மேரியம்மா |
2001-இல் கோடம்பாக்கம் டைரக்டர் காலனி அருகே ஜெயின் அடுக்குமாடியில் வசிக்கும் பொழுது, அங்கே பெருக்கும் வேலை பார்த்தவர் மேரியம்மா. என் தம்பி ஜெயராமன், அவரை வீட்டு வேலைக்குப் பேசி நியமித்தான். பிறகு சாமியார் மடம் அருகே கர்ணன் தெருவில் ஒரு வீட்டில் வாடகை இருந்த போதும், 2005இல் வடபழனிக்கு இடம் மாறிய பொழுதும், நடந்தும், பஸ்ஸில் வந்தும் மேரியம்மாவே வீட்டு வேலைகளில் தொடர்ந்து வருகிறார். “உன் பிரசன்ன வதனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,” என்று என் அப்பா அவரை மெச்சினார். “சமையல் தான் கொஞ்சம் செய்யத்தெரியவில்லை,” என்று பாராட்டிய வேகத்தில் தரையிறக்கினார். புகழுக்கு சிரித்துவிட்டு, விமரிசனத்தை கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டார் மேரியம்மா. ஒரு வாரம் தான் பரிசோதனையாக சமையல் செய்தார். ஆனால் வீட்டு வேலைகள் இன்றும் செய்து வருகிறார்.
சலிக்காத தொழிலாளி. அயராத உழைப்பு. வேறு சில வீடுகளிலும் ஒரு ஆஃபீசிலும் பகலில் வேலை செய்துவிட்டு, மாலையில் எங்கள் வீட்டுக்கு வந்து, கொஞ்சம் ஓய்வெடுத்து, டீ அருந்து, இந்திராம்மாவுடன் நாட்டு நடவடிக்ககைகளை கலந்தாலோசித்து, ஒரு மணிநேரம் இரண்டு மெகாத்தொடர் பார்த்துவிட்டு, பின் பாத்திரம் கழுவுவதும், பெருக்கி துடைப்பதும் தினசரி பழக்கம். திமுக ஆட்சியில் வீட்டுக்கு ஒரு டிவி திட்டம் வந்தக்காலம், இவர்கள் என் வீட்டில் பார்க்கும் டிவி பழுதானது. தன் வீட்டிலிருந்து டிவி கொண்டுவந்து எங்கள் வீட்டில் வைத்து இருவரும் பார்த்து மாலைப்பொழுதை தொடங்குவர். இரண்டு வருடம் திமுக அரசு கொடுத்த டிவி வாசலறையில் இருந்து, பல விருந்தினரை குழப்பியுள்ளது!
சந்தியாவந்தனம் |
மேரியம்மாவும் இந்திராம்மாவும் |
ஜனவரி
மாதம் பம்பாய் சென்ற மேரியம்மா, வரும்பொழுது இரண்டு டீசெட்டு வாங்கிவந்து எங்களுக்கு
பரிசளித்தார். ஒன்றல்ல, இரண்டு டீசெட். தலா ஆறு கோப்பை ஆறு தட்டு. என் தம்பி ஜெயராமன்
ஒரு நல்ல அன்பான முதலாளி. அவனுக்கு கிடைத்த சிறந்த அன்பளிப்பு. நெல்லுக்கு பாய்வது
புல்லுக்கும் பாய்வது போல் அவனுக்கு கிடைத்த அன்பளிப்பில் எனக்கும் பங்குண்டு.
நான்
தொழில்செய்த எங்கும் நான் முதலாளிகளுக்கு அன்பளிப்பு தந்ததில்லை. அப்படி யோசித்துக்கூட பார்த்ததில்லை. மேரியம்மாவின் அன்பளிப்பு மனதை நெகிழவைத்தது. எட்டு மாதமாக எழுத நினைத்தேன், சரியாக
சொற்களோ சிந்தனையோடமோ அமையவில்லை. சரி இதாவது எழுதுவோம் என்று இப்பதிவு.
நட்பும் தயையும் கொடையும் பிறவி குணம்.
No comments:
Post a Comment