Monday, 18 April 2016

மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை

சென்னை மெரீனா கடற்கரை சிலைகள்


சென்னை மெரீனா கடற்கரையில், பல்கலைகழகத்துக்கு எதிரே, அண்ணாதுரை எம்ஜிஆர் சமாதிகளுக்கு அருகில், உழைப்பாளர் சிலை உள்ளது. (உழைப்பாளி சிலை என்றல்லவா அழைக்கவேண்டும்?) இச்சிலையை வடித்தவர் ராய் சௌதுரி என்ற வங்காள கலைஞர். சென்னை கவின் கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர்.

சென்னை கடற்கரை - உழைப்பாளர் சிலை

கடுமையாக உடலை வருத்திக்கொண்டு நரம்பும் சதையும் பிதுங்க நால்வர் ஒரு கனமான பாறையை அகற்ற முனைவதே சிற்பத்தின் வடிவம். சிற்பத்திற்கு ஆங்கிலத்தில் Triumph of Labour அதாவது உழைப்பின் வெற்றி என்று பெயர். 

உழைப்பாளர் ஒன்றுகூடினால் கடினமான செயலிலும் வெற்றி காணலாம் என்பது சிற்பத்தின் கருத்து. இதில் மார்க்சிஸத்தின் கொள்கையும் ஜனநாயகத்தின் கொள்கையும் மிளிர்கின்றன. இச்சிலை ஒரு சாதாரண கலை வடிவம் அல்ல, ஒரு அரசியல் தத்துவத்தை முன்னிறுத்தும் கலை வடிவம்.

மெரீனா கடற்கரையில் பல சிலைகளுள்ளன. வள்ளுவன், இளங்கோ, கண்ணகி, ஔவை, கம்பன், சுப்பிரமணிய பாரதி. பாரதிதாசன் சிலைகள் அவர்களது தமிழ்பணிக்காக அவர்களை கௌரவிக்கும் சிலைகள். அன்னியராயினும், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் செய்த தமிழ் தொண்டை பாராட்டி கௌரவிக்கும் அம்மூவரின் சிலைகளும் உள்ளன. 

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின், 1968ஆம் ஆண்டில் நடந்த உலக தமிழ் மாநாட்டை ஒட்டி இந்த சிலைகள் நிறுவப்பட்டன; கம்பர் சிலை மட்டும் 1971இல் நிறுவப்பட்டது. இவையிருக்க காந்தி, காமராஜ், சுபாஷ் சந்திர போஸ் மூவரின் சிலை மட்டும் அவர்களது அரசியல் பணிக்காக நிறுவப்பட்டவை. பெரும் வணிகருக்கோ, அறிவியல் விளையாட்டு நிர்வாகம் இயல் இசை நாடக ஓவியக் கலைகளில் சாதித்தவர் ஒருவருக்கும் கடற்கரையில் சிலை ஏதுமில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு வைத்த சிலை ஒரு விதிவிலக்கு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன், பொது இடங்களில் சிலை வைக்கும் வழக்கம் பாரத நாட்டில் இல்லை. இலக்கியத்தில் எந்த வரலாற்று குறிப்போ, தொல்லியல் சான்றோ இல்லை. சுதந்திரத்திற்கு பின் அரசியல் தலைவர்களின் சிலைகள் நாடெங்கும் காணலாம். சென்னை தெருக்களில் ஆங்காங்கே வேறு பல அரசியல் தலைவர்கள், புலவர்கள், சினிமா கலைஞர்களுக்கு சிலைகளுள்ளன.

மற்ற சிலைகளெல்லாம் கௌரவ சின்னங்களாக மட்டுமே திகழ உழைப்பாளர் சிலையை கலை அழகிற்கும் ரசிக்கலாம். சென்னைக்கு சுற்றுலா வருபவர் சிற்பங்களை ரசிக்க இரண்டு இடங்களுக்கு மட்டுமே செல்வதுண்டு. ஒன்று எழும்பூர் அருங்காட்சியகம். மற்றொன்று மாமல்லபுரம்.

