Sunday, 21 July 2019

கடலோடி


என் வாழ்வில் கிடைத்த தலை சிறந்த பாக்கியங்களில் ஒன்று, நரசையாவின் நட்பு. சிலரது அறிமுகம் கிடைத்தாலே பாக்கியம். சிலரது வழிகாட்டல் கிடைத்தால் பாக்கியம். சிலரது படைப்புக்களை ரசிக்க வாய்ப்பு கிடைத்தாலே பாக்கியம். இது எல்லாம் கிடைத்து அதற்கும் மேல், அன்பு, அக்கறை, ஆசிர்வாதம், என்று வரிசையாக மழை பெய்து, நட்பும் கிடைத்தால் என்ன சொல்வது?

ஆலவாய்

முதன் முதலில் அவரை நான் பார்த்ததும் கேட்டதும் மதறாஸ் நாள் கொண்டாட்டத்தில். 2004 அல்லது 2005 என்று நினைக்கிறேன். சேமியர்ஸ் இல்லத்தில் அவர் கணித மேதை ராமானுஜனை பற்றி உரையாற்றினார். உரைமுடிந்ததும் ஒரு பிரபல பாடகர் கேட்ட குறும்பு கிசுகிசு கேள்வியை மெள்ள சிரித்து நரசையா உதறியது தான் ஏனோ பளிச்சென நினைவிருக்கிறது. பின்னர் ரோஜா முத்தையா நூலகத்திலும் வேறோரிரு இலக்கிய கூட்டத்திலும் பார்த்திருக்கலாம். 2009ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் டக்கர் பாபா அரங்கில் தான் எழுதிய ஆலவாய் நூலின் ஆய்வுகளை பற்றி பேசினார். சென்னை பட்டணத்து எல்லீசன் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தமிழ் கல்வெட்டு என்னை அசத்தியது. வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் பேசும் ஆங்கிலேயர்களை மட்டுமே மனதில் கண்ட எனக்கு, எல்லிஸ் போன்ற பண்டிதர்கள் இருந்ததும், எல்லீசன் என்று தன்னை அழைத்துக்கொள்வதும் மிக விசித்தரமாக தோன்றியது. அப்பொழுது வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம், காலின் மேகன்சீ, யாரும் தெரியாது. கால்டுவெல், போப், வீரமாமுனிவர் கேள்விப்பட்டாலும், அந்த கல்வெட்டும் கவிதையும் அதிசயம். அரங்கத்தில் மேசைமேல் நரசையாவின் நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தன.

சில மாதங்களில் (டிசம்பர் 2010 என்ற நினைவு) தபாஅ-வின் மல்லை கலை உலாவுக்கு முன் பல்லவகிரந்தம் பற்றி ஒரு உரையாற்றினேன், நரசையா வந்திருந்தார். நான் பேசிமுடித்தபின் ”நிறைய உழைதிருக்கிறாய், நன்றாக தெரிகிறது” என்று பாராட்டினார். அதன்பின் பல முறை சந்தித்தோம். ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியில் தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி, தமிழ் மரபு அறக்கட்டளையின் ஜெர்மனி வாழ் சுபாசினி இருவரையும் அறிமுகப்படுத்தினார். பத்மாவதி என்னை ஏதோ கேட்க, உங்கள் உரைகளை கேட்டுள்ளேன் மேடம், என்று நான் சொல்ல, அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, அதே சமயம் “இங்கபாரேன், ஏற்கனவே தெரிந்தும் அடக்கமா எதுவும் தெரியாத மாதிரி வாசிக்கிறத” என்றார். என் முகத்தில் நரசிம்ம ராவ் சாயல் தெரிந்ததா அர்சுணன் தபசு பூனை சாய்ல் தெரிந்ததா என்று எனக்கு இன்று வரை சந்தேகம். நரசையாவின் “கடல்வழி வணிகம்” புத்தகம் தேடி வாங்கவே அன்று புத்தக கண்காட்சியில் அன்று மேலும் அலைந்திருந்தேன். பல மாதங்களுக்கு பின் ஒரு நாள் சந்திக்க பேராசிரியர் சுவாமிநாதன் என்னை அழைத்து சென்றார். கடல்வழி வணிகம் நூலை நீட்டி கையொப்பம் வாங்கினேன். கடலோடி புத்தகத்தை பரிசளித்தார்.
சாமிநாதனுடன் நரசையவின் இல்லத்தில் 


