Friday 14 April 2017

ஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு


April 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் 

April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்று (ஏப்ரல் 14, 2017) சித்திரை மாதம் முதல் நாள் (இது சவன தினம் - solar day). மேலும் த்ரிதியை திதி (lunar day). மேலும் இன்று விசாக நட்சத்திரம் (stellar or sidereal day). பாரத பண்பாட்டில் மூன்றையும் அனுசரிப்பது பண்டைய வழக்கம். ஸ்டெல்லாரியம் மென்பொருளில் படம் எடுத்து இன்றைய இரவு விண்ணின் கோலத்தை காட்டியுள்ளேன். சித்திரை நட்சத்திரம் அருகே வியாழன் இருக்கும் (ஒரு மாசம் வாடகை கொடுத்துவிட்டார் அந்த பிரஹஸ்பதி, மெதுவாகவே அடுத்த வீட்டுக்கு செல்வார்).

2014-ல் தமிழ் புத்தாண்டு இன்று போல் த்ரிதியையில் வராமல், பௌர்ணமி அன்று வந்தது, அதாவது அன்றே சித்ரா பௌர்ணமி. இரண்டும் சேர்ந்து வருவது அபூர்வம் (ஆனால் அதிசயம் அல்ல - ஏறக்குறைய முப்பதாண்டுக்கு ஒரு முறை வரும்). ஆனால் அன்று செவ்வாய் கிரகமும் சந்திரனோடு உதித்து, அஸ்தமித்தது. அது இன்னும் கொஞ்சம் அபூர்வர்ம். 2017-ல் செவ்வாய் கிழக்கே இல்லாமல் மேற்கே காணலாம். விஜய் மால்யா, லலித் மோதி ஞாபகம் வந்தால் பழி ஐபிஎல்-லுக்கே.

சித்திரை நட்சத்திரம் அன்று சித்திரைக்கு அருகே இருந்த சந்திரன், இன்று விசாகம் அருகே இருப்பதால் இன்று விசாக நட்சத்திரம். கொஞ்சம் குழப்பமிருந்தால் திதி-நட்சத்திரம்-சவண நாள் வித்தியாசம் பற்றிய விளக்கத்திற்கு,  இந்த வலைப்பூவை படிக்கவும்.

எச்சரிக்கை - முழுதாக குழம்ப வாய்ப்புண்டு.

இந்திய விண்ணியல் கட்டுரைகள்

Thursday 6 April 2017

ஏப்ரல் 7 – பாரத நாட்டு சுதந்திர தினமா?




மேலுள்ள படங்களில் ஒருவரை யாவரும் அறிவர் – அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரகாம் லிங்கன். அமெரிக்காவில் அடிமை முறையை ரத்து செய்து, கறுப்பின மக்களை விடுவித்த வரலாற்று நாயகன். அமெரிக்காவில் வெள்ளையரோ செவ்விந்தியரோ அக்காலத்துல் அடிமைகளாக இல்லை. லிங்கன் அடிமைமுறையை ரத்து செய்து சட்டம் கொண்டுவந்ததால், அதை எதிர்த்து அமெரிக்க தேசத்திலிருந்து பல தென் மாநிலங்கள் பிரிந்து, கான்பெடரசி (சங்கம்) எனும் தனி நாடு அமைத்தன. இந்த தனி நாடை எதிர்த்து போர் தொடுத்து, வென்று, மீண்டும் அமெரிக்காவில் சேரவைத்தார் லிங்கன். அடிமை முறையின் மனிதாபிமானமற்ற கொடுமையை ஒழிக்க போர் தொடுத்து, லட்சக்கணக்கில் எதிரிகளை கொல்ல கட்டளையிட்ட லிங்கனையும், அவரை ஆதரிப்பவரையும், ஹேரியட் பீச்சர் ஸ்டவ் என்ற பெண்மணி எழுதிய “டாம் மாமாவின் குடிசை” எனும் நாவல் மிகப்பெரிய பங்களித்ததாம். இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஜாலியன்வாலா பூங்காவில் நடந்த படுகொலைக்கு சமமாக இந்த நாவல் அமெரிக்காவில் கருதப்படுகிறது.