கலைக்கூடங்கள்

கோவில்களே பாரத சிற்ப ஓவிய கட்டிட கலைகளின் சாலச்சிறந்த கூடங்கள். சென்னையில் பழம்பெரும் கோவிலகளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பழைய கருங்கற் சிற்பங்கள் உள்ளன. இவையும் விஜயநகர் காலத்து சிற்பங்கள். மற்ற கோயில்களில் சுதை சிற்பங்களே ஒரளவுக்கு ரசிக்கும் படி இருக்கும்.

வரலாற்று வல்லுனர்கள் மாமல்லபுரத்தையே கருங்கற் சிற்பத்தின் பிறப்பிடமாக கருதுகின்றனர். மாமல்லபுரத்துக்கு முன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் சில குகை கோவில்களில் சிற்பங்கள் இருப்பினும், ஓரிரண்டே இருக்கும். அவற்றை காணச்செல்பவர் வெகுச்சிலரே. பல்லவர் காலம் தொடங்கி இன்றுவரை கோயில்களே தமிழ சமூகத்தின் கலைக்கூடங்களாக திகழ்ந்துவருகின்றன. ஓரிரு மார்க்ஸிச வரலாற்று வல்லுனர் அவற்றுள் அரசியல் கண்ணோட்டத்தை புகுத்தினாலும், கோயில் கலைகள் தெய்வீகத்தை தான் பிரதானமாக பிரதிபலிப்பவை. வைணவ சைவ புராணங்களும் ராமாயண மகாபாரத இதிகாசங்களும் ஆழ்வார் நாயன்மார் சம்பவங்களும் மட்டுமே பல்லவ பாண்டிய சோழ காலத்தில் சிற்பங்களாய் உள்ளன. நாயக்கர் காலத்து கோயில்களில்தான் பாமர மனிதர்கள் குறவன் குறத்தி மற்றும் சில யதார்த்த சிற்பங்களை காணலாம்.

மல்லையில் உழைப்பாள் சிற்பங்கள்

அர்சுணன் தவம் எனும் மல்லை சிற்பத்தின் மையமாக, அர்சுனனும் அவனுக்கு பாசுபதம் வழங்கும் சிவனும் காணலாம். சிலர் இதை பகீரதன் தவமென்றும் கூறுவர். இக்காட்சியை காண தேவரும் கந்தர்வரும் நாகரும் கிம்புருடரும் பல பறவை விலங்குகளும் வருவதை காணலாம். சிவனுக்கு கீழே ஒரு முனிவரும் அவரது சீடர்களும் உள்ளனர். இடது புறத்தில் காட்டில் நடந்து வரும் நான்கு வேடர்களையும் காணலாம்.

அக்காலத்தில் பாரவி என்ற புலவர் எழுதிய கிராதார்ஜுனீயம் என்ற வடமொழி காவியம் புகழ்பெற்றிருந்தது. கிராதன் என்ற சொல்லுக்கு வேடன் என்று பொருள். அர்சுணனை சோதிக்க சிவன் வேடனாக (கிராதனாக) வேடம் போட்டு வருகிறார். அர்சுணனின் தவத்தை கலைத்த ஒரு பன்றியை அர்சுணன் அம்புவிட்டு கொல்ல, கிராதானாக வந்த சிவனோடு வேடம் தரித்த பார்வதி, தன் கணவன் கொன்ற பன்றியின் பிணத்தைதான் அர்சுணனின் அம்பு துளைத்தது என்று பரிகசிக்க, கிராதனுக்கும் அர்சுணனுக்கும் சொற்போர் மூண்டு விற்போராகவும் மற்போராகவும் மாறுவதே கிராதார்ஜுனீயம்.
அர்சுணன் தவம்
நான்கு கிராதர்
இப்பொழுது இச்சிற்பத்திலுள்ள வேடர்களை காண்க. நால்வரும் கையில் வில்லேந்தி யதார்த்தமாக காட்டில் நடந்து வருகின்றனர். வேட்டையாடி எந்த விலங்கையும் கொன்றதாக தெரியவில்லை. ஒருவர் ஒரு பலாபழத்தை சுமந்து வருகிறார்.

