கடந்த
சில நாட்களாக வியாழன் எனும் ஜுப்பிட்டர் கிரகமும், பீடல்ஜுஸ் என்னும் திருவாதிரை நட்சத்திரமும், ஓரையானின் அரைஞாண் கயிறு எனும் மூன்று
நட்சத்திரங்களும், ரைஜல் நட்சத்திரமும் ஒரு நேர்வரிசையில் காணலாம். குறிப்பிடும் நட்சத்திரங்கள்
யாவும் ஓரையான் மீன்குழுவை சேர்ந்தவை. ரைஜலுக்கு தமிழில் பெயரில்லை. ஓரையானின் மூன்று
நட்சத்திரங்களுக்கு ஆதிகால ஐரோப்பிய பெயர் இருந்ததா என்று தெரியாது – ஆனால் அல்நிதக்,
அல்நிலம், மிந்தகா என்று அரபு பெயருண்டு.
இரவில்
நிலவுக்கருகில் வெள்ளி கிரகமே மிகவும் பிரகாசமாய் மின்னும். இரண்டாம் இடம் வியாழனுக்கு.
சுமார் இரவு எட்டு மணிமுதல் தலைக்குமேல் மிகவும் ஜொலிப்பது வியாழன். கொஞ்சம் தெற்கே
சிவந்து காண்பது திருவாதிரை – இது சூரியனை விட ஐம்பதாயிரம் மடங்கு பெரிதானது. நம் கண்ணுக்கு
தெரியும் மிக பெரிய நட்சத்திரம் இதுவே.
ஓரையானின்
வால் போல் தென் கிழக்கே சிரியஸ் மின்னும். நட்சத்திரங்களில் மிகப் பிரகாசமானது [வெள்ளியும்
வியாழனும் கிரகங்கள்]. சிரியஸுக்கு ரிக் வேதத்தில் வ்ருகம் என்ற பெயர் உண்டு. ஆர்யபடர்
தொடங்கி வரும் {ஜோதிட} விண்ணியல் நூல்களில் வ்ருகத்திற்கு இடம் இல்லை என்று நினைக்கிறேன்.
எகிப்திய விண்ணியலில் சிரியஸ் முதலிடம் கொண்டது – ஒரு காலத்தில், சிரியஸ் கீழ் வானில்
தோன்றும் நாள், நைல் நதியில் வெள்ளம் பெருகும்.
ஸ்டெல்லேரியம் இலவச மென்பொருளிலிருந்து படத்தை எடுத்தேன். நீங்களும் களிக்கலாம் – நண்பர்கள் ராம்கி,
கிஷோர் ரசித்துள்ளனர்.
தென்
திசையில் தூரத்தில் பளிச்சிடுவது கேனோபஸ் என்னும் அகத்தியன். சிரியஸுக்கு அடுத்து வானில்
காணும் இரண்டாம் பிரகாச நட்சத்திரம். அகத்திய முனிவனையும் நட்சத்திரத்தையும் புகழ்ந்து
வராகமிகிரர் என்னும் ஆறாம் நூற்றாண்டு ஜோதிட ப்ருஹத் சம்ஹிதையில் கவிதை மழை பெய்துள்ளார்
– முதல் பாடல் இங்கே.
வியாழன்-வ்ருகம்-அகத்தியன்
வேறொரு நேர்கோட்டில் இருப்பதை இன்னும் சில நாட்கள் காணலாம்.
No comments:
Post a Comment