Showing posts with label நகுபோலியன். Show all posts
Showing posts with label நகுபோலியன். Show all posts

Friday, 18 December 2015

மாந்தாதா Mandhata

மாந்தாதா - அமராவதி சிற்பம் 
Mandhata panel - Amaravati gallery


मान्धाता च महीपतिः कृतयुगालङ्कारभूतो गतः
सेतुर्येन महोदधौ विरचितः क्वासौ दशास्यान्तकः।
अन्ये चापि युधिष्ठिरप्रभृतयो याता दिवं भूपते
नैकेनापि समं गता वसुमती मुञ्ज त्वया यास्यति।।

பொன்னியின் செல்வன் நாவலின் மணிமகுடம் அத்தியாயத்தில், கடம்பூர் அரண்மணையில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை கட்டியக்காரன் அறிவிக்கும்போது மநுமாந்தாதா என்று தொடங்க, “மநு சரி, அது யார் மாந்தாதா?” என்று ஐயம் எழுந்தது. சென்னை எழும்பூர் அமராவதி சிற்பங்களை காணுகையில் மாந்தாதா என்ற மாமன்னன் பெயர் கண்டு, இம்மன்னனுக்கும் பௌதத்திற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் வளர்ந்தது. போஜ ராஜன் தன் ஒரு பாடல், இதே மாந்தாதாவின் பெயரில் தொடங்கியதை கண்டு, ஐயம் வெடித்தது. மகேந்திர வர்ம பல்லவனுக்கு கற்பனையிலும் கலை ஆர்வத்திலும் படைப்பாற்றலிலும் விசித்திர சிந்தனையிலும் போஜ ராஜனை மட்டுமே ஒப்பிடலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் முதல் கலை உலாவின் தொடக்கத்தில் சொன்னதும், நினைவுக்கு வந்தது.

நகுபோலியன் பாரதி பாலு இந்த கவிதையை விளக்கினார். போஜன் சிறுவனாக இருந்த பொழுது அவன் சித்தப்பன் முஞ்சன் அவனை கொன்று சிம்மாசனம் சிம்மாசனம் பறிக்க முயன்றதாக ஒரு கதை உண்டு. சூழ்ச்சியை அறிந்துகொண்ட போஜன், தப்பிவிட்டு, இந்த கவிதையை புனைந்தானாம். இதன் பொருள்: “அரசகுல திலகங்கள் மாந்தாதாவும் ராமனும் யுதிஷ்டிரனும் இறந்தபொழுது இந்த பூமி அவர்களோடு போகவில்லை, அட முஞ்சா உன்னோடு போவாள் என்று நினைத்தாயோ?” அழுத்தமான கேள்வி. சொல்லமைப்பும் அற்புதம். துக்கமும் காழ்ப்பும் நீரில் கலந்த உப்பை போன்ற கலந்த தாக்கம்.

பாடலை தமிழில் படித்து, சொல் பொருள் பார்ப்போம்.

மாந்தா⁴தா ச மஹீபதி​: க்ருʼதயுகா³லங்காரபூ⁴தோ க³த​:
ஸேதுர்யேன மஹோத³தௌ⁴ விரசித​: க்வாஸௌ த³ஸா²ஸ்யாந்தக​:|
அன்யே சாபி யுதி⁴ஷ்டி²ரப்ரப்⁴ருʼதயோ யாதா தி³வம்ʼ பூ⁴பதே
நைகேனாபி ஸமம்ʼ க³தா வஸுமதீ முஞ்ஜ த்வயா யாஸ்யதி||

ராமனும் யுதிஷ்டிரனும் இதிகாச புருஷர்கள். இவர்களோடு ஒப்பிட மாந்தாதா யார்? இதுவே பாடலின் மற்றொரு பெருஞ்சுவை. நாம் மறந்து போன வரலாற்றின் ஆழமும் இங்கே மிரட்டுகிறது. துவாபர யுகத்தின் இதிகாச மன்னன் யுதிஷ்டிரன்; திரேதா யுகத்தின் இதிகாச மன்னன் ராமன்; கிருதாயுகத்தின் புராண மன்னன் மாந்தாதா.
கிருதாயுக அலங்கார மஹிபதி (மகாராஜன்) மாந்தாதாவின் உடலும்(பூத) சென்றுவிட்டது(கத). பெருங்கடலில் (மஹோததி) சேது படைத்து தசமுகன் (தஷாஸ்ய) ராவணனை அந்தகம் (மரணம்) செய்தவன் எங்கே (க்வா)?  யுதிஷ்டிரனும் சொர்கம் (திவம்) சென்றான் (யாதா). ஒருவனோடும் (ஏகேன) சேர்ந்து (ஸமம்) ந கதா (போகவில்லை) வஸுமதீ (பூமி). முஞ்சா உன்னோடு (த்வயா) யாஸ்யதி (போவாளோ?)
{ந + ஏகேன + அபி = நைகேனாபி}

ராமாயணம் மகாபாரதம் தெரிந்த அளவு நமக்கு புராணக்கதைகள் தெரிந்திருப்பதில்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் அமராவதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் போஜன் காலத்திலும் மாந்தாதா நினைவிலிருந்தான்.

