Monday 28 February 2022

நாகசாமி - கற்றதும் பெற்றதும்

Smt Vallabha Srinivasan has translated my tribute to Dr Nagaswamy in Madras Musings into Tamil.

மதராஸ் மியூஸிங்ஸ் இதழில் வந்த ஏன் கட்டுரை - தோழி வல்லபா சீனிவாசனின் தமிழாக்கம்

------------------------------

தினசரிகளில் வரும் தொல்லியல் வரலாற்றுக் கட்டுரைகளின் மூலமாகவே முதன் முதலாக டாக்டர் ஆர் நாகசாமியைப் பற்றி அறிந்தேன். 2009 ம் ஆண்டு மாமல்லபுரம் பற்றியதான அவரது கட்டுடைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் “மாமல்லபுரத்திலிருக்கும் அனைத்துக் கோயில்களையும் காட்சிச் சிற்பங்களையும் கட்டியது ராஜசிம்ம பல்லவனே!” என்ற கருத்தை முன் வைத்தார். அதுவரை ஜூவோ துப்ரே (Jouveau Doubreil) என்பவர் 1915 ல் முன்வைத்த, ‘மாமல்லபுரச் சின்னங்கள் முதலாம் நரசிம்ம பல்லவர், அவரது பேரன் பரமேஸ்வரன், அவரின் மகன் ராஜசிம்மன் ஆகிய மூவராலும் கட்டப்பட்டவை’ என்ற கருத்தே, ஒரு நூற்றாண்டு காலமாக வரலாற்றாசிரியர்களிடையே நிலவியது. அந்தக் கருத்தை கட்டுடைத்த இந்த ஆய்வு ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அதற்காக அவர் சேகரித்து முன்வைத்த,

