Saturday, 23 April 2016

ஹிட்லர் மகன்

ஜூன் மாதம். 2010.

“கையில் என்ன புத்தகம்?” அப்பா இரங்கரத்தினம் கேட்டார்.

“இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள். கையெழுத்து வாங்கினேன்.” ஆழ்வார்பேட்டை டேக் செண்டரில் அதிலிருந்து நான்கு சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. திருப்பூர் கிருஷ்ணன் வாசித்த கதையில் உணர்ச்சிவசம் பொங்க, “நான் எழுதியதை வி இவர் வாசித்தது பிரமாதம்,” என்று ஆசிரியர் மெய்ச்சுக்கொண்டார்.

“நாங்க திண்ணைலே உட்கார்ந்திருப்போம், என்ன நல்லா பரிகாசம் பண்ணுவாண்டா அவன்,” என்றார் அப்பா, தமிழில். தன் பள்ளி பிராயத்தை பற்றி பல கதைகள் சொல்லியிருந்தாலும், இ.பா.வுக்கும் தனக்கும் அப்பொழுதே பழக்கம் என்று அவர் சொன்னதாக ஞாபகமில்லை. “அப்பவே நண்பராப்பா?” என்று கேட்டேன். “ஆமாம், அவா சித்தப்பா பாபுவுக்கு டௌன் ஹை ஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். உனக்கு தெரியாது?” பாபு அப்பாவின் அண்ணன்.

1993இல் அப்பா, தம்பி ஜெயராமுடன்

சுமார் 2005இல் அப்பாவுடன்
அபார ஞாபக சக்தியுடைய அப்பாவுக்கு டிமென்ஷியா வந்து ஓரிரு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் பழைய நினைவுகள் பொங்கி வரும். கண்ணும் மங்கிவிட்டது. ஒரு கண்ணில் அறுவை சிக்கிச்சை செய்தாகிவிட்டது. காது சரியாக கேட்பதில்லை. சக்கரை நோயால் நாற்பது வருடம் தவித்தவர், நல்ல வேளை இன்சுலின் ஊசி அரக்கனின் பிடியிலிருந்து தப்பி சமீபமாக மாத்திரை போட்டுக்கொண்டிருந்தார்.

அப்பாவோடு பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி கோபமும் பசியும் வரும். களைப்பில் தூக்கம் வரும். திடீரென்று இந்திரா பார்த்தசாரதி புத்தகம் என்றவுடன் ஏனோ பழைய நினைவுகள் பொங்கிவந்தன. 

அது ஜூன் மாதம். அக்டோபரில் அப்பா காலமாகிவிட்டார்.

அடுத்த வருடம் மார்கழி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சு கச்சேரியை தொடங்கியது. லஸ் ராக சுதா அரங்கத்தில் ஜெயமோகன் உரை. இ.பா. வந்தார். “நான் ரங்கரத்தினம் பையன் சார், என் பேர் கோபு,” என்று அறிமுகம் செய்து கொண்டேன். “அப்படியா, ரங்கரத்தினம் நலமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். “ஐ அம் ஸாரி, போன வருடம் காலமாகிவிட்டார்,” என்றேன். அதிர்ச்சியில் மௌனமானார். சிறிது கழித்து, “நமக்கு தெரிந்தவர் இறந்தார் என்ற செய்தி எப்பவுமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது,” என்றார்.

ஜூலை 2012 இல் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில், கிருத்திகா எழுதிய “Finger on the Lute” என்ற பாரதி வாழ்க்கை சரித்திரத்டை பற்றி பேச, நான்கு பிரபலங்களையும் என்னையும் எழுத்தாளர் நரசையா அழைத்தார். தீர்த்த கரையினிலே செண்பகத் தோப்பினிலே பேச ஒரு கண்னம்மாவும் என்னை அழைக்கவில்லை. பாரதி பற்றி பாரதி இல்லத்தில் பேசவேண்டுமா?? மார்பு துடித்தது. நூலை படிக்கும் போது கோபுலுவின் ஓவியங்கள் கண்ணையிழுத்தது.

குறித்த நாளில் பாரதி இல்லம் சென்றேன். அங்கு கோபுலுவும் இந்திரா பார்த்தசாரதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கோபுலுவிடம் அந்த புத்தகத்தின் பிரதியை நீட்டி பேராசிரியர் சுவாமிநாதன் கையொப்பம் வாங்கிக்கொண்டிருந்தார். நானும் என் பிரதியை நீட்ட, உங்க பேர் என்ன?” என்றார். “கோபு,” என்றேன். “அப்படியா! என் பேர் கூட கோபுலு,” என்றார். கள்ளமில்ல இதயம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. கோபுலுவை தெரியாதவர்கள் இதை நம்பமாட்டார்கள். தெரிந்தவர்கள் ரசிப்பார்கள்.

இ.பா.விடம் திரும்பினேன். புன்னகைத்தார். மீண்டும் ”ரங்கரத்தினம் மகன்” என்று அறிமுகம் செய்துகொண்டேன். “உனக்கென்று ஒரு தனி அடையாளம் உண்டு,” என்று மின்னல் வேகத்தில் சொன்னார். ஆங்கிலத்தில். அவர் சொன்னது - “You have an identity of your own.”

