Monday 28 November 2022

கல்கி - சாதனை படைத்த விஞ்ஞானிகள்

அறிமுகம்                

இவ்விஞ்ஞானிகளை பற்றிய மேலோட்டமான தகவல்களே மக்களுக்கும், ஏன் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்குமே தெரிந்துள்ளது. எடிசனின் வாழ்க்கை வரலாறு, ஜேம்ஸ் வாட்டின் வாழ்க்கை வரலாறு, படிக்க படிக்க வியப்பூட்டுபவை. மேலோட்டமாக எடிசன் மின்விளக்கு உருவாக்கினார் என்று நினைக்கிறோம்; ஆனால் அது பல நுணுக்கங்கள் கொண்ட பலவருட கதை.புகைவண்டியை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்தார் என்பதே எனக்கும் ஒரு காலத்திலிருந்த தவறான கருத்து; அவர் நீராவி எஞ்ஜினை தான் உருவாக்கினார் – இல்லை இல்லை முன்னமே இருந்த நீராவி எஞ்ஜினை சீர்படுத்தினார். புகைவண்டி என்று நாமழைக்கும் ரயில்வண்டி எஞ்ஜினை படைத்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். அவர் ஆஜிவகர்கள் போலவும், ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் போலவும் மறக்கப்பட்ட மேதை.

பிரீஸ்ட்லி, லவோசியே பலராலும் அறியப்படாதவர்கள்; ஆனால் நாம் அன்றாடு சுவாசிக்கும் காற்றை பற்றி அடிப்படை தகவல்களை நமக்கு தந்தவர்கள்.

ஆரியபடனை கேள்விப்பட்ட நமக்கு வராகமிகிரனை தெரியாது. ஆயிரம் ஆண்டுக்கால இந்திய வானியல் சரித்திரத்துக்கு அவரே ஆதார ஆசிரியர். அதனால் இதோ ஒரு அறிமுகம்.

பதிவுகளின் பின்கதை

சமீபத்தில் ஆர்விஎஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆர், வேங்கடசுப்ரமணியம், என்னை தொலைபேசியில் அழைத்து அறிவியல் சாதனையாளர்களை பற்றி சில சிற்றுரைகள் (பாட்காஸ்ட்) ஒலிப்பதிவு செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலா பதினைந்து நிமிடம் ஒலிப்பதிவு என்ற நிபந்தனை.

முதலில் கொஞ்சம் தயங்கினேன். வளவள என்று பேசி எதையாவது சொல்லிவிடலாம். ஒரு மணி நேரம் பேசினால் நான்கைந்து சுவாரசியமான தகவல்களை எப்படியோ சொல்லிவிடலாம். ஆனால் சுறுக்கமாக பேசி தகவல்களை கூறுவது மிகவும் கடினம். அதுவும் அறிவியல் துறை சாதனைகளை பற்றி படங்களின்றி வெறும் சிற்றுரையாக விளக்குவது மிகவும் கடினம். எனக்கு கடினம் – வேறு சிலருக்கு எளிமையாக இருக்கலாம்.

ஏற்கனவே சில அறிவியல் சாதனையாளர்களை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். ஆர்விஎஸ் நியூ இந்தின் எக்ஸ்பிரஸ் எனும் ஆங்கில நாளிதழில் பணி செய்தபோது அவர் கேட்டதற்கு இணங்க ஐந்து கட்டுரைகள் எழுதினேன் (ஒன்றிரண்டிற்கு புதிதாய் நூல்களையும் கட்டுரைகளையும் படித்து தகவல் சேர்த்து எழுதினேன்). அக்கட்டுரைகளுக்கு ஆயிரம் சொற்கள் உச்சவரம்பு; எழுதி எழுதி கழித்து வடித்து திருத்தி சுறுக்கி ஏதோ எழுதினேன்.

சமீப காலமாக ஒரு பொறியியல் கல்லூரியில் கருவிகளும் கண்டுபிடிப்புகளும் (இன்வென்ஷன்ஸ் அண்டு டிஸ்கவரிஸ்) என்று ஒரு வகுப்பு நடத்தி வருகிறேன். ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதால், ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் உதவின. ஏற்கனவே செய்த ஆங்கில பவர்பாயிண்ட் இருந்தன்; புதுவாக வேறு சில இயற்றம். ஒவ்வொரு செமஸ்டரும் சில திருத்தங்கள் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவது கடினம். குறிப்பாக போதுமான அறிவியல் சொற்கள் இல்லை; எனக்கு தெரிந்த அறிவியல் சொற்கள் அதிலும் சிலவே; இருக்கும் பற்பல சொற்களும் புழக்கத்தில் இல்லை; எப்படியிருந்தாலும் அறிவியலை படிப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலே தான் படிக்க பார்க்க கேட்க விரும்புகின்றனர். போதாக்குறையாக, எளிமையான தமிழ் பெயர்ச்சொல் வினைச்சொல்கள் பலவற்றை தவிர்த்து, ஆங்கிலச் சொற்களை சொல்வது இன்றைய வழக்கம். “கதவை திறங்கள்” என்பதை “டோர் ஓபன் பண்ணுங்க” என்பது போல். இதில் தமிழில் ஒலிப்பதிவுகளா?

