Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Monday, 28 November 2022

கல்கி - சாதனை படைத்த விஞ்ஞானிகள்

அறிமுகம்                

இவ்விஞ்ஞானிகளை பற்றிய மேலோட்டமான தகவல்களே மக்களுக்கும், ஏன் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்குமே தெரிந்துள்ளது. எடிசனின் வாழ்க்கை வரலாறு, ஜேம்ஸ் வாட்டின் வாழ்க்கை வரலாறு, படிக்க படிக்க வியப்பூட்டுபவை. மேலோட்டமாக எடிசன் மின்விளக்கு உருவாக்கினார் என்று நினைக்கிறோம்; ஆனால் அது பல நுணுக்கங்கள் கொண்ட பலவருட கதை.



புகைவண்டியை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்தார் என்பதே எனக்கும் ஒரு காலத்திலிருந்த தவறான கருத்து; அவர் நீராவி எஞ்ஜினை தான் உருவாக்கினார் – இல்லை இல்லை முன்னமே இருந்த நீராவி எஞ்ஜினை சீர்படுத்தினார். புகைவண்டி என்று நாமழைக்கும் ரயில்வண்டி எஞ்ஜினை படைத்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். அவர் ஆஜிவகர்கள் போலவும், ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் போலவும் மறக்கப்பட்ட மேதை.

பிரீஸ்ட்லி, லவோசியே பலராலும் அறியப்படாதவர்கள்; ஆனால் நாம் அன்றாடு சுவாசிக்கும் காற்றை பற்றி அடிப்படை தகவல்களை நமக்கு தந்தவர்கள்.

ஆரியபடனை கேள்விப்பட்ட நமக்கு வராகமிகிரனை தெரியாது. ஆயிரம் ஆண்டுக்கால இந்திய வானியல் சரித்திரத்துக்கு அவரே ஆதார ஆசிரியர். அதனால் இதோ ஒரு அறிமுகம்.

பதிவுகளின் பின்கதை

சமீபத்தில் ஆர்விஎஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆர், வேங்கடசுப்ரமணியம், என்னை தொலைபேசியில் அழைத்து அறிவியல் சாதனையாளர்களை பற்றி சில சிற்றுரைகள் (பாட்காஸ்ட்) ஒலிப்பதிவு செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலா பதினைந்து நிமிடம் ஒலிப்பதிவு என்ற நிபந்தனை.

முதலில் கொஞ்சம் தயங்கினேன். வளவள என்று பேசி எதையாவது சொல்லிவிடலாம். ஒரு மணி நேரம் பேசினால் நான்கைந்து சுவாரசியமான தகவல்களை எப்படியோ சொல்லிவிடலாம். ஆனால் சுறுக்கமாக பேசி தகவல்களை கூறுவது மிகவும் கடினம். அதுவும் அறிவியல் துறை சாதனைகளை பற்றி படங்களின்றி வெறும் சிற்றுரையாக விளக்குவது மிகவும் கடினம். எனக்கு கடினம் – வேறு சிலருக்கு எளிமையாக இருக்கலாம்.

ஏற்கனவே சில அறிவியல் சாதனையாளர்களை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். ஆர்விஎஸ் நியூ இந்தின் எக்ஸ்பிரஸ் எனும் ஆங்கில நாளிதழில் பணி செய்தபோது அவர் கேட்டதற்கு இணங்க ஐந்து கட்டுரைகள் எழுதினேன் (ஒன்றிரண்டிற்கு புதிதாய் நூல்களையும் கட்டுரைகளையும் படித்து தகவல் சேர்த்து எழுதினேன்). அக்கட்டுரைகளுக்கு ஆயிரம் சொற்கள் உச்சவரம்பு; எழுதி எழுதி கழித்து வடித்து திருத்தி சுறுக்கி ஏதோ எழுதினேன்.

சமீப காலமாக ஒரு பொறியியல் கல்லூரியில் கருவிகளும் கண்டுபிடிப்புகளும் (இன்வென்ஷன்ஸ் அண்டு டிஸ்கவரிஸ்) என்று ஒரு வகுப்பு நடத்தி வருகிறேன். ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதால், ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் உதவின. ஏற்கனவே செய்த ஆங்கில பவர்பாயிண்ட் இருந்தன்; புதுவாக வேறு சில இயற்றம். ஒவ்வொரு செமஸ்டரும் சில திருத்தங்கள் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவது கடினம். குறிப்பாக போதுமான அறிவியல் சொற்கள் இல்லை; எனக்கு தெரிந்த அறிவியல் சொற்கள் அதிலும் சிலவே; இருக்கும் பற்பல சொற்களும் புழக்கத்தில் இல்லை; எப்படியிருந்தாலும் அறிவியலை படிப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலே தான் படிக்க பார்க்க கேட்க விரும்புகின்றனர். போதாக்குறையாக, எளிமையான தமிழ் பெயர்ச்சொல் வினைச்சொல்கள் பலவற்றை தவிர்த்து, ஆங்கிலச் சொற்களை சொல்வது இன்றைய வழக்கம். “கதவை திறங்கள்” என்பதை “டோர் ஓபன் பண்ணுங்க” என்பது போல். இதில் தமிழில் ஒலிப்பதிவுகளா?

தமிழில் அறிவியலுக்கு வரவேர்ப்பு குறைவே என்பது என் அனுபவம் – ஆனால் என் நட்பு வட்டத்தின் நிலமையாக இருக்கலாம். இந்த வலைதளத்திலும் ஆங்கில வரலாற்று கட்டுரைகளுக்கு கிட்டும் வரவேற்பு தமிழ் கட்டுரைகளுக்கு இல்லை. நாங்கள் நடத்தும் வராகமிகிரன் அறிவியல் மன்றத்து மாதாந்திர தொடருக்கும், தமிழில் நடத்திய இந்திய வானியல் வகுப்பிலும் இவை கண்கூடு. ஜேரட் டைமண்டின் நூலை தமிழுக்கு மொழிபெயர்க்கலாம் என்று நினைத்தபோதும், நான் அறிவியல் மற்றும் மொழியியல் சொற்களை தமிழாக்கவே ஓரிரண்டுவாரம் ஆனது. அப்பொழுது தமிழ் அறிவியல் அகராதி தேடி தோற்றுப்போனேன் – புத்தககடைகளில் ஏதும் இல்லை.

எனினும், சரி ஒரு முயற்சி செய்வோம் என்று எடிசனை பற்றி சில குறிப்புகள் எழுதினேன். செல்பேசியில் ஒலிப்பதிவு செய்ய முயல முயல தமிழை ஒழுங்காக பேசவியலாமை மீண்டும் மீண்டும் தாக்கியது. நிறுத்தி நிதானமாக ஓரிரு வாக்கியம் பேசி பதிவு செய்தால் மூன்றாம் வாக்கியத்திலேயே சொதப்பல். இவ்விதம் ஓரிரு நாள் வீண். வாட்ஸாப்பில் நேராக பதிவு செய்யவேண்டாம்; சவுண்ட் ரெக்கார்டர் (ஒலிப்பதிவு) ஆப் சிறப்பானது என்று ஆர்விஎஸ் அறிவுறுத்தினார். என் சமீப நோகியா தொலைபேசி கை தவறி நீரில் விழுந்ததால் தம்பி ஜெயராம் கொடுத்த பழைய ஆப்பில் ஐஃபோன் ஐந்தில் பதிவு முயற்சி; சவுண்ட் ரெக்கார்டர் முயற்சிகளால் அரை நாள் வீண்.

சரி, கொஞ்சம் வேகமாக பேசி பார்ப்போம், பின்னர் பிழைகளை திருத்திக்கொள்ளலாம் என்று வேகமாக பேசினேன். அங்குமிங்கும் சில கொடுந்தமிழ் சொற்களோடு எனக்கு தெரிந்த செந்தமிழ். ஒரு ஐந்து நிமிட பதிவில் கொஞ்சம் மகிழ்ச்சி; ஒரு வெற்றி மனநிலை. பின்னர் அங்குமிங்கும் சில செந்தமிழ் சொற்களோடு கொடுந்தமிழில் பேசி சமாளித்து பதிவை அனுப்பிவைத்தேன்.

கேட்டு, மிகவும் ரசித்ததாக ஆர்விஎஸ் தகவல் சொன்னவுடன் கொஞ்சம் பெருமூச்சு விட்டேன்.

எடிசனை அடுத்து நான்கு விஞ்ஞானிகளை பற்றி ஒலிப்பதிவு செய்து அனுப்பினேன். தீபாவளி சமயத்தில் காசை கரியாக்கிய பொறியாளர் என்று ஜேம்ஸ் வாட்டுக்கு கொடுத்த பட்டப்பெயர் சில நண்பர்களுக்கு மிகவும் பிடித்தது. எடிசன், ஜேம்ஸ் வாட், டிரெவிதிக் மூவரையும் விஞ்ஞான சமுதாயம் விஞ்ஞானிகளாக ஏற்காது; அவர்கள் போயும்போயும் பொறியாளர்கள்தான். போனால் போகட்டும் என்று லவோசியேவையும் பிரீஸ்ட்லீயையும் விஞ்ஞானிகள் என்று ஏற்றுக்கொள்ளும். மக்களால் எளிதாக புரிந்துகொள்ளும் விதம் யாராவது பேசினால் அல்லது எதையாவது சாதித்தால் அவர்கள் விஞ்ஞானிகளே இல்லை. ஐன்ஸ்டைன் போல் யாருக்குமே கொஞ்சம்கூட புரியாத தகவல்களை பேசுபவர்களும், மற்ற விஞ்ஞானிகளே கொஞ்சம் மூச்சுத் திணற எழுதியவர்களும் தான் விஞ்ஞானிகள். இருந்துவிட்டு போகட்டும்.

வராகமிகிரன் பேரை சொன்னவுடன் ஆர்விஎஸ்ஸுக்கு குதூகலம். ஆனால் மிக நீநீநீளமான பதிவாகிவிட்டது. மானே தேனே கண்மணி பொன்ணி எல்லாம் கழித்துவிட்டு கொஞ்சம் சுறுக்கமான ஒலிப்பதிவை கேட்கலாம்.

