Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

Saturday, 7 January 2023

காசி மாந்தாதேஷ்வரர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் கோபுரத்திலுருந்து கங்கை கரை நோக்கி செல்லும் வழியில் இந்த பாரத மாதா சிலையும் அதன் பின் மாந்தாதேஷ்வரர் கோவிலும் உள்ளன. பாரத மாதா சிலை புதிது.

மாந்தாதேஷ்வரர் கோயில்



கோவில் முன் பாரத மாதா சிலை

திரேதா யுகத்தின் சிறந்த மன்னன், மகாபுருஷன் ராமன். சீதையை தேடி இலங்கை சென்ற ராமன் தமிழகக் கடற்கரையில் சிவனை பூசித்த இடம் ராமேஷ்வரம்.
கிருத யுகத்தின் மிகச் சிறந்த மன்னன், மகாபுருஷன் மாந்தாத்தன். இவன் கதை இப்பொழுது பரவலாக புழக்கமாக இல்லை. பரமார மன்னன் போஜன் இயற்றிய வடமொழி கவிதையில் கிருத, திரேத, துவாபர யுக மகாமன்னர்கள் வரிசையில் மாந்தாத்தன், ராமன், யுதிஷ்டிரனாகும்.
உஜ்ஜயினியை தலை நகராக கொண்ட மன்னன் மாந்தாத்தன், சிவனை பூஜிக்க கேதார்நாத் செல்ல, அவனிடம் சிவப்பெருமானே, நீ காசிக்கு சென்று என்னை வழிபடு என்று ஆணையிட, மாந்தாத்தன் காசிக்கு வந்து வழிப்பட்ட தலம் இந்த மாந்தாத்தேஷ்வரன் கோவில் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
பௌத்த மரபிலோ மாந்தாத்தன் தன் மிகச்சிறந்த புண்ணியத்தால் தேவலோகம் சென்றான் என்றும், அங்கே இந்திரன் அவனுக்கு தன் சிம்மாசனத்தில் பாதி இடத்தை கொடுத்தான் என்றும் கூறுகிறது. இதை விவரிக்கும் சிற்பம் ஒன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமராவதி சிற்பங்களுள் ஒன்று.
மாந்தாத்தன் கோயில் பஞ்சாயதன வடிவத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் காசி காரிடார் அமைப்பில் அது புதுப்பிக்க பட்டுள்ளது என்றும் வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோதி ரோஹில்லா அனுப்பிய வலைத்தளத்தின் தகவல்.

பொன்னியின் செல்வன் கதையில் நான்காம் அத்தியாயத்தில் கடம்பூர் மாளிகையில் ஆதித்தக்கரிகாலனின் மெய்கீர்த்தியை கட்டியங்காரன் கூறும்பொழுந்து ”மனு மாந்தாத்தா” என்று தொடங்குவான்.

தொடர்புடைய கட்டுரைகள்

அமராவதி சிற்பங்கள் - என் ஆங்கில உரை


Thursday, 12 December 2019

நெடும் செழியர் கலைத் தென்றல்




நல்ல தமிழ் நின்னுடைத்து, என பாண்டியரை வாழ்த்தினார் புலவர். ஆனால் பாண்டியர்களின் புகழை நாம் பெரிதும் அறிவோமில்லை. ஏதோ நின்றசீர் நெடுமாரன், வரகுணபாண்டியன் என்று திருவிளையாடல் திரைப்படத்தை பார்த்து அங்குமிங்கும் கொஞ்சம் கொஞ்சம் பக்திவழி இலக்கியம் மட்டுமே நாம் அறிவோம். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் என்பது சிலருக்கு எம்ஜிஆர் தயவில் தெரியும். ஆனால் எத்தனை பாண்டிய மன்னர்களுக்கு சுந்தர பாண்டியன் என்று பெயர்? எத்தனை மன்னருக்கு வரகுண பாண்டியன் என்று பெயர்? சீதா சுயம்வரத்தில் ஒரு பாண்டியன் இருந்தானா? காளிதாசன் பாண்டியனை பற்றி ஏதோ சொன்னானா? மூன்று சங்கம், லெமூரியா, குமரிக்கண்டம், இதில் எங்கே வரலாற்று தடங்கள்? தஞ்சையில் பெரிய கோவிலை சுற்றி ஒரு கோட்டை உள்ளதே, அதை போல் மதுரையில் ஏன் கோட்டை இல்லை? திருமலை நாயக்கர மகாலை போன்று வரகுண பாண்டியன் மகால் இருக்கவேண்டாமா?

தமிழ்கர்கள் பல்லவர்களின் கலைப்பணியை ஆழந்து புரிந்துகொள்ள சிவகாமியின் சபதம் என்ற நாவலையும், சோழர்களின் கலைக்கும் வரலாற்றுக்கும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி ஏன் பாண்டியர்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை? வரலாற்று ஆசிரியர்கள் நூல்களில் பாண்டியரை பற்றி என்ன தகவல்கள் உள்ளன நாவலாசிரியர்கள் என்ன புனைந்துள்ளனர்?

மாமல்லபுரத்து ஐந்து ரதம், அர்சுணன் தபசு, குடைவரை மண்டபங்கள், சிறப்பான சிற்பங்கள் போன்று பாண்டிய நாட்டிலும் இருக்கவேண்டுமே? எங்குள்ளன? அவை ஏன் புகழ் பெறவில்லை?

திருமலாபுரம் குடைவரை கோவில்

உலகின் மீக நீண்ட வம்சாவளிகளாம் ஜப்பானிய அரச குலமும் பாண்டியர் குலமும். ஆனால், பாரத நாட்டிலேயே குப்தர் மௌரியர் முகலாயர் அறியப்படும் அளவுக்கு ஏன் பாண்டியர்கள் அறியப்படவில்லை?

சமணர்களை கழுவேற்றிய கதைகளே பரவலாக உள்ளன. ஆனால் ஞானசம்பந்தருக்கு பின் வந்த ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டினின் கல்வெட்டு சித்தன்னவாசல் என்னும் சமண தீர்த்தங்கரர் கோவிலில் உள்ளது. அஜந்தாவை ஒத்த மிகச்சிறந்த சித்தன்னவாசல் ஓவியம் என்ன கதையை சித்தரிக்கின்றது? பாண்டிய நாட்டில் பௌத்தர் ஆசிவகர் கதைகளோ தளங்களோ வரலாறோ ஏதேனும் உள்ளனவா?

பிராமி, வட்டெழுத்து, பிறகால தமிழ் என்று மூன்று வடிவங்களில் தமிழ் கல்வெட்டுக்களும், கிரந்த வடிவத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுக்களும் பாண்டிய நாட்டில் மலைகளிலும் கோவில்களிலும் செப்பேடுகளிலும் காணலாம். அவை கூறும் தகவல்கள் என்னென்ன?

இது போன்ற பல கேள்விகளுக்கும் ஒரு சில பதில்களுக்கும் பாண்டியரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் இலக்கியமும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. 

நான் பாண்டியர் குடைவரை கோவில்களை பற்றி பேசுவேன்.

