Showing posts with label கும்பகோணம். Show all posts
Showing posts with label கும்பகோணம். Show all posts

Friday, 24 July 2026

கோவில்வெண்ணி - ஆராய்ந்து அருளேலோர்

வடகலை ரங்கநாதர் பெருமாள் கோவில், கோவில்வெண்ணி

கோவில்வெண்ணி ரங்கநாதர் ஆலயம்


வெண்ணி கரும்பீஷ்வரர் கோவில் கோபுரம்



கரும்பீஷ்வரர் கோவில்

அப்பாவின் அப்பா, தாத்தா கோபாலனும், அவர் சகோதரர்களும், அவர்களது தந்தை அழகியசிங்கமும் பிறந்த ஊர் கோவில்வெண்ணி. தாத்தா கோபாலன் பெரும்பான்மையாக கும்பகோணத்தில் வாழ்ந்து அப்போதைய ஆங்கிலேய அரசில் வேலை பார்த்து, அப்பாவும் உடன்பிறந்தோரும் வாழ்ந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் ஆயினும், தந்தை வழி பூர்விகம் என்று கோவில்வெண்ணி. அப்பாவின் அம்மா செங்கமலம் பிறந்தது திருவரங்கம். குடும்பத்தோடு ஒரு முறை கூட கும்பகோணம் சென்றதில்லை. 2005ல் அம்மா பிறந்த பூண்டி எனும் சிறு கிராமத்திற்கு முதல் முதல் இரண்டு சித்தி ஒரு பெரியம்மாவுடன் விஜயம்.

