Saturday, 22 November 2014

பழைய சாதத்தில் தோசை - திருத்தங்கள்

சத்யோன்ன ரோட்டா

இந்திராம்மா நேற்று இரவு சத்யோன்ன ரோட்டா செய்தார். பழைய சாதத்தில் கொஞ்சம் புளிப்புக்கு மோரை கலந்து, கருவேப்பில்லை சேர்த்து, காரத்துக்கு கொஞ்சம் மிளகாயும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துவிட்டு, கெட்டியாக இருக்க கொஞ்சம் அரிசிமாவையும் கலந்து, உருண்டை பிடித்து, தோசை கல்லில் தட்டி வார்த்து கொடுத்தார். சுவைக்கு கொஞம் நருக்கிய வெங்காயத்தை மாவில் கலக்கலாம். 

தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி, சாம்பார்.

திருத்தம் 1 சத்யோன்ன ரோட்டாவிற்கு மிக்ஸியில் அரைக்க தேவையில்லையாம்.

சத்யோன்ன ரோட்டா- கல்லிலும், அருகில் உருண்டை பிடித்த மாவும்

பெருகு தோசை

முன்பு பல முறை இந்திராம்மா செய்த பெருகு தோசையை பல முறை சுவைத்துள்ளேன். அதற்கு ஒரு பயத்தம் பருப்பு சாம்பார் செய்வார்கள். அருமை. “பெருகு” தெலுங்கு சொல் – தயிரை குறிக்கும். பழையா சாதத்தில் தயிர் கலந்து, கொஞ்சம் பருப்பும் பச்சரிசி (புழுங்கல் அரிசி கூடாது) சேர்த்து அரைத்து, தோசை மாவு போல் அரைத்து கொண்டு, ஓர் இரவு ஊரவைத்து, மறுநாள் தோசை மாவு போல் வார்த்து விடுவார். 

ஆனால் தோசை போல் திருப்பி போடக்கூடாது. ஆப்பம் போல் மூடி வைத்து தோசைக்கல்லிலேயே வார்க்கலாம்.

திருத்தம் 2 பருப்பை கலந்து என்று தப்பாக எழுதியிருந்தேன். அரைத்த பச்சரிசியை கலக்க வேண்டுமாம். 2 அளவு பச்சரிசிக்கு 1 அளவு பழைய சாதம் 1 அளவு தயிர். பச்சரிசியை தயிருடன் தனியாக அரைக்கவேண்டும், பழைய சாதத்தை தனியாக அரைக்கவேண்டும். உளுந்து வேலையை பச்சரிசி செய்யும்.

பெருகு தோசை மாவும் கல்லிலும்

இந்திராம்மா, தட்டில் பெருகு தோசை, சாம்பார்

நேற்று சத்யோன்ன ரோட்ட உண்டபின், தமிழ் இணையக்கழகத்தில் உரையாற்றியதற்கு பரிசாய் கிடைத்த புத்தகத்தை பிரித்தேன் – கல்கியின் ”சிவகாமியின் சபதம்”. கொஞ்சம் சந்தேகமாக என்னிடம் “ஐந்து பாகமாக இருக்குமே அதுவா?” என்று கேட்டார். “அது பொன்னியின் செல்வன்” என்றேன். “படிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “முன்னெல்லாம் சாப்பிடும் போது புத்தகம் படிச்சுக்கிட்டு தான் சாப்பிடுவோம். விட்டு பல வருஷம் ஆயிடுச்சு. எங்க திருவநந்தபுரம் அண்ணாரு மட்டும் தான் இன்னும் சாப்பிடும் போதும் புத்தகம் படிக்கிறாரு,” என்றார். வீட்டில் குமுதம் விகடன் கல்கி வகையரா வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஹிண்டு பேப்பர் நிறுத்தி சில வருடம், டைம்ஸ் ஆஃப் நிறுத்து மூன்று மாதம். இந்திராம்மா டிவி பார்க்கிறார். நான் இண்டர்நெட் பார்க்கிறேன்.

மற்ற சமையல் படைப்புகள்

1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை 

No comments:

Post a Comment