எழாத சில கேள்விகளை நாம் கேட்போம். அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை ஜூலை நான்காம் தேதி கொண்டாடுகிறது. 1776ஆம் ஆண்டு, ஜூலை 4 அன்று பிலடல்பியாவில் கூடிய பதிமூன்று மாநிலத்து அமெரிக்கர்கள், ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக ஒரு அறிக்கை அச்சிட்டனர். இதன் பின்னர் ஆங்கில அரசு அந்த பதிமூன்று மாநிலங்கள் மேல் போர் தொடுக்க, ஜார்ஜ் வாஷிங்க்டன் தலைமையில் அமெரிக்கர்களின் படை பல ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்று தங்களை ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் என்ற சுதந்திர  நாடாக அறிவித்துக்கொண்டனர். ஆங்கில கொலோனிய ஆட்சியிலிருந்து விடுதலை அறிவித்த ஜூலை நான்காம் நாளைவிட, அடிமைத்தனத்தை ரத்து செய்த ஜனவரி முதல் நாளை அல்லவா அமெரிக்கா சுதந்திர தினமாக கொண்டாடவேண்டும்? அடிமை முறைய ரத்து செய்த லிங்கன், ஏன் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை தரவில்லை? அவரை தூண்டிய நாவலை எழுதிய ஹேரியர் பீச்சர் ஸ்டவ், ஏன் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கோரவில்லை? (அடிமை முறையை ரத்து செய்வதை விட, பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பதற்கு எதிர்ப்பு அதிகமா? அதை முதலில் கொடுத்திருந்தாலும் அமெரிக்க தென் மாநிலங்கள் பிரிந்து தனி நாடு அமைத்திருக்குமா? பெண்களுக்கு1920களில் தான் வாக்குரிமை கிடைத்தது. அந்த நாளை ஏன் அமெரிக்கா சுதந்திர தினமாக கொண்டாடுவதில்லை?)

இதை போன்ற கேள்விகள் பாரதத்தில் எழுவதே இல்லை. அடிமை முறையை ஒழித்தது யார் என்று பாரத நாட்டில் யாரை கேட்டாலும் ஏப்ரகாம் லிங்கன் என்று பதில் வரும். பாரதத்தில் நிலவிய அடிமை முறையை ஒழித்தது யார் என்று கேளுங்கள். வெள்ளைக்காரனுக்கு நாம் அடிமையாக இருந்தோம், காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார் என்ற பதில் வரும். மற்ற நாடுகளில் அடிமை முறை நிலவியதா, யார் எப்பொழுது அதை ஒழித்தனர் என்ற கேள்வியே எழாது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொலோனிய ஆட்சியும் அடிமை முறையும் உலகெங்கும் நிலவின. லிங்கனுக்கு முன் எத்தனை நாடுகள் அடிமை முறையை ஒழித்தன? அதை ஒழித்த வரலாற்று நாயகர் யார் யார்?

போர் செய்தால் மட்டுமே வரலாறு ஆகுமோ?

இந்த படங்களை வைத்து நான் எழுப்பும் கேள்வி அதுவே. 1947பின் இந்திய வரலாற்றில் காந்தியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டமே பிரதானம். ஆங்கிலேயருக்கு நாம் அடிமையாக இருந்தோம், காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்பது தாரக மந்திரம். பாரதியின் கவிதையிலும், பால கங்காதர திலகரின் உரிமை குரலிலும், விவேகானந்தரின் போதனைகளிலும், இவ்வகை கட்டுரைகளிலும் நூல்களிலும் இதை மட்டுமே காணலாம். 

