Thursday, 17 March 2022

விசித்திரசித்தன் குஸ்ரோ

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தன்னை விசித்திரசித்தன் என்று அழைத்துக்கொண்டான். விசித்திரசித்தன் என்ற விருதுபெயரை மண்டகபட்டு, திருச்சி மலைக்கோட்டை லலிதாங்குர பல்லவேச்சுரம், சென்னை பல்லாவரம் குகை கோயில் ஆகிய குகைகோயில்களில் கல்வெட்டாக பொறித்தான்.

கோயில் கலைகளில் புதுமைகள், சமஸ்கிருத இலக்கியத்தில் ஹாஸ்ய நாடகங்கள் எழுதிய புதுமை, தான் சூட்டுக்கொண்ட விருதுகளில் புதுமை, இசையில் புதுமை என்று பற்பல புதுமைகள் செய்த மகேந்திர பல்லவனுக்கு இந்திய வரலாற்றில் நிகரில்லை. கிண்டலும் எள்ளலும் நையாண்டியும் அவன் படைப்பிலும் சொல்லிலும் துள்ளிவிளையாடின.

ஆனால் மகேந்திரனை மிஞ்சிய ஒரு மன்னன் அவனுக்கு சற்றே ஒரு தலைமுறைக்கு முன்பு பாரசீகத்தை ஆண்டான். குஸ்ரோ அனூசிரவன் எனும் பாரசீக மன்னன் செய்த வரலாற்று நையாண்டிக்கு உலக சரித்திரத்தில் நிகரில்லை. ஆறாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசும் பாரசீக பேரரசும் பாரதத்தின் மேற்கே பெரும் நாடுகள். ஆங்கிலேயர் ஆட்சியால் நமக்கு ரோமாபுரியை தெரிந்த அளவு பண்டைய பாரசீக வரலாறு பரிச்சயமல்ல.

எகிப்தை ஜூலியஸ் சீசர் கைபிடித்த பின், ரோமாபுரி சாம்ராஜ்ஜியம் பெரிதாகியது. கிழக்கில் பாரசீகத்தோடு பல போர்களை நடத்தினர். பாரசீகத்தில் அலெக்சாண்டர் விட்டுசென்ற கிரேக்க ஆட்சி வீழந்து பாரசீக சசானிய வம்சம் பேரரசானது. ரோமாபுரிக்கும் பாரசீகத்திற்கும் இடையே பல போர்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்தன. ஆறாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டினோபிளை தலைநகரமாக கொண்டு ரோமராஜ்ஜியம் கொடிகட்டியது. இத்தாலியில் உள்ள ரோமாபுரி ஐந்தாம் நூற்றாண்டிலே ஜெர்மானிய படைகளால் வீழ்த்தப்பட்டது. கான்ஸ்டாடினோபிளை தலைநகராக கொண்ட நாடு தன்னை ரோம் அல்லது ரூம் என்றே சொல்லிக்கொண்டது. ரோம மன்னன் ஜஸ்டினியன் பாரசீகத்தின் மீது போர் தொடுக்க, பாரசீக மன்னன் குஸ்ரோ பதிலடியாக தன் படையை செலுத்தி ரோம படைகளை வெளியேற்றி, சிரியதேசம் வரை விரட்டினான். அங்குள்ள அண்டியோக் என்னும் நகரத்தை சூழ்ந்து கப்பம் கேட்டான். அண்டியோக் நகரம் கப்பம் கட்ட மறுத்துவிட்டது. அந்நகரை முற்றுகையிட்டு படைகளை வீழ்த்தி நகரத்தில் நுழைந்தான். பொதுவாக தண்டனையாக நகரங்களை அழிப்பது எதிரிமன்னர்களின் வழக்கம். ஆனால் குஸ்ரோ நாட்டின் மன்னன் மட்டுமல்ல நையாண்டி மன்னன். ரோம மக்களுக்கு தாங்களே அறிவிலும் திறனிலும் நாகரீகத்தில் உலகில் மிகச்சிறந்த சமூகம் என்ற கர்வம் இருந்தது. ஆண்டியோக் நகரை தாங்கள் கட்டியதால் அதை நகரமைப்பிலும் கட்டுமான திறத்திலும் கலை அழகிலும் மிகச்சிறந்த நகரம் என்று பெருமைசாற்றி வந்தனர்.

