Showing posts with label Indira. Show all posts
Showing posts with label Indira. Show all posts

Friday, 10 July 2015

சுவைத்ததும் ரசித்ததும்


சமையல் கலைஞர் வாழ்த்து 

தின்ற உளவாத தின்னாத கூறல்
நன்றிஅல சமைப்போர் கலைக்கு

மென்றதும் தின்றதும் 

(என்று தலைப்பிட்டு, பின்னர் மாற்றிக்கொண்டேன்)

இன்று காலை  பொங்கல், மெது வடை, குழம்பு, சட்டினி
வியாழன் காலை  ராகி கூழ், வடு மாங்காய்
புதன் இரவு கொட்டுபிண்டி ரோட்டா
புதன் காலை மொடக்கத்தான் கீரை தோசை

செவ்வாய் மதியம் கத்திரிக்காய் ரசவாங்கி, தக்காளி ரசம், அவரைக்காய் பொரியல்


இந்திராம்மாவும் கொட்டுபிண்டி மாவும்

கொட்டுபிண்டி ரோட்டா, குருமா 


திங்கள் மதியம் மணிதக்காளி வற்றல்குழம்பு, சக்கரவள்ளிகிழங்கு கறியமுது, நூல்கோல் கறியமுது, பருப்பு துவையல், சீரக சாற்றமுது (ரசம்)

ஞாயிறு மதியம் சிறுகீரை கூட்டு, சேப்பங்கிழங்கு வறுத்த கறியமுது

இவையாவும் இந்திராம்மா கைவரிசை. இதை தவிர, 
செவ்வாய் இரவு  நண்பர் சரத்ராம் தாயார் செய்த அடை, அவியல், மாங்கா வெல்லப்பச்சடி, பைங்கன் பர்தா
திங்கள் இரவு தம்பி ஜெயராமன் மாமியார் செய்த ஃபுல்கா, பன்னீர் பட்டர் மசாலா.
சனிக்கிழமை காலை வாழைப்பழ தோசை, கோதுமை தோசை  

வாழைப்பழ தோசை
நடு நடுவே இட்லி தோசை தயிர் வகையராக்களும் உண்டு...

Monday, 18 May 2015

பாஸ்தா செய்யும் முறை

The English version of this post / recipe is here.

அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் பல நாட்டு உணவுகளை சுவைப்பது எனக்கு [பலருக்கும்] மிகச்சிறந்த அனுபவம். நான் சைவ [வெஜிடேரியன்] உணவுகளை தான் சாப்பிடுவேன். அதில் மெக்சிகோ, இத்தலி, தாய்லாண்ட் (சியாமதேசம்), சீனா, எத்தியோப்பியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லெபானன் நாட்டு உணவுகளை சுவைத்துள்ளேன். 

பீட்சா, பாஸ்தா இவை இரண்டிற்கும் இத்தலியே பூர்வீகம். வெவ்வேறு மாவு வகைகளில் பாஸ்தா செய்யப்படுகிறது. போன வாரம் இந்திராம்மாவும் என் தங்கை தேவசேனாவும் சேர்ந்து இரு வாகை பாஸ்தா சமைத்தனர். சென்னையில் ஹோட்டல்களில் கிடைக்கும் பாஸ்தாவைவிட இவர்கள் செய்யும் பாஸ்தா மிகவும் சுவையாக உள்ளது. கொஞ்சம் காரமும் புளிப்பும் உப்பும் கலந்தே உணவுகொள்ளும் தமிழருக்கும் மற்றநாட்டு உணவுகள் சப்பென்றே இருக்கும், குறிப்பாக, மெக்சிக உணவைத்தவிற, மேற்கத்திய உணவுக்கள் உப்பு காரமில்லதவை. இத்தலிய உணவுகளும் சப்பென்றே இருக்கும். முதலில் இவற்றை சுவைத்து முகம்சுளித்தேன், ஆனால், சில முறை உண்டபின், தக்காளியின் சுவை, கொடமிளகாய் சுவை, கேரட் சுவை என்று காய்கறிகளின் இயற்கை சுவையை உணர்ந்தபின், அவற்றையும் ரசிக்க தொடங்கினேன்.