நாலைந்து பேர் வாராவாரம் கேட்டுவிட்டு பாராட்டி தகவல் அனுப்பினர். முதல் வாரப்பதிவுக்கு மன்னை கண்ணன் என்பவர் முகநூலில் ஒரு பாஷ்யமே எழுதிவிட்டார்.

இங்கே ஆறு ஒலிப்பதிவுகளின் சுட்டிகள்.

மின்சார மந்திரவாதி - தாமஸ் எடிசன்

கரியை காசாக்கிய பொறியாளர் - ஜேம்ஸ் வாட்

காற்றை வகுத்த வல்லவர் - ஜோசஃப் பிரீஸ்ட்லீ

வேதியலின் தந்தை - அந்துவான் லவாய்சியே

ரயில்வண்டி ராட்சசன் - ரிச்சர்ட் டிரெவிதிக்

கலியுக கதிரவன் - வராகமிகிரன்

Inventors and Discoverers - கருவி படைப்பாளிகள்

Friday, 14 September 2018

நான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை


என் பன்னிரண்டு வருட பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியிலேயே பயின்றேன். ஐந்தாம் வகுப்பு வரை, என் வீட்டெதிரே இருந்த சி.ஐ.டி. காலனி ஆரம்ப பள்ளியில்; இதை திருமதி ரத்னையா என்னும் ஒரு கத்தோலிக்க கிறுத்துவ பெண்மணி நடத்தி வந்தார்; அவரே தலைமை ஆசிரியை. அவர்களை ஆங்கிலத்தில் ஆண்ட்டி என்றழைப்போம்; பள்ளிக்கு ஆண்ட்டிஸ்கூல் என்றே பிரபலமான பெயர். மற்ற ஆசிரியைகள் யாவரும் மிஸ் தான். சில மாணவர்கள் சி.ஐ.டி காலனியில் வாழ்ந்த நடுத்தர குடும்பங்களிலிருந்தும், சிலர் காட்டுக்கோயில் தோட்டத்திலிருந்தும் பள்ளியில். வேறு சிலர் அக்கம்பக்கம். பள்ளிக்கூடம் இரண்டு வளாகங்களில் இருந்தது. கிண்டர்கார்டன் முதல் இரண்டாம் வகுப்புவரை சி.ஐ.டி. காலனி ஐந்தாவது குறுக்கு தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான் நிலத்தில் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள். கிண்டர்கார்டன் ஒரு தகர கொட்டகையில், ஒன்றாம் இரண்டாம் வகுப்பு செங்கல் சிமெண்டு கட்டிடத்தில். மூன்றாம் முதல் ஐந்தாம் வகுப்புகள் சி.ஐ.டி. காலனி முதல் பிரதான சாலையில் நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி இல்லத்திற்கு எதிரில் ஒரு கட்டிடம். அதில் ஒரு பகுதி ஆண்ட்டி ரத்னையாவின் இல்லம். மற்ற அறைகள் பள்ளிக்கூடம். நான் நான்காம் வகுப்பில் படிக்கும் போது என் தாய்தந்தையரை பள்ளி ஆண்டுவிழாவுக்கு தலைமை தாங்க அழைத்து கௌரவித்தார். அங்கே தமிழாசிரியர் திருமதி ருக்மணி, அவர் மகன் ஞானசேகரும் என் வகுப்பில். ஆலிஸ், மேரி, சரஸ்வதி மிஸ் இன்றும் நினைவில்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, மயிலாப்பூரில் பிரபலமான பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி. ஆண்ட்டிஸ்கூல் கத்தோலிக்க கூடம்; பி.எஸ் அன்றைய சென்னையின் தயிர்சாத தலைமைச் செயலகம். திருமதி வசந்தகுமாரி தமிழாசிரியர். ஒரு குடுமிவைத்த பிரமாண தாத்தா மற்றொரு தமிழாசிரியர், அவர் பெயர் மறந்துவிட்டது; அவர் வகுப்பில் கண்விழித்திருப்பதே மாபெரும் சாதனை. பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகள் ராயபேட்டை கில் ஆதர்ஷ் பள்ளியில் படித்தேன். அங்கே தமிழை வெறுக்க கற்றுக்கொடுத்த ஒரு தமிழ் ஆசிரியர், பெயர் மறந்துவிட்டது; மற்ற மாணவருக்கு அவர் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்திருக்கலாம்.

இஞ்ஜினியரிங் கல்லூரியில் தமிழ் பாடமிலை. கல்லூரி சேர்ந்த் நாள்தான் எனக்கு இந்த தமிழ் சனியனிலிருந்து விடுதலை நாள். தமிழ் ஒரு சனியனல்ல, அதன் அழகும் சுவையும், புலமையும், மகிமையும், அருமையும் என்னவென்று சக மாணவர்களும் ஆங்கிலமறியா மக்களும் புரியவைத்த பருவம். பலருக்கு கணிதமோ, வரலாறோ, ஆங்கிலமோ, பூகோளமோ, விஞ்ஞானமோ, வேறு ஏதோ பாடமோ இதே உணர்வை தரும் என்று எனக்கு புரிய பல வருடங்களாயின.

எங்கள் வீட்டில் கதை புத்தகங்கள் ஏதும் இருக்காது. ஜன்னல் ஓரத்தில் ஒர் அபிராமி அந்தாதி, அயகிரி நந்தினி காலணா புத்தகம். அப்பாவின் மேசையில் அவர் தன் பால்யத்தில் சந்திரசேகர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியாரிடம் பரிசாய் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம். மற்றதெல்லாம் அப்பாவின் சட்ட புத்தகங்கள். இதைத்தவிற அம்மா வாங்கிப்படிக்கும் குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கல்கண்டு, இதயம் பேசுகிறது. அப்பா ஆங்கில ஹிந்து நாளிதழ் மட்டுமே படிப்பார். பின்னாளில், தன் முப்பதுகளில், ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் குமுதத்திலோ ஆனந்த விகடினிலோ தான் எழுதிய சிறுகதை அச்சேரியதாக சொன்னது, எனக்கு பெரும் ஆச்சரியம். எங்கு போவேன் அந்த கதையை தேட?

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை அம்மா படித்து, குலுங்கி குலுங்கி சிரித்து அவ்வப்போது வாசித்துக் காட்டுவாள். நானும் அவ்வப்போது கொஞ்சம் படிப்பேன். ஆனால், சிரிப்புத் திருடன் சிங்காரவேலனும், ரெட்டை வால் ரங்குடுவும்தான் என் ஆத்திச்சூடி, இதிகாசங்கள், சிலப்பதிகாரம், மர்ம நாவல்… எல்லாம். மற்றபடி எனக்கு படிக்க பிடித்தது ஆங்கிலம் மட்டுமே. ஒன்பது வயதில் பாபு பெரியப்பா அலமேலு பெரியம்மாவுடன் கோடைக்காலம் செலவழிக்க புனே செல்ல ரயிலேறிய போது, யாரோ ”கருடன்” என்னும் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகம் வாங்கித்தந்தார்; யார் என்று நினைவில்லை. நாங்கள் வாடகைக்கு தங்கிய சி.ஐ.டி. காலனி வீட்டின் சொந்தக்காரர் சி.சி.பிள்ளை, மாடியில் தங்கியிருந்தார். அவர் மனைவி “மாடி மாமி” தான் என் இரண்டாம் தாய். அவர்கள் மகள் வசந்தா அக்கா ஹோலி ஏஞ்ஜல்ஸ் பள்ளி ஆசிரியர். வசந்தாக்கா பாம்பே செல்ல, நான் புனே வரை சேர்ந்து சென்றேன். ரயிலிலும் பின்னர் அடுத்த வருடத்திலும், கிருபானந்த வாரியார் கந்தசஷ்டி கவசத்தை வாசித்ததை விட அதிகமாக அந்த கருடனை வாசித்திருப்பேன். 

என் படிப்புலகில், கருடனுக்கு அடுத்த பெரிய நாயகன் பேண்ட்டம் (Phantom) தான்- இந்திரஜால் காமிக்ஸ். தமிழில் வேதாளம் என்று பேண்ட்டம் கொஞ்சம் கொடூரமாக பெயர்சூட்டப்பட்டு பல பேண்ட்டம் சித்திரக்கதைகள் வெளிவந்தன. ஓரிரண்டு வருடங்களுக்கு பின்னர் சூப்பர்மான் Superman, பின்னர் பேட்மான் Batman டிசி காமிக்ஸ் (DC Comics) அறிமுகமாயினர். எனிட் ப்ளைட்டன், ஆந்தனி பக்கரிட்ஜ், ராபர்ட் ஆர்த்தர், பி.ஜி.வுட்ஹவுஸ், நிக் கார்ட்டர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் என்று ஆங்கில நாவலாசிரியர்களை அடுத்த பல வருடங்கள் படிக்கத்தொடங்கினேன். பாடங்களிலும் ஆங்கிலமே விரும்பி படித்த பாடம். பள்ளி திறக்கும்முன், பாடபுத்தகங்களை வாங்கி வந்த முதல் நாள், மூல பாட புத்தகமாகிய குல்மொகர் வெளியீடு ப்ரோஸ் புத்தகத்தையும், அடுத்த நாள், நாண்டீடெய்ல் என்ற விசித்திர தலைப்புக்கொண்ட நாவலையும் படித்துவிடுவேன். ஜூல்ஸ் வெர்ண் எழுதிய உலகை சுற்ற எண்பது நாள்கள், வால்டர் ஸ்காட்டின் தாயத்து, அலெக்ஸாண்டர் துமாவின் மாண்டே க்றிஸ்டோ சிற்றரசன், சார்ல்ஸ் டிக்கன்ஸின் இரு நகரங்களின் கதை எல்லாம் ஆங்கிலத்தின் மேல் தீரா காதலையும், வியப்பையும், அந்த எழுத்தாளர்கள் மேல் சொல்லவொண்ணா மரியாதையும் பெற்று தந்தன. என்ன வீரம், என்ன சாகசம். அக்கால ஐரோப்பிய வரலாற்றை புரிந்துகொள்ளும் நுழைவாயிலாகவும் அவை பயன்பட்டன. நீலமணி (ப்ளூ கார்பங்க்கிள்) என்னும் ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதை, ஓ ஹென்றி, சகி, கீ மாப்பசான், சோமர்செட் மாம் ஆகியோரின் சிறுகதைகளும் அபாரம். ரசிப்பு கடலில் மூழ்கினேன்.