ஆனால் உண்மையான அடிமை முறையை ஒழித்தது ஆங்கிலேய அரசு. 1833இல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலுள்ள தேசங்களை தவிர்த்து, ஆங்கிலேயர் ஆட்சியிலுள்ள அனைத்து தேசங்களிலும் அடிமை முறையை ஒரு சட்டத்தால் ஆங்கிலேய பாராளுமன்றம் ரத்து செய்தது. ஏப்ரல் ஏழாம் நாள், 1843ல், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலுள்ள தேசங்களிலும் அடிமை முறையை ரத்து செய்தது. அந்த ஆண்டில் எல்லன்பரா துரை பாரத நாட்டின் வைஸ்ராய். அவர் படம் மேலே. அமெரிக்காவில் லிங்கனை போல், பாரத நாட்டில் போர் நடத்தி, லட்ச கணக்கிள் மக்களை கொன்று, ஊர்களை எரித்து, அடிமை முறை ஒழிக்கப்படவில்லை. ஆகஸ்டு 15ஐ விட ஏப்ரல் 7 தானே சுதந்திர தினம் என்று பாரத மக்கள் கொண்டாட தக்க நாள்?

ஒன்று கவனிக்கவேண்டும். இது கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலுள்ள மாகாணங்களில் மட்டும் நடந்த சம்பவம். டெல்லியில் முகலாய மன்னரின் ஆட்சி தொடர்ந்தது. பாரதத்தில் பல ஹைத்ராபாத், காஷ்மீர், மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை, பரோடா என்று, பல ராஜ்ஜியங்கள் இருந்தன. கம்பெனி அதிகாரிகள் சிலர் இந்த சட்டத்தை எதிர்த்தனர். காரணம்? சக்தி வாய்ந்த சில இந்துக்களும் முஸ்லிம்களும், அடிமை முறை ரத்தாவதை, “தங்கள் பாரம்பரிய சமூகங்களின் சிதைவாக கருதலாம்,” என்பது அவர்கள் வாதம்.

பள்ளிக்கூடங்களில் நாம் இதை ஏதும் படித்ததில்லை; படிக்க வாய்ப்பில்லை. செய்தித்தாள்களோ, பத்திரிகைகளோ, வானொலி தொலைகாட்சி போன்ற ஊடகங்களோ இதை பேசா. காந்தி, நேரு, படேல், ராஜாஜி, விவேகானந்தர், பாரதி, தாகூர் ஒருவரும் இதை சீண்டியதில்லை. ஆங்கிலேயருக்கு நன்றி சொன்னதில்லை. இந்தியாவில் அடிமைமுறை நிலவிய வரலாற்று உணர்வே மக்களுக்கு இல்லே. எல்லன்பரா துரையின் இன்றைய விக்கிப்பீடியா பக்கத்தில் அடிமை முறை ஒழிப்பை பற்றி ஒரு சொல்லோ வரியோ இல்லை. இந்திய அடிமை சட்ட விக்கிப்பீடியா பக்கத்தில் எல்லன்பரா பெயரோ அன்றையை இங்கிலாந்து பிரதமர் ராபர்ட் பீல் பெயரோ இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பற்பல நாடுகள் போர் ஏதுமின்றியே அடிமை முறையை ஒழித்தன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கொலோனிய நாடுகளிலிருந்து விடுதலை பெற்ற ஆப்பிரிக்க ஆசிய நாடுகள்  , அந்த ஐரோப்பியர்களை விட சர்வாதிகார கொடுங்கோலர்களின் ஆட்சியில் சிக்கி தவித்தன. பல சர்வாதிகார கொடுங்கோல் ஜனாதிபதிகள் திறமையற்ற வீணர்கள். கொலோனியத்தின் அஸ்தமனம் வெள்ளை ஆண்டார்களை ஒதுக்கி கறுப்பு மாநிர மஞ்சள் ஆண்டார் வர்கங்களை உருவாக்கின. எனக்கு தெரிந்து பெரும்பான்மையான் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் புரட்சியோ போரோ இன்றியே சுதந்திரம் பெற்றன. 1776க்கு பிறகு நெப்போலியனும் ஹிட்லரும் மட்டுமே போரினால் வீழ்ந்த கொலோனிய சக்திகள் – இவற்றை பொதுவாக யாரும் கொலோனிய ஆட்சிகளாக கருதுவதில்லை; ஆசியாவையோ ஆப்பிரிக்காவையோ ஐரோப்பியர் ஆண்டால் அது கொலோனிய ஆட்சி; ஐரோப்பாவை ஒரு ஐரோப்பியர் ஆண்டால் அது ஏகாதிபத்திய சர்வாதிகாரம்.

