Monday, 3 November 2014

ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்

பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.

ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||

हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे 
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते 

இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.


“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.

ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர்.  “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.


ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0

க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).

கடபயாதி
क க ङ ங च ச झ _ ञ ஞ
ट ட ण ண त த ध _ न ந
प ப म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0

இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.


அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கண என்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு,  அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.

தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர். 

3 comments:

 1. Quoting the comment from my friend Karthik.
  "Not all the information are correct in this article or the interpretation is wrong.

  Kali yuga did not begin immediately at the end of Mahabaratha war. It is wrong. Kali yuga began well after Krishna avatar was over and when Parikshithu (son of Abimanyu) was hunting in the forest and received a bane that he would be killed by serpant. At the end of Mahabaratha war, Krishna was very much continuing his avatar and Parikshithu was still in Uthirai’s womb! If Krishna avatar was continuing then there is no way a new yuga might had started!"

  http://www.kamakoti.org/tamil/d-san120-21.htm

  அதாவது:ஜைனர்களும் பௌத்தர்களும் யுதிஷ்டிர சகம் என்று ஒன்றைப் பின்பற்றுகிறார்கள். இது கலியுகம் ஆரம்பித்து 468 வருஷத்துக்குப் பிறகு ஆரம்பிப்பது. யுதிஷ்டிரர் என்பது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்ரர்தான். க்ருஷ்ணர் பரமபத ஆரோஹணம் செய்ததைக் கேள்விப்பட்டு உடனே அவரும் 'மஹாப்ரஸ்தானம்'என்பதாக ஜீவயாத்ரையை முடித்து ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார். க்ருஷ்ணரின் பரமபத ஆரோஹணத்திலிருந்துதான் கலி பிறந்தது. அப்போது யுதிஷ்டிரர் 36 வருஷம் ஆட்சி நடத்தியிருந்தார். ஆகையால் நாம், அதாவது ஹிந்துக்கள், கலிக்கு 36 வருஷம் முன்னால் (கி.மு. 3138-ல்) யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பிப்பதாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜைன, பௌத்தர்கள் கலி ஆரம்பித்தபின் 468 வருஷத்திற்கு அப்புறமே தங்களுடைய யுதிஷ்டிர சகாப்தத்தை ஆரம்பிக்கிறார்கள். 'யூனிஃபார்மா'க அவர்களுடைய புஸ்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. In the Dasagitika portion of Aryabhata's Aryabhateeyam, his slokam starting "KaahO manavO Da" (काहो मनवो ढ) he states that "since the beginning of this kalpa upto the Thursday of the Bhaarata battle, 6 Manus, 27, yugas and 3 yagapaadas have passed" (गतास्ते च मनुयुगा छ्ना च गुरुदिवसात् च भारतात्पूर्वम् ). So AryabhaTa takes the Bhaarata war as the beginning of the current yuga. The phrase used is "Bhaarataat poorvam" rather than "Kali", which is implied as current yuga.

   So do the other astronomy texts I have referenced and their commentators. Some of them in commentaries refer to this era as the Yudhishtira era. So this is not my interpretation, it is that of astronomers. While later astronomers dispute several of Aryabhata's contentions, including his yuga divisions, there seems to be agreement on this assumption of Kali Yuga starting with the Bhaarthaa war.

   The word Saka comes much later, perhaps in the 1st century BC and has been adopted to mean calendar or year since then. There is also an opinion by commentators that this was a backdated calculation - they may even be correct. And there are estimates by historians that Bhaarata war happened between 12th and 4th centuries BC. I merely state the usage here, and don't enter into that particular dispute.

   I am ignorant of the Buddhist and Jain calendars referring to a later Yudhishtira era.


   Referenced Translations of AryabhaTeeyam
   1. Walter Eugene Clark
   2. KV Sarma and KC Shukla

   Delete
  2. ஆர்யபடர் எழுதிய அர்யபடீயத்தின் தசகீதிகப் பகுதியில், காஹோ மனவோ ட4 என்று தொடங்கும் ஸ்லோகம் உள்ளது. அதில் “இக்கல்பத்து ஆதி முதல் பாரதத்து வியாழக்கிழமை வரை 6 மநுக்கள், 27 கலபங்கள், 3 யுகபாதங்கள் சென்றுவிட்டன” (कल्पादे गतास्ते च मनुयुगा छ्ना च युगपादाः ग च गुरुदिवसात् च भारतात्पूर्वम् ) என்று எழுதியுள்ளார். அதாவது ஆர்யபடர் பாரதப்போரை கலி என்று சொல்லாமல் “பாரதாத் பூர்வம்” என்ற சொற்றொடரால் நிகழும் யுகத்தின் தொடக்கமாக சொல்லுகிறார்.

   மற்ற விண்ணியல் நூல்களும் உரை ஆசிரியர்களும் மொழிப்பெயர்ப்பு ஆசிரியர்களும் இதையே சொல்கின்றனர். சிலர் கலியுகத்தை யுதிஷ்டிர சகம் என்றும் அழைக்கின்றினர். ஆதலால், இது என்னுடைய விளக்கம் அல்ல, நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் மொழிப்பெயர்ப்பு ஆசிரியர்களும் தரும் விளக்கம். பிரம்மகுப்தர், பாஸ்கரர், நீலகண்ட சோமசத்வர் போன்ற பிற்கால ஜ்யோதிடர்கள் (விண்ணியல் நூலாசிரியர்கள்) ஆர்யபடருடன் சில கருத்துக்களில் வேறுபட்டாலும் இந்த கலியுக பயன்பாட்டில் வேறுபடவில்லை.

   சகம் என்பது கிமு முதல் நூற்றாண்டில் வந்த சொல்லாகயிருக்கலாம். ஆண்டுக்கும் கேலண்டருக்கும் பயன்பட்டுள்ளது. இந்த கலியாண்டு தொடக்கமே பிற்காலத்தில் கணக்கிட்டது என்று சிலரும் (அதாவது பாரதப்போர காலத்தில் அல்ல, ஆர்யபடர் காலத்திலோ அதற்கு சற்று முன்னரோ), பாரதப்போர் நடந்ததை கிமு 1200 -கிமு 400 இடைவெளியில் என்று சிலரும், அப்படி ஒரு போரே நடக்கவில்லை என்று சிலரும் கருதுவர். இதை நான் இங்கு பேசவில்லை. விண்ணியல் நூல்களிலுள்ள பயன்பாட்டை மட்டும் சொல்லியுள்ளேன்.

   புத்த சமண மாறுபட்ட யுதிஷ்டிர சக பிரயோகத்தை நான் அறிந்திலேன். தகவலுக்கு நன்றி, படித்து பார்க்கிறேன்.

   நான் பயன்செய்த ஆர்யபடீயம் நூல் மொழிப்பெயர்ப்புகள்
   1. வால்டர் யூஜீன் க்ளார்க்
   2. கே.வி.ஷர்மா, கே.ஸி.ஷுக்லா

   Delete