அரங்கம் தமிழ் தமிழ் இணைய கல்விக்கழகம், 
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை.
நாட்கள் 14, 15 டிசம்பர் 2019










Wednesday, 13 December 2017

காஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி

நகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றிய புலவர், சாளுக்கியர் தங்களது இயற்கை பகைவராக (பிரக்ருதி ஆமித்திரர்) கருதிய  பல்லவரின் தலைநகராம் காஞ்சியை, ஏன் "நகரங்களில் சிறந்தது" என்று புகழ்ந்தார்?

கல்வியில் கரையிலா காஞ்சி என்று அப்பர் பெருமான் திருநாவுக்கரசரும், தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஔவையும் வானுயர்த்திய தொல் நகரம் காஞ்சிபுரம்.
இன்று பட்டுபுடவைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக அறியப்படிகிறது. அங்குள்ள காமாட்சி, ஏகாம்பரர், வரதராசர், கந்தக்கோட்டம் கோயில்களுக்கும் அலை மோதும் அடியார் கூட்டங்களுல், பெருமாளை விட புனித பல்லியை நம்பி வருவோர் அதிகமோ என ஐயமூட்டும்.

அங்குள்ள பற்பல அற்புதமான ஈடில்லாத கோயில்களையும், அவற்றின் சிற்பங்களையும் ஓவியங்களையும் கல்வெட்டுகளையும் காஞ்சியில் வாழ்ந்த மாபெரும் புலவர்களையும் வெகு சிலரே அறிவர். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த எனக்கும், கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவல் படிக்கும் வரை காஞ்சியின் மகிமை தெரியாது.

ஆழ்வார்கள் பாடிய பதினாங்கு கோயில்களும், நாயன்மார்கள் பாடிய ஐந்து கோயில்களும், காஞ்சியில் உள்ளன. மதுரை, குடந்தை, உறையூர், தஞ்சை எந்த தொல்தமிழ் நகரிலும் இத்தனை பாடல் பெற்ற கோயில்கள் இல்லை.

ஏழாம் நூற்றாண்டு முதல் நம் காலம் வரை வெவ்வேறு காலங்களை பரிணமித்து பழமை தொனித்து கலை வளமை செழித்து கற்பனை திறமை பொலித்து கட்டிட கலைக்கு பாடமாய் திளைக்கும் ஆலயங்கள் வேறு எங்கும் இல்லை. எந்தையும் தாயும் முந்தை முனிவரும் புலவரும் மன்னரும் மக்களும் மகிழ்ந்து குலாவிய மாநகர்.
மிருத்யுஞ்சேஷ்வரர்

பிறவாஸ்தனம்

மாமல்லபுரத்துக்கு போட்டியாக சிற்பக்கலையில் திகழும் ஒரு ஊர் எனில் அதை காஞ்சி என்பேன். ஓவியக்கலையில் அஜந்தாவிற்கு சமகால ஓவியங்கள் மிளிர்வதும் காஞ்சியில். எங்கு பார்க்கினும் கண்ணை கவரும் மற்ற கலைகளால், சித்தன்னவாசலின் புகழ் அவற்றிற்கு கிட்டவில்லை. பிற்காலத்து நாயக்கர் ஓவியங்களையும் ரவிவர்மா ஓவியங்களையும் பழகி ஓவியச்செம்மை அறியா நமக்கு, தெய்வமெனில் எந்த சிற்பத்தையும் அழகென்று குணம் நாடாமல் பார்க்கும் பலரின் பார்வைக்கும் காஞ்சியின் பல்லவர் காலச் சிற்பங்கள் வியப்பூட்டும்.

மைக்கலாஞ்சலோவும் லியோர்ணாடோ டாவின்சியும் பிகாசோவும் தெரிந்த அளவுக்கும் அவர்களது படைப்புகளையும் அறிந்த நம்மக்களுள் பலருக்கு நம் மரபில் வந்த சிற்பியர் பெயரோ ஓவியர் புகழோ தெரியாதது வரலாற்று கொடுமை. அவர் சமைத்த கலைகளையாவது தெரிந்து கொள்வோமே. கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், ஜ்வரஹரேச்சுரர், மாதங்கேஷ்வரர், பிறவாஸ்தனம், மிருத்யுஞ்சேஷ்வரர் கோயில்களை பார்த்து மலைக்கவேண்டாமா?

உலகளந்த பெருமாள் கோவிலில் பரிமேலழகர் உரை எழுதினார் என்றும், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை கந்த கோட்டத்தில் அரங்கேற்றினார் என்றும், வேதாந்த தேசிகர் மூன்று மொழிகளில் எண்ணற்ற நூல்களை இயற்றியதும், பாரவிக்கும் காளிதாசனுக்கும் ஈடான தண்டின் கச்சியில் வாழ்ந்த பெருந்தகை என்பதும் தெரியுமா? சான்றோருடைத்து என்று இவர்களை தான் ஔவை பாடினளோ?

முகலாய வம்சமும், மௌரிய வம்சமும் ஓரளவு பள்ளி புத்தகத்தில் படித்த எனக்கு, பல்லவ வம்சத்தையே சிற்பமாக பரமேச்சுர விண்ணகரத்தில் காணமுடியும் என்பது இன்ப அதிர்ச்சி.
பல்லவ வம்சம்
சமணக்காஞ்சி எனும் திருப்பருத்திக்குன்றத்தில் பல்லவர் கால சமண கோயிலும் பிற்கால திரைலோக்யநாதர் கோயிலொன்றும் உள்ளன. இதில் சில அருகர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மண்டப விதானத்தில் காணலாம். அவற்றுள் நடுவே யதுகுல கண்ணனின் சில ஓவியங்களும் உண்டு. பார்த்தால் ஒன்றும் புரியாது.



அருகர் வாழ்க்கை வரலாறு
யதுகுல கண்ணனின் சில ஓவியங்கள்

இது போன்ற பல அற்புத தகவல்களை கச்சி மாநகரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் தறிகளும் தொழிலும் இலக்கியமும் கல்வியும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. நான் கைலாசநாதர் கோவிலை பற்றி பேசுவேன்.

இரண்டு நாளும் வந்து ரசித்து களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நடக்கும் அரங்கம் தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம், சாலை, கோட்டூர்புரம், சென்னை.