கட்டுமானக் கலை, கல்வெட்டு, அழகியல் ரசனை, கவித் திறன், வரலாற்று ஆதாரங்கள் சார்ந்த பல்வேறு வாதங்கள் பிரமிக்கத் தக்கவை.
பொதுவாக நாகசாமியை ஒரு பெரும் முதியவராக, தமிழ்நாட்டுத் தொல்லியலின் பீஷ்ம பிதாமகராகவே நினைவு கூர்கிறோம். அது அவருக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொல்லியலில் அவரால் பெரிதும் மதிக்கப்படுகிற, T N ராமச்சந்திரன், சிவராம மூர்த்தி போன்றோரை அவமதிப்பது போலாகும். இவர்களுடன் நாகசாமியும் பணியாற்றி கற்றவை பற்பல. அவரது சாதனைகள் அவர் இளைஞராக இருந்த போதே வந்தவை என்பதையும் மறந்து விடுகிறோம். ராஜசிம்மன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதிய போது அவரது வயது 32! தென்னிந்திய வரலாறு என்ற பெரும் படைப்பின் முன்னுரையில் K A நீலகண்ட சாஸ்திரி, இளைஞர் நாகசாமியின் விலைமதிப்பற்ற ஆலோசனைக்கு நன்றி கூறி இருக்கிறார்.
நாகசாமி ஒரு பிரமிக்கத்தக்க இளைஞராக இருந்தார். அவர் பல ஆண்டுகள் உயிரோடிருந்து பல துறைகளை மேம்படுத்தியது நம் அதிர்ஷ்டமே! வரலாறு, நடனக்கலை, இசை, இலக்கியம், மதம்…தொல்லியலும் கல்வெட்டியலும் மட்டும் அல்ல. வில்லியம் ஜோன்ஸ், அலெக்சான்டர் கன்னிங்ஹாம் போன்ற சிறந்த ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி வைத்த ஒரு கலாசாரத்தின் விளக்காகத் திகழ்ந்தார் நாகசாமி. மேலும் தமிழிலும், சம்ஸ்கிருத்த்திலும் அகண்ட ஆழ்ந்த இலக்கியத் திறமை கொண்டவராகவும் இருந்தார். பகுத்தறியும் ஆராய்ச்சியில் எவ்வளவு மதிப்பு கொண்டவராக இருந்தாரோ, அவ்வளவு தன் பக்தியிலும் பெருமை கொண்டவராக எப்போதும் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காணப் படுவார்.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைத் துவங்கிய, ஐஐடி டெல்லியில் பணியாற்றிய பேராசிரியர் சுவாமிநாதன் ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம் கல்விப் பயணத்திற்காக இவரது ராஜசிம்மன் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுவாமிநாதன் நாகசாமியுடன் சென்ற சித்தன்னவாசல் பயணத்தை நினைவு கூர்ந்தார். சித்தன்னவாசலில் பழைமையான சமண ஓவியமும், பாண்டியர் கால தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டும், தமிழ் பிராமியிலான சங்க காலக் கல்வெட்டும் இருக்கின்றன. நாகசாமி உற்சாகம் கொண்டவராக அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ஒரு காகித்த்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் காண்பிக்க ஆரம்பித்தாராம். அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு பெரும் உலகறிந்த ஆராய்ச்சியாளர் தனக்கு கல்வெட்டு சொல்லித் தருகிறார் என்று அறிந்திருப்பானா?
இவ்வாறு இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டு பாரம்பரியப் பெருமையை அறிந்து பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணியவர் நாகசாமி. தொல்லியலும், கல்வெட்டியலும் சமூகத்திலிருந்து விலகி அறிவுசார் கல்வி அரங்குகளிலும், காட்சியகங்களிலும் தீவு போல இருப்பதை அவர் விரும்பவில்லை. வரலாற்றுச் சின்னங்கள் சுரண்டப்பட்டு கருங்கல் குவாரிகளாகவும், ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஓவியங்கள் வெள்ளை அடிக்கப் பட்டும், வெங்கலச் சிலைகள் திருடி விற்கப் பட்டும், புதுப்பிக்கப்படுகிறது என்ற பெயரில் பழமையான சின்னங்கள் அழிக்கப்படுவதுமான அவல நிலையில் இருக்கும் இக்காலத்தில் இதைவிட முக்கியமானதாக எது இருக்க முடியும்?
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலத்தில் தொடங்கப்பட்ட தொல்லியில் துறையான தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு, 1966 ல் நாகசாமி தலைமை ஏற்றார். புத்தகங்கள் விலை மிக்கதாகவும், நூலகங்கள் அரிதாகவும் இருந்த கால கட்டத்தில் பல சிறிய விலை மலிவான துண்டுப் பிரசுரங்களை பதிப்பித்தார். பன்னிரண்டு மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க அரசாங்கத்தை வற்புறுத்தினார். இதற்கு முன் சென்னையிலும், புதுக்கோட்டையிலும் மட்டுமே அருங்காட்சியகங்கள் இருந்தன. மற்ற மாநில தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோயில் சுவர்களிலுள்ள தமிழ்க் கல்வெட்டுகளை இவரது சீடர்கள் நேரடியாகப் படிப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் மாநிலங்களில் பதிவுப் பிரதி எடுக்கப் பட்டு, பின்னர் பல நாட்கள் படித்தறியும் ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தது இது.

அவருக்கும் சில வீழ்ச்சிகளும், சர்ச்சைகளும், அரசியல் சார்ந்த கருத்துசார்ந்த மோதல்களும் இருந்தன. அவர் ஒரு முறை பதவி நீக்கம் செய்யப் பட்டார். விசாரணைக்குக் காத்திருந்த நேரத்தில் அவர் வருந்தி அமர்ந்திருக்கவில்லை. சிறையிலிருந்த போது புத்தகங்கள் எழுதிய இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களைப் போல, தன் கலை மற்றும் இலக்கியத் திறமையை முழுவதுமாக உபயோகித்து, "ராஜராஜ சோழன்," "ராஜேந்திர சோழன்," "மணிமேகலை," "அப்பர்" போன்ற வரலாற்று, சமய நாயகர்கள் மீதான பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார். கபிலா வாத்ஸ்யாயன் என்பவருடன் இணைந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி என்ற நடன விழாவைத் தொடங்கினார். அவரது பல நாட்டிய நாடகங்கள், நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபெற்று இந்தியாவில் மட்டுமின்றி, ஜெர்மெனி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டன.

