Monday 23 February 2015

தமிழில் பிறமொழி ஒலியும் எழுத்தும்

மணி மணிவண்ணன் ஃபேஸ்புக் பதிவில் தமிழ்நாடு என்னும் சொல்லை டமில்நாடு என்று உச்சரிக்காமல் தமிழ்நாடு என்று பேச்சு வழக்கில் தமிழராவது (தமிழ் மொழி பேசுபவர்) உச்சரிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்படி உச்சரித்த தமிழக முதல்வர் செயலலிதாவை பாராட்டியிருந்தார். ஜெயலலிதா என்றல்லவா எழுதவேண்டும் என்றும், எம்ஜிஆரை, எம்சிஆர் என எழுதுவீரா என நான் வினவ, மாகோரா என்று எழுதுவதாக பதிலளித்தார்.

தமிழர் பேசும்போது, வேறு மொழியில் பேசினாலும் தமிழ் சொற்களை தமிழ் உச்சரிப்புடனே சொன்னால் நல்லது. ஆனால் பிற மொழி ஒலிகளை தமிழில் எப்படி எழுதலாம், ஒலிக்கலாம்.

பின்னூட்டத்தில் பத்ரி சேஷாத்ரி “சமஸ்கிருத மொழி பிறமொழிச் சொற்களை - ஆள் பெயராக இருந்தாலுமேகூட - மொழிமாற்றிப் பயன்படுத்துகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன் போன்றோர் தமிழ் வழக்குக்கு ஏற்றவாறு இறைவன் பெயர்களையும் மாற்றியிருக்கின்றனர். இரண்டு முறைகளையும் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே” என்று எழுதினார்.

அக்கால புலவர்களுக்கு யாப்பு கட்டுப்பாடு இருந்ததாலும் வடமொழி எழுத்துக்களை தமிழில் எழுதும் தற்பவ தத்சம விதிகள் இலக்கணத்தில் இருந்ததாலும், வாய் வழியே தமிழகம் முழுதும் கற்றோரும் கல்லாதோரும் உச்சரிக்கும்படி வடிவமைக்கும் கட்டாயம் இருந்ததாலும் அவர்கள் கிரந்தம் தவிர்த்து எழுதினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் மணிப்பிரவாளமாக எழுத கிரந்தத்தை கையாண்டனர். 

கலைச்சொல்

நம் காலத்தில் இவ்வழக்கம் காலாவதியாகிவிட்டது. ஆங்கிலம் வகை ஐரோப்பிய மொழிகளும், உருது பாரசீக அரபு வகை மேற்காசிய மொழிகளும் தமிழை நன்கு ஆட்கொண்டு, அம்மொழி மூல சொற்கள் தமிழில் பரவலாக கலந்து விட்டன.
லத்தீன கிரேக்க ஆங்கிலேய ஜெர்மானிய கலை விஞ்ஞான சொற்கள் தமிழில் பரவலாக உள்ளன. இவை சில மட்டும் தமிழில் சொற்கள் பிரபலமாக உள்ளன. (“புதிய தலைமுறை” ஆசிரியர், எழுத்தாளர் மாலன் தன் பின்னூட்டத்தில், தொலைகாட்சி என்ற சொல் பரவலானாலும் வானொலி என்பதைவிட ரேடியோ பெட்டி என்ற சொல்லே பரவலானது என்று குறிப்பிட்டார். தமிழ்சொல் இருந்தும் ஆங்கிலமோங்கும் பஸ், கார், ரோடு, பாட்டில் போன்ற சொற்களுக்கும், தமிழ் கலைச்சொல்லில்லா பிளாஸ்டிக், ட்ரான்ஸ்ஃபார்மர், ட்ராக்டர், சிலிகான், பாலித்தீன், டீசல் போன்ற சொற்களுக்கும் இது பொருந்தும். இவை ஒலியோ எழுத்தோ அல்ல, சொற்களே.) 

இயல், உரைநடை

செய்யுளில் யாப்பெனும் வேலி தமிழ் ஒலியின் தொன்மையை காக்கும். இயலில், உரைநடையில் வேலி யாப்பெனும் வேலி எதற்கு. வர்க எழுத்தை ஒலிக்கவியலா ஒலிக்கவிரும்பா தமிழருக்கு இது கடினமெனினும், லளழ வேறுபாடும் நனண வேறுபாடும் ஞங வேறுபாடும் சஸஜஷ வேறுபாடும் பலத்தமிழருக்கு வராத நிலையில் உரைநடையில் ஒலி தொன்மையும் தூய்மையும் தேவைதானா? பழையன கழிதலும் புதுவன புகுதலும்…. 