வலைத்தளம் - https://thtpechchukkachcheri.wordpress.com
முகநூல் தளம் – https://www.facebook.com/events/309154459591297/

16 டிசம்பர் 2017 – சனிக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காஞ்சியின் பெருமை
ஒரு ரசிகமணியின் பார்வை
டாக்டர் ஆர். நாகஸ்வாமி
காலை 10:30பரமேஸ்வர விண்ணகரம் அதுவே
வைகுந்த பெருமாள் கோயில்
டாக்டர் சித்ரா மாதவன்
காலை 11:30அருகன் அணிநிறத்து ஆலயம்
திருப்பருத்திக்குன்றம் – ஜைன காஞ்சி
திரு ஷ்யாம் ராமன்
மதியம் 2:00விண்ணகரம் மன்னுகின்ற பொன்னகரம்
விஷ்ணு காஞ்சி
டாக்டர் கே தயாநிதி

17 டிசம்பர் 2017 – ஞாயிற்றுக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காவிய தரிசனம்
தமிழ் இலக்கியத்தில் காஞ்சி
டாக்டர் சா பாலுசாமி
காலை 10:30கண்ணுதலோன் உறைகின்ற கச்சி மூதூர்
சைவ காஞ்சி
பேரா. மதுசூதனன் கலைச்செல்வன்
காலை 11:30அதிமானம் அதி அற்புதம்
கைலாசநாதர் கோயில்
ரங்கரத்னம் கோபு
மதியம் 1:30தறி நூலழகின் உரை
காஞ்சியின் நெசவுத் தொழில்
ஶ்ரீமதி மோஹன்




Thursday, 29 December 2016

சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ

சமீபத்தில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே.
----------------------------------------------------------------

சிவன் முறுவல்

கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். வளர்பிறை தேய்பிறையாய் பக்தி வரும் நம்மில் சிலர், திருவிழா, திருமணம், பிறந்தநாள், வேண்டுதல் என்று ஏதேதோ காரணத்திற்கு பழக்கரீதியாய் கோயில் செல்கிறோம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாத வகையறாக்களே சிறுவயதில் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது… கச்சேரி, நாட்டியம் என்று கலைகளை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். ஓரிருவர் சிற்பங்களை காண செல்வதுமுண்டு.
எந்த கோயிலுக்கு போகலாம்? முருக பக்தருக்கு அறுபடை வீடும், வைணவருக்கு ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும், சைவருக்கு நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களும் தமிழகத்தில் புகழ்பெற்றவை. ஒரே நாளில் பஞ்ச பூத தலங்களையோ, நவகிரக தலங்களையோ காணும் வழக்கம் சமீபத்தில் புகழ் பெற்றுள்ளன. கல்கி எழுதிய பொன்னியின் “சிவகாமியின் சபதம்” கதையை படித்த ஆர்வத்தில், வந்திய தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்ற கோயில்களையும் வரலாற்று தடங்களையும், பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை குழுவினர் ஆண்டுக்கொருமுறை வலம் வருகின்றனர். நான் சேர்ந்துள்ள தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் மகேந்திர வர்ம பல்லவன் பாதையில் அவன் எழுப்பிய வல்லம், சிங்காவரம், தளவானூர், மண்டகபட்டு குகை கோயில்களை சென்று களித்தோம். 

கும்பகோணம் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நண்பர் விசுவநாதன், நாகசாமி எழுதிய ஓவியப்பாவை நூலை ஏந்தி ஓவியங்களும் சிற்பங்களும் புகழ்வாய்த்த குந்தவை ஜீனாலயம், கீழ் பழுவூர், குறிச்சி, திருப்புலிவனம், கோனேரிராஜபுரம், வேப்பத்தூர், திருவலஞ்சுழி, திருப்பருத்திக்குன்றம் என்று பயணிக்கிறார்.

கல்லூரி நாட்களில் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கல்வெட்டு படிக்க ஆவலோடு சென்றேன். இருளில் கல்வெட்டு சரியாக தெரியவில்லை; தெரிந்தவற்றை படிக்க இயலவில்லை. 2000இல் “சிவகாமியின் சபதம்” படித்தபின் எனக்கு சிற்பத்தின் மேல் ஆர்வம் வந்தது. கேலண்டர் படங்களிலும், அமர் சித்திர கதா புத்தகங்களிலும், ஏபி நாகராஜன் திரைப்படங்களிலும் காணும்  தெய்வ வடிவங்களையே பார்த்து பழகியிருந்தேன். முனைவர் சித்ரா மாதவனின் வரலாற்று உரைகளையும் பல சிற்பங்களின் வடிவங்களை அவர் படம் காட்டி விளக்கிய பொருட்டே, பாரத சிற்ப கலையையும் அதன் நெடும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

தியானத்தில் அமர்ந்த சிவன் சடையில் நடுவே குற்றால அருவி போல் விழும் கங்கையை கேலண்டர் படங்களில் காண்கிறோம். ஆனால் பல்லவர் சோழர் கால சிற்பங்களில் அப்படியில்லை. ஈசன் தலையில் நிற்க விரும்பும் கங்கையின் அகங்தையை அடக்க, தன் சடையின் ஒருமுடியை மட்டும் விரலால் நீட்டுகிறான் பரமசிவன். அது மட்டுமா? நானிருக்க யாரிவள் என்று கங்கையை காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா? ஈசனுக்கு தேவியின் பாராமுகமா? இல்லை இது மலைமகளின் ஊடல்! உமையின் உடல் ஒருபுரமிருக்க, அவள் முகமோ கங்காதரனை காதலோடு நோக்குகிறது.

பார்க்கும் பார்வதியின் முக பாவம் ஒருபால். தாங்கும் தாணுவின் கோலமென்ன? பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து பூதேவிக்கு தாங்கமுடியாமல் விழுவதை தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கரையும் வாட்டுகிறதா அவனை? ஒன்றுமில்லை. மிக அலட்சியமாக, இடுப்பில் ஒரு கைவைத்து, இதழில் புன்சிறிப்பு மலர திருவிளையாட்டு குறும்பு கோலத்தில் காட்சி தருகிறான். பல்லவ காலத்து சிற்பிக்கும் சமகாலத்து ஓவியனுக்கும் உள்ள பெரும் இடைவெளியை இதில் காணலாம். ஆகாயகங்கையின் அதிவேகம் சிவனின் மகிமைக்கு ஒரு சுமையல்ல என்பதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக உணர்ந்து அந்த சிற்பி இதை வடித்திருக்கவேண்டும்.

கங்காதரர் - ஆடுதுறை

ஸ்தபதிகள் கோயில் கட்டுமுன், வேத மந்திரத்தை தியானம் செய்து, அந்த தியானத்தின் பலனாய் மனக்கண்ணில் கோவிலின் வடிவத்தை கண்டபின்னரே, அதை கட்டத் தொடங்குவராம். சிற்ப சாத்திரங்களின் விதிகளுக்கிணங்கவே ஸ்தபதிகள் கோயில்களை அமைத்தாலும், அவரவர் திறமையும் கற்பனையும் கலைபாங்கும் சிற்பத்திலும் கோவிலின் கட்டுமானத்திலும் மிளிர்ந்து தெரிகிறது.

ஒரு கோயிலில் ஒரு கோஷ்டத்திலுள்ள ஒரு சிற்பத்துக்கே இத்தனை பின்கதையிருப்பின், தஞ்சை தாராசுரம் போன்ற பெருங்கோயில்களில் என்னவெல்லாம் இருக்கும்? பயணத்தால் மட்டும் சிலவற்றை அறியமுடியாது. பல கோயில்களில் பல சிற்பங்கள் புரியாத புதிராகவே உள்ளன. நம்முன் பற்பல கோயில்களுக்கு சென்று, தங்கள் கலைக்கண்களால் கண்டு களித்து, நமக்கு தெரியாத விவரங்களை ஆர்வலர்கள் நூலில் எழுதியதை படித்தால் கல்லாதது கல்லளவு என்று புரியும்.