இவர்களும் உழைப்பாளிகள் தான். வெயிலின் தாக்கமோ முயர்ச்சியின் அழுத்தமோ வேட்டையின் களைப்போ வேர்வையோ உழைப்பின் வெற்றியோ ஏதுமில்லை. ஒற்றுமை வேற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவர்கள் கந்தர்வர்கள் உணரும் விஸ்மயம் என்ற ஆச்சரியமோ, விலங்குகளின் உச்சி வெயில் அயர்வோ, யானைகளின் குதூகலமோ இவ்வேடர்களின் பாவதில் துளியுமில்லை.

அர்சுணன் தவத்திற்கு அருகே கோவர்தன மண்டபம் உள்ளது. இதில் கண்ணன் கோவர்தன மலையை ஒரு கையால் தூக்க, யாதவ குலமும் ஆநிரைகளும் மிக யதார்த்தமாக மலை நிழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் காட்சியை காணலாம். இதில் மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும் உழைப்பாளர் தானே? ஆனால் சிற்பியன் நோக்கம் உழைப்பை காட்டுவதல்ல; கண்ணன் லீலையை காட்டுவதுதான்.


மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும்
இந்த சிற்பத்தினையும் திருக்குறுங்குடி கோவர்தன சிற்பத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் பாலுசாமியின் உரையை தவறாமல் காணவும்.

ஐந்து ரதத்தில் பெரிதான தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில், இரண்டாம் தளத்தில் சில உழைப்பாளர் சிலைகள் உள்ளன. வீணை ஏந்தி ஒரு ஓதுவார், கையில் மணியேந்தி ஒரு பரிசாரகர் (தொண்டர்), ஒரு ஸ்வயம்பாகி (சமையல்காரர்), கையில் நீள கூடையுடன் ஒரு அர்ச்சகர் (பூசாரி), குடத்தில் அபிஷேக நீர் ஏந்திவரும் ஒரு பணிப்பெண் இவர்களின் சிற்பங்களுள்ளன. முதல் நால்வர் கிழக்கு சுவற்றிலும், பணிப்பெண் மேற்கு சுவற்றிலும் உள்ளனர். பிற்காலத்து கோயில்களில் இதை போன்று பணியார்கள் சிற்பங்களை ஏதும் நான் கண்டதில்லை.



ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் வருடாந்திர ஆழ்கலை உலா வடகர்நாடகத்து சாளுக்கிய தலைநகரம் வாதாபிக்கு சென்ற போது சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலையை பற்றி ஓவியர் சந்துரு (இவரும் ராய் சௌதுரி போல் கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்) பேசும்போது அர்சுணன் தவத்து வேடர்களும் தர்மராஜ ரதத்து தொண்டரும் கண்முன் தோன்றினர். மீண்டும் இந்த வாரம் அவர் கலைரசனை வகுப்பெடுக்கும் போது உழைப்பாளர் சிலை ராய் சௌதுரி என்று பேச்செழுந்தது. 

கலை உலா - ஐஹோளேவில் ஓவியர் சந்துரு - சிற்ப வர்ணனை
சோழரும் பாண்டியரும் சேரரும் மற்ற மன்னவரும் கோயில் சிற்பங்களில் காண்பதரிது. சில நாயக்க மன்னர்களையும் ராணிகளையும் மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணலாம். கம்பன் இளங்கோ ஔவை வள்ளுவராதி புலவருக்கெல்லாம் சிற்பமோ ஓவியமோ எங்குமில்லை. காளிதாசன் பாணர் தண்டி பாரவி என்ற வடமொழிப்புலவருக்கும், மற்ற கலைஞருக்கும் சிற்ப ஓவியங்கள் ஹிந்து மத மரபில் மிக அரிதானவை. அழிந்துவிட்ட கோயில்களிலோ அரண்மணைகளிலோ ஓலைச்சுவடிகளிலோ ஒருவேளை இருந்திருக்கலாம்.