இந்த கவிதையும், அந்த முஞ்சன் சம்பவமும் நம்பத்தகாதது என்கிறார் காஞ்சி விஷ்வ வித்யாபீட வடமொழி பேராசிரியர் சங்கரநாராயணன். அதாவது போஜன் இக்கவிதை எழுதினான் என்பதே சந்தேகமானது. இருந்தாலும் மாந்தாதவை பற்றிய அழகான கவிதை என்பதால் எழுதியுள்ளேன். மாந்தாதாவின் பிறவி கதை இதைவிட நம்பகத்தன்மை குறைவானது. இருக்கட்டும்.

சிற்ப வடிவம் மிகவும் அழகு. சபை நடுவே கொலுவீற்றியுள்ள மாந்தாதாவின் கம்பீரமும், செருக்கும், மன்னனுக்கே உரிய தன்னம்பிக்கையும் மிளிர்கின்றன. அவனே பின்னே உள்ள அரசகுல மகளிரும் சாமரம் வீசுவோரும் கூட அதே செருக்கில் மிதக்கின்றினர்; அவன் வலது பக்கமுள்ள பெண்டிர் முகங்களில் மோகமோ காதலோ வியப்போ பொங்குகிறது. அவன் காலடியில் அமர்ந்து பரிசுகொடுப்போரின் மிகவும் தாழ்ந்த நிலையும் மன்னனின் செருக்குக்கு நேர்மாறாக பணிவு ததும்புகின்றன. அதிகாரத்திற்கும் அரசகம்பீரத்திற்கும் கிடைக்கும் மரியாதை இவை. மன்னனின் வலது பக்கத்தில் காணும் ஊரோர் செல்வந்தர் கூனிகுறுகாமலிருப்பினும், பவ்யமாகவே உள்ளனர்.

வேறோரு சிற்பத்தில் புத்தர் போதிமரத்துக்கடியில் சிம்மாசனத்தில் (!) கொலு வீற்றிருக்க அவரை தரிசிக்க வந்த மற்றவர் யாவரும் அச்சமோ மோகமோ இன்றி பக்தியோடு மட்டும் காட்சியளிக்கின்றினர். பெண்டிரை காணவில்லை.

புத்தருக்கும் மாந்தாதாவிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டவே அமராவதி சிற்பிகள் இரண்டையும் வடித்துள்ளனரோ?

அமராவதி சிற்பங்கள் இந்திய கலை வரலாற்றில் முன்னோடிகள். அவற்றின் அமைப்புக்கு பல்லவ சிற்பங்கள் கூட போட்டியில்லை என்கிறார் ஓவியர் சந்துரு. இவர்  சென்னை கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்.


தொடர்புடைய பதிவுகள்


அமராவதியின் நளகிரி சிற்பம் - ஓவியர் சந்துரு (காணொளி)
நகுபோலியன் சிறுகதை - மழ நாட்டு மகுடம்
கல்லிலே ஆடவல்லான் 
பர்த்ருஹரியின் ஒரு கவிதை
Purnagiri - a Tantrapitha
Vaishali

திருத்தம் இதை 18-12-2015இல் முதலில் எழுதிய போது, பாந்துகா சிற்பத்தை மாந்தாதா சிற்பம் என்று தவறாக குறிப்பிட்டிறுந்தேன். இன்று 21-12-2016 திருத்திவிட்டேன்.
பாந்துகா - ஷாஷ்வத் எடுத்த படம்

Monday, 31 August 2015

எல்லீசனின் தமிழ்-சமஸ்கிருத கவிதை

இரண்டு மொழிகளை கலந்து எழுதும் இலக்கியம், மணிப்பிரவாளம்.

ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி..

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி..