கோபுலுவின் சொல்லில் தேன் வந்து பாய்ந்தால் இபாவின் சொல்ல்லுக்கு என்ன உவமை சொல்வேன். மூச்சு திணரியது. மேன்மக்கள் மேன்மக்களே. தந்தை சொல்லும் அறிவுரையும், செல்ல கண்டிப்பும், ஒரு ஆழ்ந்த தத்துவமும் பாலும் தெளிதேனும் பாகுமாக கலந்து சங்கத்தமிழொத்த ஆங்கில வாக்கியம். ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி ஒரு தருணம் வரவேண்டும். அப்பாவுக்கு தான் ஞாபகமறதி. பீஷ்மருக்கு இல்லை.

கிருத்திகாவின் மருமகன் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்திய வேளாண்மைக்கு பசுமை புரட்சியை தந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவர் மனைவியும் கிருத்திகாவின் மகளுமான திருமதி மீனா சுவாமிநாதனே, இவ்விழாவை நடத்த நரசையாவை கேட்டிருந்தார். டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தில் படித்தகாலத்தில் அங்கே நார்மன் போர்லாக் பணிபுரிந்து வந்தார். அவரை போய் பார்த்து பேசவேண்டும் என்று பல முறை ஆசைப்பட்டாலும் பேச போக தைரியமெழவில்லை. என்ன சொல்வேன்? இப்பொழுது எம்.எஸ்.சுவாமிநாதனை பார்த்த பொழுதும் அதே தயக்கம்.

பாரதியின் வரிசு, பாடகர் ராஜ்குமார் பாரதி கோபுலுவோடும் நரசையாவோடும் மேடையேறினர். பாரதி திரைப்படம் எடுத்த ஞானராஜசேகரன் வந்திருந்தார். நண்பர் நாராயணசாமி படங்கள் எடுத்தார்.

பாரதி இல்லத்தில் - கோபுலு, நரசையா, ராஜ்குமார் பாரதி

2012- பாரதி இல்லம் - இ.பா. உடன்
நால்வரோடு ஐவராகி நானும் மேடையேரி பேசினேன். பேராசிரியர் சுவாமிநாதன் பாராட்டி சைகை செய்தார். இந்திரா பார்த்தசாரதி “வெளுத்து வாங்கிட்டீங்க”, என்றார். இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெற்றேன்.

“உன் அப்பாவும் நானும் கல்லூரி காலத்தில் ஒரு நாடகத்தில்,” நடித்தோம் என்றார். “கே கே பிள்ளை தெரியுமா? வரலாற்று ஆசிரியர். அவரே அந்த நாடகத்தை எழுதினார். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின், ஜெர்மானிய போர்குற்றவாளிகளை விசாரித்து நூரம்பெர்க் வழக்குகளை வெற்றிப்படைகள் நடத்தின. இதை “வென்றவர் நீதி” என்று பிள்ளை கண்டித்தார். நீதியே அல்ல, வெறும் வெற்று விசாரணை.

“நாடகம் போட்டோம். நான் அதில் public prosecutor – விசாரனை வழக்கறிஞர்.

“உங்க அப்பா அடால்ஃப் ஹிட்லராக நடித்தார்.”

நிசப்தம். அவர் குடும்பத்தார் முன் பாரதியை பற்றி பேசியாச்சு. அவர் வாழ்ந்தி வீட்டிலேயே. விக்கிரமாதித்தன் சபைபோல் ஒரு கூட்டம். இப்போ இது வேறு.

இதை அப்பா சொன்னதேயில்லை. கல்லூரி நாட்களை பத்தி அவர் பேசியதே இல்லை. அதுவும் இந்த வேடம்!! அடடா.

அப்பா கண்ணதாசனோடும் சிவாஜி கணேசனோடும் காமராஜரோடும் மேடையில் பேசியுள்ளார். ஜாவர் சீதாராமனுடன் சினிமா கதை பேசியுள்ளார்; அவருக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்தாராம். ஆனந்த விகடனில் கதை எழுதியுள்ளார். ஹிட்லர் மகிமை சொன்னதில்லையே.


2014 இல் ஜூன் மாதம் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினார் இ.பா. கூட்டம் கலைந்த பின் என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டேன். அவர் பதில்: “ஹிட்லர் மகனை எப்படி மறக்க முடியும்?” 

மற்ற கட்டுரைகள்

1 comment:

  1. நியூரம்பர்க் நீதிமன்றம், விசாரணைக்கு பல மாதங்கள் முன்பே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான், அவனை நியூரம்பர்கில் நிறுத்தியது நல்ல நாடகம் இல்லை - பரபரப்பு வேல்யூ தவிர. தற்கால ஜெனோசைட் நீதிமன்றங்களூக்கு முன்னோடி ந்யூரம்பர்க்.

    அதை வென்றவர் நீதி என புறந்தள்ளுவது மடமை.

    விஜயராகவன்

    ReplyDelete