மாமல்லபுரத்து வேடரும் யாதவரும் தொண்டரும் சிற்பத்தில் நாம் அரிதே காணும் பாமரர்; உழைப்பாளர்.

மாமல்லபுரம் காணொளிகள்
  1. அர்சுணன் தபசு – பேராசிரியர் பாலுசாமி உரை
  2. புலி குகையும் கிருஷ்ணமண்டபமும் – பேராசிரியர் பாலுசாமி உரை
  3. மாமல்லபுரம் – பேராசிரியர் சுவாமிநாதனின் பவர்பாய்ண்ட் இலக்கியம்
  4. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாமல்லபுரம் - காணொளி

மாமல்லபுரம் கட்டுரைகள்
  1. கல்கியும் கோயிலும் – சிவகாமியின் சபதம்
  2. பத்ரி சேஷாத்ரி-அதிரணசண்ட மண்டபத்து மூன்றாம் கல்வெட்டு
  3. காஞ்சிகைலாசநாதர் கோயில் வாழ்த்து
  4. மல்லை சிற்பியர் வாழ்த்து

கலை சார்ந்த கட்டுரைகள்
  1. ஞானதேவதைகள் – அமெரிக்க தேசிய நூலகத்தின் ஓவியங்கள்
  2. மாந்தாதா - அமராவதி சிற்பம்
  3. கோவில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
  4. கல்லிலே ஆடவல்லான்
  5. கொடுங்கை குறும்பு - ஸ்ரீவைகண்டம் சிற்பங்கள்
  6. சாதா விந்தையின் ஆறா ரசிகன்
  7. பண்டைக்காலபாண்டுரங்கன் கல்வெட்டு
  8. Bharavi's Kiratarjuniyam - A Timeline of Sanskrit literature
  9. The Art and Aesthetic of Driving

5 comments:

  1. உழைப்பாளர் தினத்தில் ஒரு அழகான புதிய கண்ணோட்டம. வெப்பம் மிகுதியான நம் நாட்டிற்கு ஏற்றவாறு உழைப்பு அதிகாலையில் துவங்கி, நண்பகலில் சற்று ஓய்வெடுத்து உழைப்பாளிகளின் முகத்தில் அதிக சோர்வும், வருத்தமும் இல்லாத காலமாக பல்லவர் காலம் இருந்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கனிவான கற்பனை. அப்படி தான் காலாகாலமாக இருந்ததாக தெரிகிறது. கிராமங்களில் இப்படி தான் இன்றும் வழக்கம்.

      Delete
  2. Do u think this reflects the stoic temperament of the working class, the world over?
    They neither feel any wonder, thrill or happiness in being, nor any undue tiredness or sadness! They merely take it as their lot!
    If the uzhaippalar silai had a sequel, which showed them after finishing their hard work - merely standing or walking - they may display similar deadpan expressions!

    ReplyDelete
    Replies
    1. How can we know what someone feels, unless they tell us? And why would they tell us unless we ask them.

      I have never seen interviews of workers of a project anywhere on TV radio or social media. Those who build roads, airports, railway stations, those who clean our cities, the emergency staff during the covid pandemic, no body. Not even from labour unions. They are only hear when they complain about something wrong.

      Delete
  3. This is such a contrast to Ajanta - where the art is filled with common people in their full glory - almost as important as The Buddha & the Bodhisattvas.
    I wonder, when in our history, we stopped including ordinary people in our Artistic expressions - paintings or sculptures. And what a loss it has proved to be in our understanding of the common man's life then.

    ReplyDelete