியூலர், ஃப்ளீட், ஜெய்ஸ்வால், பானர்ஜி, பாருவா, டி.சி. சர்கார் ஆகியோர் பல சொற்களிலும் பொருளிலும் பாடபேதங்களை பதிவிட்டனர்.

ஏன் இத்தனை பாட பேதங்கள்? காரவேலன் காலத்து பிராகிருதம் எங்கும் வழக்கில் இல்லை. பிராகிருத சொற்களுக்கு சமமான சம்ஸ்கிருத சொற்களை யூகித்து பொருளை புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் முனைந்தனர். கல்வெட்டில் சில சொற்களும், ஒரு சில சொற்களில் சில எழுத்துக்களும், அழிந்துவிட்டன. இப்பிரிதியின் படத்தில் புள்ளியுள்ள எழுத்துக்கள் அழிந்துபோனதற்கு அடையாளம்.

காரவேலன் கல்வெட்டு இந்திய வரலாற்றில் பெரும் முக்கியம் பெற்றது.

அதுவே ஒரு கலிங்க மன்னனின் மிக தொன்மையான கல்வெட்டு. (இன்று பிகார் என்று அழைக்கும் மகத நாட்டு மன்னன் அசோகன் ). காரவேலன் தோன்றிய மகாமேகவாகன வம்சத்தின் ஒரே கல்வெட்டு. இதில் கிடைக்கும் பல வரலாற்று தகவல்கள் வேறு எந்த கல்வெட்டிலோ நூலிலோ செப்பேட்டிலோ இல்லை.

மேலும், ஒரு மன்னனின் ஆட்சியாண்டுகளை வரிசையில் கூறி ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்ந்த முக்கிய போர்களை, அரசபணிகளை, சாதனைகளை, வாழ்க்கை சம்பவங்களை கூறும் அபூர்வ கல்வெட்டு.

அர்த்த சாத்திரத்தில் சானக்கியன் போற்றும் பிரஞாபன லேகன (”பொது அறிவிப்பு”) விதிகளுக்கு காரவேலன் கல்வெட்டு தனிச்சிறப்பான சான்று என்மனார் அறிஞர். சானக்கியன் கூறும் ஆறு குணங்களையும் இதில் காணலாம்.

  • அர்த்தக்கிரமம் (சீரான அமைப்பு )
  • சம்பந்தம் (பொருத்தம்)
  • பரிபூரணதா (முழுமை)
  • மாதுர்யம் (இனிமை)
  • ஔடர்யம் (கம்பீரம்)
  • ஸ்பஷ்டவம் (தெளிவு)

ஆட்சியாண்டை தவிற 103ம் ஆண்டு, 113ம் ஆண்டு, 165ம் ஆண்டு என்று சில குறிப்புகள் உள்ளன. இவை கலியாண்டாகவோ சக ஆண்டாகவோ இருக்க வாய்ப்பில்லை. காரவேலன் சமண மதத்தை  சேர்ந்தவன் என்பதால் மகாவீர யுகத்தையும் அந்த ஆண்டுகணக்கையும் குறிப்பதாக அறிஞர் கருதுகின்றனர். கடைசி ஜைன தீர்த்தங்கராரான வர்தமான மகாவீரர் பரிநிர்வாணம் (மரணம்) அடைந்த ஆண்டு முதல் தொடங்குவது இந்த மகாவீர யுகம். அதற்கு சமமான கிறுத்துவ ஆண்டை கல்வெட்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.

எனக்கு பிராகிருதமோ சம்ஸ்கிருதமோ தெரியாது. தமிழில் ததிங்கிதோம் தான். நான் தொல்லியல் நிபுணனும் அல்லன். சமணமும் தெரியாது. கடைசி நான்கு வரிகளில் வரும் பல சொற்றொடர்களும் வர்ணனையும் சமண தத்துவம், நூல்கள், வரலாறு ஆழ்ந்து அறிபவர்க்கே சரியாக விளங்கும் என நினைக்கிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில், எனக்கு புரிந்த அளவில் தமிழாக்கம் செய்துள்ளேன்.