ஆந்தனி பக்கரிட்ஜ், பி.ஜி.வுட்ஹவுஸ் பள்ளிக்கூட வாழ்க்கையை சேட்டையும் சிரிப்பும் கிரிக்கட் விளையாட்டும் கலந்து தந்த பொக்கிஷங்கள். தெருவிலும் வீட்டெதிரே உள்ள மைதானத்திலும் கிரிக்கெட் விளையாடிய எனக்கு அவையே அறத்துப்பால், காமத்துப்பால். பேண்டம், மேண்டிரேக், பிளாஷ் கார்டன், டிண்டின், சூப்பர்மேன் பேட்மான் கதைகள் கற்பனையின், அறிவியலின், தொழில்நுட்பத்தின் உச்சமாக, எதிர்கால கனவுலகங்களாக தெரிந்தன. நிஜ வாழ்க்கையில் கருப்பு வெள்ளை டிவியும், கருப்பு டெலிபோனும், ரேஷன் கடையும், அம்பாசடர் பியட் காரும், மஞ்சள் ஆட்டோவும், இந்தியா எவ்வளவு பின்தங்கிய நாடு என்றே உணர்த்தின.

தமிழ் கதைகள் எப்படி? குமணன், ஔவை, பாரி, அதியமான் கதைகளை சிறுவயதில் படித்தாகிவிட்டது. சிலப்பதிகாரம் ராமாயணம் எல்லம் யதார்த்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத ஏதொ பழைய கர்ணாடகம். எட்டாம் ஒன்பதாம் வகுப்பில் படித்த கிரேக்க புராணங்களும், சிந்துபாது அலிபாபா போன்ற அரபு கதைகளும அதே ரகம். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் நடந்த வால்டர் ஸ்காட் கதைகளும், பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஜூல்ஸ் வெர்ண், அலெக்சாண்டர் தூமா, ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் புத்தம்புதிதாய், உற்சாகமாய், நவீனமாய், நவரசமாய் இருந்தன்.

அக்காலத்தில் சினிமாவில் அணுவளவும் எனக்கு ஆர்வமில்லை. தப்பி தவறி பார்த்த சில காட்சிகளும் தாங்கமுடியவில்லை. எல்லாமே கிராமம், பண்ணையார், “கற்பகம் உனக்கு ஒண்ணும் தெரியாது, உள்ளே போ”, ஓயா புலம்பல், முதுகிலே மொத்தும் “நகைச்சுவை”, “என்னதான் பட்டணம்னாலும் நம்ம கிராமம் மாதிரி வருமா” என்ற ஓயாத வாய்ச்சவடால் – சகிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் காட்சி உண்டா, ஒரு நகர வாழ்க்கையின் உற்சாகம் உண்டா... ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில சினிமா பார்க்க ஆரம்பித்து ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பழைய சார்லி சாப்லின், பார்த்து ஓயாத மிரட்சி, ரசனை தான்.

இந்த சூழ்நிலையில் தமிழ் பாட புத்தகம், சிறுகதை. எட்டாம் வகுப்பு வரை என்ன சிறுகதை படித்தேன் என்றுகூட நினைவில்லை. பின்னர் ஏதோ ஒரு வகுப்பில் வாழைப்பழச்சாமி மிளகாய்ப்பழச்சாமி என்று ஒரு கதை. முதலிலிருந்து கடைசி வரை சுவையோ பொருளோ அற்ற அசட்டுத்தனத்தில் தாளித்து மூடநம்பிக்கையை முந்திரியாய் தெளித்த வைத்த கதை. முழுவதும் முட்டாள்தனமாகவே இருந்தது. இது கதையே இல்லை, இதை எப்படி மக்கள் ரசிக்கிறார்கள்? வசந்தகுமாரி மிஸ் சொன்னது மறக்கமாட்டேன் – பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் வந்த முதல் நாவல்; கவி வடிவத்திலின்றி இயல் தமிழில் தோன்றிய முதல் “இலக்கியம்”. இங்கிலாந்திலும் ப்ரான்சிலும் அதற்கு முன்னூறு நானூறு வருடங்களுக்கு முன்னரே பிரமாதமான நாவல்களை சிறுகதைகளை எழுதத்தொடங்கிவிட்டனர். இதில் மரண இடி என்னவென்றால் இந்த சிறுகதையின் ஆசிரியர் மகாகவி பாரதியார். இவரை மகாசிறுகதை பாரதியார் என்று ஏன் யாரும் கொண்டாடவில்லை என்பது தெள்ளத்தெளிவு. ஆங்கிலேயர் பாரதியை கைது செய்த காரணம் புரட்சி, விடுதலை என்று முழங்கியதற்கா, இந்த கதை எழுதியதற்கா என்ற சந்தேகம் பலமாக எழுந்தது.

பின்பு மயிலைக்காளை என்று ஒரு கதை. அப்பாடா, நமக்குதெரிந்த மயிலாப்பூர் தானே மயிலை! – என்று படித்தால்… என்ன ஏமாற்றம்! காவேரிக்கரையில் ஏதோ கிராமத்தில் கதை சென்றது. அந்த பிரதேசத்து மயிலாடுதுறையாவது தலைகாட்டியதா? இல்லை. காளை கிரிக்கட் ஆடியதா? இல்லை. அட் லீஸ்ட் கிரிக்கட் மைதானத்தில் மேய்ந்து புல்லாவது தின்னதா? இல்லை. முதல் பக்கத்திலேயே ஏதோ காட்டுக்கு சென்று ஒளிந்துக்கொண்டுவிட்டது. அப்புறம் அந்த மாடு மேய்ப்ப்வன் கதை தான், காளை கதையல்ல. அப்பொழுதெல்லாம் ஒழுங்காக படிக்கவில்லையென்றால், வீட்டு பெரியவர்கள் “படிப்பு வரலையா படிப்பு வரலையா, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று எரிந்து விழுவார்காள். இங்கென்னவென்றால் பாடமே மாடு மேய்ப்பவனைப்பற்றி.

இதை எழுதியவர் ஏதோ கல்கி – இந்த விளக்கெண்ணெய் ஆசிரியருக்கும், பக்கங்களின் மூலையில் மன்னர் மந்திரி ஜோக் வருமே அந்த கல்கி பத்திரிகைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கும் என்று சந்தேகம். ஆனால் மயிலைக்காளை கதையில் ஒரு மன்னர் மந்திரி ஜோக் கூட இல்லை. இவருக்கெல்லாம் ஏன் பேனா பேப்பர் கொடுத்து நம்ம நேரத்தையும் வீணாக்குகிறது தமிழ் சமுதாயம்? சே! சரி சரி, சுரக்காய்ச்சாமி, புடலங்காய்ச்சாமி என்றெல்லாம் படுத்தவில்லை. சூப்பர்மேன் கதையெழுதும் எலியட் மேகின், கேரி பேட்ஸ், டிண்டின் எழுதும் ஹெர்ஜ் அளவு திறனில்லையாயினும், சுப்பிரமணிய பாரதி அளவுக்கு இவர் மோசமில்லை என்ற ஒரு சின்ன சந்தோஷமே மிச்சம். 

ஆனால், அடுத்த இடி. நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று ஒரு கதை. இறந்துபோன ஒரு கைக்குழந்தையை புதைக்க கொண்டுவந்த மயானத்தில்  “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்று வெட்டியான் பாடிக்கொண்டே குழித்தோண்டுகிறான். தமிழ் இலக்கியம் என்றாலே இழவு ஓலம் ஒப்பாரி என்று முழு வெறுப்பை வளர்த்த கதை. நாலாறுமாதம் குழிதனை தோண்டி என்ற அடுத்த அடி, இருபத்திநாலு மாதக்காலமா, அத்தனை நாள் ஏன் ஒருவன் குழிதோண்டவேண்டும் என ஒரு சக மாணவன் வினவ, நாலாறு என்பது பத்து மாதம் என்றும் நாலையும் ஆறையும் கூட்டவேண்டும் பெருக்கக்கூடாது என்றும் தமிழ்தாத்தாவின் நீண்ட விளக்கம். ஈரிரண்டு மூவைந்து என்று கம்பராமாயணம், கலிங்கத்து பரணி, வகையறா பழைய செய்யுட்களில் வந்தால் ஈரிரண்டை பெருக்கி பத்து, மூவைந்து பெருக்கி பதினைந்து என்றெல்லாம் இருக்க, இந்த பாடலில் மட்டும் ஏன் நாலையும் ஆறையும் கூட்டவேண்டும் என்று ஒரு விவாதம் தொடர்ந்தது. பத்து மாதம் என்றாலும் குழிதோண்ட அதிகமல்லவா என்று இன்னொருவன் கேட்க, அதென்ன வவுத்தில் பூச்சி என்று வெட்டியான் மனைவி சொல்கிறாள் என்று கேள்வி எழ, ஆசிரியர் பலவித நமுட்டுச்சிறிப்பை சிதறி, இப்படி அப்படி கனைத்து, டேய் படவா என்றெல்லாம் திசை திருப்ப, இருபத்தினாலு மாதம் தோண்டிய குழி எல்லாத் தமிழ் சிறுகதைகளையும் புதைக்க போதுமா என்று என் சிந்தனையோடை தவழ்ந்தது. ஒரு சின்ன ஆறுதல். இந்த ஆண்டிக்கதை ஜெயகாந்தன் பாரதியைவிட மோசமான எழுத்தாளர் என்பது உறுதி. என்ன இருந்தாலும் செந்தமிழ் நாடு, தீராத விளையாட்டு பிள்ளை, ஓடி விளையாடு பாப்பா, அச்சமில்லை அச்சமில்லை என்று அற்புதமான பாடல்களை இயற்றியவனல்லவா பாரதி.