சீஸ் சுவை விரும்பி பீட்சா சாப்பிட்டு பிடித்துப்போவதே, இந்திய சைவர்களுக்கு மேநாட்டு உணவின் முதல் அறிமுகம். ஹிந்தி மொழியில் வெஜிடேரியன் உணவை வைணவ போஜனம் என்று அழைப்பதாக சமீபத்தில்ல் தெரிந்துகொண்டேன். வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஜைன உணவு என்று பல ஹோட்டல்கள் அழைப்பதையும் பார்க்கலாம்.

பச்சை சிவப்பு மஞ்சள் கொடமிளகாய்
இந்த பீடிகை போதும். என் வீட்டில் பாஸ்தா செய்யும் முறை கீழே.

1.    ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ, கொடமிளகாய் [அல்லது குடைமிளகாய்] வதக்கவும். காட்சி அழகிற்கு பச்சை சிவப்பு மஞ்சள் என் பலவண்ணங்களில் குடைமிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.
2.    தனியாக வெங்காயத்தை ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ வதக்கி வைத்துக்கொள்ளவும்.
3.    தனியாக ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ சீஸ் வதக்கி வைத்துக்கொள்ளவும். சுவைக்கு உப்பும் மசாலாவும் சிறிதே மிளகாய் தூளும் சேர்க்கலாம்.
4.    பாலை கொதிக்கவைத்து சோளமாவு கலந்து வெள்ளை சாஸ் செய்யவும். 400 மில்லி பாலில் நான்கு கரண்டி மாவு கலக்கலாம். சோள மாவு பொட்டலங்கள் கடைகளில் கிடைக்கும்
5.    பாஸ்தா எவ்வளவு எடையோ அதே எடைக்கு தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும். இதில் பாலும் சோள மாவும் கலந்து கொதிக்கவைத்து, சிவப்பு சாஸ் செய்யவும்.
6.    பாஸ்தாவை நீரில் கொதிக்கவைத்து, நீரைவடித்துவிடவும்

கடாயில் 1,2,3,4,5 கலந்து லேசாக வதக்கினால் வெள்ளை சாஸ் பாஸ்தா. 1,2,3,4,6 கலந்து லேசாக வதக்கினால் சிவப்பு சாஸ் பாஸ்தா. நூல் நூலாக சீஸ் சீவியும், பச்சையாகவோ காய்ந்த இலையாகவோ ஓரிகானோ சேர்த்து, விருந்தளிக்கலாம்.

இத்தாலியர்கள் ஆலிவ் எண்ணையும் வேறு சாஸ்களையும் செய்வார்கள். மற்ற மேற்கத்திய நாடுகளில் கடையிலேயே சாஸ் வாங்கிகொள்வதும் வழக்கம். இந்தியாவிலும் கடையில் பல வகை சாஸ் கடைகளில் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணையோ சாஸோ கடையில் மலிவு அல்ல. ஆலிவ் எண்ணை இந்திய எண்ணைகளை விட கொஞ்சம் கசக்கும். நல்லெண்ணை கடலையெண்ணை தேங்காயெண்ணை பாஸ்தாவிற்கு தகா. இதனால் இந்திராம்மாவும் என் தங்கையும் எண்ணைக்கு மாறாக வெண்ணையில் வதக்குகின்றனர்.

கடாய்களில் சிவப்பு வெள்ளை பாஸ்தாவுடன் நானும் என் மறுமக்களும்

சமையல் கட்டுரைகள்

1. பழைய சாதத்தில் தோசை - சத்யோன்னரோட்டா, பெருகு தோசை


Saturday, 16 May 2015

Indiramma's Pasta recipe

We had pasta last week, made collaboratively by Devasena, my sister and Indiramma, my cook. I have posted mostly unusual Indian dishes that Indiramma makes and recipes so far, but I like variety in food. A major part of my American experience - all vegetarian - was international cuisine, Mexican, Italian, Thai, Chinese, Ethiopian, Iraqi, Afghan, Lebanese foods, besides the several Indian cuisines.

Capsicum, onion, tomato, butter for pasta


1. Sautee capsicum (green, red, yellow) in butter or olive oil
2. Sautee onions in butter or olive oil (separately from above)
3. Sautee cheese cubes with garam masala and pinch of salt (separately from above). The garam masala is for Indian taste, which abhors blandness. Use very little, bland is the basic taste of pasta. Indiramma also uses a whiff of chili powder.
4. Boil pasta in water and filter it out
5. Add some corn flour (about 4 tablespoons) to milk (about 400ml) to make white sauce
6. Pulp tomatoes (same weight as raw pasta) in a mixie, boil with milk and corn flour to make red sauce

Mix 1,2,3,4 and either 5 or 6 for pasta with white sauce or red sauce. Flavor with ground cheese and oregano.