---------

வரி 1 

நமோ அர்ஹந்தானாம் | நமோ சர்வ சித்தானாம்
ஐரேன மகாராஜேன மகாமேகவாகனேன
சேதிராஜவம்ச-வதனேன பசத-சுப-லகனேன சதுரந்த-லூடன-குண-உபேதேன 
கலிங்காதிபதினா-சிரி-காரவேலேன

அருகருக்கு வணக்கம். அனைத்து சித்தருக்கும் வணக்கம்

ஐ மகாமேகவாகனன், மகாராஜன், கலிங்க அதிபதி,  சேதிவம்ச வர்தனன், சுப லக்ஷணம் உடையவன், நாற்திசையும் புகழ் பரவிய குணவான், செம்மேனியன் திரு காரவேலனால்  பதினைந்து வருடம் இளவரசனுக்கு தகுந்த விளையாட்டுகள் விளையாடப் பெற்றன.

வரி 2

பாண்டரச-வசானி சிரி-கடார-சரீர-வதா- கீடிதா
குமார-கீடிகா | ததோ லேக-ரூபா-கணனா-வவஹாரா-
விதி-விசாரதேன சவ-விஜாவதாதேன நவ-வசானி
யோவராஜ(ம்) பசாசிதம் | சம்பூண-சதுவீசதி-வசோ
ததானி வதமான-சேச-யோவனாபிவிஜயோ ததீயே

அதன் பின், எழுத்து(லேக) பணம்(ரூபா) கணக்கு(கணணம்), நிர்வாகம் ஆகிய கலைகளில் வல்லவனால் ஒன்பது வருடம் யுவராஜனாய் ஆளப்பெற்றது.

இருபத்திநான்கு வயது கடந்தபின், தன் இளமை (யோவனா) போர் வெற்றிகளால் செல்வம் பெருக, கலிங்க ராஜவம்சத்து மூன்றாம் (ததியே=த்ருதீய) அரசனாக மகாராஜ அபிசேகம் செய்யப் பெற்றான்.

வரி 3

கலிங்க-ராஜவம்சே-புரிசயுகே மகாராஜாபிசேசனம்
பாபுனாதி | அபிசிதமதோ ச பதமே வசே வாத-
விஹத கோபுர-பாகர-நிவேசனம் படிசங்காரயதி
கலிங்கநகரி-கிபீரம் சீதல-தடாக-பாடியோ ச
பந்தாபயதி சவூயான-படிசந்தபனம் ச

முதல் (பதமே=பிரதமே) வருடம் முப்பதியைந்து (பனதிசாஹி=பஞ்சத்ரிம்ஷதி) நூறாயிரம் (சத-சஹஸ்ர) செலவில், புயலால் முறிந்த (வாத-விஹத) கோபுரம் பிராகாரம் (பாகர) கட்டடம் (நிவேசனம்) சீரமைத்து தடாக கரைகள் சீரெழுப்பி  மக்களை மகிழ்வித்தான்.

வரி 4

காரயதி பனதிசாஹி-சட-சஹசேஹி பகதியோ ச ரஞ்சயதி | 
துதியே ச வசே அசிதயிதா சாதகணிம் பசிம-திசம் ஹய-கஜ-நர-ரத-பஹுலம்-தண்டம் படாபயதி கன்ஹ-பேம்னா-கதாய ச சேனாய 
விதாசதி அசிக-நகரம் | ததியே புனவசே

இரண்டாம் (துதியே=த்விதீயே) வருடம் சாதகர்ணி (மன்னனை) கருதாமல் மேற்கு திசையில் குதிரை(ஹய) யானை(கஜ) நர(கால்நடை வீரர்) தேர்(ரத) பலர் கொண்ட சேனை அனுப்பி கிருஷ்ணவேணா நதி அடைந்து அசிக நகரம் கைபற்றினான்.