ஆக மொத்தம் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு கும்பிடு. நல்லவேளை இந்த விளக்கெண்ணெய் சிறு கதைகளோடு தப்பித்தேன், நாவல் எல்லாம் படித்தால்? நாறிடும். ஆங்கிலம் என்ன ஒரு அற்புத மொழி, நேற்று வந்த புதுமொழியாயினும் ஆங்கிலேயேரின் கற்பனை திறனும், சொல்வளமும், கதைகளின் நடையும், சாகசமும், அறிவியலும், அற்புதமும், சிரிப்பும், நகைச்சுவையும், திகிலும், மர்மமும், வீரமும், சூழ்ச்சியும், சிந்தனையும், செயலும், இந்திய நாட்டில் எந்த மொழியிலும் இருப்பது போல் தெரியவில்லையே. தமிழில் சத்தியமாக இல்லை, இருந்தால் இதைப்போன்ற திராபை கதைகளையா படிக்கவைப்பார்கள்? மாண்டே கிறிஸ்டோ எங்கே மயிலைக்காளை எங்கே? ஜூல்ஸ் வெர்ணின் உலகை சுற்றும் ஃபினியஸ் ஃபாக் எங்கெ, ஜெயகாந்தனின் வெட்டியான் எங்கே? வேற்று கிரகத்தில் சாதிக்கும் சூப்பர்மேன் எங்கே, வாழைப்பழச்சாமி எங்கே? தட்டி தடுமாறி வெறுத்து சலித்து எழுத இயலாமல் தவழ்ந்து நொந்து அப்படியிப்படி பன்னிரண்டாம் வகுப்பில் 200 க்கு 80 மதிப்பெண் பெற்று தமிழிலிருந்து விடுதலை பெற்றேன். இனிமேல் இஞ்ஜினியரிங்க்தான், கம்ப்யூட்டர், ராக்கெட், ரோபோ, கிராபிக்ஸ், உலக அற்புதங்கள் கைவிறலில்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் கல்லூரியில் சகமாணவர் முக்கால்வாசி தமிழ் மீடியம் பள்ளிகளில் படித்துவந்தவர். இது மதறாஸ பட்டணம் அல்ல. நான் தமிழ் மொழியோடு பட்ட பல இன்னல்களை அவர்க்ள் ஆங்கில மொழியிடம் பட்டனர். கல்லூரியில் அரையுங்குறையுமாக ஆங்கிலம் கற்ற ஒரு சில ஆசிரியர்களின் ஆங்கிலமே அவர்களுக்கு புதைக்குழியாக இருந்தது. சென்னை, கேரள, ஆந்திர மாணவர்களோடு மட்டும் ஆங்கிலத்திலும் மற்றவரோடு பெரும்பாலும் தமிழிலும் பேசுவேன். ஆங்கிலத்தில் புத்தகம் படிப்பவர் சிலரே, ஆனால் தமிழில் படிப்பவர் பலர்; அவர்களுக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்று தெரிந்தது. அவர் ரோபோ கம்ப்யூட்டர் கதையெல்லாம் எழுதவாராம். கமல்ஹாசன் நடித்து அப்பொழுது வெளியான் விக்ரம் படம் பார்த்திருந்தேன். அதை எழுதியவர் சுஜாதாவாம். சலாமியா பாஷை, என் ஜோடி மஞ்ச குருவி, ஒரு கம்ப்யூட்டரைக்கூட ஒழுங்கா காட்டாத டைரக்டர், அமெரிக்கா டிவியில் வருவதைவிட கேவலமான ராக்கெட் எல்லாப்பழியும் சுஜாதாவுக்கே. சுஜாதா நூல்களை தீண்டக்கூடவில்லை.

ஆனால் ஏதோ விபரீதத்தில் அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவல் கிடைத்தது. கல்லூரி சேர்ந்த ஆரம்பக்காலத்தில் ஆங்கில புத்தகமேதும் கையில் கிட்டவில்லை என்பதே மூலமுதல் காரணமாக இருக்கலாம். முதல் இரண்டு மாதம் ரேக்கிங்க் பிரச்சினை சூழ்நிலையால் ஹாஸ்டலை விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போக வாய்ப்பில்லை. ஏன் படிக்கத்தொடங்கினேன் என்று நினைவில்லை. ஏன் நிறுத்தவில்லை என்றும் நினைவில்லை. பக்கம் பக்கமாக படிக்க படிக்க மயான அழுகையெல்லாம் மிடில்கிளஸ் அபார்ட்மெண்ட்டில் அழலாம் என்பதை அந்த நாவல் வெளிப்படுத்தியது. கண்ணீர் என்ற பெயர்தான் அச்சுபிறழ்ந்து வால்நீண்டதோ என்ற சந்தேகம். கே பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் சில் காட்சிகளை பார்த்த போது, அதற்கு கண்ணீர் கண்ணீர் என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றியது. வெரும் கண்ணீர் மட்டுமல்ல, நிரைய இருமலும் உண்டு. இது 1980களில்.

ஜெயலலிதா சென்னைக்கு வீராணம் திட்டம் கொண்டுவந்தது 2004இல் தான். 1980களில் கருணாநிதி ஆட்சியின் வீராணத்திட்ட ஊழல் சான்றாய், அகற்றாமல் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் முழுதும் சென்னை சாலைகளில் கொலுவீற்றிருந்தன. மீண்டும் கருணாநிதி ஆட்சி வந்தபின் அவை அகற்றப்பட்டன என்பது ஞாபகம்; ஆனால் ஒரு பத்து பன்னிரண்டு ஆண்டுகள் எல்லா தமிழ்ப்படத்திலும் வறுமையை காட்ட இந்த வீராண குழாய்களில் குடியிருப்பவர்களாக சிலரை காட்டுவர். அப்பொழுது ஒரு சிலவீடுகளில் கூரைமேல் தண்ணீர் தொட்டி, தண்ணி ஏற்ற மோட்டார் எல்லாம் இருக்கும். எங்கள் கோடம்பாக்கம் வீட்டில் ஒரு கிணறும், ஒரு கைப்பம்பும் தான் உண்டு. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாயில் தண்ணீர் விடுவார்கள், கைப்பம்பு அடித்து தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் ஏரிகள் நிரம்பியுள்ளபோது காலை ஆறு மணிமுதல் எட்டு மணி வரை தண்ணீர் வரும். வீட்டில்வேலைசெய்பவர் யாரேனும் இருந்தால் அவர்கள் நாலைந்து தவலைகள் நிரம்ப பம்புக்குழாயில் தண்ணீர் இரைப்பார். எங்கள் வீட்டில் வேலைக்காரி சில மாதம் உண்டு சில மாதம் இல்லை குடும்பத்தலைவி இல்லாத வீட்டில் இது சகஜம். அப்பாவோ, நாங்களோ தான் அடித்துக்கொள்ளவேண்டும். புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் குறைந்தால் மெட்ரோவாட்டர் முருங்க மரத்தில் ஏரிக்கொள்ளும். விடிகாலை நாலிலிருந்து ஆறு மணிவரை குழாயில் தண்ணீர் வரும். எழுந்து அடிக்கவில்லை என்றால் அக்கம்பக்கத்து வீட்டில் ஏதோ பம்பில் வந்தால் கெஞ்சி நாமே அடித்துக்கொண்டு, வாளி குடத்தோடு வீடு திரும்பவேண்டும். 

சோசலிசம் தலைத்தோங்கிய காலம்; மோட்டார் எல்லாம் சொகுசு பொருள். இந்த இருபது லிட்டர் பாட்டில் டெலிவரி கம்பெனி ஏதுமில்லை. 

கிட்டத்தட்ட அசோகமித்திரனின் தண்ணீர் கதை நபர்களின் வாழ்க்கை, இருமலுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடி போக, எங்கள் தினசரி வாழ்க்கை. இதில் எங்கே கதை, இலக்கியம் எல்லாம். பார்க்கவே சகிக்காத ஆனால் ஜனாதிபதி பரிசி பெறும் மலையாள வங்காள கலைச் சினிமா போல் இந்த அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருக்கிறார் என்பது மட்டும் திண்ணம். அமெரிக்காவில் எல்லார் வீட்டிலும் குழாயில் தண்ணி வருமாம். பம்பு அடிக்கவேண்டாம். சின்டெக்ஸ் டாங்கில் நிரப்பி வைக்கவேண்டாம். துணி தோய்க்க வாஷிங் இயந்திரம், பாத்திரம் தேய்க்க டிஷ்வாஷர்….நான் அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் கம்ப்யூட்டர், ரோபோ, ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் எல்லாம் எதிர்காலத்து கனவுகள்; ஆனாலும், அமெரிக்காவுக்கு சென்றால் இதெல்லாம் சாதாரண குடும்பத்தில் கூட வீட்டிலேயே உள்ள கருவிகள் என்று நினைத்தப்போது, அந்த தண்ணீர் கதை பாரதியார் மேலும், கல்கி மேலும், ஜெயகாந்தன் மேலும் வளர்ந்திருந்த இலக்கிய வெறுப்பு தணிலில் நெய்யூற்றியது. இந்த கதையை சலாமியா பாஷையிலேயே எழுதியிருக்கலாம், சுஜாதா ரசிகர்களாவது மெய்சிலிர்த்திருப்பார்கள்.

என்னவோ ரோபோ, கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், குழாயில் தண்ணி எல்லாம் அமெரிக்காவின் நிகழ்காலமாகவும் பாரதத்தின் தூரத்து எதிர்காலமாகவும் தோன்றின.

1991ல் அமெரிக்கா சென்ற பின் தமிழ் மேல் கொஞ்சம் ஆர்வமும் ஏக்கமும் பிறந்தன. 2000ல் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தேன். நான் முழுதாக படித்த முதல் நாவல்.

பின்குறிப்பு 1
2000ல் சென்னையெங்கும் சிண்டெக்ஸ் டாங்குகள் தான் சென்னையின் நீர்பற்றாகுறையின் பிரதான சின்னம். நடுத்தர் பகுதிகளிலும் எல்லாத்தெரு ஓரங்களிலிம், ஒரு சிமெண்ட் திட்டின் மேல் ஒரு சிண்டெக்ஸ் டாங்க் இருக்கும். எம்ஜிஆர் இறந்த பதினைந்து வருடங்களுக்கு பின்னும் சென்னையின் தண்ணீர் பிரச்சனை மாறவில்லை. தெருவெல்லாம் தண்ணீர் லாரி. 2004ல் ஜெயலலிதா ஆணையில் மழை நீர் சேகரிப்பும், வீராணம் திட்டமும் நிறைவேரின. கோர்ப்பாசேவ், நரசிம்ம ராவ் தயவில் குழாய்களும், வாஷிங் மெஷினும் பாரத நாட்டின் பல கோடி குடும்பங்களின் நிகழ் கால நிஜங்களாயின.