Italians (and Westerners) use olive oil and certain other sauces. Indiramma and Devasena [my sister] prefer butter, for better flavor and since olive oil is not cheap in India.
Pastas with red and white sauces

Saturday, 22 November 2014

பழைய சாதத்தில் தோசை - திருத்தங்கள்

சத்யோன்ன ரோட்டா

இந்திராம்மா நேற்று இரவு சத்யோன்ன ரோட்டா செய்தார். பழைய சாதத்தில் கொஞ்சம் புளிப்புக்கு மோரை கலந்து, கருவேப்பில்லை சேர்த்து, காரத்துக்கு கொஞ்சம் மிளகாயும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துவிட்டு, கெட்டியாக இருக்க கொஞ்சம் அரிசிமாவையும் கலந்து, உருண்டை பிடித்து, தோசை கல்லில் தட்டி வார்த்து கொடுத்தார். சுவைக்கு கொஞம் நருக்கிய வெங்காயத்தை மாவில் கலக்கலாம். 

தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி, சாம்பார்.

திருத்தம் 1 சத்யோன்ன ரோட்டாவிற்கு மிக்ஸியில் அரைக்க தேவையில்லையாம்.

சத்யோன்ன ரோட்டா- கல்லிலும், அருகில் உருண்டை பிடித்த மாவும்

பெருகு தோசை

முன்பு பல முறை இந்திராம்மா செய்த பெருகு தோசையை பல முறை சுவைத்துள்ளேன். அதற்கு ஒரு பயத்தம் பருப்பு சாம்பார் செய்வார்கள். அருமை. “பெருகு” தெலுங்கு சொல் – தயிரை குறிக்கும். பழையா சாதத்தில் தயிர் கலந்து, கொஞ்சம் பருப்பும் பச்சரிசி (புழுங்கல் அரிசி கூடாது) சேர்த்து அரைத்து, தோசை மாவு போல் அரைத்து கொண்டு, ஓர் இரவு ஊரவைத்து, மறுநாள் தோசை மாவு போல் வார்த்து விடுவார். 

ஆனால் தோசை போல் திருப்பி போடக்கூடாது. ஆப்பம் போல் மூடி வைத்து தோசைக்கல்லிலேயே வார்க்கலாம்.

திருத்தம் 2 பருப்பை கலந்து என்று தப்பாக எழுதியிருந்தேன். அரைத்த பச்சரிசியை கலக்க வேண்டுமாம். 2 அளவு பச்சரிசிக்கு 1 அளவு பழைய சாதம் 1 அளவு தயிர். பச்சரிசியை தயிருடன் தனியாக அரைக்கவேண்டும், பழைய சாதத்தை தனியாக அரைக்கவேண்டும். உளுந்து வேலையை பச்சரிசி செய்யும்.

பெருகு தோசை மாவும் கல்லிலும்

இந்திராம்மா, தட்டில் பெருகு தோசை, சாம்பார்

நேற்று சத்யோன்ன ரோட்ட உண்டபின், தமிழ் இணையக்கழகத்தில் உரையாற்றியதற்கு பரிசாய் கிடைத்த புத்தகத்தை பிரித்தேன் – கல்கியின் ”சிவகாமியின் சபதம்”. கொஞ்சம் சந்தேகமாக என்னிடம் “ஐந்து பாகமாக இருக்குமே அதுவா?” என்று கேட்டார். “அது பொன்னியின் செல்வன்” என்றேன். “படிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “முன்னெல்லாம் சாப்பிடும் போது புத்தகம் படிச்சுக்கிட்டு தான் சாப்பிடுவோம். விட்டு பல வருஷம் ஆயிடுச்சு. எங்க திருவநந்தபுரம் அண்ணாரு மட்டும் தான் இன்னும் சாப்பிடும் போதும் புத்தகம் படிக்கிறாரு,” என்றார். வீட்டில் குமுதம் விகடன் கல்கி வகையரா வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஹிண்டு பேப்பர் நிறுத்தி சில வருடம், டைம்ஸ் ஆஃப் நிறுத்து மூன்று மாதம். இந்திராம்மா டிவி பார்க்கிறார். நான் இண்டர்நெட் பார்க்கிறேன்.