வரி 5

கந்தவ-வேத-புதோ தப-நத-கீத-வாதித-சந்தம்சனாஹி உசவ-சமாஜ-காராபனாஹி ச கீடபய்தி நகரிம் | ததா சவுதே வசே
விஜாதராதிவாசம் அஹத-புவ-கலிங்க-புவராஜ
நிவேசிதி-விதத-மகுட-சபிலதிதே ச நிகித-சத

மீண்டும், மூன்றாம் (ததியே=த்ருதீயே) வருடம் (தலை)நகரத்தில் இசைக்கலை அறிந்தவன் (கந்தவ-வேத-புதோ) நாட்டியம்,பாடல்,இசை,கவிதையால் (தப-நத-கீத-வாதித-சந்தம்)
உற்சவம்(விழா) நடத்தி மக்களை மகிழ்வித்தான். 


மீண்டும், நான்காம்(சவுதே=சதுர்தே) வருடம் எந்த கலிங்கராஜனும் நுழையாத வித்யாதரரின் நகரம் நுழைந்து, ரடிக-போஜகரின் செல்வமும் ரத்தினமும் பரித்து, மகுடமும் பட்டத்து குதிரையும் சாய்த்து, குடையும் (சத்ர) தங்கக்குவளையும் (பீங்கார) ஒதுக்கி, காலடி பணிய வைத்தான்.

வரி 6

பீங்காரே ஹித-ரதன-சாபதேயே சவ-ரடிக-போஜகே
பாதே வந்தாபயதி | பஞ்சமே ச தானி வசே
நந்தராஜ-திவசசத-ஓகாடிதம் தனசுலியவாடா-
பணாடிம் நகரம் பவேசயதி ச... | அபிசிதோ ச
.... ராஜசேயம் சந்தசயந்தோ சவ-கர-வண


ஐந்தாம் (பஞ்சமே) வருடம் நந்தராஜனால் அமைக்கப்பட்ட
தனசுலியவாடா கால்வாயை தலைநகருக்கு கொண்டுவந்தான்

வரி 7 

அனுகஹ-அனேகானி சத-சஹசானி விசஜதி போர-ஜானபதம் | 
சதமே ச வசே பசாசதோ வஜிராகரவதி-குசித-கரினி ஸா மதுகு-பத
பும்னோ...த பா... | அடமே ச வசே மஹதா-சேனாய
(அபதி)ஹத-(பி)தி-கோரதகிரிம்


அபிசேகம் செய்த (ஆறாம் வருடம்) செல்வத்தை (ஷ்ரேயம்) நகர-ஜனபத மக்கள் அனுபவிக்க அவர்கள் பல நூறாயிரம் மதிப்புள்ள வரிகளையும் தானங்களையும் வழங்கினான்

ஏழாம் (சதமே) வருடம் (ராணி)) வஜிராகரவதி சேர்த்த புண்ணியத்தால் தாய் எனும் கௌரவம் அடைந்தாள்

வரி 8

காதபயிதா ராஜகஹ-நப(ம்) பீடபயதி | ஏதினம் ச கம்மபதான-பனந்தேன சம்பித-செனவாகனே விபமு(ஞ்)சிது மதுரம் அபயாதோ 
யமனா-(நதீம்)... | பலவபார

எட்டாம் வருடம் பெரும் சேனையுடன் கோரதகிரி (கழுகுமலை?) பற்றி ராஜகிருஹ மன்னனை (நப=ந்ருப) துன்புருத்தினான். இதை தொடர்ந்து சேனையுடன் யமுனை நதி வரை சென்று மதுரா நகரை விடுவித்தான். பழம்சுமந்த (பலவபார) (கல்ப-விருட்சம்) கபுருக சுமந்து நாலவகை படையுடன் தூபத்திற்கு எல்லா கிரஹவாசிகளாலும் பூஜிக்கப்படும் ஸ்தூபத்திற்கு சர்வகரஹண விழா நடத்தி, ப்ராமண ஜாதியருக்கு பரிசு வழங்கி, அருகர்களை (வணங்கினான்). 

வரி 9

கபுருக ஹய-கஜ-ரத-சஹ யந்தே சவ-
கராவாசி-பூஜி | ...டூ | ...யா சவ-கஹனம் ச
காரயிதும் பமணானம் ஜாதிம் பரிஹாரம் ததாதி
அரஹத ச....... சுவிஜய

வரி 10

தே உபய-ப்ராசி-தடே ராஜ-நிவாசம் மகாவிஜய-
பாசாதம் காரயதி அடதிசாய-சத-ஸஹஸேஹி. 