தமிழில் அறிவியலுக்கு வரவேர்ப்பு குறைவே என்பது என் அனுபவம் – ஆனால் என் நட்பு வட்டத்தின் நிலமையாக இருக்கலாம். இந்த வலைதளத்திலும் ஆங்கில வரலாற்று கட்டுரைகளுக்கு கிட்டும் வரவேற்பு தமிழ் கட்டுரைகளுக்கு இல்லை. நாங்கள் நடத்தும் வராகமிகிரன் அறிவியல் மன்றத்து மாதாந்திர தொடருக்கும், தமிழில் நடத்திய இந்திய வானியல் வகுப்பிலும் இவை கண்கூடு. ஜேரட் டைமண்டின் நூலை தமிழுக்கு மொழிபெயர்க்கலாம் என்று நினைத்தபோதும், நான் அறிவியல் மற்றும் மொழியியல் சொற்களை தமிழாக்கவே ஓரிரண்டுவாரம் ஆனது. அப்பொழுது தமிழ் அறிவியல் அகராதி தேடி தோற்றுப்போனேன் – புத்தககடைகளில் ஏதும் இல்லை.

எனினும், சரி ஒரு முயற்சி செய்வோம் என்று எடிசனை பற்றி சில குறிப்புகள் எழுதினேன். செல்பேசியில் ஒலிப்பதிவு செய்ய முயல முயல தமிழை ஒழுங்காக பேசவியலாமை மீண்டும் மீண்டும் தாக்கியது. நிறுத்தி நிதானமாக ஓரிரு வாக்கியம் பேசி பதிவு செய்தால் மூன்றாம் வாக்கியத்திலேயே சொதப்பல். இவ்விதம் ஓரிரு நாள் வீண். வாட்ஸாப்பில் நேராக பதிவு செய்யவேண்டாம்; சவுண்ட் ரெக்கார்டர் (ஒலிப்பதிவு) ஆப் சிறப்பானது என்று ஆர்விஎஸ் அறிவுறுத்தினார். என் சமீப நோகியா தொலைபேசி கை தவறி நீரில் விழுந்ததால் தம்பி ஜெயராம் கொடுத்த பழைய ஆப்பில் ஐஃபோன் ஐந்தில் பதிவு முயற்சி; சவுண்ட் ரெக்கார்டர் முயற்சிகளால் அரை நாள் வீண்.

சரி, கொஞ்சம் வேகமாக பேசி பார்ப்போம், பின்னர் பிழைகளை திருத்திக்கொள்ளலாம் என்று வேகமாக பேசினேன். அங்குமிங்கும் சில கொடுந்தமிழ் சொற்களோடு எனக்கு தெரிந்த செந்தமிழ். ஒரு ஐந்து நிமிட பதிவில் கொஞ்சம் மகிழ்ச்சி; ஒரு வெற்றி மனநிலை. பின்னர் அங்குமிங்கும் சில செந்தமிழ் சொற்களோடு கொடுந்தமிழில் பேசி சமாளித்து பதிவை அனுப்பிவைத்தேன்.

கேட்டு, மிகவும் ரசித்ததாக ஆர்விஎஸ் தகவல் சொன்னவுடன் கொஞ்சம் பெருமூச்சு விட்டேன்.

எடிசனை அடுத்து நான்கு விஞ்ஞானிகளை பற்றி ஒலிப்பதிவு செய்து அனுப்பினேன். தீபாவளி சமயத்தில் காசை கரியாக்கிய பொறியாளர் என்று ஜேம்ஸ் வாட்டுக்கு கொடுத்த பட்டப்பெயர் சில நண்பர்களுக்கு மிகவும் பிடித்தது. எடிசன், ஜேம்ஸ் வாட், டிரெவிதிக் மூவரையும் விஞ்ஞான சமுதாயம் விஞ்ஞானிகளாக ஏற்காது; அவர்கள் போயும்போயும் பொறியாளர்கள்தான். போனால் போகட்டும் என்று லவோசியேவையும் பிரீஸ்ட்லீயையும் விஞ்ஞானிகள் என்று ஏற்றுக்கொள்ளும். மக்களால் எளிதாக புரிந்துகொள்ளும் விதம் யாராவது பேசினால் அல்லது எதையாவது சாதித்தால் அவர்கள் விஞ்ஞானிகளே இல்லை. ஐன்ஸ்டைன் போல் யாருக்குமே கொஞ்சம்கூட புரியாத தகவல்களை பேசுபவர்களும், மற்ற விஞ்ஞானிகளே கொஞ்சம் மூச்சுத் திணற எழுதியவர்களும் தான் விஞ்ஞானிகள். இருந்துவிட்டு போகட்டும்.

வராகமிகிரன் பேரை சொன்னவுடன் ஆர்விஎஸ்ஸுக்கு குதூகலம். ஆனால் மிக நீநீநீளமான பதிவாகிவிட்டது. மானே தேனே கண்மணி பொன்ணி எல்லாம் கழித்துவிட்டு கொஞ்சம் சுறுக்கமான ஒலிப்பதிவை கேட்கலாம்.

நாலைந்து பேர் வாராவாரம் கேட்டுவிட்டு பாராட்டி தகவல் அனுப்பினர். முதல் வாரப்பதிவுக்கு மன்னை கண்ணன் என்பவர் முகநூலில் ஒரு பாஷ்யமே எழுதிவிட்டார்.

இங்கே ஆறு ஒலிப்பதிவுகளின் சுட்டிகள்.

மின்சார மந்திரவாதி - தாமஸ் எடிசன்

கரியை காசாக்கிய பொறியாளர் - ஜேம்ஸ் வாட்

காற்றை வகுத்த வல்லவர் - ஜோசஃப் பிரீஸ்ட்லீ

வேதியலின் தந்தை - அந்துவான் லவாய்சியே

ரயில்வண்டி ராட்சசன் - ரிச்சர்ட் டிரெவிதிக்

கலியுக கதிரவன் - வராகமிகிரன்

Inventors and Discoverers - கருவி படைப்பாளிகள்