பூர்வீக தலங்களுக்கு பெற்ற தாய் தந்தையோடு ஒரு முறை கூட செல்லாத விசித்திர குடும்பம். நிற்க. அப்பாவுடன் 2004ல் கும்பகோணம் போக ரயில் டிக்கேட் எல்லாம் எடுத்த பின், ஒரு வாரமாக கும்பகோணம் புகழை பறைசாற்றிய அப்பா, கடைசி நாளில் கும்பகோணம் போக விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார். 2010ல் அப்பா இறைவனடி சேர்ந்தார். 1981ல் பரமபதம் அடைந்த அம்மாவை சந்தித்து என்ன பேசினார்களோ.
முதன் முறை 2010ல் தான் கும்பகோணம் சென்றேன். அப்பா படித்த நேட்டிவ் ஹை ஸ்கூல் பெரியப்பாக்கள் படித்த டவுன் ஹை ஸ்கூல், இளவயதில் அவர்கள் குளித்து மகிழ்ந்த காவேரி, மகாமக குளம், சாரங்கபாணி சக்கரபாணி ராமசாமி கோவில்கள், டிகிரி காபி, கடப்பா கொட்சு, இலை சாப்பாடு என்று பல் வேறு அனுபவங்கள்.
நாகேச்சுரம், புள்ளமங்கை, தாரசுரம், ராமசாமி கோவில்களின் கண்கொள்ள சிற்பங்களை முதன் முதல் பார்த்து பரவசித்த அனுபவுமும் கூட.
அப்பொழுதே கோவில்வெண்ணியும் போகவேண்டும் என்றும் ஆசை. அதற்கு பின் பல முறை கும்பகோணம் போயிருந்தாலும், ஏதோ காரணம் சாக்கு போகவில்லை. இந்த ஜூலை மாதம் ஆரம்பக்கட்டத்தில் நண்பர் விஸ்வநாதன் கவின் கலை கல்லூரி விழாவில் பேச அழைத்தபோது, கோவில்வெண்ணி மார்கத்திலுள்ள வலங்கைமான், ஆலங்குடி மட்டுமே பிரதான சித்தமாக இருந்தது. அருகில் தானே இருக்கு, கோவில்வெண்ணியும் போகலாமே என்று சக பயணிகளும் ஊக்கம் தர, முதன் முறை அங்கே சென்றோம்.
முதலில் சிவன் கோவிலை தான் சேர்ந்தோம். சக்கரை நோய் உள்ளவர்களுக்கு இங்கே நிவாரணம் என்ற நம்பிக்கையில் கூட்டம் பெருகி, மதியம் ஒரு மணி வரை கோவில் திறந்திருந்தது. அர்ச்சனை தட்டு வாங்கலாம் என்றால் தேங்காய் தீர்ந்து விட்டது என்று ஒரே கடை வைத்தவர் தெரிவித்தார்.
சன்னதியில் பல பேரிடம் பூஜைக்கு அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்ட அர்ச்ச்கர் என்னை பார்த்து ஏதோ எண்ணம் மலர்ந்து அர்ச்சனை செய்யப் போரேளா என்று கேட்க, இல்லை தேங்காய் காலியாகிவிட்டதாம் என்று பதில் சொல்ல, அரண்டு போய்விட்டார். இருங்கோ, எங்கிட்டே ஒரு தேங்காய் இருக்கு என்று கூறி, அவரே எடுத்துக்கொடுத்தார்! அடடா! மிக நிதானமாக உள்ளம் உவக்க அர்ச்சனை நடந்த பின், உத்சவ மூர்த்திகளை பார்க்கும் போது சோமாஸ்கந்தர் என்னை பார்த்து லேசாக சிரிப்பது போல் ஒரு சிலுசிலுப்பு.
அடுத்த தெருவில் இருக்கும் பெருமாள் கோவில் மூடியிருக்குமோ என்று ஐயத்துடன், அரசியல் கட்சி சின்னங்கள் சுவர்களை அலங்கரித்த அக்ரஹார வீடுகளை தாண்டிபோனால், பட்டரை தவிற யாரும் இல்லாத ஏகாந்தம். மூலவர் வடகலை ரங்கநாதர்!
என்னது வடகலையா? ரங்கநாதரா? ஆனால் மூலவர் அனந்தசயனம் இல்லையே! ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்க, அவருக்கு முன்னே அதே நின்ற கோலத்தில் திருமகள் நிலமகள் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்.
பட்டர் ஸ்ரீநிவாசன் ஆர்த்தி சேவை நடத்திய பின் நீளமாக தல புராணத்தை விவரித்தார். கரிகாலச் சோழன் மாபெரும் வெற்றிகண்ட போர்களம், இந்த வெண்ணி. சங்கப் புலவர் வெண்ணிக்குயத்தியாரும் வாழ்ந்த ஊர். ஆடவல்லானுக்கு பல மாடக்கோவில்கள் கட்டி புகழும் புண்ணியமும் சூட்டிக்கொண்ட கோச்செங்கட் சோழன், எழுபது போர்களில் வென்ற பின் ஒரு போரில் தோல்வியடைய, அவன் கனவில் தோன்றிய திருமால் இந்த வெண்ணி தலத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பினால் உன் அடுத்த போரில் வெற்றி என்று வரமளித்தானாம். இதை கேட்டபோது வடகலை சிறப்பு பட்டமெல்லாம் மறந்தே போய்விட்டது.
பாடல் பெற்ற தலமா, வைப்பு தலமா என்று கேட்டபோது, இந்த பெருமாளை அனைவரும் பார்க்கமுடியாது. ”மாரி மலை முழஞ்சில் மன்னிகிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து” என்று பாசுரம் பாடிய ஆண்டாள், "காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்” என்று ஈற்றடி வைத்தாள். இந்த பெருமாள் ஆராய்ந்து அருள யாரை அழைக்கிறாரோ அவர் மட்டுமே இங்கே வந்து தரிசனம் பெருவார்கள் என்று ஒரு விளக்கமளித்தார்.
எந்தையும் தாயும் அவர் முந்தையும் மூதாயும் மகிழ்ந்து குலாவிய தலத்திற்கு அப்போதைக்கு இப்போதே தப்paபாமல் சென்று வந்த ஒரு திருப்தி.

ஸ்வஸ்தி ஸ்ரீ!



Thursday, 2 July 2026

கும்பகோணத்தில் ஒரு பாராட்டு விழா

சென்னை எழும்பூர் கவின் கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்ற திரு சிவராமகிருஷ்ணனையும்,  கும்பகோணம் கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர்கள் திரு அருளரசன், திரு ரவி இருவரையும் கௌரவிக்கும் ஒரு பாராட்டு விழாவை இம்மூவரின் மாணவர்கள்  நடத்த உள்ளனர். வரும் சனிக்கிழமை ஜூலை 4, காலை 930 முதல் முழு நாள் நிகழ்வு. இதில் என்னையும் பேச அழைத்துள்ளனர்; காஞ்சி கைலாசநாதர் கோவிலை பற்றி ஒரு உரையாற்றுவேன். பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அஜந்தா ஓவியங்களை பற்றி உரையாற்றுவார். காலையில் நாட்டியத்துடன் விழா தொடங்கும். மதியம் மாணவர்களின் கலந்துரையாடல். நிகழ்ச்சி நிரல் இதோ.