தமிழில் சங்க இலக்கியம் பற்றி "யாவரும் கேளிர்" என்ற நூலையும், தமிழ்நாட்டின் ஓவியம் சிற்பக் கலை பற்றி "ஓவியப் பாவை" என்ற நூலையும் பொது மக்களுக்காக எழுதினார். ஆங்கிலத்தில் பல ஆய்வுப் புத்தகங்களை எழுதினார் - "சஹ்ருதயா"; "காஞ்சிபுர விஷ்ணுக் கோயில்கள்"; "பழமையான தமிழ் சமுதாயமும் அதன் சட்டங்களும்".





"வெங்கலச் சிலைகள் (சோழர் காலம்)"; "மாமல்லபுரம்"; "கங்கை கொண்ட சோழபுரம்" - தமிழ் நூல்களையும் எழுதினார் . அவரது இணைய தளம் அவரது புத்தகங்களும், கட்டுரைகளும் கொண்ட ஒரு பல்கலைக் கழகம்.
சம்ஸ்க்ருத இலக்கிய வார்த்தைகள் பரிச்சயம் இல்லாத மக்களைக் கருத்தில் கொண்டு, பல சிற்பங்களுக்கு தேவாரம், திவ்யப் பிரப்பந்தம் சொற்றொடர்களிலிருந்து அழகான தமிழ்ப் பெயர்களை உருவாக்கினார். "மாமயிடன் செறுக்கறுத்த கோலத்தாள்" என்று மஹிஷாசுர மர்த்தினியையும், திருமங்கை ஆழ்வார் சொன்ன கடல் மல்லை கிடந்த கரும்பு என மாமல்லபுர அனந்தசயன விஷ்ணுவையும் வர்ணித்தார். வலம்புரம் என்ற இடத்தில் கிடைத்த தானம் பற்றிய கல்வெட்டில் ‘வட்டணைகள் பட நடந்த நாயர்’ என்றிருந்தது. யாருக்கும் அதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் நாகசாமி அப்பரின் ஒரு பாடலில் “வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வம்புறத்தே புக்கங்கே மன்னினாரே” என்று பிக்ஷாடனர் குறிப்பிடப் படுவதைக் கூறி, சோழர் கால பிக்ஷாடனர் ஐம்பொன் சிலையுடன் இதை இணைத்தார். இது அவரது தனித்துவமான திறமை.
மூன்று மொழிகளிலுமான பரந்த ஞானம், வேதம், ஸ்மிருதி, ஆகமங்கள், பரத நாட்டிய சாஸ்திரம், சம்ஸ்கிருத காவியங்கள் இவற்றில் இருந்த ஆழ்ந்த ஆளுமை, அதே போல தமிழில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், இதர தமிழ்க் காப்பியங்கள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் இருந்த புலமை, கல்வெட்டில், வரலாற்றில் இருந்த திறமை, மூன்று நூற்றாண்டுக்கான ஆங்கில ஆராய்ச்சிக் கல்வியின் அறிவு ஆகியவை இவரை அரிதிலும் அரிதான ஆராய்ச்சியாளராக அடையாளம் காட்டியது. நாட்டில் இவ்வளவு பரந்த ஞானம் உள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் திறம்பட எழுதவும், பேசவும் முடிந்தவர் சிலரே.
சில ஒற்றைப் புத்தக பண்டிதர்களும், ஒரு மொழிப் புலவர்களும் நாகசாமி மேல் ஏளனத்துடன் வசைமாறி பொழிந்தனர். சில நேரம் அவர்களுக்கும் தக்க பதிலளித்தார்.