குஸ்ரோ தன் நாட்டு ஸ்தபதிகளை அதிகாரகிகளையும் அண்டியோக் நகரின் ஒவ்வொரு வீடு, வீதி, மாளிகை, கோயில், கிணறு, தோட்டம் என்று ஒன்றுவிடாமல் அளவெடுத்து பதிவு செய்ய கட்டளையிட்டான். பின்னர் பாரசீக நாட்டுக்கு திரும்பிச் சென்று புகழ்மிக்க தெசைபான் நகருக்கு அருகே, இன்னொரு அண்டியோக் நகரை படைக்க கட்டளையிட்டான். ஒவ்வொரு செங்கலும், வீடும், வீதியும், மாளிகையும், கிணறும் குளமும் கோயிலும் அவர்கள் பழைய அண்டியோக் நகரில் எடுத்த அளவுகளை வைத்து ஒரு புதிய நகரத்தை மீட்டுருவாக்கினான். புது நகருக்கு “வெஃ குஸ்ரோ அண்டியோக்” என்று பெயர் வைத்தான். “குஸ்ரோவின் சிறந்த அண்டியோக்” என்பது இதன் பொருள். பழைய அண்டியோக் நகரில் சிறைபிடித்த பல்லாயிரம் மக்களை தன் புதிய நகரில் குடிபுகுத்தினான்.

ரோமாபுரி ராஜ்ஜியத்தையும் அதன் மரபையும் இப்படி குஸ்ரோ நகலெடுத்து நையாண்டி செய்ததுபோல் உலகில் வேறு எந்த அரசனோ அறிஞனோ புலவனோ நையாண்டி செய்ததில்லை என்றே நினைக்கிறேன். நம் காலத்து நையாண்டி நாயகன் டொணால்டு டிரம்பும் கூட வார்த்தையில் மட்டுமே ஜாலம் காட்ட, குஸ்ரோ விசித்திரசித்தரில் இமயமாய் நிற்கிறான்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் அழகில் மெய்மறந்து, பல்லவரை வென்ற சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன், தன் தலைநகர் பட்டடக்கல்லில் பல்லவ சிற்பிகளை அழைத்துபோய் இரு கோயில்களை நிறுவினான் என்று சில அறிஞரின் கூற்று. அதெல்லாம் ஒரு கலை ரசனை. இது வேறு தளம். மகேந்திர பல்லவனுக்கு இந்த குஸ்ரோ கதை தெரிந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பான்.

மௌரிய மன்னன் அசோகன் தன்காலத்தில் அண்டியோக் மன்னனுக்கு தூது அனுப்பினான் என்பது குறிப்பிடதக்கது. குஸ்ரோவுக்கு சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் அசோகன்.

கன்னௌஜ் மன்னன் சர்வவர்மனின் ஒரு மந்திரி சதுரங்கத்தை குஸ்ரோவின் ராஜசபைக்கு அனுப்பினான் என்றும், குஸ்ரோவின் மந்திரி கன்னௌஜ் மன்னனுக்கு பேக்கேமன் என்றும் விளையாட்டை திருப்பி அனுப்பினான் என்றும் விக்கிபீடியா கூறுகிறது. பல்வேறு நாட்டு பண்டிதர்களை தன் நாட்டிற்கு வரவழைத்து குஸ்ரோ ஆட்சியில் கலைகள் ஓங்கின.

கோரா என்னும் வலைதளத்தில் இந்த குஸ்ரோ சாதனையை முதன்முதலில் படித்தேன்.

வரலாற்று கட்டுரைகள்


2 comments:

  1. Khosrow was a huge troll, and he didn’t originally intend to populate the city with native Antiochians. He just wanted to build it for the lulz (and sticking it to Justinian). He intended to trade the captives back.

    However, when Justinian refused to buy off the captives, Khosrow saw the PR potential of the situation, and populated the city with Antiochians he captured. And why? To show Justinian his people are better off in Khosrow’s empire.

    Byzantines spent massive amounts of resources and made numerous reforms to create an Empire people would like to live in.

    Persians did it by building a city.
    (From Quora)

    ReplyDelete