மூன்றாம் நபரின் படம் இந்த வரலாற்று மௌனத்தை விளக்குகிறது. சுல்தான் சௌத் பின் அப்துல் அசீஸ் அல் சௌத். சௌதி அரேபியாவை ஆளும் அரச வம்சத்தார். இந்த குடும்பத்தின் பெயர் நாட்டிற்கும் சூட்டப்பட்டுள்ளது. அந்நாட்டில் அடிமை முறையை 1962ல் அவர் ரத்து செய்தார். அடிமை முறையை ஒழித்த முக்கிய நாடுகளில் கடைசி நாடு. அவருடைய விக்கிப்பீடியா பக்கத்திலும் இந்த சாதனை இடம்பெறவில்லை. ஏப்ரகாம் லிங்கனின் பாதி புகழாவது இவருக்கு கிட்ட வேண்டாமா? சாதனை அல்லவா அது? போர் நடத்தி லட்சங்களை கொன்று குவிக்காமல் ரத்து செய்தது அவருக்கு கிடைக்கவேண்டிய புகழில் மண்ணை தூவியதோ? எல்லன்பராவும் ராபர்ட் பீலும் இதே தவறை செய்தனரோ?

தென்னாபிரிக்க நாடு மண்டேலாவை கைது செய்து, அபார்த்தீடை அமலாக்கிய போது இந்தியா சினம் பொங்கி அந்நாட்டோடு உறவை முறித்துக்கொண்டது. அவர்களோடு கிரிக்கட் ஆட மறுத்தது. மான்சஸ்டரிலிந்து வந்த மில் துணிகளை புரக்கணித்து, நடுத்தெருவில் குவித்து, எரித்த காந்தியின் நாடு, சௌதி அரேபியா 1961க்கு முன் விற்ற ஒரு சொட்டு கச்சா எண்ணையை மறுக்கவில்லை; புரக்கணிக்கவில்லை.

எல்லன்பாரா துரைக்கு வேறு ஒரு புகழ் உண்டு. கஜினி முகமது தூக்கிச் சென்ற சோம்நாத் கோயில் கதவுகளை மீட்டெடுத்து சோம்நாத்தில் நிறுவிய ஆங்கிலேயர் அவர். ஹிந்துத்வா ஆதரவாளர்கள் யாரேனும் அவரை பேசி கேட்டதுண்டா?

ஒரு சமூகத்தின், ஒரு நாட்டு மக்களின் சித்தாந்த நிலை இது. எல்லன்பாராவையோ அப்துல் அசீஸ்பின் சௌதையோ பாராட்டினால் எந்த லாபமும் இல்லை. இந்திய ஹிந்துக்களோ முஸ்லிம்களோ தம் முன்னோர்களின் அடிமை கொடுமைகளை பேசவோ ஆராயவோ விரும்புவதில்லை.  எந்த காந்தியவாதிக்கோ, காங்கிரசாருக்கோ, அரசியல்வாதிக்கோ இதில் எந்த ஆதாயமும் கிடைக்காது. எந்த வரலாற்று ஆய்வாளரும் இதை நூலாக்கி விற்க முடியாது. இங்கிலாந்தை பாராட்டினால் “அடிமை மனம் கொண்டவனே” என்று சமூகம் பழிக்கும். லிங்கனையும் காந்தியையும் தலைவணங்கி நம்வழி நாம் செல்வோம்.

இந்த கட்டுரை படித்து உங்களுக்கு ஆத்திரம் வந்தால், கீழ்கண்ட கட்டுரைகள் ரத்தவெறியை மூட்டலாம். 

மேலே கூறிய விக்கீப்பீடியா சுட்டிகள்