Friday, 7 March 2014

ரா அ பத்மநாபன் அஞ்சலி

எழுத்தாளர் ரா.அ.பத்மநாபன் சமீபத்தில் காலமானார். இவரை எனக்கு தெரியாது, கேள்விபட்டதில்லை. அவர் நினைவில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற் மார்ச் 2, 2014 அன்று திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் சரஸ்வதி வெங்கட்ராம் பள்ளியில் எழுத்தாளர் நரசையா தலைமையில் நடந்தது. துவக்கத்தில் சில பாரதி பாடல்களை மூவர் பாடினர் – நான் பெயர்களை குறித்துக்கொள்ளவில்லை, மன்னிக்கவும். விவேகனந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வா.வே.சு, கார்ட்டூனிஸ்ட் மதன், ஔவை நடராசன் பேசினார்கள். பல பிரபலங்கள் வந்திருந்தனர். பேராசிரியர் சுவாமிநாதனுக்கும், நகுபோலியன் “பாரதி பாலு”-விற்கும் சாரதியாய் நானும் சென்றேன்.
மேடையில் மண்டயம் பார்த்தசாரதி, ஔவை நடராசன், வாவேசு, நரசையா, குப்புசாமி

காணாமல் போன பாரதியின் படைப்புகளை தேடி கண்டெடுத்து “பாரதி புதையல்” என்று அளித்தவர் பத்மநாபன் என்று வாவேசு புகழ்ந்தார். பாரதியின் ஐந்து புகைப்படங்களில் இரண்டை உலகுக்கு தந்தவராம். சமீபத்தில் நரசையாவின் நூல்களை கணக்கெடுக்கும் பணி செய்கையில், பத்மநாபனின் கையெழுத்தையும் குறிப்புகளையும் பல நூல்களில் பார்த்தேன். மதன், ராஅப தன்னை, ”நன்றாக வரைய கற்று கொண்டு கலைஞனாய் தேர்ந்த பின் வா” என புறந்தள்ளாமல், “வரைய வரைய கற்று தேர்ந்துவிடுவாய்” என தன்னை ஊக்குவித்தவர் என்று மெய்சிலிர்த்தார்.
நகுபோலியன் ’பாரதி’ பாலசுப்ரமணியனும், மண்டயம் பார்த்தசாரதியும்

கூட்டத்தில் அமர்ந்திருந்த மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார், மேடை ஏறி, சில நேரம் பேசினார். இவர் சுவதேசமித்திரன் பத்திரிகையின் எடிட்டர் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரின் மகன் – 1917எல் பிறந்தவர், ராஅபவும் அதே வருடமாம். 94 வயதில் என்ன லாவகமாய் மேடை ஏறினார், கம்பீரமாய் பேசினார். முடிந்தபின் ”பாரதி” பாலுவுடன் நீள பேசிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் பாரதி, வாவேசு ஐயர், சுப்ரமணிய சிவா, அரவிந்தகோஷ், கப்பலோட்டிய தமிழர் வாவுசி ஐவரும் சேர்ந்து, ஒரு பாரத மாதா சிலையை படைத்தனர் – களிமண்ணில். பாரத மாதாவிற்கு என்ன நகை தக்கது என்று மற்றவர் யோசிக்க, கங்கையும் யமுனையும் மிஞ்சி அவளுக்கு நகையில்லை என்றார் பாரதி. இந்த சிலை பல்லாண்டு மண்டயம் குடும்பத்தில் இருந்தது. இருந்தாள். பின்னொரு நாள் நகுபோலியன் பாலசுப்ரமணியனின் டெல்லி மற்றும் சென்னை இல்லங்களில் அவர் நடத்திய பாரதி தமிழ் வாசிப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினாள். அவரிடம் நான் தமிழும் ஸமஸ்கிருதமும் பாரதியும் ஔவையும் கணிதமும் கற்று வருகிறேன். கோட்டூர்புரத்தில் பிரதிஞாயிறு நடக்கும் இந்த இலக்கண கூடத்திற்கு யாவரும் வரலாம். அவருடன் ராஜசிம்மன் கல்வெட்டை ஒரு நாள் முழுக்க தொகுக்க முயன்றது ஒரு மாபெரும் அனுபவம்.
 
பாரதி வாசிப்பு
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதற்கே இப்பதிவு.

பின்சேர்ப்பு: ரா.அ.ப-வை பற்றி புலவர் பசுபதி எழுதிய கட்டுரை. நன்றி புலவர் பேராசிரியர் அனந்தநாராயணனுக்கும்,  “நகுபோலியன்” பாலசுப்ரமணியனுக்கும்

No comments:

Post a Comment