(ஒன்பதாம் வருடம்) வெற்றிக்கு பின் ப்ராசி நதியின் இரு கரையிலும் மகாவிஜய பிராசாதம் எனும் அரண்மனையை (ராஜ-நிவாசம்) முப்பத்தி எட்டாயிரம் செலவழித்து கட்டுவித்தான்.

தசமே ச வசே தந்த-சந்தி-சா(ம)மயோ
பாரதவச-படானம் மஹீ-ஜயனம்...
காராபயஹதி | ......... பாயாதானம் மணிரதனானி-சஹ
யாதி |  (சஹயாதி ??|| உபலபதே??)

பத்தாம் (தசமே) வருடம் பாரதவர்ஷத்தை மஹீஜயனம் (பெரும்வெற்றி) கொள்ள படைகள் பயின்றன. பிதுடம் என்னும் அவ-ராஜ (பர்மா) தேசம் நுழைந்து கழுதைகள் (கதபன) பூட்டிய ஏரால்(கலேன) வயல் உழுது (காசயதி) தன்னாட்டு நலனிற்காக 113ம் ஆண்டு (தேரசவச-சத) உருவாகிய தமிழ்நாடுகளின் சங்கத்தை (தமிர தேச சங்காதம்) பிளந்தான்(பிந்ததி).

வரி 11

*** (மந்தம்) ச அவ-ராஜ-நிவேசிதம் பிதுடம்
கதபனகலேன காசயதி ஜனபத-பாவனம்
ச தேரசவச-சத-கதம் பிந்ததி தமிர-தஹ-
சங்காதம் | பாரசமே ச வசே ...... ச(ஹ)சேஹி
விதாசயதோ உதராபத-ராஜானோ

பன்னிரண்டாம் வருடம் வடதிசை மன்னர்களை அஞ்சவைத்து மகத கங்கை நதிநீரை யானைகளும் குதிரைகளும் பருகவைத்து, மன்னன் பிரஹஸ்பதிமித்ரனை தன் காலடி பணியவைத்து, நந்த ராஜர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஜீனரின் சிலையை அக்கோயிலில் வணங்கி, அங்க மகத நாட்டு அரண்மனை ரத்தினங்களை கலிங்கத்திற்கு கொண்டுவந்தான்.

வரி 12

*** மாகதானாம் ச விபுலம் பயம் ஜனேதோ ஹதசம்
கங்காய பாயயதி மாகதம் ச ராஜானாம்
பஹ(ஸ)திமிதம் பாதே வந்தாபயதி நந்தராஜ-
நீதம் ச கலிங்கம்-ஜீனம் சந்நீவேசே ***  (கஹ)-
ரத(னா)னி படீஹாரேஹி அங்க-மகத-வசும் ச நேயதி |

வரி 13

*** கேதும் ஜடர-லகில-(கோ)புரானி-சிகரானி
நிவேசயதி சத-விசிகானாம் பரிஹாரேஹி |
அபுதமசரியம் ச ஹதி-நவ-நீதம் பரிஹரதி
***  ஹய-ஹதி-ரதன-மானிகோ பாண்ட-ராஜ (சேதானி
அனேகானி) முத-மனி-ரதனானி ஆஹராபயதி இத சத-ச...

கலிங்கம் வந்து கோபுரங்களின் சிகரங்களில் கொடிகளை பறக்கவைத்தான். யானைகளும் படகுகளும் கொண்ட அற்புதமான ஆச்சரியமான படைசெலுத்தி பாண்டியமன்னனின் (பாண்டராஜ) பலநூறாயிரம் முத்துமணி-ரத்தினங்களுக்கு விலைபோகும் குதிரை யானை மணிகள் ரத்தினங்களை எடுத்துவந்தான்.