போன்ற தமிழ் ஆங்கில மணிப்பிரவாள பாடல்கள் நமக்கு சினிமா வழியில் தெரிந்தவையே. ஆனால் தமிழ் ஸமஸ்கிருத மணிப்பிரவாள பாடல்களும் ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்தன. “வதனமே சந்திர பிம்பமோ” என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடலில் முதல் மூன்று சொற்களும் தமிழில் கலந்த வடமொழி சொற்கள். ஆனால் இவை யதார்த்தமாக சேர்ந்த அயல்மொழிகளை சேர்த்துக்கொண்டு இயற்றப்பட்டவை. பாரதி எழுதிய சுதேசமித்திரன் பத்திரிகையில் வரும் இவ்வகை மணிப்பிரவாள நடையை கிண்டலடித்து, திருவிக நடத்திய நவசக்தி பத்திரிகையில் அவர் கையாண்ட தூயதமிழை முன்மொழிந்து கல்கி எழுதியதை சிலர் படித்திருக்கலாம்.

பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சினிமா வருவதற்கு முன்பு ஒரு சில இலக்கியங்களில், யதார்த்தமாக அன்றி, வலிந்தே இருமொழிகளிலும் இயற்றப்பட்டன. இவ்வகையில் ஒரு கவிதை “கீசக வதம்”. கவிஞர் பெயர் மறந்துவிட்டேன். இந்நூலை அடையாறில் கே.வி.ஷர்மா நூலகத்தில் நகுபோலியன் எனும் பாரதி பாலுவிற்கும் எனக்கும் நூலகர் அச்சுத பட், எடுத்துக்கொடுத்தார். அதில் சென்னைப்பட்டணத்து எல்லீசனின் அறிமுக உறையும், அவர் இயற்றிய மணிப்பிரவாள கவிதையும் இருந்தன. நேற்று ஆழ்வார்பேட்டையில் டாக் செண்டரில் எல்லீசனை பற்றி நான் பேசிய பொழுது இக்கவிதையை எடுத்துரைத்தேன். அக்கவிதை கீழே.

அரும்பை போல  तव दन्त पङ्कतिः   தவ தந்த பங்க்தி
குரும்பை போல  कुचमण्डल द्वयम्     குசமண்டல த்வயம்
கரும்பை போல  मदुरा च वाणि        மதுரா ச வாணி
இரும்பை போல हृदयम्  किमासीत्    ஹ்ருதயம் கிம் ஆஸீத்

Like white flowers, are your teeth
Like coconut shells, are your bosoms
Like sugarcane, is your honeyed speech
Like iron, why is your heart ?

Related Essays

1. Trautmann on Ellis
2. எல்லீசனின் கல்வெட்டு - An Englishman's Tamil inscription
3.  எல்லீசனின் ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி 
4. பர்த்ருஹரியின் கவிதை - தமிழ் புனைவு
5. வராஹமிஹிரரின் அகத்தியர் வாழ்த்து 

Audio recording of Ellis Lecture for Lions Club

Sunday, 26 April 2015

மண்ணை பிழிந்து எண்ணெய் எடுக்கலாம்

மண்ணை பிழிந்து எண்ணெய் எடுக்கலாம்
கானல் நீரால் தாகம் தீரலாம்
முயன்று தேடின் முயல்கொம்பு கிட்டலாம்
மூர்க்கன் விருப்பம் தீர்ப்பது அரிது    

பர்த்ருஹரி என்ற மன்னனின் நீதிசதகத்திலிருந்து ஒரு பாடல் இது. என் மொழிப்பெயர்ப்பு. ஸமஸ்க்ருத மூலம் கீழே. ஆங்கிலத்தில் இக்கருத்தை சொல்லும் ஒரு பழமொழி உண்டு – “Against stupidity, the Gods themselves contend in vain.” இதன் பொருள் - “முட்டாள்தனத்தோடு, தெய்வங்களும் வீணாகவே மோதுகின்றனர்.” இப்பழமொழியின் ஒரு பகுதியை எடுத்து ஐசக் அசிமோவ்  The Gods Themselves என்று ஒரு நூலை எழுதியுள்ளார்.

நகுபோலியன், பாரதி பாலு, டெல்லி பாலு என்று பல பெயர்களை சூடிய பாலசுப்ரமணியனின் ஸம்ஸ்க்ருத வகுப்பில் ஒரிரு வருடத்திற்கு முன் கற்றது; கற்றதில் பிடித்தது.