கடலோடி

கடலோடி தமிழ் இலக்கியத்தில் ஒரு விசித்திர சம்பவம். அந்நாள் வரை அப்படி ஒரு நூலை தமிழில் யாரும் எழுதியதில்லை. செவ்விலக்கியமும் தெரியாத, சமகால தமிழ் இலக்கியமும் தெரியாத நான் இதைசொல்ல தகுதியில்லாதவன். இந்திரா பார்த்தசாரதி, தி ஜானகிராமன், போன்ற ஜாம்பவான்கள் இதை உணர்ந்து எழுதியுள்ளனர். என் கல்லூரி நண்பர் ஜோசப் ஆனந்தும் நரசையாவை பற்றி ஒரு முறை பேசி ஆச்சரியப்படுத்தினார். நாங்கள் படித்த அருள்மிகு கலசலிங்கம் கல்லூரியில் படித்த வேறு ஒருவர் கப்பல் துறையில் சேர்ந்ததாகவும், நரசையா நடத்திய கப்பல் பொறியியல் வகுப்புகளில் படித்ததாகவும் சொல்லியிருந்தார்.

நான் பிறக்கும் முன்னரே ஆனந்த விகடன் பத்திரிகையில் முத்திரை கதைகளை எழுதி தமிழக வாசகர்களின் மனதை பிடித்து, தமிழர்கள் உலகை வேறுவிதமாக பார்க்கவைத்தவர் நரசையா. அமெரிக்காவும் ரசியாயும் பிரதானமாக கற்றவர்கள சிந்தையையும் சித்தாந்தத்தையும் கோலோச்சிய காலத்தில் கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளை பற்றி ஒருவர் தமிழில் எழுதியதே அதிசயம் என்பதும், அதுவும் சுவாரசியமாக எழுதியது பேரதிசயம் என்பது அக்காலத்தில் அந்த கதைகளை படித்தவர்களின் கருத்து.

கடலோடி நரசையாவின் சுயசரிதை. இந்திய கப்பற்படையில் சேர்ந்து அவர் பணிபுரிந்த கால அனுபவங்கள். ராணுவத்தில் பணி புரிந்த பல இந்தியர் தமிழர் தங்கள் சுயசரிதையை எழுதியுள்ளனர்; ஆனால் அவை ஆங்கிலத்தில்தான் உள்ளன. தமிழில் இன்றளவும் மற்றவர் யாரேனும் எழுதியுள்ளனரா?

நிற்க.


முண்டாசு புலவன்

அவர் இல்லத்தில் சந்தித்த சில நாட்களுக்கு பின் என்னை அழைத்து, எழுத்தாளர் கிருத்திகா எழுதிய பாரதியின் வாழ்க்கை வரலாற்று நூலை கொடுத்து, இதை பற்றி பேச வேண்டிய ஐவரில் நீயும் ஒருவன் என்று ஒரு குண்டு போட்டார். நான் படிச்சதில்லை சார், என்று தயங்கினேன். படிக்க தானே இந்த புத்தகம் குடுக்கிறேன் என்றார். எங்கே நிகழ்ச்சி? திருவல்லிக்கேணியில் பாரதி இல்லத்தில்! கரும்பு தின்ன கூலியா? இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அற்புதமான புத்தகம். தமிழர்களை தவிர பாரத நாட்டில் பலருக்கும் சுப்பிரமணிய பாரதியை பற்றி எதுவும் தெரியவில்லை என்ற ஏக்கத்தில், கிருத்திகா ஆங்கிலத்தில் எழுதிய நூல். ”வீணையடி நீ எனக்கு, மீட்டும் விரல் நான் உனக்கு” என்ற பாரதியின் பாடல் வரிகளை, யாழில் தவழும் விரல் () என்ற பெயரில் வந்த நூல். அங்குமிங்கும் ஓவியர் கோபுலுவின் கோட்டோவியங்கள்.

நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கே தொண்ணூற்றுமூன்று வயது கோபுலுவும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் அடுத்தடுத்து அம்ர்ந்திருந்தனர். என்னை அறிமுகம் செய்து கொண்டபோது, உங்கப்பெயர் என்ன என்று கோபுலு கேட்க, நான் கோபு என்று பதில் கூற, அப்படியா, என் பெயர் கோபுலு என்று அவர் மழலைப்போல் மகிழ்ந்ததில் புல், வைக்கோல், மூங்கில் எல்லாம் அரித்தது. திருவாசகத்துக்கு உருகாதார் கூட கோபுலுவின் சித்திரங்களுக்கு உருகிவிடுவார்; மாணிக்கவாசகரே நேரில் வந்தால், அப்பனே கோபுலு, என்னை ஒருசின்ன சித்திரம் வரைந்துகொடுப்பாயா என்று கேட்டிருப்பார். பாவம் மாணிக்கவாசகர் அவசரப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்துவிட்டார்.
பாரதி இல்லத்தில் என் உரை
மேடையில் கோபுலு, நரசையா, ராஜ்குமார் பாரதி