பின்குறிப்பு 2
செம்பை வைத்தியநாத பாகவதர் தியாகராஜ ஆராதனைக்கு தலைமை தாங்கி மற்ற பாடகர்களோடு கச்சேரி நடத்திய போது, ஒருவர் வந்து அவரிடம் கேட்டாரம், “மாமா, நானும் பாடணும். நீங்க தான் பெரிய மனசு வெச்சு எனக்கு வாய்ப்பு தரணும்,” என்றாராம். “இப்பவா? இங்கயா?” என்று செம்பை வாய்பிளக்க, “ஆமாம் ஆமாம். ரொம்ப நன்றி மாமா. அடுத்த பாடல் நான் பல்லவி பாட ஆரம்பிச்சு நீங்க எல்லாரும் சேர்ந்த்துக்கணும்,” என்று தொடர்ந்தாராம். பாவம் செம்பைக்கு நாவே எழவில்லை. அடுத்து அந்த நபர் சொன்னதே பொன்னில் பொறிக்க வேண்டிய சாசனம். “முன்னாடி நாலு கட்டைல பாடுவேன். இப்பல்லாம் இரண்டு கட்டை தான் வருது.”

செம்பையின் பதில் : “இரண்டு கட்டையெல்லாம் போதாதே.”

ம்ம்ம். இரண்டு கட்டை போதாது.


Monday, 12 September 2016

Subrahmanya Bharathi’s Essays and Short Stories - Narasiah lecture

Narasiah spoke about காலம் கொன்ற விருந்து “A Feast that Defied Time”, a line in a poem by Subramania Bharati. It was organized by Swarnamalya Ganesh for Ranga Mandira, August 21, as part of their Madras Week activities and a set of programs whose theme was “Annihilation of Caste.”


“The Bharathi who added Beatuty to Prose”, (இயலுக்கு அழகூட்டிய பாரதி) waxed Narasiah talking of the poet’s lesser known short stories and English essays. Even Bharathi’s career as a Tamil journalist, for magainzes like Swadesamitran and a pioneer in the field, is barely known outside literary circles, for such is his towering reputation as a poet.

Satire

Annie Besant, who came to Madras attracted by the Theosophical Society in Madras, later joined the Indian National Congress and called upon Indians to rebel against British rule. In this instance, she called J Krishnamurthy a reincarnation of Krishna. This appalled Bharati and prodded him to write the satire about Besant, titled "The Fox with the Golden Tail," wherein he mocked her as a fox from the Land of the Bees and Ants (a pun on Besant) who introduced the Cult of FoxoBeesAntism. It was a huge hit and there was demand all over India and for a second edition. Ironically, this deeply saddened Bharati, because his Tamil epic poem Paanchali Sabatham (பாஞ்சாலி சபதம்) evoked no such popularity or acclaim. “I've been minting my hearts blood in Tamil poetry and no one to read it and here are these numskulls asking for a second edition of Fox essay,” lamented Bharati.

Editorial Courage
Another incident was the Ashe murder case, when an ardent nationalist and admirer of Bharathi, Vanchinathan killed Collector Ashe on June 17, 1911 at the Maniyachi railway station, and then committed shot himself. While others wept for Vanchinathan, Bharati condemned the assassination of Ashe : "An outrage to the Hindu religion. For the murdered had his wife by the side."

The police came to arrest Bharathi on suspicion of sedition, after the Ashe assassination, with a warrant against the Editor of the Swadesamitran magazine. But Bharathi was officially Assistant Editor, though he wrote fierce anti-British editorials, so the editor the police arrested was Mandyam Srinivasachar, also the publisher. 

Bharathi fled to Puduchery, which was held by the French (and so out of British jurisdictin) in 1908 on the advice of his friends. He stayed there until 1918 and this was the most productive period of his literary life, said Narasiah. He wrote letters in English to The Hindu newspaper, published out of Madras, which printed several of them.

Bharathi was not a blind Patriot but a nationalist was Bharati says Narasiah. The difference is that a blind patriot is an ideologue who supports his country, right or wrong, but a nationalist is someone who wants to build a nation, and shape its thoughts and culture, and is not afraid to voice his opinion even if its unpopular.

One of Bharathi’s letters to the Hindu published during the First world war, said: "We criticize England in peacetime but stand by her in trouble. We are lovers of Humanity."

Bharati's Short stories

He wrote 18 short stories in Tamil. He introduced a new form, he was very experimental. He used short crisp sentences. In a story Kaanthaamani (காந்தாமணி), characters uttered English phrases like “Never mind” (நெவர் மைண்ட்) - an avant-garde style. He was a strong critique of astrology and hypocrisy and domestic cruelty, and several of his stories reflected that.

Another short story, Railway Sthaanam (ரயில்வே ஸ்தானம்) spoke of the dilemma of a Muslim man who's in love with three women and would like to figure out whom he loves most. Quite an unusual plot.

His biographer Va Ra. In 1910, Va Ramaswami Iyengar, who later wrote a life of Bharati, met him. He went to meet Aurobindo in Puducherry and incidentally met Bharati. Bharati was shocked when Va Ra spoke in English. The episode as narrated in Va Ra’s book, is hilarious, and should be read in the original Tami. Bharathi then wrote Maravan Paattu மறவன் பாட்டு, lambasting Brahmins for forsaking Tamil and adopting English language and customs.

But Va Ra’s 1944 book is not a proper biography, said Narasiah. There are no dates or years, more a story. Mahadevan's book is a more proper biography of Bharati.

The Mahakavi Controversy

SS Vasan bought Ananda Vikatan from Bhuthi Vaidyanatha Iyer for Rs 200 in 1927. Kalki was introduced to Vasan by Parali Su Nellaiappar, and he joined Vikatan. The magazine which had struggled to sell under its previous owner, sold 15,915 copies in 1930, a testament to the managerial talent of Vasan. Kalki was a commercialy successful writer with outstanding marketing skills.

Other magazines like Manikodi, Gandhi, Sudandira Changu, Dinamani also came out at this period. Va Ra became editor of Manikodi, a landmark Tamil magazine, which developed Tamil literature in that early period. Manikodi was the nursery of several stalwart writers, like Chitti Sundararajan, CS Chellappa, Puthumaipiththan, Na Pichamurthy, Ku Pa Rajagoplan.
Manikkodi Stalwarts

In October 1934 Va Ra became editor of Veerakesari in Colombo. "Tamil grammar is a perfect example of tail wagging the dog," was a memorable epigram coined by Va Ra. Va Ra wrote that others' writings (such as those of Shelley and Shakespeare and Tagore ) were not equal to even one line of Bharati. Nellai Nesan, (a pseudonym of PC Acharya), opposing this, wrote that Bharati was a Kavi but not Mahakavi.

Kalki rebutted this, in an Ananda Vikatan editorial, that Valmiki Kamban Shakespeare Tagore etc who could be called Mahakavis (Great Poets) were writers crossing national boundaries. And that it was not fair to compare Bharati with them. Poets like Bharati and Shelley were National Poets of their time only. Kalki used a phrase “nirakshara kukshi” which means “illiterate” to describe Va Ra, which worsened the controversy.

But Kalki and Va Ra were much in admiration of each other and it was Kalki who collected funds for the Manimandapam for Bharati and a purse to help Va Ra, when the latter was in financial dire straits. There was no personal animosity between them.

Narasiah covered so many topics I couldn't keep up, I rather chose to enjoy the lecture.

In attendance were stalwarts like author Siddharthan, Nagupoliyan Balasubramanian Natarajan, Narasiah’s cousin Venu Sundar (son of Manikodi stalward Chitti Sundarrajan), the silent dynamo Mr Kannan, epigrapher Ramachandran, Gandhi Rajan, Santhanam, and Narasiah's wife and son.

PostScript I’ve had the pleasure of listening to "Nagupoliyan" Balasubramanian reading aloud several of Bharathi’s English essays and also brilliant short stories like Kudirai Kombu and the autobiographical Chinna Sankaran Kathai. His rendition of Paanchaali Sabatham is unparalleled.

Narasiah’s lecture evinced these aspects of Bharathi in a proper historical context.
___________

If you liked this, you may also like these other essays in my blog
  1. Narasiah on Siddharthan’s book “Asoka”
  2. ரா அ பத்மநாபன் அஞ்சலி
  3. Tagore's poem on UVe Swaminatha Iyer
  4. கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்
  5. கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்
  6. செக்கு இழுத்தவர்

Monday, 18 January 2016

தேசபக்தனும் சுதேசமித்திரனும்


கீழுள்ள பகுதி, திரு.வி.க நடத்திய தேசபக்தன் பத்திரிகையின் தமிழ் நடையயை புகழ்ந்தும் சுதேசமித்திரனின் நடையை கிண்டலடித்தும், கல்கி எழுதியது. பிற்காலத்தில் திரு.வி.க நடத்திய நவசக்தி பத்திரிகையில் கல்கி பணிபுரிந்தார்.

-------கல்கி எழுதிய பகுதி தொடக்கம்-------

“தேசபக்தன்” இதழை பார்க்கப் பார்க்க, ‘என்ன துணிச்சல்! என்ன ஆர்வம்! எத்தகைய அரசியல் நுட்பம்? எவ்வளவு தீவிர தேசபக்தி! என்ன தமிழ்!’ என்று தமிழ் நாடே வியந்து கொண்டிருந்தது.

எல்லாவற்றிலும் அதிக வியப்பு “என்ன தமிழ்!” என்பதற்காகத்தான். அதுவரையில் தமிழ்நாட்டில் தனியாட்சி நடத்திக்கொண்டிருந்த ஒரே தினசரிப் பத்திரிகை “சுதேசமித்திரன்” ஆகும். அதில் தலையங்கம் ஏறக்குறைய பின்வரும் முறையில் அமைந்திருக்கும்.