மாமல்லபுரத்து பஞ்ச பாண்டவ ரதங்களில் பெரியது தர்மராஜ ரதம். முதலில் சென்றபோது கீழ்தளத்திலுள்ள எட்டு சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். கல்வெட்டுகள் தெரிந்தன. தமிழ் எழுத்து போலிருந்தாலும் சில எழுத்துக்களுக்கு அங்குமிங்கும் வாலும் கொம்பும் முளைத்தது போல் தெரிந்தது. பல்லவருக்கு ஒருவேளை ஆர்வக்கோளாரா என்ற சந்தேகமே எழுந்தது. அது தமிழே இல்லையாம். பல்லவ கிரந்தலிபியில்  எழுதிய சமஸ்கிருதமாம். “நாமும் ஏக்கிசான் ரகுதாத்தா ஹிந்தி படித்தோமே? ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள்?” என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வடக்கிந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இது போன்ற அடிப்படை தகவல்களை பள்ளிக்கூட பாடங்களில் சொல்லவேண்டாமா? கல்வெட்டு ஆய்வோர்க்கு மட்டும் தெரியும் ரகசியமாக ஏன் இருக்கவேண்டும்?

மல்லை தர்மராஜ ரதம்
கிரந்த லிபியில் வடமொழி கல்வெட்டு
அது மட்டுமா! மலையா, கம்போடியா, பர்மா, சுமத்திரா, சாவகம், சியாமதேசம் என்னும் தாய்லாண்டு – ஏறக்குறைய தொண்ணூறு தென்கிழக்கு ஆசிய மொழிகளின் எழுத்துகள் கிரந்தத்திலிருந்து பிறந்தவை என்பது மொழிவல்லுனர் கருத்து. ஐரோப்பிய கும்பெனியார் ஆட்சி வந்தபின் அம்மொழிகள் பலவும் லத்தீன லிபியின் வடிவை தழுவிக்கொண்டன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மல்லை கலை உலாவின் அறிமுக உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் இதை சொன்னபொழுது, எனக்கு மெய்சிலிர்த்து. சீவக சிந்தாமணியை முதலில் படிக்கும்போது உ.வே.சாமிநாத ஐயருக்கு இப்படி அல்லவா சிலிர்த்திருக்கும்?

மாமல்லபுரத்தை பற்றி முதலில் 1788இல் எழுதிய வில்லியம் சேம்பர்ஸ், இது சியாமதேச லிபி, ஒரு காலத்தில் தமிழகத்தை சியாம மன்னர்கள் ஆண்டிருக்கவேண்டும் என்றே கருதினார். அக்காலத்தில் அங்கே வாழ்ந்த பிராமணர்களுக்கும் பல்லவர் காலத்து கிரந்த லிபி தெரிந்திருக்கவில்லை. பல்லவர் என்ற மன்னர் குலத்தையே மக்கள் மறந்திருந்தினர். அந்த வரலாறை மீட்டெடுத்தது ஒரு பெரும் கதை. இந்த பின்புலத்தை அறிந்தபின் சென்று பார்த்தால், நம் சிற்பக்கலையின் மகிமையே தனி. இலக்கியத்திலும் இசையிலும் அரசியலிலும் நமக்குள்ள ஆர்வமோ ஆழமோ, சிற்ப ஓவிய கலைகளில் இல்லை. இணையம் முகநூல் டிஜிட்டல் கேமராக்களால் இது மாறிவருகிறது.

மல்லை தர்மராஜ ரதத்தை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேலே இரண்டு தளங்கள் இருப்பது தெரியும். அற்புதமான பல சிற்பங்கள் அங்கே உள்ளன. வீணாதர சிவன் அதில் ஒருவர். அவர் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. நமக்கு பழகிய வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் உருவாக்கியதாம். சோழர் காலத்து தமிழகத்தில் மட்டுமல்ல, ஒரிசா தலைநகர் புவநேஷ்வரில் முக்தேஷ்வர் கோவிலில் வீணை வாசிக்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை கண்டேன். அவள் கையிலும் அதே மெல்லிய வீணை. 

மாமல்லபுரம் தர்மராஜ ரதம்
வீணாதர சிவன்


புவனேசுவரம் - முக்தேசுவரர் கோயில்
வீணை வாதினி
ஆனால் வீணாதர கோலத்தில் என் மனதை கொள்ளை கொண்டது கும்பகோணத்தில் நாகேஷ்வரன் கோவில் வீணாதர தட்சிணாமூர்த்திதான்.

நாகசாமியின் ஓவியப்பாவை நூலில் வலம்புரம் என்னும் ஊரை அப்பர் பாடிய தேவாரத்தை எடுத்துக்காட்டுவார்.

“கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் 
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
 
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே”

என்பது அப்பரின் தேவாரம். “கொவ்வை செவ்வாயில் குமிண்சிறிப்பு” என்ற வர்ணனை பலருக்கும் தெரியும். “சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ” என்ற இந்த வர்ணனை அதையே செய்தது. கும்பகோணம் நாகேஷரன் கோவிலுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி இதழ்களிலுள்ள் சிறுமுறுவல் என் சிந்தை  வௌவியது.

தட்சிணாமூர்த்தி - குடந்தை கீழ்க்கோட்டம்
சிவன் முறுவல்

சிவன் முறுவல் - வலம் அக்டோபர் 2016 இதழ் 
கல்லிலே ஆடவல்லான்

Saturday, 3 October 2015

கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் படிக்கும் போது அந்த கதையும் வரலாறும் மட்டும் என்னை தாக்கவில்லை. காதலும் வீரமும் சோகமும் உவகையும் சிரிப்பும் வியப்பும் நம் உள்ளத்தில் மூளுவது விசித்திரமல்ல. ஒரு சிறந்த எழுத்தாளன், அதைவிட சிறந்த கதைசொல்லி, இதை எல்லாம் செய்வான்.

கல்கி சிறந்த கதைசொல்லி. 

ஆனால் அதையும் தாண்டி, பல்லவர் காலத்தை கண்முன்னே அவர் கொண்டுவந்த ஆளுமை அற்புதம். குதிரை வேண்டும் என்று ஆயனர் கேட்க, மகேந்திரனின் சங்கோஜமும், இங்கும் அங்கும் தூதுவர் மூலம் தகவல் செல்ல எடுத்து கொண்ட கால அவகாசமும், வியப்பூட்டின. நாம் வாழும் நவீன யுகத்தில் தொலைப்பேசியையும் ரயில்வண்டிகளையும் கார்களையும் விமானங்களையும், சாதாரணமாக கருதும்போது, நாமெல்லாம் மன்னர்களை மிஞ்சிய செல்வந்தர்கள், என்றே எனக்கு வலியுறுத்தியது. வெள்ளத்தை தாண்ட முடியாமல் சாளுக்கிய படையும் நின்றது என்று அறிந்தபோது, பாலங்களின் அருமை புரிந்தது. 