பிறமொழி ஒலி

F, Z, J, H, எழுத்துக்களுக்கு எங்கே தற்பவமும் தத்சமும்? நான் எழுதும் பதிவுகளில் பெயர்சொற்களையும் சில கலைசொற்களையும் கிரந்த ஸ,ஹ,ஜ,க்ஷ, ஃப, போட்டே எழுதுகிறேன்.  ஆங்கில Z  எழுத்துக்கும் ஒலிக்கும் ஃச போட்டு எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். நதியை பற்றி ஒரு கவிதை எழுதுகையில் இது எனக்கு தோன்றியது. ச ஸ தகாது.

மேலும், பன்மொழி பழகும் உலகமயமாக்கலால் சீன கொரிய ஜப்பானிய மொழி ஒலிகளும் அடுத்த இருபதாண்டுகளில் தமிழகத்தில் பரவும். இவை ஒலி அமைப்புக்கும் தமிழ் மொழி வளர்ந்து விரிந்து வழி செய்ய வேண்டியிருக்கும்.

மணிவண்ணன் சொல்வது போல் தமிழை டமில் எனாமல் தமிழ் என்றே ஆங்கிலம் பேசும் போது சொல்வது சரி. அதே போல் தான் ஃப்ரிட்ஜ், ஸஹானா, ஷரீஃப் போன்ற சொற்களும். எழுத்திலும் கூட. 

ட்விட்டர், எஸ்.எம்.எஸ் தமிழ்

எஸ்.எம்.எஸ் ட்விட்டர் இவ்விரண்டும் ஆங்கிலத்தை குலைத்துவிட்டன என்று குமுறாத ஆங்கில எழுத்தாளர் இல்லை. இவை இரண்டும் இதுவரை தமிழில் பரவலாக இல்லை. இவற்றின் விளைவு சீக்கிரம் தெரியும்.

ஸம்ஸ்க்ருதம் ஃப்ரெஞ்சு தனித்தமிழ்

ஸம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள் பல தமிழ் சொற்களை ஸம்ஸ்க்ருதம் என்று அறியாமல் தூய தமிழ் என்று கருதுகிறோம். நான் ஸம்ஸ்க்ருதம் கற்க கற்க அதன் வரலாற்று பரவலையும் மற்ற மொழிகளை அத வளர்த்த திறனையும் கண்டு வியக்கிறேன்.

ஆனால் அதே சமயம் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கும் தவிற்க்கமுடியாத பல செயற்கை சொற்களையும், கடினமான வேற்றுமை உருபு வகைகளையும், இலக்கண கண்டிப்புகளையும் பார்த்தபின் தமிழின் எளிமையை உணர்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள எளிமை சில நேரம் லயிக்க வைக்கும், தமிழோடு ஒப்பிட்டால் பொராமை வளர்க்கும். ஆனால் தமிழின் தனிச்சிறப்பையும் அழகையும் நளினத்தையும் ரசிக்கவும் வைக்கும்.

தனித்தமிழ் இயக்கம் தூய ஃப்ரெஞ்சு இயக்கத்தை போல் ஒரு இலக்கண லொள்ளுப்படையை உண்டாக்க தான் உதவும் என்பது என் அனுமானம்.

பின்குறிப்பு

லத்தீன் ஐரோப்பிய மொழிகளில் - ஃப்ரெஞ்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ், இத்தாலியன் - ட ஒலியை த என்றே உச்சரிப்பார்கள். ஜெர்மானிய மொழிகளில் - ஜெர்மன், டச்சு, அங்கிலம் - த ஒலியை ட என்றே சொல்வதுண்டு. தியோடார் மன்னர் வம்சத்தை டுடார் என்று அக்காலத்தில் தி உச்சரிக்க இயாலாத ஆங்கிலேயர் அழைத்தது ஒரு சான்று. இதனால் தான் த ஒலிக்கு ஒரு எழுத்து இல்லாமல் th என்ற ஈரெழுத்து அமைப்பும் ஆங்கிலத்தில் நுழைந்துள்ளது. இதேபோல் ஷ இல்லாமல் என்ற ஈரெழுத்தும் பின்னர் நுழைந்தது.

கிரேக்கத்தில் டகரத்துக்கு டௌ தகரத்துக்கு தீட்டா என்ற தனித்தனி எழுத்துக்களும் ஒலிகளும் உள்ளன. முதலில் தமிழகம் வந்த போர்த்துக்கிசியரும் ரோம லிபியில் Tamil Tamoul என்று எழுதினால் தமில் தமுல் என்றே உச்சரித்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர் அதே ரோம லிபி வடிவத்தை வைத்துக்கொண்டு டமில் என்று உச்சரித்தனர். அதுவே இன்றும் பாரதம் முழுவதும் தொடர்கிறது. இப்படிதான் தெலுகு டெலுகு ஆனது, தூத்துக்குடி டூட்டூகுறின் ஆனது.

No comments:

Post a Comment