மற்ற சமையல் படைப்புகள்

1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை 

Wednesday, 19 November 2014

சக்கரவள்ளிக்கிழங்கு நெய் உருண்டை

செய் முறை

1.    வேகவைத்த சக்கரவள்ளிக்கிழங்கை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
2.    அதில் உருக்கிய நெய்யோடு சேர்ந்து, சக்கரையும் திருவிய தேங்காயும் கலக்கவும். இது கைப்பக்குவம் தான். சுவைக்கேற்ப அளவு
3.    இந்த கலவையை உருண்டை பிடித்து ருசிக்க தெரிந்த ரசிகருக்கு மட்டும் வழங்கவும்.
4.    மூன்று நான்கு நாளுக்கு மேல் ஃப்ரிட்ஜில் தாங்காது. 

இதை போன வாரம் இந்திராம்மா செய்தார். நேற்று இரவு பில்ல குடுமுலு செய்திருந்தார்.

மற்ற சமையல் படைப்புகள்


1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை

Tuesday, 23 September 2014

The Gift of the Magus

தமிழில் இப்பதிவை இங்கே படிக்கலாம்.

I have written about some unusual delectables prepared by our cook, Smt. Indira. For a while I have wanted to write about our servant, Smt Mary. A servant and a cook are luxuries, perhaps obnoxious privelges of the rich, in Europe and the Americas. But servants are integral and indispensable and cooks quite common in most middle class households in India, especially in urban India. The advent of the mixie (blender), fridge, washing machine, etc have dramatically reduced the work load of servants and housewives alike, but not eliminated either class.
Maryamma in our kitchen
When I lived in Jain Apartments in Director’s Colony in Kodambakkam, Maryamma, as we call her, and who lived nearby, was engaged to sweep the public are by the apartment manager, at a very low salary. My brother engaged her for domestic services in our apartment, where she wash vessel and sweep the floor, once a day. We did not have a cook then, and an experiment with Maryamma as a cook for a week, was discontinued – her skills were unsuited to our taste, especially our father’s. 

Unlike some servants who wear a permanent grouch, Maryamma had a smiling charming countenance. We have had servants as long as I can remember, though very intermittently in my later school and college days, when my sister cooked once or twice a day and I would wash the vessels at night. Washing clothes was a worse nightmare, which I disliked at home and college  - the washing machines of Texas to me were as amazing as their supercomputers or nuclear reactors – and far more valuable and useful.

When we moved to another house in the neighborhood, Maryamma followed, though it was a longer daily walk. My brother Jayaram is a rigorous but kind and generous taskmaster, and thanks to him, Maryamma continues to work for us. She would take the bus once a day to our Vadapalani house for the four years we were there, too. Nowadays, ours is the last stop for the day after her morning hours in other households and an office nearby. In the evenings, she has a cup of tea, discusses current affairs with Indiramma, critically analyses a couple of soap operas, and then sets to work.When the TV they watch broke down, she brought the TV that the DMK government had issued after 2006 to low income TamilNadu residents, where it has startled visitors to our house.
Tea and current affairs - Mary and Indira

The Opium of the Masses and the Classes
Actually some visitors are perhaps still stumped that I have an Onida TV from 2001 or an even older car, but are too polite to mention it.

In January, Maryamma visited Bombay and when she returned, she gifted us not one, but two sets of tea cups. I take it as a sweet token of gratitude and affection for my brother, and pleasantly bask in the shadow of its benevolence and decency.

I have never gifted anything to my managers – the thought never crossed my mind. Gifts were few and far between when I was growing up, whereas nowadays, birthday and wedding gifts, and for several occasions a year are a social compulsion. I value her work everyday, but it is easy to takeany servant, even Maryamma for granted. I was overwhelmed by her generosity. I have struggled since January to write this essay, for want of metaphor and expression, but gave up the ghost, for this simple statement. 

Tamil version of this article here

Friday, 9 May 2014

சொதி சாப்பாடு

நிறத்தில் மோர்குழம்பை போல் இருக்கும். சுவையில் நிகரில்லை. திருநெல்வேலியில், அல்வாவின் முந்தோன்றிய மூத்த குழம்பு: சொதி.