பாலங்களை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. நாடுகளின் எல்லைகளாக பெரிய நதிகளே பல நூற்றாண்டுகள் திகழ்ந்தன. அவற்றை மிஞ்சி பேரரசுகள் அமைந்தது அதிசயம். ஆங்கிலேயர் ஆட்சியில் பாலங்களால் உள்நாட்டு வணிகம் செழித்ததும், பெரும் வரம். மாபெரும் கோயில்களை கட்டிய மன்னர்களால், ஸ்தபதிகளால் பாலங்கள் செய்ய முடியாதது பெரிய புதிர். இதை ஆராயும் கட்டுரையோ நூலோ ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அஜந்தா ஓவியம் பற்றிய தகவல் தான். ஆயிரம் ஆண்டுகளாகியும் மங்காத சிலையும், சாயாத கோயிலும், தேயாத இலக்கியமும், மாறாத சில மரபுகளும் அதுவரை யதார்த்தமாகவே தெரிந்தன. ஆனால் ஆயிரம் ஆண்டு மங்காத ஓவியம், ஆழமாகவும் அகலமாகவும் சிந்தனையை கிளறியது. பாரதநாட்டை, பக்திக்கும் இலக்கியத்திற்கும் உணவிற்கும் மட்டுமே சிறந்த நாடாக நான் அன்று வரை கருதியிருந்தேன். கலைகளிலும் விஞ்ஞானத்திலும் நாம் சாதனைகள் செய்தோம் என்று எனக்கு அன்று வரை தோன்றவில்லை. ஸ்தபதி, சிற்பி என்று சொற்கள் வழக்கில் இருப்பினும், அவர்களது கல்வியும் ஆர்வமும் மரபும் முக்கியத்துவமும் ஏனோ அறிவியல் ஆர்வமுள்ள பலருக்கும் தெரிவதில்லை. 

நாட்டில் பஞ்சம் வரும்போது அதை தீர்க்க ஏதோ கோயில் கட்டினார் என்ற வரட்டு மூடநம்பிக்கை, நம் நாட்டில் மிக பரவலாக உள்ளது. மூலிகைகளை மருந்தாக ஆய்ந்து உணர்ந்து கற்று நூல்செய்த சரகர் சுஷ்ருதர், ஜோதிட கணித நூல்களை இயற்றிய ஆரியபடர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியர் ஆகியோரை அறிவியல் ஞானிகளாக கருதும் பாரத மக்கள், சிற்பிகளை, ஸ்தபதிகளை, விவசாயிகளை, அறிவியல் பயில்வோராக பார்ப்பதில்லை. அறிவுசார் நூல்களை படிப்பவர் சிலரே, ஓரளவேனும் இவர்களின் மரபுகளையும் திறமையும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, ஆங்கில கல்வி மரபில் வந்த பலரும் இதை உணர்வதில்லை.

கல்கி என் கண்களை திறந்துவைத்தார்.

தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில், கவிதையில் சுப்பிரமணிய பாரதி செய்த புரட்சியை விட, கதை உலகில் கல்கி செய்த புரட்சி அகலமானது. சரித்திர நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர் படைக்கு முன்னோடி, கல்கி.

முன்னோடிகள்

பிரெஞ்சு மொழியில் ஜூல்ஸ் வெர்ண் நிலவுக்கு செல்லும் பயணத்தையும், கடல்மூழ்கி கப்பலையும், பலூனில் ஆப்பிரிக்காவை கடக்கும் சாகசத்தையும் நாவல்களாக எழுதி அறிவியல் கதை யுகத்தை தொடங்கி வைத்தார். ஆர்த்தர் கிளார்க், ஐசாக் அசிமோவ், ரே பிராட்பரி, ஸ்டானிஸ்லாவ் லெம், லேரி நிவன், உர்சுளா லிகுயின் என்று பலரும் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த கதைகள் எழுதினார்கள். ஜூல்ஸ் வெர்ணின் ஆழ்ந்த அறிவியல் ஞானம் அவர் கதைகளில் புலப்படும். நான் படித்ததில், ஆர்த்தர் கிளார்க், லேரி நிவன் மட்டுமே அத்தனை ஆழமாக அறிவியலை சார்ந்து நாவல்களை எழுதினார்கள். மற்றவர் கதைகளில் சமூகவியல், அரசியல், காதல், மோதல் என்றே முக்கால்வாசி போகும். இருபதாம் நூற்றாண்டில் நாவல் சிறுகதை தவிற காமிக்ஸ் என்ற சித்திரகதைகளும் (குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஃப்லாஷ் கார்டன் வகையறா), ஸைஃபை சினிமாக்களும் அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி, கற்பனை செய்து அற்புத காவியங்களை தந்தன.

ஆர்த்தர் கோனன் டோயில் ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாயகனை படைத்து துப்பறியும் கதைகளின் யுகத்தை தொடங்கி வைத்தார்; அகாத்தா க்ரிஸ்டி, ஜான் டிக்சன் கார், பெர்ரி மேசன், எல்லரி குயீன், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று துப்பறியும் மர்மகதை எழுத்தாளர்ப்படை பின்தொடர்ந்தது.

யாம்பெற்ற துன்பம் பெருக இவ்வுலகம் என்றே, மெகாத்தொடருக்கு முன்னோடியாய் டால்ஸ்டாய், தோஸ்தோயெவ்ஸ்கி போன்ற ருஷிய எழுத்தாளர்கள், அம்மிக்கல்லளவு நூல்களை எழுதி, புலம்பி எழுதுக கருமம், என்ற நீதியை நிறுவினார்கள்.

கல்கிக்கு முன்னரே வரலாற்று கதைகள் தமிழில் இருந்தாலும் அவரை தொடர்ந்து விக்ரமன், சாண்டில்யன், ஜகச்சிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், பாலகுமாரன் என்று வரிசை நீள்கிறது. மற்றவர் கதைகளை நான் பரவலாக படித்ததில்லை. கல்கி முன்னோடி என்பதில் சந்தேகமில்லை; சமூக நாவலிலோ, பயண கட்டுரையிலோ, சிறுகதையிலோ அவருக்கு இந்த அந்தஸ்த்து இல்லை. சரித்திர நாவலில், அவரே மகேந்திர பல்லவர்.

கலை ஆர்வம்

நாவலை எழுத மட்டும் அவர் தூண்டவில்லை. சிற்பங்களின் மேலும், பக்தி இலக்கியத்தின் மேலும், மன்னர்களின் கலை ஆர்வத்தின் மேலும், ஒரு புதிய ஆர்வத்தை பல்லாயிரக்கணக்கான தமிழரிடம் அவர் தூண்டினார். பாடல் பெற்ற தலமென்றும், தீர்த்த யாத்திரைக்கும் மொட்டையடிக்கவும் பயணித்த தமிழர்களை, பல்லவர் சிற்பம் சோழர் சிற்பம் என்று தேடிச்செல்லவைத்தார்.

ஹிண்டு நாளிதழில் பலவருடங்களுக்கு முன், எழுத்தாளர் கங்காதர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டை புரிந்துகொள்ள சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதை நான் ஆமோதிக்கிறேன்.