சில தனிப்பட்ட நிகழ்வுகள் - காஞ்சி கைலாசநாதர் கோயிலை, நான் புரிந்து கொள்ளத் திண்டாடிய போது ‘அதைக் கட்டிய ராஜசிம்மன் அந்தக் கோயிலை அதிமானம் அதி அத்புதம் என்றே வர்ணிக்கிறான் என்று எடுத்துக் காட்டினார். அதாவது "சரியாக அளவிடப்பட்ட அற்புதம்" என்பது. அது என் கண்களைத் திறந்தது : அந்த ராஜசிம்மனின் வார்த்தைகளைக் கொண்டே அந்தக் கோயிலை அணுக வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 2014 ல் நாகசாமி அவர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்ட தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி நிகழ்வுக்காக நாகசாமி அவர்களின் பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளை அலசும் கௌரவத்தை சுவாமிநாதன் எனக்கு அளித்தார். கைலாசநாதர் கோயிலில் ராஜசிம்மன் தன் அழகிய எழுத்துக்களில் பொறித்து வைத்திருந்த பட்டப் பெயர்கள் - ‘அத்யந்தகாமன்’ (எல்லையில்லா விருப்புடையவன்), ‘கலாசமுத்ரன்’ (கலைக்கடல்). இரு பட்டப் பெயர்களையும் ஒரு சட்டையில் தைத்து எழுதி அவருக்குப் பரிசளித்தோம். அதை ஆனந்தமாக அடுத்த நாளே அணிந்து கொண்டார்.

சட்டையில் அத்யந்தகாமன், கலாசமுத்ரன்  


பெஞ்சமின் பாபிங்டன் 1830 ம் ஆண்டு எழுதி மறக்கப்பட்ட பல்லவ கல்வெட்டு பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை நான் கண்டறிந்த போது அவர் மிகவும் அகமகிழ்ந்து அவர் வீட்டிலேயே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதைப் பற்றிப் பேச வைத்தார். அவருடன் மேடையைப் பகிர்வது என்ன ஒரு பெருமை!

பாபிங்டன் பல்லவ கல்வெட்டு  


சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில், உத்திரமேரூர் பற்றிய ஒரு உரைக்காக ஒரு குடத்தில் சிறு காகித்த் துண்டுகளைப் போட்டு இளைஞர்களை எடுக்கச் செய்தார். இதன் மூலம் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப் பட்ட, பயம் பாகுபாடு இன்றி தலைமை வகிப்பவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை கண்கூடாக நடத்திக் காட்டினார்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோகம் அவரைத் தாக்கியது. அவரது முப்பது வயது கூட நிரம்பாத பேரன் ஒரு நோயால் மரணித்தார். அதற்கு அமெரிக்கா சென்று விட்டு திரும்பியிருந்த போது இங்கு, சொல்லிலும் பேச்சிலும் வல்ல ஆய்வாளர் ஒருவர், சமூக வலைத் தளங்கள் அவரை தூற்றியதற்காக மனமுடைந்து, இனி தான் பேசவே போவதில்லை என்று அறிவித்திருப்பதை கேள்விப் பட்டார். நாகசாமி அவரைத் தொலைபேசியில் அழைத்து அவர் விபரீத முடிவை விசாரித்துக் கொண்டே, தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞர் புரிந்து கொண்டார். இத்தகைய தாங்க முடியாத் துயரம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவரான அவருக்கு ஏற்பட்ட போதும், அது அவரது ஆராய்ச்சியிலிருந்து அவரை விலக்கவில்லை எனும் போது எதிரிகள் வசைபாடும் காரணத்தால், அவரில் பாதி வயது கூட நிரம்பாத ஒருவர் விலகுவதா?
கலைக்கடல் நாகசாமியை நான் சந்தித்தது ஒரு வரம். அவர் செப்பும் மொழி கேட்டது ஒரு பாக்கியம். அவர் நூல்களைப் படித்தது ஈடில்லாக் கல்வி. அவருடன் உறவாடி உள்ளம் மகிழ்ந்த மணித்துணிகள் அதி அற்புதம்.

Related Essays

Nagaswamy - Beyond borders (Essays)

The third Rajasimha inscription - Babington's surprise

மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி உரை

காஞ்சி கைலாச நாதர் கோயில் அலங்கார லிபி

Related Videos 

அத்யந்தகாமன் - நாகசாமி நினைவுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

மாமல்லபுரம் 2000 ஆண்டுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

New light on Mamallapuram (with Dr Nagaswamy at Tamil Arts Academy)

No comments:

Post a Comment