लभेत सिकतासु तैलमपि यत्नतः पीडयन्
पिबेच्चमृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।।
कदाचिदपि पर्यटन् शशविषाणम् आसादयेत्
तु प्रतिनिविष्ट मूर्खजनचित्तमाराधयेत् ।।
லபேத ஸிகதாஸு தைலமபி யதனத: பீடயன்
பிபேச்ச ம்ருகத்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்தித:
கதாசிதபி பர்யடன் ஷஷவிஷாணம் ஆஸாதயேத்
ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கஜனசித்தம் ஆராதயேத்

பதம் பிரிப்பு

லபேத - கிடைக்கலாம் [லாபமாகலாம்]
ஸிகதாஸு - மணலில் [ஸிகதா - மணல்; ஸு - இல் எனும் விகுதி]
தைலமபி - எண்ணெயும் [தைலம் - எண்ணெய் ; அபி - கூட]
யத்னத: - முயற்சியால் [யத்ன - முயற்சி; த: - இதிலிருந்து எனும் விகுதி]
பீடயன் - பிழிந்து
பிபேச்ச - குடிக்கலாம் [ பிபேத்த + ச] 
ம்ருகத்ருஷ்ணிகாஸு  - கானலில் [ ஸு - எனும் விகுதி]
ஸலிலம் - நீர்
பிபாஸார்தித: - தாகத்தால் [த: - இதிலிருந்து எனும் விகுதி]
கதாசிதபி = கதா + சித் + அபி
கதா - எங்கோ
சித் - அசைச்சொல்
அபி - கூட
பர்யடன் - தேடி
ஷஷ - முயல்
விஷாணம் - கொம்பு
ஆஸாதயேத் - கிடைக்கலாம்
ந - இல்லை
து - அசைச்சொல்
ப்ரதிநிவிஷ்ட - அசைக்கமுடியாமல் நிற்கும்
மூர்க்கஜனசித்தம் - மூர்க்கரின் விருப்பம்
ஆராதயேத் - நிரைவேற்றலாம்

சில ஸம்ஸ்க்ருத கவிதைகள் - தமிழாக்கம்

1. வராஹமிஹிரரின் அகத்தியர் கவிதை 
2. மஹாவீரரின் கணித சார சங்கரஹம்

என் தமிழ் கவிதைகள்

நகுபோலியனின் சிறுகதை - மழநாட்டு மகுடம்



Friday, 25 July 2014

மழநாட்டு மகுடம்

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

     அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின்  அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது  ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை - பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின்  பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் - ''கோப்பெருந்தேவி எங்கே?''

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ''கோப்பெருந்தேவி எங்கே?'' - அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது - பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் - அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் - இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ''மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்'' என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே  திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (த தி கி ட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ''திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்'' என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ''முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்'' இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ''முக்குடுமி கொண்ட முதுபல்லவன்'' இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. 'எக்ஸ்' போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே - சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? - சமண சுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம்.  (தொடரும்)                                                                     
பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ''மழநாட்டு மகுடம்'' - வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இதுபற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ''அரபு நாட்டு அரசுரிமை''யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ''கடாரத்துக் கன்னி'' என்றாவது மாற்றிப்போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்துகொண்டு அதற்காவனசெய்வதுதான்.
தங்கள் ''நகுபோலியன்''
                                                                            
பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா. அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக் கீற்றும் நாமக் கீற்றும் சேர்ந்த (18 - ம் புள்ளி ஆடு புலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்கு விழி மங்கை படத்தையும் மறக்காமல் 'லா.சு.ர.' வைப் போடச் சொல்லுங்கள். – பாலு



கோபுவின் குறிப்பு: “மழநாட்டு மகுடம்” சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன் கணையாழி பத்திரிகையில் வந்தது. ஆசிரியர் நகுபோலியன் என்ற பாலசுப்ரமணியன் இதை இந்த வராஹமிஹிராகோபு வலைத்தளத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தார். கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தார். 

அப்பொழுது நகுபோலியன் யார்  என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் மறந்திருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தில்லியிலிருந்து சென்னை மனை மாறி இவர் வந்தபொழுது, தானே நகுபோலியன் என்று ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் தெரிவித்து, ஒரு மர்மத்தை முடிச்சவித்து, இன்ப அதிர்ச்சி தந்தார்.

இவரிடம் நான் நான்கு வருடங்களாக ஸமஸ்கிருதம் பயின்று வருகிறேன்.  “பாரதி பாலு” என்று தில்லியல் இவர் பிரபலம். இப்பத்திவின் இறுதியில் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  இவர் கணித நிபுணர், பன்முக புலவர். கே.வி.சர்மா நூலகத்திலும் அவர் இல்லத்திலும் இவருடன் ஆரியபடீயம், லீலாவதி, பஞ்சசித்தாந்திகம், ப்ரிஹத் சம்ஹிதை, வேதாங்க ஜ்யோதிஷம், கணித சார சங்க்ரஹம் போன்ற விண்ணியல் நூல்களை திக்கி திக்கி தடுமாறி படித்து கலந்து பேசி பொருள்கேட்டு ரசித்து ருசித்த சுவையான நாட்கள்  பற்பல.