சில மாதங்களில் கோபுலு காலமானார். நெஞ்சம் வருடினாலும் நேரில் ஒருமுறையேனும் சந்தித்து சில நிமிடம் பேசினேன் என்ற ஒரு மகிழ்ச்சி.
இபா எனக்கு சொன்ன கதையோ அதிவிசித்திரம். பசுமை புரட்சி எம்.எஸ்.சுவாமிநாதன் கூட்டத்தில்; அவர் மனைவி மீனா சுவாமிநாதனே இந்த நிகழ்ச்சியை நடத்தித்தரும்படி நரசையாவைக் கேட்டுக்கொண்டார். கிருத்திகாவின் மகள் மீனா சுவாமிநாதன். கிருத்திகாவும், நரசையாவின் தாய்மாமன் சிட்டி சுந்த்ரராஜனும் பரிமாற்றிக்கொண்ட கடிதங்களை பின்னர் ஒருநூலாக நரசையா தொகுத்து நூலாக்க, கோபாலகிருஷ்ண காந்தி ஒரு விழாவில் வெளியிட்டார். அதற்கும் சென்றேன்.
கண்ணை கட்டுகிறதா?

தாகூர் கண்ட அகத்தியன்

பெசண்ட்நகர் கலாட்சேத்திரா வளாகத்தில் உள்ள உவேசா நூலகம் போகலாம் வா என்று நவம்பர் 2013ல் நரசையா அழைத்தார். உவேசாவை நம்கால அகத்தியனாக புகழ்ந்து ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழி கவிதையை தேடி, அவர் கணையாழியில் ஒரு கட்டுரை எழுத நோக்கம். உவேசாவின் தலைப்பாகை, எழுத்தாணி, நாள்குறிப்புகள், என்று பல்வேறு பொக்கிஷங்களை மிகச்சாதாரணமாக கண்டு… நரசையா ஒரு அலுவலருடன் பேச, செய்ய ஒன்றுமின்றி, ஒரு மேசையில் கண்சிமிட்டி அழைத்த ஆனந்தவிகடனை கையிலெடுத்து புரட்டினேன். “எங்க வந்து எதை படிக்கிற,” என்று புறங்கையை செல்லமாக ஒரு மிலிட்டரி தட்டு தட்டினார். நரசையவின் கதைகளை பதிப்பித்தாலும், உவேசாவின் என் சரிதத்தை பதிப்பித்தாலும், பத்துப்பாட்டும் எட்டுத்தொகைக்கும் ஆனந்த விகடனின் அந்தஸ்து ஒரு படி கீழே தான் என்று உணர்ந்த தருணம்.
சித்திரபாரதி நூல் எழுதிய ரா.அ. பத்மநாபனின் அஞ்சலி கூட்டத்திற்கு என்னை அழைத்தார் நரசையா. பீஷ்மர் நகுபோலியனையும் துரோணர் சாமிநாதனையும் சாரதியாய் அழைத்து சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த பலரும் ஜாம்பவான்களாயினும் மண்டையம் பார்த்தசாரதி ஐயங்கார் அசத்தினார்.

மதுரா விஜயம்

நான் ஒருவாரம் மதுரையில் இருப்பேன், நீ வந்தால் மீனாட்சி கோவிலையும் திருமலை நாயக்கர் மகாலையும் உனக்கு காட்டுகிறேன் என்று நரசையா சொல்ல… விளாடிமிர் பூடின், பராக் ஓபாமா, தங்கள் நாட்டு சிக்கலை சரிசெய்ய என்னை அழைத்த போதும், மகேந்திர சிங் தோனிக்கு வேகமாக ஓட வரவில்லை நீதான் அவருக்கு ஓட்டப்பயிற்சி தரவேண்டும் என்று இந்திய கிரிக்கட் வாரியம் அழைத்தப்போதும், ப்ளூட்டோவிற்கு கிரகம் பிடித்திருக்கிறது நீ தான் வராகமிகிரனின் பிரஹத் ஜாதகம் படித்து அதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லவேண்டும் என்று அனைத்துலக அஸ்ட்ரானமர் சங்கம் அழைத்தபோதும்… போதும், போதும், நண்பன் கருணாகரனுடன் நான் மதுரை சென்றேன்.
திருமலை நாயக்கர் மகாலில்