கும்பகோணத்தில் இந்த சனிக்கிழமை இருந்தால் இந்த விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். சிவராமகிருஷ்ணன் எதை பேசினாலும் மிகவும் சுவாரசியமாக, கலை ரசனை பொங்க, கேட்போர் காதில் தேன் வந்து பாயும். அரிய வாய்ப்பு.



11-ஜுலை

விழாவிலிருந்து சில படங்கள்:

திருவாளார் அருளரசன், சிவராமகிருஷ்ணன், கோபு, ரவி
படம்: விஸ்வநாதன்

கோபுவின் உரை
படம்: விஸ்வநாதன்


Thursday, 29 December 2016

சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ

சமீபத்தில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே.
----------------------------------------------------------------

சிவன் முறுவல்

கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். வளர்பிறை தேய்பிறையாய் பக்தி வரும் நம்மில் சிலர், திருவிழா, திருமணம், பிறந்தநாள், வேண்டுதல் என்று ஏதேதோ காரணத்திற்கு பழக்கரீதியாய் கோயில் செல்கிறோம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாத வகையறாக்களே சிறுவயதில் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது… கச்சேரி, நாட்டியம் என்று கலைகளை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். ஓரிருவர் சிற்பங்களை காண செல்வதுமுண்டு.
எந்த கோயிலுக்கு போகலாம்? முருக பக்தருக்கு அறுபடை வீடும், வைணவருக்கு ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும், சைவருக்கு நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களும் தமிழகத்தில் புகழ்பெற்றவை. ஒரே நாளில் பஞ்ச பூத தலங்களையோ, நவகிரக தலங்களையோ காணும் வழக்கம் சமீபத்தில் புகழ் பெற்றுள்ளன. கல்கி எழுதிய பொன்னியின் “சிவகாமியின் சபதம்” கதையை படித்த ஆர்வத்தில், வந்திய தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்ற கோயில்களையும் வரலாற்று தடங்களையும், பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை குழுவினர் ஆண்டுக்கொருமுறை வலம் வருகின்றனர். நான் சேர்ந்துள்ள தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் மகேந்திர வர்ம பல்லவன் பாதையில் அவன் எழுப்பிய வல்லம், சிங்காவரம், தளவானூர், மண்டகபட்டு குகை கோயில்களை சென்று களித்தோம். 

கும்பகோணம் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நண்பர் விசுவநாதன், நாகசாமி எழுதிய ஓவியப்பாவை நூலை ஏந்தி ஓவியங்களும் சிற்பங்களும் புகழ்வாய்த்த குந்தவை ஜீனாலயம், கீழ் பழுவூர், குறிச்சி, திருப்புலிவனம், கோனேரிராஜபுரம், வேப்பத்தூர், திருவலஞ்சுழி, திருப்பருத்திக்குன்றம் என்று பயணிக்கிறார்.

கல்லூரி நாட்களில் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கல்வெட்டு படிக்க ஆவலோடு சென்றேன். இருளில் கல்வெட்டு சரியாக தெரியவில்லை; தெரிந்தவற்றை படிக்க இயலவில்லை. 2000இல் “சிவகாமியின் சபதம்” படித்தபின் எனக்கு சிற்பத்தின் மேல் ஆர்வம் வந்தது. கேலண்டர் படங்களிலும், அமர் சித்திர கதா புத்தகங்களிலும், ஏபி நாகராஜன் திரைப்படங்களிலும் காணும்  தெய்வ வடிவங்களையே பார்த்து பழகியிருந்தேன். முனைவர் சித்ரா மாதவனின் வரலாற்று உரைகளையும் பல சிற்பங்களின் வடிவங்களை அவர் படம் காட்டி விளக்கிய பொருட்டே, பாரத சிற்ப கலையையும் அதன் நெடும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

