Friday 25 July 2014

மழநாட்டு மகுடம்

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

     அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின்  அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது  ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை - பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின்  பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் - ''கோப்பெருந்தேவி எங்கே?''

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ''கோப்பெருந்தேவி எங்கே?'' - அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது - பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் - அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் - இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ''மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்'' என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே  திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (த தி கி ட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ''திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்'' என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ''முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்'' இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ''முக்குடுமி கொண்ட முதுபல்லவன்'' இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. 'எக்ஸ்' போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே - சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? - சமண சுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம்.  (தொடரும்)                                                                     
பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ''மழநாட்டு மகுடம்'' - வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இதுபற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ''அரபு நாட்டு அரசுரிமை''யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ''கடாரத்துக் கன்னி'' என்றாவது மாற்றிப்போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்துகொண்டு அதற்காவனசெய்வதுதான்.
தங்கள் ''நகுபோலியன்''
                                                                            
பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா. அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக் கீற்றும் நாமக் கீற்றும் சேர்ந்த (18 - ம் புள்ளி ஆடு புலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்கு விழி மங்கை படத்தையும் மறக்காமல் 'லா.சு.ர.' வைப் போடச் சொல்லுங்கள். – பாலு



கோபுவின் குறிப்பு: “மழநாட்டு மகுடம்” சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன் கணையாழி பத்திரிகையில் வந்தது. ஆசிரியர் நகுபோலியன் என்ற பாலசுப்ரமணியன் இதை இந்த வராஹமிஹிராகோபு வலைத்தளத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தார். கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தார். 

அப்பொழுது நகுபோலியன் யார்  என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் மறந்திருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தில்லியிலிருந்து சென்னை மனை மாறி இவர் வந்தபொழுது, தானே நகுபோலியன் என்று ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் தெரிவித்து, ஒரு மர்மத்தை முடிச்சவித்து, இன்ப அதிர்ச்சி தந்தார்.

இவரிடம் நான் நான்கு வருடங்களாக ஸமஸ்கிருதம் பயின்று வருகிறேன்.  “பாரதி பாலு” என்று தில்லியல் இவர் பிரபலம். இப்பத்திவின் இறுதியில் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  இவர் கணித நிபுணர், பன்முக புலவர். கே.வி.சர்மா நூலகத்திலும் அவர் இல்லத்திலும் இவருடன் ஆரியபடீயம், லீலாவதி, பஞ்சசித்தாந்திகம், ப்ரிஹத் சம்ஹிதை, வேதாங்க ஜ்யோதிஷம், கணித சார சங்க்ரஹம் போன்ற விண்ணியல் நூல்களை திக்கி திக்கி தடுமாறி படித்து கலந்து பேசி பொருள்கேட்டு ரசித்து ருசித்த சுவையான நாட்கள்  பற்பல.

2 comments:

  1. ’மழநாட்டு மகுட’த்தை நிறுத்தாமல் மேலும் தொடர்வாரா நகுபோலியன் ?
    ஆவலுடன்,
    கடாரத்துக் கன்னி !!!

    ReplyDelete
  2. Blessed to be a Comrade in அவர் நீழலில் இலக்கியம் 'ரசித்து ருசித்த' பூனைகள்

    ReplyDelete