Thursday 12 December 2019

நெடும் செழியர் கலைத் தென்றல்




நல்ல தமிழ் நின்னுடைத்து, என பாண்டியரை வாழ்த்தினார் புலவர். ஆனால் பாண்டியர்களின் புகழை நாம் பெரிதும் அறிவோமில்லை. ஏதோ நின்றசீர் நெடுமாரன், வரகுணபாண்டியன் என்று திருவிளையாடல் திரைப்படத்தை பார்த்து அங்குமிங்கும் கொஞ்சம் கொஞ்சம் பக்திவழி இலக்கியம் மட்டுமே நாம் அறிவோம். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் என்பது சிலருக்கு எம்ஜிஆர் தயவில் தெரியும். ஆனால் எத்தனை பாண்டிய மன்னர்களுக்கு சுந்தர பாண்டியன் என்று பெயர்? எத்தனை மன்னருக்கு வரகுண பாண்டியன் என்று பெயர்? சீதா சுயம்வரத்தில் ஒரு பாண்டியன் இருந்தானா? காளிதாசன் பாண்டியனை பற்றி ஏதோ சொன்னானா? மூன்று சங்கம், லெமூரியா, குமரிக்கண்டம், இதில் எங்கே வரலாற்று தடங்கள்? தஞ்சையில் பெரிய கோவிலை சுற்றி ஒரு கோட்டை உள்ளதே, அதை போல் மதுரையில் ஏன் கோட்டை இல்லை? திருமலை நாயக்கர மகாலை போன்று வரகுண பாண்டியன் மகால் இருக்கவேண்டாமா?

தமிழ்கர்கள் பல்லவர்களின் கலைப்பணியை ஆழந்து புரிந்துகொள்ள சிவகாமியின் சபதம் என்ற நாவலையும், சோழர்களின் கலைக்கும் வரலாற்றுக்கும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி ஏன் பாண்டியர்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை? வரலாற்று ஆசிரியர்கள் நூல்களில் பாண்டியரை பற்றி என்ன தகவல்கள் உள்ளன நாவலாசிரியர்கள் என்ன புனைந்துள்ளனர்?

மாமல்லபுரத்து ஐந்து ரதம், அர்சுணன் தபசு, குடைவரை மண்டபங்கள், சிறப்பான சிற்பங்கள் போன்று பாண்டிய நாட்டிலும் இருக்கவேண்டுமே? எங்குள்ளன? அவை ஏன் புகழ் பெறவில்லை?

திருமலாபுரம் குடைவரை கோவில்

உலகின் மீக நீண்ட வம்சாவளிகளாம் ஜப்பானிய அரச குலமும் பாண்டியர் குலமும். ஆனால், பாரத நாட்டிலேயே குப்தர் மௌரியர் முகலாயர் அறியப்படும் அளவுக்கு ஏன் பாண்டியர்கள் அறியப்படவில்லை?

சமணர்களை கழுவேற்றிய கதைகளே பரவலாக உள்ளன. ஆனால் ஞானசம்பந்தருக்கு பின் வந்த ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டினின் கல்வெட்டு சித்தன்னவாசல் என்னும் சமண தீர்த்தங்கரர் கோவிலில் உள்ளது. அஜந்தாவை ஒத்த மிகச்சிறந்த சித்தன்னவாசல் ஓவியம் என்ன கதையை சித்தரிக்கின்றது? பாண்டிய நாட்டில் பௌத்தர் ஆசிவகர் கதைகளோ தளங்களோ வரலாறோ ஏதேனும் உள்ளனவா?

பிராமி, வட்டெழுத்து, பிறகால தமிழ் என்று மூன்று வடிவங்களில் தமிழ் கல்வெட்டுக்களும், கிரந்த வடிவத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுக்களும் பாண்டிய நாட்டில் மலைகளிலும் கோவில்களிலும் செப்பேடுகளிலும் காணலாம். அவை கூறும் தகவல்கள் என்னென்ன?

இது போன்ற பல கேள்விகளுக்கும் ஒரு சில பதில்களுக்கும் பாண்டியரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் இலக்கியமும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. 

நான் பாண்டியர் குடைவரை கோவில்களை பற்றி பேசுவேன்.

அரங்கம் தமிழ் தமிழ் இணைய கல்விக்கழகம், 
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை.
நாட்கள் 14, 15 டிசம்பர் 2019