Friday, 7 March 2014

ரா அ பத்மநாபன் அஞ்சலி

எழுத்தாளர் ரா.அ.பத்மநாபன் சமீபத்தில் காலமானார். இவரை எனக்கு தெரியாது, கேள்விபட்டதில்லை. அவர் நினைவில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற் மார்ச் 2, 2014 அன்று திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் சரஸ்வதி வெங்கட்ராம் பள்ளியில் எழுத்தாளர் நரசையா தலைமையில் நடந்தது. துவக்கத்தில் சில பாரதி பாடல்களை மூவர் பாடினர் – நான் பெயர்களை குறித்துக்கொள்ளவில்லை, மன்னிக்கவும். விவேகனந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வா.வே.சு, கார்ட்டூனிஸ்ட் மதன், ஔவை நடராசன் பேசினார்கள். பல பிரபலங்கள் வந்திருந்தனர். பேராசிரியர் சுவாமிநாதனுக்கும், நகுபோலியன் “பாரதி பாலு”-விற்கும் சாரதியாய் நானும் சென்றேன்.
மேடையில் மண்டயம் பார்த்தசாரதி, ஔவை நடராசன், வாவேசு, நரசையா, குப்புசாமி

காணாமல் போன பாரதியின் படைப்புகளை தேடி கண்டெடுத்து “பாரதி புதையல்” என்று அளித்தவர் பத்மநாபன் என்று வாவேசு புகழ்ந்தார். பாரதியின் ஐந்து புகைப்படங்களில் இரண்டை உலகுக்கு தந்தவராம். சமீபத்தில் நரசையாவின் நூல்களை கணக்கெடுக்கும் பணி செய்கையில், பத்மநாபனின் கையெழுத்தையும் குறிப்புகளையும் பல நூல்களில் பார்த்தேன். மதன், ராஅப தன்னை, ”நன்றாக வரைய கற்று கொண்டு கலைஞனாய் தேர்ந்த பின் வா” என புறந்தள்ளாமல், “வரைய வரைய கற்று தேர்ந்துவிடுவாய்” என தன்னை ஊக்குவித்தவர் என்று மெய்சிலிர்த்தார்.
நகுபோலியன் ’பாரதி’ பாலசுப்ரமணியனும், மண்டயம் பார்த்தசாரதியும்

கூட்டத்தில் அமர்ந்திருந்த மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார், மேடை ஏறி, சில நேரம் பேசினார். இவர் சுவதேசமித்திரன் பத்திரிகையின் எடிட்டர் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரின் மகன் – 1917எல் பிறந்தவர், ராஅபவும் அதே வருடமாம். 94 வயதில் என்ன லாவகமாய் மேடை ஏறினார், கம்பீரமாய் பேசினார். முடிந்தபின் ”பாரதி” பாலுவுடன் நீள பேசிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் பாரதி, வாவேசு ஐயர், சுப்ரமணிய சிவா, அரவிந்தகோஷ், கப்பலோட்டிய தமிழர் வாவுசி ஐவரும் சேர்ந்து, ஒரு பாரத மாதா சிலையை படைத்தனர் – களிமண்ணில். பாரத மாதாவிற்கு என்ன நகை தக்கது என்று மற்றவர் யோசிக்க, கங்கையும் யமுனையும் மிஞ்சி அவளுக்கு நகையில்லை என்றார் பாரதி. இந்த சிலை பல்லாண்டு மண்டயம் குடும்பத்தில் இருந்தது. இருந்தாள். பின்னொரு நாள் நகுபோலியன் பாலசுப்ரமணியனின் டெல்லி மற்றும் சென்னை இல்லங்களில் அவர் நடத்திய பாரதி தமிழ் வாசிப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினாள். அவரிடம் நான் தமிழும் ஸமஸ்கிருதமும் பாரதியும் ஔவையும் கணிதமும் கற்று வருகிறேன். கோட்டூர்புரத்தில் பிரதிஞாயிறு நடக்கும் இந்த இலக்கண கூடத்திற்கு யாவரும் வரலாம். அவருடன் ராஜசிம்மன் கல்வெட்டை ஒரு நாள் முழுக்க தொகுக்க முயன்றது ஒரு மாபெரும் அனுபவம்.
 
பாரதி வாசிப்பு
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதற்கே இப்பதிவு.

பின்சேர்ப்பு: ரா.அ.ப-வை பற்றி புலவர் பசுபதி எழுதிய கட்டுரை. நன்றி புலவர் பேராசிரியர் அனந்தநாராயணனுக்கும்,  “நகுபோலியன்” பாலசுப்ரமணியனுக்கும்