“பெங்கால் புரொவின்ஷியல் காம்பரன்ஸில் மிஸ்டர் அம்பிகா சரண் மஜும்தாரின் பிரஸிடென்ஷியல் அட்ரெஸில் இந்தியப் பிரஜைகளின் தேசீய அபிலாஷைகளை அடக்க இந்திய புயுராக்ரஸி கையாண்டுவரும் ரிப்ரஷன் முறைகளின் உபயோகமற்ற தன்மையைப் பற்றிக் கரதலா மலகமாய்க் கூறியிருப்பது ஹிஸ் எக்ஸெலன்ஸி வைஸ்ராய் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படுமென்று நம்புகிறோம்.”

(இது பழைய சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டதன்று; சு.மி.யின் அக்காலத்திய நடையை எடுத்துக் காட்டுவதற்கான சொந்தக் கற்பனை)

இதே விஷயத்தை “தேசபக்தன்” பத்திரிகை எழுதி இருக்கக்கூடிய முறை பின்வருமாறு:

“வங்கத் தாயின் புதல்வர்கள் அண்மையில் மாகாண மகாநாடு கூடினார்கள். திரு அம்பிகா சரண் மஜும்தார் என்னும் வங்க வீரர் தலைமை தாங்கி அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். அச்சொற்பொழிவில் இந்திய அதிகார வர்கத்தார் இந்தியக் குடிமக்களின் விடுதலை வேட்கையைத் தகைவதற்குக் கையாளும் அடக்குமுறைகளைக் கடிந்தார். அம்முறைகள் பயனற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென் எடுத்துக் காட்டியுள்ளார். இச்செவ்விய உரைகள் மேன்மை தங்கிய இந்திய இராஜப் பிரதிநிதியின் திருச்செவியில் ஏறுங்கொல்!”

---கல்கி எழுதிய பகுதி முற்றும்—

“தென் பாசிபிக் கதைகள்” (Tales of the South Pacificஎன்று ஜேம்ஸ் மிசெனெர் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில், ஒரு தீவை பற்றிய ஒரு கட்டுரை, பிறகு அத்தீவு மக்களை பற்றி ஒரு சிறுகதை என்று இயலும் புனைவும் மாறி மாறி எழுதியுள்ளார். இரண்டாம் பதிவின் முன்னுரையில், “இப்பொழுது மீண்டும் படிக்கும் பொழுது, கட்டுரைகளை விட கதைகளில் உண்மை அதிகமாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்கி எழுதிய மேற்பட்ட விமர்சனமும் அதே வகை. சுதேசமித்திரனிலிருந்தும் தேசபக்தனிலிருந்தும் அதே கட்டுரைகளை எடுத்து காட்டியிருந்தால், இவ்வளவு சுவையாக இருந்திருக்குமா என்பது சந்தேகம். ஓவியமும் புகைப்படமும் காட்டும் வேற்றுமையை இவ்வாறு காட்டியுள்ளார்.

படித்ததில் ரசித்தது.

சுப்பிரமணிய பாரதி கவிதைக்கு மட்டுமல்ல, பத்திரிகை துறைக்கும் முக்கிய முன்னோடி. ஆனால் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் அதைப்போல் ஒரு முக்கிய முன்னோடி. கல்கியை இவரது பின்னோடி என்று வைத்துக்கொள்வோம். பாரதி பாமரனையும் கவர்ந்தவன்; ஆனால் திருவிக பண்டிதச் சிமிழில் மாட்டிக்கொண்டார்.

நல்லவேளை, கண்ணதாசனுக்கு அந்த கதி நேரவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்
கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்
ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்




Friday, 18 December 2015

மாந்தாதா Mandhata

மாந்தாதா - அமராவதி சிற்பம் 
Mandhata panel - Amaravati gallery


मान्धाता च महीपतिः कृतयुगालङ्कारभूतो गतः
सेतुर्येन महोदधौ विरचितः क्वासौ दशास्यान्तकः।
अन्ये चापि युधिष्ठिरप्रभृतयो याता दिवं भूपते
नैकेनापि समं गता वसुमती मुञ्ज त्वया यास्यति।।

பொன்னியின் செல்வன் நாவலின் மணிமகுடம் அத்தியாயத்தில், கடம்பூர் அரண்மணையில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை கட்டியக்காரன் அறிவிக்கும்போது மநுமாந்தாதா என்று தொடங்க, “மநு சரி, அது யார் மாந்தாதா?” என்று ஐயம் எழுந்தது. சென்னை எழும்பூர் அமராவதி சிற்பங்களை காணுகையில் மாந்தாதா என்ற மாமன்னன் பெயர் கண்டு, இம்மன்னனுக்கும் பௌதத்திற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் வளர்ந்தது. போஜ ராஜன் தன் ஒரு பாடல், இதே மாந்தாதாவின் பெயரில் தொடங்கியதை கண்டு, ஐயம் வெடித்தது. மகேந்திர வர்ம பல்லவனுக்கு கற்பனையிலும் கலை ஆர்வத்திலும் படைப்பாற்றலிலும் விசித்திர சிந்தனையிலும் போஜ ராஜனை மட்டுமே ஒப்பிடலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் முதல் கலை உலாவின் தொடக்கத்தில் சொன்னதும், நினைவுக்கு வந்தது.

நகுபோலியன் பாரதி பாலு இந்த கவிதையை விளக்கினார். போஜன் சிறுவனாக இருந்த பொழுது அவன் சித்தப்பன் முஞ்சன் அவனை கொன்று சிம்மாசனம் சிம்மாசனம் பறிக்க முயன்றதாக ஒரு கதை உண்டு. சூழ்ச்சியை அறிந்துகொண்ட போஜன், தப்பிவிட்டு, இந்த கவிதையை புனைந்தானாம். இதன் பொருள்: “அரசகுல திலகங்கள் மாந்தாதாவும் ராமனும் யுதிஷ்டிரனும் இறந்தபொழுது இந்த பூமி அவர்களோடு போகவில்லை, அட முஞ்சா உன்னோடு போவாள் என்று நினைத்தாயோ?” அழுத்தமான கேள்வி. சொல்லமைப்பும் அற்புதம். துக்கமும் காழ்ப்பும் நீரில் கலந்த உப்பை போன்ற கலந்த தாக்கம்.

பாடலை தமிழில் படித்து, சொல் பொருள் பார்ப்போம்.

மாந்தா⁴தா ச மஹீபதி​: க்ருʼதயுகா³லங்காரபூ⁴தோ க³த​:
ஸேதுர்யேன மஹோத³தௌ⁴ விரசித​: க்வாஸௌ த³ஸா²ஸ்யாந்தக​:|
அன்யே சாபி யுதி⁴ஷ்டி²ரப்ரப்⁴ருʼதயோ யாதா தி³வம்ʼ பூ⁴பதே
நைகேனாபி ஸமம்ʼ க³தா வஸுமதீ முஞ்ஜ த்வயா யாஸ்யதி||

ராமனும் யுதிஷ்டிரனும் இதிகாச புருஷர்கள். இவர்களோடு ஒப்பிட மாந்தாதா யார்? இதுவே பாடலின் மற்றொரு பெருஞ்சுவை. நாம் மறந்து போன வரலாற்றின் ஆழமும் இங்கே மிரட்டுகிறது. துவாபர யுகத்தின் இதிகாச மன்னன் யுதிஷ்டிரன்; திரேதா யுகத்தின் இதிகாச மன்னன் ராமன்; கிருதாயுகத்தின் புராண மன்னன் மாந்தாதா.
கிருதாயுக அலங்கார மஹிபதி (மகாராஜன்) மாந்தாதாவின் உடலும்(பூத) சென்றுவிட்டது(கத). பெருங்கடலில் (மஹோததி) சேது படைத்து தசமுகன் (தஷாஸ்ய) ராவணனை அந்தகம் (மரணம்) செய்தவன் எங்கே (க்வா)?  யுதிஷ்டிரனும் சொர்கம் (திவம்) சென்றான் (யாதா). ஒருவனோடும் (ஏகேன) சேர்ந்து (ஸமம்) ந கதா (போகவில்லை) வஸுமதீ (பூமி). முஞ்சா உன்னோடு (த்வயா) யாஸ்யதி (போவாளோ?)
{ந + ஏகேன + அபி = நைகேனாபி}

ராமாயணம் மகாபாரதம் தெரிந்த அளவு நமக்கு புராணக்கதைகள் தெரிந்திருப்பதில்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் அமராவதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் போஜன் காலத்திலும் மாந்தாதா நினைவிலிருந்தான்.

இந்த கவிதையும், அந்த முஞ்சன் சம்பவமும் நம்பத்தகாதது என்கிறார் காஞ்சி விஷ்வ வித்யாபீட வடமொழி பேராசிரியர் சங்கரநாராயணன். அதாவது போஜன் இக்கவிதை எழுதினான் என்பதே சந்தேகமானது. இருந்தாலும் மாந்தாதவை பற்றிய அழகான கவிதை என்பதால் எழுதியுள்ளேன். மாந்தாதாவின் பிறவி கதை இதைவிட நம்பகத்தன்மை குறைவானது. இருக்கட்டும்.

சிற்ப வடிவம் மிகவும் அழகு. சபை நடுவே கொலுவீற்றியுள்ள மாந்தாதாவின் கம்பீரமும், செருக்கும், மன்னனுக்கே உரிய தன்னம்பிக்கையும் மிளிர்கின்றன. அவனே பின்னே உள்ள அரசகுல மகளிரும் சாமரம் வீசுவோரும் கூட அதே செருக்கில் மிதக்கின்றினர்; அவன் வலது பக்கமுள்ள பெண்டிர் முகங்களில் மோகமோ காதலோ வியப்போ பொங்குகிறது. அவன் காலடியில் அமர்ந்து பரிசுகொடுப்போரின் மிகவும் தாழ்ந்த நிலையும் மன்னனின் செருக்குக்கு நேர்மாறாக பணிவு ததும்புகின்றன. அதிகாரத்திற்கும் அரசகம்பீரத்திற்கும் கிடைக்கும் மரியாதை இவை. மன்னனின் வலது பக்கத்தில் காணும் ஊரோர் செல்வந்தர் கூனிகுறுகாமலிருப்பினும், பவ்யமாகவே உள்ளனர்.

வேறோரு சிற்பத்தில் புத்தர் போதிமரத்துக்கடியில் சிம்மாசனத்தில் (!) கொலு வீற்றிருக்க அவரை தரிசிக்க வந்த மற்றவர் யாவரும் அச்சமோ மோகமோ இன்றி பக்தியோடு மட்டும் காட்சியளிக்கின்றினர். பெண்டிரை காணவில்லை.