தியானத்தில் அமர்ந்த சிவன் சடையில் நடுவே குற்றால அருவி போல் விழும் கங்கையை கேலண்டர் படங்களில் காண்கிறோம். ஆனால் பல்லவர் சோழர் கால சிற்பங்களில் அப்படியில்லை. ஈசன் தலையில் நிற்க விரும்பும் கங்கையின் அகங்தையை அடக்க, தன் சடையின் ஒருமுடியை மட்டும் விரலால் நீட்டுகிறான் பரமசிவன். அது மட்டுமா? நானிருக்க யாரிவள் என்று கங்கையை காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா? ஈசனுக்கு தேவியின் பாராமுகமா? இல்லை இது மலைமகளின் ஊடல்! உமையின் உடல் ஒருபுரமிருக்க, அவள் முகமோ கங்காதரனை காதலோடு நோக்குகிறது.

பார்க்கும் பார்வதியின் முக பாவம் ஒருபால். தாங்கும் தாணுவின் கோலமென்ன? பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து பூதேவிக்கு தாங்கமுடியாமல் விழுவதை தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கரையும் வாட்டுகிறதா அவனை? ஒன்றுமில்லை. மிக அலட்சியமாக, இடுப்பில் ஒரு கைவைத்து, இதழில் புன்சிறிப்பு மலர திருவிளையாட்டு குறும்பு கோலத்தில் காட்சி தருகிறான். பல்லவ காலத்து சிற்பிக்கும் சமகாலத்து ஓவியனுக்கும் உள்ள பெரும் இடைவெளியை இதில் காணலாம். ஆகாயகங்கையின் அதிவேகம் சிவனின் மகிமைக்கு ஒரு சுமையல்ல என்பதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக உணர்ந்து அந்த சிற்பி இதை வடித்திருக்கவேண்டும்.

கங்காதரர் - ஆடுதுறை

ஸ்தபதிகள் கோயில் கட்டுமுன், வேத மந்திரத்தை தியானம் செய்து, அந்த தியானத்தின் பலனாய் மனக்கண்ணில் கோவிலின் வடிவத்தை கண்டபின்னரே, அதை கட்டத் தொடங்குவராம். சிற்ப சாத்திரங்களின் விதிகளுக்கிணங்கவே ஸ்தபதிகள் கோயில்களை அமைத்தாலும், அவரவர் திறமையும் கற்பனையும் கலைபாங்கும் சிற்பத்திலும் கோவிலின் கட்டுமானத்திலும் மிளிர்ந்து தெரிகிறது.

ஒரு கோயிலில் ஒரு கோஷ்டத்திலுள்ள ஒரு சிற்பத்துக்கே இத்தனை பின்கதையிருப்பின், தஞ்சை தாராசுரம் போன்ற பெருங்கோயில்களில் என்னவெல்லாம் இருக்கும்? பயணத்தால் மட்டும் சிலவற்றை அறியமுடியாது. பல கோயில்களில் பல சிற்பங்கள் புரியாத புதிராகவே உள்ளன. நம்முன் பற்பல கோயில்களுக்கு சென்று, தங்கள் கலைக்கண்களால் கண்டு களித்து, நமக்கு தெரியாத விவரங்களை ஆர்வலர்கள் நூலில் எழுதியதை படித்தால் கல்லாதது கல்லளவு என்று புரியும்.

மாமல்லபுரத்து பஞ்ச பாண்டவ ரதங்களில் பெரியது தர்மராஜ ரதம். முதலில் சென்றபோது கீழ்தளத்திலுள்ள எட்டு சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். கல்வெட்டுகள் தெரிந்தன. தமிழ் எழுத்து போலிருந்தாலும் சில எழுத்துக்களுக்கு அங்குமிங்கும் வாலும் கொம்பும் முளைத்தது போல் தெரிந்தது. பல்லவருக்கு ஒருவேளை ஆர்வக்கோளாரா என்ற சந்தேகமே எழுந்தது. அது தமிழே இல்லையாம். பல்லவ கிரந்தலிபியில்  எழுதிய சமஸ்கிருதமாம். “நாமும் ஏக்கிசான் ரகுதாத்தா ஹிந்தி படித்தோமே? ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள்?” என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வடக்கிந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இது போன்ற அடிப்படை தகவல்களை பள்ளிக்கூட பாடங்களில் சொல்லவேண்டாமா? கல்வெட்டு ஆய்வோர்க்கு மட்டும் தெரியும் ரகசியமாக ஏன் இருக்கவேண்டும்?