மலைக்கணவாயில் பரஞ்சோதி குதிரையில் செல்ல, அவனை சூழ்ந்த சிவந்த மலர்களும் பாறைகளும் அவனது மனதில் அனலாய் கொதித்த ஆர்வமும் அச்சமும் உற்சாகமும் நரம்புகளை புடைத்துக்கொண்டு மேனியெல்லாம் மின்னலாய் சிலிர்க்க, அவ்வப்போது பின் தொடரும் வேறொரு குதிரை சத்தம் கேட்பதும், இது வரை போகாத பாதையில் பரஞ்சோதி மட்டுமல்ல, நாமும் போகிறோம் என்ற ஈடில்லா உணர்ச்சி நம்மை கவ்வும். ஓவியர் மணியம் செல்வத்தை அவர் இல்லத்தில் சந்தித்தப்போது இதே உணர்வை அவர் என்னிடம் பகிர்ந்தார். அவர் தந்தை மணியம் வரைந்த வாதாபி ஓவியங்கள் சுவரிலிருந்து சிரித்தன. கல்கி ஆவியாய் என் காதில் வந்து, அப்பனே, மந்தாகினி மாதிரி மௌனமாய் இருக்காதே, வந்தியத்தேவனை போல் ஏதாவது உளரித்தள்ளு, என்றார். பல்லை இளித்து தலையசைத்தேன்.

பரஞ்சோதியோடு மனம் அஜந்தாவிற்கும் பயணம் சென்றது. அருகிலுள்ள சித்தன்னவாசலை விட தொலைவிலுள்ள அஜந்தாவே வா வா என்று அழைத்தது. அங்கே தீட்டப்பட்ட ஓவியத்தை விட, மங்காத வண்ணத்தின் ரகசியத்தின் மேல் ஆர்வம் பொங்கியது. நான் சிவகாமியின் சபதம் படித்தது 2000இல். அஜந்தாவுக்கு 2006 இல் சென்றேன். ஒரு ஓவியமும் புரியவில்லை. அங்குள்ள ஆட்கள் சொல்வது தவறான கதையெனவே உறுத்தியது. காட்சிகள் ஏதும் புரியவில்லை. ஓவியங்களின் தேய்ந்த நிலை கண்டு மனம் கசந்தது. முந்திய நாள் எல்லோராவை பார்த்ததில் மிரட்சியும் பிரமிப்பும் நிலைத்ததால், கொஞ்சம் ஆறுதல். எல்லோரா சிற்பங்கள் சொல்லும் கதைகள் புரிந்ததே? அஜந்தா ஏன் அடையாளமே தெரியவில்லை? குழப்பமான அனுபவம்.

அஜந்தாவை பற்றி நல்ல நூலிருக்கும், அதை படித்தால் விவரம் கிடைக்கும் என்று பல வருடங்களுக்கு என் மந்த புத்திக்கு தோன்றவில்லை. அங்குள்ள ஓவியங்கள் தமிழ்நாட்டு கோயிலுள்ள ஓவியங்களை விட பல மடங்கு சிறப்பானவை என்று மட்டும் புரிந்தது.

ஒரு கோவிலை தவிர்த்து : காஞ்சி கைலாசநாதர் கோவில்.  
(தொடரும்)

தொடர்புடைய கட்டுரைகள்

2. கல்லிலே ஆடவல்லான்
3. ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்
4. Arthur C Clarke's Magic Postulate

Saturday, 26 September 2015

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்


கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். அளவோடு பக்தி உள்ளவரும், திருவிழாக்களை காணவும், உற்றார் உறவினர் திருமணம், பிறந்தநாள், வேண்டுதல், மொட்டை, என்று ஏதோ காரணத்திற்கு, சமூக வழக்கத்தில் கோயில் செல்கிறோம். கச்சேரி, நாட்டியம், என்று கலை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாதம் வகையறாக்கள் தான் சிறுவயதில் அதிகம் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது

சிறு வயது முதல் நானும் இப்படிதான் கோயிலுக்கு போய் பழக்கப்பட்டேன். சென்னையில் நான் வளர்ந்த மயிலாப்பூரில், அடிக்கடி சென்றது ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலுக்கு தான். அந்த கோயில் உள்ளதோ டி.என்.எஸ்.சி வங்கி வளாகம், என் தந்தை அங்கே கணக்கு வைத்திருந்தார். கவிஞர் வாலியின் மகிமையில் சினிமா பாடல் பெற்ற தலமாகிவிட்டது. அங்கே வடைமாலை நாட்கள் கொண்டாட்டம். அதற்கடுத்து நான் வசித்த மயிலை சிஐடி காலனியிலுள்ள விநாயாகர் கோயில். நேரமிருந்தால் ஆழ்வார் பாடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அங்கே கல் யானை சவாரியும். அல்லது ஞானசம்பந்தர் பாடிய கபலீசுவரர் கோயில். அறுபத்திமூவர் விழாவையும் தெப்பத்தையும் சில முறை ரசித்ததுண்டு. சுமார் பத்து வயதில் வைதீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றேன்.

கோயிலின் பிரம்மாண்டம், தொன்மை, வயல்சூழ்ந்த திணை, எல்லாம் அங்கே தான் முதலில் பாடம். கல்லூரி நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றது கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையிலும் பால்கோவா ஈர்ப்பிலும். அறிவியல் ஆர்வத்திலும் வாலிப கர்வத்திலும், கோயில்களின் புனிதமோ கலையோ தொன்மையோ பெரிதாக என்னை கவரவில்லை. அவை இறந்த காலத்தின் சின்னங்களாகவே தெரிந்தன. 

கம்ப்யூட்டரையும் ராக்கெட்டையும் ரோபோட்டையும் விண்வெளியையும் ஏங்கி ஆவலுடன் பார்த்த என் கண்களுக்கு கோயில்கள் சுவாரசியமாய் இருக்கவில்லை. சக மாணவர்கள் பெண்களை பார்க்க மட்டும் கோயில்கள் செல்வது அவற்றை கொஞ்சம் மட்டம் தட்டின. கோயிலுக்கு வந்த பெண்களும் என் கண்களை கவரவில்லை. 

கோயில் மட்டுமல்ல, கலையும் மதிப்பிலா பண்டம் ஆனது. சினிமா இசை மேல் ஒரு சின்ன மோகம் வந்தது, வேகமாய் பெரும் மோகமாக, ஆர்வமாக மாரியது. இளையராஜா மானசீக குருவானார். நண்பன், சக அரைவாசி சிவராம், இசை வழிகாட்டி ஆனான். அவனுடைய ரசனை என் ரசனை ஆனது. தமிழ் புத்தகங்களை நான் படித்ததில்லை, பள்ளிப்பாடமும், குமுதம் ஆனந்த விகடன் துணுக்குகளும், ரெட்டைவால் ரங்குடுவும், சிரிப்பு திருடன் சிங்காரவேலனும் என் தமிழ் இலக்கிய உலகம். ஆங்கிலத்தில் பல நாவல்களை படித்ததுண்டு. ஆங்கில படங்களை தான் ரசித்தேன்; கல்லூரியில் பார்க்கத்தொடங்கிய சினிமா எதுவும் ஈர்க்கவில்லை.