புத்தருக்கும் மாந்தாதாவிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டவே அமராவதி சிற்பிகள் இரண்டையும் வடித்துள்ளனரோ?

அமராவதி சிற்பங்கள் இந்திய கலை வரலாற்றில் முன்னோடிகள். அவற்றின் அமைப்புக்கு பல்லவ சிற்பங்கள் கூட போட்டியில்லை என்கிறார் ஓவியர் சந்துரு. இவர்  சென்னை கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்.


தொடர்புடைய பதிவுகள்


அமராவதியின் நளகிரி சிற்பம் - ஓவியர் சந்துரு (காணொளி)
நகுபோலியன் சிறுகதை - மழ நாட்டு மகுடம்
கல்லிலே ஆடவல்லான் 
பர்த்ருஹரியின் ஒரு கவிதை
Purnagiri - a Tantrapitha
Vaishali

திருத்தம் இதை 18-12-2015இல் முதலில் எழுதிய போது, பாந்துகா சிற்பத்தை மாந்தாதா சிற்பம் என்று தவறாக குறிப்பிட்டிறுந்தேன். இன்று 21-12-2016 திருத்திவிட்டேன்.
பாந்துகா - ஷாஷ்வத் எடுத்த படம்

Saturday, 3 October 2015

கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் படிக்கும் போது அந்த கதையும் வரலாறும் மட்டும் என்னை தாக்கவில்லை. காதலும் வீரமும் சோகமும் உவகையும் சிரிப்பும் வியப்பும் நம் உள்ளத்தில் மூளுவது விசித்திரமல்ல. ஒரு சிறந்த எழுத்தாளன், அதைவிட சிறந்த கதைசொல்லி, இதை எல்லாம் செய்வான்.

கல்கி சிறந்த கதைசொல்லி. 

ஆனால் அதையும் தாண்டி, பல்லவர் காலத்தை கண்முன்னே அவர் கொண்டுவந்த ஆளுமை அற்புதம். குதிரை வேண்டும் என்று ஆயனர் கேட்க, மகேந்திரனின் சங்கோஜமும், இங்கும் அங்கும் தூதுவர் மூலம் தகவல் செல்ல எடுத்து கொண்ட கால அவகாசமும், வியப்பூட்டின. நாம் வாழும் நவீன யுகத்தில் தொலைப்பேசியையும் ரயில்வண்டிகளையும் கார்களையும் விமானங்களையும், சாதாரணமாக கருதும்போது, நாமெல்லாம் மன்னர்களை மிஞ்சிய செல்வந்தர்கள், என்றே எனக்கு வலியுறுத்தியது. வெள்ளத்தை தாண்ட முடியாமல் சாளுக்கிய படையும் நின்றது என்று அறிந்தபோது, பாலங்களின் அருமை புரிந்தது. 

பாலங்களை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. நாடுகளின் எல்லைகளாக பெரிய நதிகளே பல நூற்றாண்டுகள் திகழ்ந்தன. அவற்றை மிஞ்சி பேரரசுகள் அமைந்தது அதிசயம். ஆங்கிலேயர் ஆட்சியில் பாலங்களால் உள்நாட்டு வணிகம் செழித்ததும், பெரும் வரம். மாபெரும் கோயில்களை கட்டிய மன்னர்களால், ஸ்தபதிகளால் பாலங்கள் செய்ய முடியாதது பெரிய புதிர். இதை ஆராயும் கட்டுரையோ நூலோ ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அஜந்தா ஓவியம் பற்றிய தகவல் தான். ஆயிரம் ஆண்டுகளாகியும் மங்காத சிலையும், சாயாத கோயிலும், தேயாத இலக்கியமும், மாறாத சில மரபுகளும் அதுவரை யதார்த்தமாகவே தெரிந்தன. ஆனால் ஆயிரம் ஆண்டு மங்காத ஓவியம், ஆழமாகவும் அகலமாகவும் சிந்தனையை கிளறியது. பாரதநாட்டை, பக்திக்கும் இலக்கியத்திற்கும் உணவிற்கும் மட்டுமே சிறந்த நாடாக நான் அன்று வரை கருதியிருந்தேன். கலைகளிலும் விஞ்ஞானத்திலும் நாம் சாதனைகள் செய்தோம் என்று எனக்கு அன்று வரை தோன்றவில்லை. ஸ்தபதி, சிற்பி என்று சொற்கள் வழக்கில் இருப்பினும், அவர்களது கல்வியும் ஆர்வமும் மரபும் முக்கியத்துவமும் ஏனோ அறிவியல் ஆர்வமுள்ள பலருக்கும் தெரிவதில்லை. 

நாட்டில் பஞ்சம் வரும்போது அதை தீர்க்க ஏதோ கோயில் கட்டினார் என்ற வரட்டு மூடநம்பிக்கை, நம் நாட்டில் மிக பரவலாக உள்ளது. மூலிகைகளை மருந்தாக ஆய்ந்து உணர்ந்து கற்று நூல்செய்த சரகர் சுஷ்ருதர், ஜோதிட கணித நூல்களை இயற்றிய ஆரியபடர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியர் ஆகியோரை அறிவியல் ஞானிகளாக கருதும் பாரத மக்கள், சிற்பிகளை, ஸ்தபதிகளை, விவசாயிகளை, அறிவியல் பயில்வோராக பார்ப்பதில்லை. அறிவுசார் நூல்களை படிப்பவர் சிலரே, ஓரளவேனும் இவர்களின் மரபுகளையும் திறமையும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, ஆங்கில கல்வி மரபில் வந்த பலரும் இதை உணர்வதில்லை.

கல்கி என் கண்களை திறந்துவைத்தார்.

தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில், கவிதையில் சுப்பிரமணிய பாரதி செய்த புரட்சியை விட, கதை உலகில் கல்கி செய்த புரட்சி அகலமானது. சரித்திர நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர் படைக்கு முன்னோடி, கல்கி.

முன்னோடிகள்

பிரெஞ்சு மொழியில் ஜூல்ஸ் வெர்ண் நிலவுக்கு செல்லும் பயணத்தையும், கடல்மூழ்கி கப்பலையும், பலூனில் ஆப்பிரிக்காவை கடக்கும் சாகசத்தையும் நாவல்களாக எழுதி அறிவியல் கதை யுகத்தை தொடங்கி வைத்தார். ஆர்த்தர் கிளார்க், ஐசாக் அசிமோவ், ரே பிராட்பரி, ஸ்டானிஸ்லாவ் லெம், லேரி நிவன், உர்சுளா லிகுயின் என்று பலரும் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த கதைகள் எழுதினார்கள். ஜூல்ஸ் வெர்ணின் ஆழ்ந்த அறிவியல் ஞானம் அவர் கதைகளில் புலப்படும். நான் படித்ததில், ஆர்த்தர் கிளார்க், லேரி நிவன் மட்டுமே அத்தனை ஆழமாக அறிவியலை சார்ந்து நாவல்களை எழுதினார்கள். மற்றவர் கதைகளில் சமூகவியல், அரசியல், காதல், மோதல் என்றே முக்கால்வாசி போகும். இருபதாம் நூற்றாண்டில் நாவல் சிறுகதை தவிற காமிக்ஸ் என்ற சித்திரகதைகளும் (குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஃப்லாஷ் கார்டன் வகையறா), ஸைஃபை சினிமாக்களும் அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி, கற்பனை செய்து அற்புத காவியங்களை தந்தன.

ஆர்த்தர் கோனன் டோயில் ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாயகனை படைத்து துப்பறியும் கதைகளின் யுகத்தை தொடங்கி வைத்தார்; அகாத்தா க்ரிஸ்டி, ஜான் டிக்சன் கார், பெர்ரி மேசன், எல்லரி குயீன், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று துப்பறியும் மர்மகதை எழுத்தாளர்ப்படை பின்தொடர்ந்தது.

யாம்பெற்ற துன்பம் பெருக இவ்வுலகம் என்றே, மெகாத்தொடருக்கு முன்னோடியாய் டால்ஸ்டாய், தோஸ்தோயெவ்ஸ்கி போன்ற ருஷிய எழுத்தாளர்கள், அம்மிக்கல்லளவு நூல்களை எழுதி, புலம்பி எழுதுக கருமம், என்ற நீதியை நிறுவினார்கள்.

கல்கிக்கு முன்னரே வரலாற்று கதைகள் தமிழில் இருந்தாலும் அவரை தொடர்ந்து விக்ரமன், சாண்டில்யன், ஜகச்சிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், பாலகுமாரன் என்று வரிசை நீள்கிறது. மற்றவர் கதைகளை நான் பரவலாக படித்ததில்லை. கல்கி முன்னோடி என்பதில் சந்தேகமில்லை; சமூக நாவலிலோ, பயண கட்டுரையிலோ, சிறுகதையிலோ அவருக்கு இந்த அந்தஸ்த்து இல்லை. சரித்திர நாவலில், அவரே மகேந்திர பல்லவர்.

கலை ஆர்வம்

நாவலை எழுத மட்டும் அவர் தூண்டவில்லை. சிற்பங்களின் மேலும், பக்தி இலக்கியத்தின் மேலும், மன்னர்களின் கலை ஆர்வத்தின் மேலும், ஒரு புதிய ஆர்வத்தை பல்லாயிரக்கணக்கான தமிழரிடம் அவர் தூண்டினார். பாடல் பெற்ற தலமென்றும், தீர்த்த யாத்திரைக்கும் மொட்டையடிக்கவும் பயணித்த தமிழர்களை, பல்லவர் சிற்பம் சோழர் சிற்பம் என்று தேடிச்செல்லவைத்தார்.

ஹிண்டு நாளிதழில் பலவருடங்களுக்கு முன், எழுத்தாளர் கங்காதர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டை புரிந்துகொள்ள சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதை நான் ஆமோதிக்கிறேன்.