முதல் நாள் நரசையாவின் ஏற்பாட்டின்படி மதுரை தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கத்தம் என்னையும் கருணாகரனையும் மதுரையில் ஆனைமலை, அரிட்டாப்பட்டி, தென்பரங்குன்றம், சமணர் மலை என்று பல தொன்மையான இடங்களுக்கு அழைத்து சென்றார். இரண்டாம் நாள் என் தம்பி ஜெயராமனும் மதுரை வந்து சேர்ந்துகொண்டான். காலை இரண்டு மணிநேரம் மதுரை மீனாட்சிகோவிலை ஒரு சிற்பம், தலம், ஓவியம் விடாமல் நரசையா காட்டினார். அதன்பின் அருகேயிருக்கும் கூடலழகர் கோவில், மதனகோபாலசாமி கோவிலுக்கும் அழைத்துச்சென்றார். கூடலழகர் மூன்று தளங்களில் திருமால் நின்ற கிடந்த அமர்ந்த கோலங்களிலுள்ளார். உத்திரமேருர் சுந்தரவரதர் கோவிலைப்போல். மதனகோபாலசாமி கோவிலிலிருந்து ஒரு மண்டபம் அமெரிக்காவிற்கு சென்று பிலடெஃபியா நகர அருங்காட்சியத்தில் உள்ளது. ஆலவாய் உரையிலும் நூலிலும் இதை குறிப்பிட்டிள்ளார். கிணத்தை ஆட்டையப் போட்டாங்க என்று சினிமாவில் வடிவேலு வாசகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இந்த மண்டபத்தின் பயணக்கதை. பாரத நாட்டிலுள்ள பல மண்டபங்களை விட பிலடெல்ஃபியாவில் அந்த மண்டபம் நன்றாக பராமரிக்கப்படுகிறது. 

மறு நாள் கழுகுமலை, திருவில்லிபுத்தூர், அதனருகே கிருஷ்ணன்கோவில் கிராமத்தில் நான் படித்த அருள்மிக கலசலிங்கம் பொறியியற் கல்லூரி சென்று வந்தோம். ஐயா வரவில்லை. 

அதற்கடுத்த நாள் திருமலை நாயக்கர் மகாலை மூன்று மணிநேரம் சுற்றிக்காட்டினார். ஒரு பொறியாளர் பார்வையிலும், வரலாற்று ஆய்வாளர் பார்வையிலும் பல விளக்கங்கள். இந்த பதிவில் எழுத இடமில்லை. முக்கியமாக எல்லீசன் கல்வெட்டை காட்டினார். அந்த கல்வெட்டில் எல்லீசன் எழுதிய தமிழ் பாடலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். நரசையாவின் உதவியில் எல்லீனை பற்றி பல தகவல்களை நமக்கு திரட்டி தந்த அமெரிக்க பேராசிரியர் தாமஸ் டிரௌட்மனின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. சமீபத்தில் சென்னைக்கு அவர் வந்தபொழுது ரோஜா முத்தையா நூலகத்தில் எல்லீஸ் ஆராய்ச்சியின் அடுத்தக்கட்டத்தை பற்றி உரையாற்றி, நரசையாவின் பெரிய பங்களிப்பையும், என் சிறுதொண்டையும் குறிப்பிட்டார். என் இல்லத்திற்கு மதிய உணவுக்கு வந்து மகிழ்வித்தார்.
என் இல்லத்தில் தங்கை தேவசேனா,
டிரௌட்மன், நரசையா, நான், தம்பி ஜெயராமன் 

என் வாழ்வில் கிடைத்த தலைசிறந்த பாக்கியங்கள் என்று இந்த கட்டுரையை தொடங்கினேன். இன்னுமோர் பாக்கியம் இந்த வாரம் வருகிறது. ஜூலை 24 2019 புதன்கிழமை மாலை 6.45 சென்னை தியாகராய நகர் டக்கர் பாபா பள்ளியில், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் கடலோடி நூலை பற்றி உரையாற்றவுள்ளேன். அவசியம் இந்த அதிசய மனிதரின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள்.

ஆசிர்வாதம் கூட வாங்கிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அவரது பிறந்தநாள்.

நரசையா கட்டுரைகள் 

SamratAsoka – book release function
மதராசபட்டினம் நூல் விமர்சனம்
Thomas Trautmann on Francis Whyte Ellis
Rabindranath Tagore on UVeSwaminatha Iyer
3 comments:

 1. M V Seetaraman27 July 2019 at 11:33

  Sri Narasayya is a great person, noble, mother tongue is Telugu, extensively written in Tamil, you are luckey in having his blessings, lot to be learnt from him as an engineer, Tamil Writer of value based . i am also want to meet him , a long standing desire

  ReplyDelete
 2. Whether your speech on kadalodi available in youtube?

  ReplyDelete
  Replies
  1. Yes, here - https://www.youtube.com/watch?v=5ZzR-W_5NwQ

   Delete