அமெரிக்கா சென்ற பின் குமுதம் வகையறா சுவரொட்டி வகையறா தமிழ் இலக்கியமும் போனது. மேல் படிப்பு முடிந்து, கணினி தொழிலில் ஐந்தாண்டுகள் சென்றன. இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன். சியாட்டிலிலிருந்து கலிஃபோர்ணியாவுக்கு இடம் மாற நினைத்து, விசா வாங்க மீண்டும் சென்னை வந்த காலம், பொன்னியின் செல்வன் புகழை சிலர் பாடியதால் ஒரு புத்தக கடையில் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வனை வாங்கினேன். கலிஃபோர்ணியாவில் வாசிக்க எடுத்த பொழுது தான் உணர்ந்தேன். வாங்கியது சிவகாமியின் சபதம்.

பத்து பக்கத்தில் பரஞ்சோதி என்னை கவர்ந்தான். முப்பது பக்கத்தில் நரசிம்ம வர்மன் நண்பனானான். சிவகாமி கண் சிமிட்டினாள். மலைக்கணவாயில் பரஞ்சோதி செல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது. யானோ வாசகன்? யானே க்ஷத்திரியன்! புலிகேசி படையுடன் காஞ்சிக்கு வருமுன் மகேந்திர வர்ம பல்லவன், என்னை கைது செய்தான். அடடா! சாகசத்தில் கபில் தேவையும், கலைத்திறனில் இளையராஜாவையும், வீரத்தில் அலிஸ்டேர் மாக்லீன் கதை நாயகர்களையும், நவரசத்தில் லியோணார்டோ டாவின்சியையும், சிந்தனைத்தெளிவில் காந்தியையும் சர்ச்சிலையும் மிஞ்சி, நம் காஞ்சிபுரத்தில் விசித்திரசித்தன் ஒருவன் இருந்தான். இவனை இதுநாள் வரை அறியாமல் போனோமே என்று உள்ளம் நொந்தது.


கபட நாடக கண்ணனை போல் கல்கி சிரித்தார்.

(மனம் வணங்கும் போது தொடரும்...)

Monday, 26 May 2014

கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்

ஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹமிஹிரரால் கட்டப்பட்டது என்றார். வராஹமிகிரர் பஞ்சசித்தாந்திகா, ப்ருஹத் ஸம்ஹித, ப்ருஹத் ஜாதக ஆகிய ஜோதிட நூல்களை எழுதியவர். விண்ணியல் விஞ்ஞானி என்றும், ஜோசிய நூலாசிரியர் என்றும் அறியப்பட்டவர். ஆனால் கோயில்களை கட்டும்பணி, விஷ்வகர்மா சமூகத்தை சார்ந்த ஸ்தபதிகளுக்கே உரியது. அவ்வப்பொழுது, இந்த கோயில் நக்ஷத்திர அமைப்பு படியோ ராசிகளை குறிக்கும் வழியிலோ கட்டப்பட்டது என்று நான் கேள்விபட்டதுண்டு. இன்றுவரை சாட்சி கண்டதில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், குடுமியான் மலையில், அம்மன் சந்நிதி அருகே,12 ராசிகளும் கூறையில் செதுக்கப்பட்ட சிற்பம் உள்ளது. கும்பம் மீனம் துலாம் சிம்மம் என்று 12 சதுரங்களில் ராசிகளும், அதற்கு வெளியே, விநாயகர் உட்பட, பலவித சிறபங்கள் 20 சதுரங்களிலும், அதற்கும் வெளியே 28 தாமரைகளும் செதுக்கப்பட்டுள்ளன.  புதுக்கோட்டை நகரில் பிரஹதாம்பாள் (அரைக்காசு அம்மன் என்றால்தான் பலருக்கு தெரியும்) கோவிலில், வண்ணங்கள் பூசிய இவ்வகை சிற்பத்தை காணலாம்.

Kudumiyaan Malai Zodiac குடுமியான் மலை - ராசிகளின் சிற்பம்


Kumbakonam SarngapaaNi Zodiac  குடந்தை சாரங்கபாணி - ராசிகளின் சிற்பம்
கும்பகோணத்தில் சாரங்கபாணி (ஷார்ங்கபாணி) கோவிலின் மண்டபத்து கூறையிலும் சக்ரபாணி கோவிலிலும் இதை போன்ற ராசிகளுள்ள சிற்பங்களை பார்த்தேன். அதேபோல் திருவரங்கம் கோவிலில் ஆர்யபடாள் வாசல் என்ற கதவின் அடித்தளத்தில், இது போன்ற ராசி சின்னங்களை காணலாம்.

Pudukottai Brhadambal Zodiac புதுக்கோட்டை பிரஹதாம்பாள் - ராசிகளின் சிற்பம்

இது போன்ற ராசி சிற்பங்களுக்கும், கோவில்கள் கட்டும் பணிக்கும் ஏதும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. லகதர் எழுதிய ’அர்ச்ச ஜ்யோதிஷம்’, ‘யாஜுஷ் ஜ்யோதிஷம்’ என்ற வேதாங்க நூல்களில் ராசிகளை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. வேதகாலத்தில் இந்திய ஜோதிடத்தில் – விண்ணியலில் – ராசிகளை பயன்படுத்தப்படவில்லை.

इत्येवं मासवर्षाणां मुहुर्तोदयपर्वाणाम् ।
दिनर्त्वयनमासाङ्गं व्याख्यानां लगधोऽब्रवीत् ॥
இத்யேவம் மாஸவர்ஷாணாம் முஹூர்தோதயபர்வாணாம் ।
தினர்த்வயனமாஸாங்கம் வ்யாக்யானம் லகதோப்ரவீத் ॥

என்று யாஜுஷ் ஜ்யோதிஷத்தில் ஒரு ஸ்லோகம் கூறுகிறது.

பொருள் : “மாதம் (மாஸ), வருடம் (வர்ஷ), முஹூர்த்தம், உதயம், பருவம், தினம் (சூரிய தினம்), ருது (ஆறு காலங்கள் – உ.ம். வேனில், கார்), அயனம், ஆகியவற்றை அங்கங்களாக கொண்ட லகதர் கூறியுள்ளார்”

சற்றே வித்தியாசமாக, ஆவுடையார் கோவிலில், மாணிக்கவாசகர் சந்நிதியின் நுழைவாயில் உத்திரத்தில், 28 நக்ஷத்திரங்கள் சிற்பங்களாக குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை எனக்கு முதலில் காட்டியவர், புகைப்பட நிபுணர் அஷோக் கிருஷ்ணஸ்வாமி. இந்திய விண்ணியலில் 27 நக்ஷத்திரங்கள் முக்கியம் பெற்றவை – இவை சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் உள்ளவை. “Addresses of the Moon,” (சந்திரனின் விலாசங்கள்) என்று அஷோக் இவற்றை அருமையாக வர்ணித்தார். ரிக் வேத காலத்தில், ஒரு சில காலம் 28 நக்ஷத்திரங்களை சந்திரனின் விலாசங்களாக கருதினர். பின்னர் 28ஆம் நக்ஷத்திரம் – தக்ஷன், அபிஜித் என்று அதற்கு இரு பெயர்கள் உண்டு – கைவிடப்பட்டது. 27 நக்ஷத்திரங்களில், கிருத்திகையை தவிற, மற்றவை தனி நக்ஷத்திரங்களே. கிருத்திகை ஆறு நக்ஷத்திரங்களின் கூட்டம். ஆனால் இச்சிற்பத்திலோ பலவும் , நக்ஷத்திர கூட்டங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமும் தெரியவில்லை.