மல்லை தர்மராஜ ரதம்
கிரந்த லிபியில் வடமொழி கல்வெட்டு
அது மட்டுமா! மலையா, கம்போடியா, பர்மா, சுமத்திரா, சாவகம், சியாமதேசம் என்னும் தாய்லாண்டு – ஏறக்குறைய தொண்ணூறு தென்கிழக்கு ஆசிய மொழிகளின் எழுத்துகள் கிரந்தத்திலிருந்து பிறந்தவை என்பது மொழிவல்லுனர் கருத்து. ஐரோப்பிய கும்பெனியார் ஆட்சி வந்தபின் அம்மொழிகள் பலவும் லத்தீன லிபியின் வடிவை தழுவிக்கொண்டன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மல்லை கலை உலாவின் அறிமுக உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் இதை சொன்னபொழுது, எனக்கு மெய்சிலிர்த்து. சீவக சிந்தாமணியை முதலில் படிக்கும்போது உ.வே.சாமிநாத ஐயருக்கு இப்படி அல்லவா சிலிர்த்திருக்கும்?

மாமல்லபுரத்தை பற்றி முதலில் 1788இல் எழுதிய வில்லியம் சேம்பர்ஸ், இது சியாமதேச லிபி, ஒரு காலத்தில் தமிழகத்தை சியாம மன்னர்கள் ஆண்டிருக்கவேண்டும் என்றே கருதினார். அக்காலத்தில் அங்கே வாழ்ந்த பிராமணர்களுக்கும் பல்லவர் காலத்து கிரந்த லிபி தெரிந்திருக்கவில்லை. பல்லவர் என்ற மன்னர் குலத்தையே மக்கள் மறந்திருந்தினர். அந்த வரலாறை மீட்டெடுத்தது ஒரு பெரும் கதை. இந்த பின்புலத்தை அறிந்தபின் சென்று பார்த்தால், நம் சிற்பக்கலையின் மகிமையே தனி. இலக்கியத்திலும் இசையிலும் அரசியலிலும் நமக்குள்ள ஆர்வமோ ஆழமோ, சிற்ப ஓவிய கலைகளில் இல்லை. இணையம் முகநூல் டிஜிட்டல் கேமராக்களால் இது மாறிவருகிறது.

மல்லை தர்மராஜ ரதத்தை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேலே இரண்டு தளங்கள் இருப்பது தெரியும். அற்புதமான பல சிற்பங்கள் அங்கே உள்ளன. வீணாதர சிவன் அதில் ஒருவர். அவர் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. நமக்கு பழகிய வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் உருவாக்கியதாம். சோழர் காலத்து தமிழகத்தில் மட்டுமல்ல, ஒரிசா தலைநகர் புவநேஷ்வரில் முக்தேஷ்வர் கோவிலில் வீணை வாசிக்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை கண்டேன். அவள் கையிலும் அதே மெல்லிய வீணை. 

மாமல்லபுரம் தர்மராஜ ரதம்
வீணாதர சிவன்


புவனேசுவரம் - முக்தேசுவரர் கோயில்
வீணை வாதினி
ஆனால் வீணாதர கோலத்தில் என் மனதை கொள்ளை கொண்டது கும்பகோணத்தில் நாகேஷ்வரன் கோவில் வீணாதர தட்சிணாமூர்த்திதான்.

நாகசாமியின் ஓவியப்பாவை நூலில் வலம்புரம் என்னும் ஊரை அப்பர் பாடிய தேவாரத்தை எடுத்துக்காட்டுவார்.

“கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் 
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
 
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே”

என்பது அப்பரின் தேவாரம். “கொவ்வை செவ்வாயில் குமிண்சிறிப்பு” என்ற வர்ணனை பலருக்கும் தெரியும். “சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ” என்ற இந்த வர்ணனை அதையே செய்தது. கும்பகோணம் நாகேஷரன் கோவிலுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி இதழ்களிலுள்ள் சிறுமுறுவல் என் சிந்தை  வௌவியது.

தட்சிணாமூர்த்தி - குடந்தை கீழ்க்கோட்டம்
சிவன் முறுவல்

சிவன் முறுவல் - வலம் அக்டோபர் 2016 இதழ் 
கல்லிலே ஆடவல்லான்