பிராமண குடும்பங்களில் இதெல்லாம் செய்யமாட்டார்கள். ஒன்று, கேள்விபட்டதே கிடையாது. இரண்டு, பூண்டு சேர்க்கமாட்டார்கள். காந்தி தலைமையில் சுதந்திரம் கிடைத்ததோ இல்லையோ, ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெணை வாங்கும் உரிமையோடு, பல பிராமண குடும்பங்களுக்கு, என் பெற்றோரின் தலைமுறைக்கு, 1950-களில் வெங்காயம் சுவைக்கும் உரிமை கிடைத்தது. அப்பொழுதெல்லாம் விசா கிடைக்காமல் பூண்டு வாசலிலேயே காத்து தவம் கிடந்தது.

என் தலைமுறையில், சப்பாத்தி குருமா, சோளே படூரா, சாட், போன்ற பிற்படுத்த வடக்கிந்திய உணவுகளுக்கு உள்ளே வர அனுமதி கிடைத்தது. பாட்டி தலைமுறை வெங்காயத்துக்கே விசா தறவில்லை. ஹிந்து மதத்திலிருந்து காங்கிரஸ் மதத்திற்கு மாறிவிட்ட எங்கள் தாய்தந்தையர் வெங்காய்துக்கு பூனூல் போட்டதை பார்த்து எங்கள் தலைமுறை பூண்டுக்கும் பூணூல் போட்டு பாரதியாரின் கனவை நினைவேற்றினோம். புஹாரி ஹோட்டலில் அக்கௌண்ட் வைத்து அண்டாகுண்டா காலியாக்கும் பிராமணரில் நான் ஒருவன் இல்லை.

ஆனால் உஷாராக 15% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது : வாரம் ஒருமுறைதான் செய்வார்கள். (என் தாய் புஷ்பா, மாசத்துக்கு ஒரு மசாலா தோசை வாங்கித்தருவதும், பக்கத்து வீட்டில் கேட்டு ஏதோ தக்காளி கிச்சடி) அதாவது சாதாரணமாக வீட்டில் செய்யும் சாம்பார், ரசம், கூட்டு வகைகளில் பூண்டு இருக்காது. பூரிக்கு செய்யும் உருளைக்கிழங்கை தவிற, கூட்டுபொரியல் வகைகளில் வெங்காயமும் சேராது.


நண்பர் வெங்கட் இல்லத்தில் முதல் முதல் சாப்பிட்ட பழக்கம். அவர்கள் சைவ பிள்ளைமார். வெங்கட் அம்மா சாரதா. என் தம்பி ஜெயராமன் சிறு வயதில் சாரதா பவனில் தின்று வளர்ந்தவன். நானும் சென்னைக்கு வந்தபின் அவர்கள் வீட்டில் தின்று கொழுத்திருக்கிறேன். பூண்டுள்ள சமையலில் சொதி மிகவும் பிடிக்கும். சொதியும், (garlic bread) கார்லிக் பிரெட்டும் தான் பிடிக்கும் என்று சொல்லலாம் : மற்றபடி எனக்கு பூண்டு பிடிக்காது. குருமாவிலும் புலாவிலும் பொறுத்துக்கொள்வேன்.

சொதியை சோற்றில் கலந்தால் மட்டும் போதாது. உருளைக்கிழங்கு வருவல் கவரி வீச, இஞ்சி சட்டினி உடைவாள் தாங்க, உருளைக்கிழங்கு பொரியல் மௌலி புனைந்தால் மட்டுமே சொதி அறுசுவை அரியணை ஏறும். இந்த பட்டாபிஷேக காட்சியை இந்திரா அம்மா கைவரிசையில் கீழே காணலாம். அவர், சாரதா அம்மாவை கேட்டு செய்தது.

மஞ்சள் நிறத்தில் சொதி; கிண்ணத்தில் இஞ்சி சட்டினி; வெண்டைக்காய் கறியமுது; தக்காளி சாற்றுமமுது; உருளை-வெங்காய மசாலமுது

முதன் முதலில் இந்திரா அம்மா சமையல் செய்ய வந்த பொழுது, பூண்டின்றி ரசமும் (வைணவச்சொல்: சாற்றும் அமுது, சாத்துமது) வெங்காயமின்றி காய்கறிகளும் (வைணவச்சொல்: கறியமுது, கறமது) செய்யவேண்டும் என்று ஆஞ்கை பிறப்பித்தோம். குழப்பத்தோடும் பரிதாபத்தோடும் எங்களை பார்த்தார். இப்பொழுதெல்லாம், சீராமிளகு சாத்துமது, வாழைக்காய் கறமுது  என்று சகஜமாக சொல்கிறார். 