Aavudaiyaar Temple Zodiac - ஆவுடையார் கோவில் ராசிகளின் சிற்பம்

ஆரியபடரின் காலத்திலோ அதற்கு சற்று முன்னரோ, ராசிகள் இந்திய விண்ணியலில் நுழைந்து விட்டன. பாபிலோனிய நாகரிகத்தினர் ராசிகளை விண்ணியலில் முதலில் கையாண்டனர். இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் ராசியை கடன் வாங்கியிருக்கவேண்டும். கிரேக்கர்வழியாகவோ, பாரசீகர் வழியாகவோ, நேரடியாக பாபிலோனியரிடமிருந்தோ இந்தியர்கள் கடன் வாங்கியுள்ளனர்.

சூரியன் ஒரு மாதம் இருக்கும் நக்ஷத்திர குவியலுக்கு (ராஷி राशी) ராசியென்ற பெயர். 360 டிகிரி வான வட்டத்தை 12 ராசியாக வகுத்தால், ஒரு ராசி 30 டிகிரி அளவாகும்.

ஆரியபடரின் கணித கலைச்சொறகள்.

राशी ராஷீ = 30 டிகிரி = 30 degrees
अंशः அம்ஷ: = டிகிரி = degree
कला கலா = மினிட் = minute
नाडी நாடீ = செகண்ட் = second
विनाडी விநாடீ = 1/60 நாடீ

12 ராசி = 1 வட்டம் = 360 டிகிரி

Base 10 is decimal. Base 2 binary. Base 60 is sexagesimal. Base 20 is vigesimal.
10 அடிப்படை (base 10) எண் முறைக்கு, டெசிமல் என்று பெயர். 
2 அடிப்படை எண் முறை, பைனரி. 
60 அடிப்படை எண் முறை, செக்ஸாகெசிமல். 
20 அடிப்படை, வைகெசிமல்.

பாபிலோனியரையும் அவருடைய முன்னோர்களான சுமேரியரையும் தவிற எந்த நாகரிகமும் இந்த 60 அடிப்படை எண்முறையை பயன்படுத்தியதில்லை. அதிலிருந்தே 60 டிகிரி, மினிட், செகண்ட், 360 டிகிரி வட்ட அளவு எல்லாம் தோன்றியவை. மயன், அஸ்டெக் சமுதாயங்களும், கிரேக்க கலாச்சாரம் பரவும் முன் ஐரோப்பாவின் சிலச்சமுதாயங்களும் 20 அடிப்படை வைகெசிமல் எண்முறையை பயன்படுத்தின.

இன்று உலகில் யாவரும் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் டெசிமல் முறையை பயன்படுத்துகிறோம். கணினியில் மட்டும் பைனரி. வட்ட அளவிலும் நேர அளவிலும் மட்டும் 60 அடிப்படை பாபிலோனிய செக்ஸாகெசிமல் தொடர்கிறது.

ஆரியபடரும் அவருக்கு பின்வந்த பிரம்மகுப்தர், முதலாம் பாஸ்கரர், மஹாவீரர், லீலாவதி எழுதிய பாஸ்கராச்சாரியார், கேரளத்தில் பரமேசுவரர், நீலகண்ட சோமசத்வன், ஜ்யேஷ்டதேவர் ஆகிய விண்ணியல் மேதைகளும் விண்ணியல் கணிதத்தை மட்டுமே கையாண்டனர். வராஹமிகிரர் விதிவிலக்காக, ராசி பலன், ஜாதகம், ஹோர சாத்திரம் போன்றவற்றை பற்றி விரிவாக எழுதினார். தங்களை பாதிக்கும் விஷயமாக மக்கள் நம்பும் இவ்வித ஜோதிடம், தீயைப்போல் சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் பரவியது.

ஆரியபடரின் விண்ணியலும், மஹாவீரரின் கணிதமும் ஒரு குறுகிய பண்டித வட்டத்தில் அடங்கிவிட்டது. பாமரருக்கும், கதை கவிதை எழுதும் இலக்கியவாதிகளுக்கும் இன்று போல் அன்றும் இது விளங்காப்புதிராகவும், திறமைக்கும் பயனுக்கும் அப்பால் தங்கிவிட்டது. அது மட்டுமன்றி, விண்ணியல் சார்ந்த கணிதம் மற்ற துறைகளில் எந்த அளவு நுழைந்தது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, கோயில் கட்டட கலையில் இந்த கணித கோட்பாடுகள் நுழைந்ததா என்பது கேள்விக்குறியே. அவை தேவையில்லை, தேவைப்படவில்லை என்பது வேறு விஷயம். 

உதாரணமாக தாராசுரத்து ஐராவதேஸ்வரர் கோவிலிலும், கோனாரக் சூரியனார் கோவிலிலும் உள்ள தேர் வடிவமும், அவற்றிலுள்ள சக்கரங்களும் புகழ் பெற்றவை. ஆனால் அவற்றை செதுக்க, ஆர்யபடீயம் போன்ற விண்ணியல் நூல்களில் உள்ள கணித விதிமுறைகள்  –geometry, trigonometry - தேவைப்படவில்லை. அதன் சாயல்களும் இச்சிற்பங்களில் இல்லை. இது குறையோ பெருமையோ இல்லை. யதார்த்தமாகவே எனக்கு தெரிகிறது.


Darasuram Chariot wheel - தாரசுரம் ரதசக்கரம்
Konarak Sun Temple - Chariot wheel - கோனார்க் சூரியனார் கோவில் ரத சக்கரம்
மய மதம் ஆகிய சில்பசாத்திர நூல்களை நான் படித்ததில்லை. குடந்தை ஸ்தபதி உமாபதி ஆச்சார்யரின் இல்லத்தில், வேதங்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை, காணும் பாக்கியம் பெற்றேன். அவர் அபார பணி செய்து வருகிறார்.  விஷ்வகர்மா குடும்பங்களின் கல்வி முறைபற்றியும், பாரம்பரிய ரகசியங்களை பற்றியும் அவரோடு நானும் நண்பர்கள் சிலரும் உரையாடியிருக்கிறோம். புதுக்கோட்டை கலை உலாவிற்கு அவரும் வந்திருந்தார். கோயில் கலைகளை விளக்க அவர் நடத்திய கருத்தரங்கம் ஞானம் வளர்த்தது.

இந்த கட்டுரை தகவலுக்கு மட்டுமல்ல, ஒரு தேடலுக்கும் : பல்வேறு துறைகளில் உள்ள அறிவியல் கலை ஒவ்வொன்றை எவ்வாறு தாக்கியது, பாதித்தது, வளர்த்தது என்று அறிய என் ஆவலின் பதிவு.

விஷ்வகர்மா கலையை பற்றி உமாபதி ஆச்சாரியரின்