மலைக்கணவாயில் பரஞ்சோதி குதிரையில் செல்ல, அவனை சூழ்ந்த சிவந்த மலர்களும் பாறைகளும் அவனது மனதில் அனலாய் கொதித்த ஆர்வமும் அச்சமும் உற்சாகமும் நரம்புகளை புடைத்துக்கொண்டு மேனியெல்லாம் மின்னலாய் சிலிர்க்க, அவ்வப்போது பின் தொடரும் வேறொரு குதிரை சத்தம் கேட்பதும், இது வரை போகாத பாதையில் பரஞ்சோதி மட்டுமல்ல, நாமும் போகிறோம் என்ற ஈடில்லா உணர்ச்சி நம்மை கவ்வும். ஓவியர் மணியம் செல்வத்தை அவர் இல்லத்தில் சந்தித்தப்போது இதே உணர்வை அவர் என்னிடம் பகிர்ந்தார். அவர் தந்தை மணியம் வரைந்த வாதாபி ஓவியங்கள் சுவரிலிருந்து சிரித்தன. கல்கி ஆவியாய் என் காதில் வந்து, அப்பனே, மந்தாகினி மாதிரி மௌனமாய் இருக்காதே, வந்தியத்தேவனை போல் ஏதாவது உளரித்தள்ளு, என்றார். பல்லை இளித்து தலையசைத்தேன்.

பரஞ்சோதியோடு மனம் அஜந்தாவிற்கும் பயணம் சென்றது. அருகிலுள்ள சித்தன்னவாசலை விட தொலைவிலுள்ள அஜந்தாவே வா வா என்று அழைத்தது. அங்கே தீட்டப்பட்ட ஓவியத்தை விட, மங்காத வண்ணத்தின் ரகசியத்தின் மேல் ஆர்வம் பொங்கியது. நான் சிவகாமியின் சபதம் படித்தது 2000இல். அஜந்தாவுக்கு 2006 இல் சென்றேன். ஒரு ஓவியமும் புரியவில்லை. அங்குள்ள ஆட்கள் சொல்வது தவறான கதையெனவே உறுத்தியது. காட்சிகள் ஏதும் புரியவில்லை. ஓவியங்களின் தேய்ந்த நிலை கண்டு மனம் கசந்தது. முந்திய நாள் எல்லோராவை பார்த்ததில் மிரட்சியும் பிரமிப்பும் நிலைத்ததால், கொஞ்சம் ஆறுதல். எல்லோரா சிற்பங்கள் சொல்லும் கதைகள் புரிந்ததே? அஜந்தா ஏன் அடையாளமே தெரியவில்லை? குழப்பமான அனுபவம்.

அஜந்தாவை பற்றி நல்ல நூலிருக்கும், அதை படித்தால் விவரம் கிடைக்கும் என்று பல வருடங்களுக்கு என் மந்த புத்திக்கு தோன்றவில்லை. அங்குள்ள ஓவியங்கள் தமிழ்நாட்டு கோயிலுள்ள ஓவியங்களை விட பல மடங்கு சிறப்பானவை என்று மட்டும் புரிந்தது.

ஒரு கோவிலை தவிர்த்து : காஞ்சி கைலாசநாதர் கோவில்.  
(தொடரும்)

தொடர்புடைய கட்டுரைகள்

2. கல்லிலே ஆடவல்லான்
3. ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்
4. Arthur C Clarke's Magic Postulate

Saturday, 26 September 2015

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்


கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். அளவோடு பக்தி உள்ளவரும், திருவிழாக்களை காணவும், உற்றார் உறவினர் திருமணம், பிறந்தநாள், வேண்டுதல், மொட்டை, என்று ஏதோ காரணத்திற்கு, சமூக வழக்கத்தில் கோயில் செல்கிறோம். கச்சேரி, நாட்டியம், என்று கலை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாதம் வகையறாக்கள் தான் சிறுவயதில் அதிகம் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது

சிறு வயது முதல் நானும் இப்படிதான் கோயிலுக்கு போய் பழக்கப்பட்டேன். சென்னையில் நான் வளர்ந்த மயிலாப்பூரில், அடிக்கடி சென்றது ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலுக்கு தான். அந்த கோயில் உள்ளதோ டி.என்.எஸ்.சி வங்கி வளாகம், என் தந்தை அங்கே கணக்கு வைத்திருந்தார். கவிஞர் வாலியின் மகிமையில் சினிமா பாடல் பெற்ற தலமாகிவிட்டது. அங்கே வடைமாலை நாட்கள் கொண்டாட்டம். அதற்கடுத்து நான் வசித்த மயிலை சிஐடி காலனியிலுள்ள விநாயாகர் கோயில். நேரமிருந்தால் ஆழ்வார் பாடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அங்கே கல் யானை சவாரியும். அல்லது ஞானசம்பந்தர் பாடிய கபலீசுவரர் கோயில். அறுபத்திமூவர் விழாவையும் தெப்பத்தையும் சில முறை ரசித்ததுண்டு. சுமார் பத்து வயதில் வைதீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றேன்.

கோயிலின் பிரம்மாண்டம், தொன்மை, வயல்சூழ்ந்த திணை, எல்லாம் அங்கே தான் முதலில் பாடம். கல்லூரி நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றது கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையிலும் பால்கோவா ஈர்ப்பிலும். அறிவியல் ஆர்வத்திலும் வாலிப கர்வத்திலும், கோயில்களின் புனிதமோ கலையோ தொன்மையோ பெரிதாக என்னை கவரவில்லை. அவை இறந்த காலத்தின் சின்னங்களாகவே தெரிந்தன. 

கம்ப்யூட்டரையும் ராக்கெட்டையும் ரோபோட்டையும் விண்வெளியையும் ஏங்கி ஆவலுடன் பார்த்த என் கண்களுக்கு கோயில்கள் சுவாரசியமாய் இருக்கவில்லை. சக மாணவர்கள் பெண்களை பார்க்க மட்டும் கோயில்கள் செல்வது அவற்றை கொஞ்சம் மட்டம் தட்டின. கோயிலுக்கு வந்த பெண்களும் என் கண்களை கவரவில்லை. 

கோயில் மட்டுமல்ல, கலையும் மதிப்பிலா பண்டம் ஆனது. சினிமா இசை மேல் ஒரு சின்ன மோகம் வந்தது, வேகமாய் பெரும் மோகமாக, ஆர்வமாக மாரியது. இளையராஜா மானசீக குருவானார். நண்பன், சக அரைவாசி சிவராம், இசை வழிகாட்டி ஆனான். அவனுடைய ரசனை என் ரசனை ஆனது. தமிழ் புத்தகங்களை நான் படித்ததில்லை, பள்ளிப்பாடமும், குமுதம் ஆனந்த விகடன் துணுக்குகளும், ரெட்டைவால் ரங்குடுவும், சிரிப்பு திருடன் சிங்காரவேலனும் என் தமிழ் இலக்கிய உலகம். ஆங்கிலத்தில் பல நாவல்களை படித்ததுண்டு. ஆங்கில படங்களை தான் ரசித்தேன்; கல்லூரியில் பார்க்கத்தொடங்கிய சினிமா எதுவும் ஈர்க்கவில்லை.

அமெரிக்கா சென்ற பின் குமுதம் வகையறா சுவரொட்டி வகையறா தமிழ் இலக்கியமும் போனது. மேல் படிப்பு முடிந்து, கணினி தொழிலில் ஐந்தாண்டுகள் சென்றன. இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன். சியாட்டிலிலிருந்து கலிஃபோர்ணியாவுக்கு இடம் மாற நினைத்து, விசா வாங்க மீண்டும் சென்னை வந்த காலம், பொன்னியின் செல்வன் புகழை சிலர் பாடியதால் ஒரு புத்தக கடையில் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வனை வாங்கினேன். கலிஃபோர்ணியாவில் வாசிக்க எடுத்த பொழுது தான் உணர்ந்தேன். வாங்கியது சிவகாமியின் சபதம்.

பத்து பக்கத்தில் பரஞ்சோதி என்னை கவர்ந்தான். முப்பது பக்கத்தில் நரசிம்ம வர்மன் நண்பனானான். சிவகாமி கண் சிமிட்டினாள். மலைக்கணவாயில் பரஞ்சோதி செல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது. யானோ வாசகன்? யானே க்ஷத்திரியன்! புலிகேசி படையுடன் காஞ்சிக்கு வருமுன் மகேந்திர வர்ம பல்லவன், என்னை கைது செய்தான். அடடா! சாகசத்தில் கபில் தேவையும், கலைத்திறனில் இளையராஜாவையும், வீரத்தில் அலிஸ்டேர் மாக்லீன் கதை நாயகர்களையும், நவரசத்தில் லியோணார்டோ டாவின்சியையும், சிந்தனைத்தெளிவில் காந்தியையும் சர்ச்சிலையும் மிஞ்சி, நம் காஞ்சிபுரத்தில் விசித்திரசித்தன் ஒருவன் இருந்தான். இவனை இதுநாள் வரை அறியாமல் போனோமே என்று உள்ளம் நொந்தது.


கபட நாடக கண்ணனை போல் கல்கி சிரித்தார்.

(மனம் வணங்கும் போது தொடரும்...)

Monday, 30 September 2013

கம்பு அடை

கல்கியின் “சிவகாமியின் சபதம்” கலை ஆர்வம் மட்டும் தூண்டாமல் சுவை ஆர்வமும் தூண்டியது. கம்பு அடை ருசிக்க ஆவல் வந்தது. சமையல்காரர் ராமசாமியிடம் கேட்டேன் – அவர் ராகி அடை செய்ததாக நினைவு. சில ஆண்டுகளுக்கு பின், வேறு சில சமையல்காரர்களுக்கு வந்து சென்று, என் இல்லத்தில் இன்று சமையல் செய்யும் இந்திரா அம்மா வந்தார். அவரும் அதே ராகி அடை செய்தார். வெங்காய்ம் கலந்த கார அடையும், வெல்லம் கலந்த இனிப்பு அடையும்.

சமீபத்தில் தன் சொந்த ஊராம் சேலத்திற்கு சென்ற பொழுது, கம்பு அடை மாவை வாங்கி வந்து, முந்தாம் நாள் – சனிக்கிழமை - செய்து கொடுத்தார். தொட்டுக்க வெல்லம்-வெண்ணையும், வெங்காய சட்டினியும் சுமார் தான். ஆனால் சாம்பார் ஒஹோ! பிரமாதம்.