வரி 14

*** சினோ வசீகரோதி | தேரசமே ச வசே சுபவத விஜய-
சகே-குமாரி-பவதே அரஹதே பகிண-சம்சிதேஹி
காய-நிசீதீயாயா யாபுஜவகேஹி ராஜ-ப4தினா சின-
வதானா வச-சிதானா பூஜானுரத-உவாசக-
காரவேல-சிரினா ஜீவ-தேஹ-(சிரிதா) பரிகாதா |

பதிமூன்றாம் வருடம் விஜயசக்கரத்தில் குமாரி மலையில் பூஜையில் வல்லவனான ஜீவதேக இயல்பறிந்த காரவேலஸ்ரீ உடலிலிருந்து ஆன்மாவை விடுதலை (காய நிசீதீயாயா) செய்துகொண்டவரான அருகர்களுக்கு (அரஹதே) ஆலயம் (ஸ்தூபம்? சைத்யம்) எழுப்பினான்

(இங்கே தெளிவில்லை)

வரி 15

*** சுகத-சமண-சுவிஹிதானம் ச சவ-திசானாம்
ஞானினம் தபசி-இசினம் சங்க4யனம் அரஹத-
நிசீதீயா சமீபே பாபா4ரே வராகார-சமுதாபிதாஹி
அனேக-யோஜனாஹிதாஹி.... சிலாஹி சிம்ஹபதா-ராணீ-
சிந்துலாய நிசயானி |

எல்லா திசைகளிலிருந்தும் பல யோஜனை தூரங்களிலிருந்தும் ஞானிகளாம் தபஸ்வி-ரிஷிகளாம் போற்றதகுந்த (சுவிஹித) சமணர்கள், மலைமேல்  அருகன் கோவிலின் அருகே அமைத்த பிராகாரத்தில் சிம்ஹம்பத ராணி சிந்துலா அமைத்த கல் (சிலாஹி) பலகையை வந்தடைந்தனர்

வரி 16

*** படலகே சதரே ச வேடூரிய-கபே-த2பே
பதிடா2பயதி பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி
மு(ரி)கிய-கால-வோசிம்ன ச சோயட2-அங்கம்
சந்திகம் துரியம் உபாத3யதி | கே2ம-ராஜா ஸ
வத-ராஜா ஸ பிக்கு-ராஜா தம-ராஜா பசந்தோ
சுநந்தோ அநுபவந்தோ கலாணானி |

வைடூரியம் பதித்த தூண்கள் கொண்ட அந்த மன்றத்தில் 165ம் ஆண்டு முதல் (பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி) மலிந்து வரும் பன்னிரண்டு அங்கங்களை (சமண புனித நூலகளை) வாசிக்க வைத்தான். இவன் நலம்புரியம் (கேம=க்ஷேம) அரசன், செல்வ (வத=வ்ரத?) ராசன் பிக்கு அரசன் தர்ம அரசன். அந்நூல்களை கேள்விகேட்டு (குறைகேட்டு?) செவிசாய்த்து, அனுபவித்து புரிந்துகொள்பவன்.

வரி 17

....குண-விசேச-குசலோ சவ-பாசந்த-பூஜகோ சவ-
தேவாயதன-சங்காரகாரகோ அபதிஹத-சக-
வாஹன-பலோ சக-தரோ குத-சகோ பவத-சகோ
ராஜசி-வம்ச-குல-விநிஷிதோ மகாவிஜயோ ராஜா-
காரவேல-சிரி |

குணத்தில் சிறந்தவன், எல்லா மதங்களையும் பூஜிப்பவன், எல்லா கோயில்களுக்கும் (சவ-தேவாயதனம்) நன்மைசெய்பவன் (சம்காரகாரக) வெல்லமுடியா படைவாகனம் உடையவன், (தர்ம?வெற்றி?) சக்கரம் உடையவன், ராஜவம்சத்தினரை காப்பவன், மகாவிஜயன், ராஜா காரவேல ஸ்ரீ.

கலிங்கம் பேச்சு கச்சேரி - காணொளிகள் 

உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் - பத்ரி சேஷாத்ரியின் உரை 

தொடர்புடைய கட்டுரைகள்