Showing posts with label Stellarium. Show all posts
Showing posts with label Stellarium. Show all posts

Friday, 14 April 2017

ஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு


April 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் 

April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்று (ஏப்ரல் 14, 2017) சித்திரை மாதம் முதல் நாள் (இது சவன தினம் - solar day). மேலும் த்ரிதியை திதி (lunar day). மேலும் இன்று விசாக நட்சத்திரம் (stellar or sidereal day). பாரத பண்பாட்டில் மூன்றையும் அனுசரிப்பது பண்டைய வழக்கம். ஸ்டெல்லாரியம் மென்பொருளில் படம் எடுத்து இன்றைய இரவு விண்ணின் கோலத்தை காட்டியுள்ளேன். சித்திரை நட்சத்திரம் அருகே வியாழன் இருக்கும் (ஒரு மாசம் வாடகை கொடுத்துவிட்டார் அந்த பிரஹஸ்பதி, மெதுவாகவே அடுத்த வீட்டுக்கு செல்வார்).

2014-ல் தமிழ் புத்தாண்டு இன்று போல் த்ரிதியையில் வராமல், பௌர்ணமி அன்று வந்தது, அதாவது அன்றே சித்ரா பௌர்ணமி. இரண்டும் சேர்ந்து வருவது அபூர்வம் (ஆனால் அதிசயம் அல்ல - ஏறக்குறைய முப்பதாண்டுக்கு ஒரு முறை வரும்). ஆனால் அன்று செவ்வாய் கிரகமும் சந்திரனோடு உதித்து, அஸ்தமித்தது. அது இன்னும் கொஞ்சம் அபூர்வர்ம். 2017-ல் செவ்வாய் கிழக்கே இல்லாமல் மேற்கே காணலாம். விஜய் மால்யா, லலித் மோதி ஞாபகம் வந்தால் பழி ஐபிஎல்-லுக்கே.

சித்திரை நட்சத்திரம் அன்று சித்திரைக்கு அருகே இருந்த சந்திரன், இன்று விசாகம் அருகே இருப்பதால் இன்று விசாக நட்சத்திரம். கொஞ்சம் குழப்பமிருந்தால் திதி-நட்சத்திரம்-சவண நாள் வித்தியாசம் பற்றிய விளக்கத்திற்கு,  இந்த வலைப்பூவை படிக்கவும்.

எச்சரிக்கை - முழுதாக குழம்ப வாய்ப்புண்டு.

இந்திய விண்ணியல் கட்டுரைகள்

Sunday, 13 April 2014

தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி - செவ்வாய்

Night sky over Madras 9pm April 14, 2014
English version of this blog here

நாளை – ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு தொடங்கும் தினம். சித்திரை பௌர்ணமி. இரண்டும் ஒரே நாளில். கொஞ்சம் அபூர்வம். மூன்றாம் அபூர்வம் : செவ்வாய் (Mars) கிரகம், சிவப்பாக, இவ்விரண்டிற்கும் அருகே இருக்கும்.

ஸமஸ்க்ருதத்தில், சூரியோதயத்தில் தொடங்கும் நாளுக்கு தினம் என்று பெயர்; வேத காலத்தில ஸவண தினம் என்றும் அழைத்தனர். தினத்தை படைக்கும் சூரியனுக்கு தினகரன் என்று பெயர். சந்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு திதி என்று பெயர். நாளை சந்திரோதயம் மாலை ஆறு மணிக்கு என்பதால், ஆறு மணி வரை சதுர்தஷி, அதன் பின் பௌர்ணமி.

பஞ்சமி, சஷ்டி, சப்தமி என்ற திதிகள் நிலவின் வடிவத்தை வைத்து நாளை குறிக்கின்றன. இந்த கணக்கில் முப்பது திதிகள் வரும் – ஷுக்ல பக்ஷ எனும் 15 வளர்பிறை திதிகள், பிரதமை முதல் பௌர்ணமி வரை; கிருஷ்ண பக்ஷ எனும் 15 தேபிறை திதிகள், பிரதமை முதல் அமாவாசை வரை.

நட்சத்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு நட்சத்திரம் என்று பெயர். அஸ்வினி பரணி என்று தொடங்கி ரேவதியில் முடியும் 27 நட்சத்திரங்கள், அந்தந்த நாளில் சந்திரனுக்கு அருகே இருக்கும் நட்சத்திரத்தின் பெயரில் உள்ளன. அஸ்வினி அன்று சந்திரன் அஸ்வினி அருகிலும், பரணி அன்று பரணி அருகிலும், இருக்கும். நாளை சித்திரை (Spica) நட்சத்திரின் அருகே சந்திரன் இருக்கும்.

வானில் கோலம் ஏப்ரல் 14, இரவு 9 மணி அளவில் பார்த்தால்  மேலுள்ள காட்சியை காணலாம். கொஞ்சம் அதற்கு கீழே பளிச்சென்று ஒரு வெள்ளைப்புள்ளி தெரியும் – அதுவே சனி கிரகம். கிழக்கே கட்டடங்கள் உயரமாய் இருந்தால் 10 மணி வரை அளவில் பார்த்தால் தெரியும்.

மாதங்களின் பெயர்கள் பௌர்ணமி அன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தின் அருகே உள்ளதோ அந்த மாதத்திற்கு அந்த நட்சத்திரத்தின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே சந்திரன் காணும் நாள் பௌர்ணமி எனின் அந்த மாதம் சைத்திரை. விசாகம் அருகில் பௌர்ணமி வந்தால், வைகாசம். கிருத்திகை அருகில் பௌர்ணமி வந்தால், கார்த்திகை. தமிழில் இப்பெயர்கள் மறுவி வந்துள்ளன. உதாரணமாக, உத்திர பல்குனி நட்சத்திரத்தின் பெயர் உத்திரம் என்றும், அந்த நட்சத்திரத்திற்கு அருகே பௌர்ணமி வந்தால், அம்மாதம் பங்குனி என்றும் பெயர் மறுவியுள்ளன.

Night sky over Madras, 9:30pm April 18
சந்திரனின் பயணம் ஏப்ரல் 16 அன்று, சந்திரன் சனி கிரகம் (Saturn) அருகிலும், ஏப்ரல் 18 அன்று கேட்டை (Antares)நட்சித்தரத்தின் அருகிலும் காணலாம். நட்சத்திரங்களும் கிரகங்களும் பெரிதாக நகர்ந்திருக்காது, சந்திரனின் பயணம் மட்டும் நன்கு புரியும். படங்கள் ஸ்டெல்லாரியம் மென்பொருள் கொண்டு எடுத்துள்ளேன்.

பின்குறிப்பு நேற்றிரவு பௌர்ணிமி மட்டுமல்ல சந்திர கிரகணம் என்று நண்பர் மிசெல் டனினோ ஈமெயில் வழியாக நினைவூட்டினார். இந்தியாவில் கிரகணமில்லை, வட அமெரிக்காவில் பார்த்திருக்கலாம்.