மற்ற சமையல் பதிவுகள்






Friday, 4 April 2014

சுரக்காய் தோசையும் பில்லகுடுமுலுவும்


என் வீட்டில் சமையல் செய்பவர் இந்திராம்மா. இவர்கள் திடீர் திடீர் என்று புதிதாக அற்புதமாக எதாவது செய்து நாசிலிர்க்க வைப்பார். முன்பே இவர் செய்த வாழைத்தண்டு தோசை பற்றி எழுதியுள்ளேன்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி, மகேந்திர பல்லவன் கோவில்களை பார்த்து விட்ட கலைபோதையுடன் மாடியிலிருந்து கீழே வந்தேன். என்ன டிஃபன் என்றால், “சுரக்காய் தோசை!” என்று திமுகவோடு கூட்டணி வைத்த ராஜாஜி போல் நாக்கூசாமல் பதிலளித்தார்.

சுரக்காய் மாவும் இந்திராம்மாவும்
சுரக்காய் தோசை


பில்ல குடுமுலு என்று பிழையின்றி முதல் முயற்சியிலேயே சொன்னால் உங்களுக்கு பில்ல குடுமுலு விருந்தளிக்க நான் தயார். ஆரிய வைசிய கோமுட்டி செட்டியார்களில் இது பிரபலம் போலும் - இந்திராம்மா அந்த ஜாதி. ஒன்றுமில்லை கொஞ்சம் மாறுதலான இட்லிதான். “ஒரு பொழுது இருக்கும் நாட்களில் நாங்கள் இதை தான் செய்வோம்,” என்று சொன்னார்.  “தொட்டுக்க என்ன சாம்பார்?” என்றேன்.  “பருப்பு பாயசம்” என்று பதில் வந்தது. கிரைமியாவை இணைத்த ரஷியாவை கண்டித்து, உத்தமத்தின் உச்சக்கட்ட அமெரிக்காவின் போர் அமைச்சர் ஜான் கெர்ரி, 21ஆம் நூற்றாண்டில் இப்படி மற்றொரு நாடு மேல் படை எடுக்கலாமா என்று கேட்க சுரணையில்லாத பத்திரிகையாளர்கள் கூட கொஞ்சம் ஆடிப்போகவில்லை? அப்படி ஆடினேன். குடுமுலுவும் பாயசமும் சாவித்திரி பாட ஜெமினி கணேசன் நாகஸ்வரம் வாசித்ததுப்போல் தேனோடு கலந்த தெள்ளமுதாய் ருசித்தது. கோல நிலவோடு கலந்த குளிர்த்தென்றல் என் சிந்தை சிம்மாசனத்தில் வீசியது.

பில்ல குடுமுலுவும் பருப்பு பாயாசமும்

Monday, 30 September 2013

கம்பு அடை

கல்கியின் “சிவகாமியின் சபதம்” கலை ஆர்வம் மட்டும் தூண்டாமல் சுவை ஆர்வமும் தூண்டியது. கம்பு அடை ருசிக்க ஆவல் வந்தது. சமையல்காரர் ராமசாமியிடம் கேட்டேன் – அவர் ராகி அடை செய்ததாக நினைவு. சில ஆண்டுகளுக்கு பின், வேறு சில சமையல்காரர்களுக்கு வந்து சென்று, என் இல்லத்தில் இன்று சமையல் செய்யும் இந்திரா அம்மா வந்தார். அவரும் அதே ராகி அடை செய்தார். வெங்காய்ம் கலந்த கார அடையும், வெல்லம் கலந்த இனிப்பு அடையும்.

சமீபத்தில் தன் சொந்த ஊராம் சேலத்திற்கு சென்ற பொழுது, கம்பு அடை மாவை வாங்கி வந்து, முந்தாம் நாள் – சனிக்கிழமை - செய்து கொடுத்தார். தொட்டுக்க வெல்லம்-வெண்ணையும், வெங்காய சட்டினியும் சுமார் தான். ஆனால் சாம்பார் ஒஹோ! பிரமாதம்.