Showing posts with label கடபயாதி. Show all posts
Showing posts with label கடபயாதி. Show all posts

Monday, 3 November 2014

ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்

பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.

ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||

हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे 
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते 

இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.


“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.

ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர்.  “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.


ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0

க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).

கடபயாதி
क க ङ ங च ச झ _ ञ ஞ
ट ட ण ண त த ध _ न ந
प ப म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0

இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.


அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கண என்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு,  அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.

தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர்.