Friday, 12 June 2015

மயிலாப்பூரில் பல்லவர் இசை

“ஆர்கே” ராமகிருஷ்ணன் நடத்தும் மதுரத்வனி ஐந்தாம் ஆண்டு விழாவில் நவம்பர் 23, 2014 ஞாயிறு காலை, மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில், முன்னாள் தமிழகத் தொல்லியல் துறை தலைவர் முனைவர் டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

நாகசாமியை அறிமுகம் செய்த தில்லி ஐஐடி பேராசிரியர் சுவாமிநாதன், அவர் எழுதிய ஓவியப்பாவை நூலின் சிறப்பையும் இலக்கிய நயத்தையும், ஓவிய சிற்ப கலை ஆர்வலர்களுக்கு அந்நூல் ஒரு ஈடிலா வழிகாட்டி என்றும் புகழ்ந்தார். சித்தனவாசலில் ஒரு மாடுமேய்க்கும் சிறுவனிடம் உள்ள பிராமி எழுத்தை ஒரு பஸ் டிக்கட்டில் எழுதி தமிழ் எழுத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் நாகசாமியின் ஆர்வத்தை வியந்தார்.

நான் கோவில்களை பற்றி கற்றதெல்லாம் யாவருக்கும் சொல்லிக்கொடுக்கும் படி, காஞ்சி மகாப்பெரியவர் தான் கேட்டுக்கொண்டார், என்று கூறி நாகசாமி உரையை தொடங்கினார். இயல் இசை நாட்டியம் ஆகிய முத்தமிழும் அறிந்தவரே “தமிழ் முழுதறிந்தோன்” என்கிறது தொல்காப்பியம். இதற்கேற்ப, சுத்தானந்த பாரதியின் “எப்படி பாடினரோ” பாடலை பாடி காயத்திரி கிரீஷ் நிகழ்ச்சியை துவங்கினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார். இப்பாடலை சங்கராபரணத்தில் காயத்ரி பாடினார்.

மகேந்திர பல்லவர் கல்வெட்டுள்ள மாமண்டூர் குடைவரை கோவில்குடுமியான்மலை இசை கல்வெட்டு
மகேந்திரனுக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின் வந்த ராஜசிம்ம வர்மனின் மாமல்லபுர கல்வெட்டில் “காலகாலனின் இசையை பிரமன் பரதன் ஹரி நாரதன் கந்தன் ஆவரே அறிவர்” எனும் பாடலை காணலாம். 

यदि न विधाता भरतो यदि न हरिन्नारदो न वा स्कन्दः ।
बोद्धुं क इव समर्त्थस्संगीतं कालकालस्य ॥ 
யதி³ ந விதா⁴தா ப⁴ரதோ யதி³ ந ஹரின்னாரதோ³ ந வா ஸ்கந்த³​: | 
போ³த்³து⁴ம்ʼ க இவ ஸமர்த்த²ஸ்ஸங்கீ³தம்ʼ காலகாலஸ்ய ||

இதுவே பரதமுனிவரை பெயர்சொல்லும் முதல் இந்திய கல்வெட்டு என்றார் நாகசாமி. ராஜசிம்மனின் பலநூறு விருதுகளில் காலகாலன்” கலைசமுத்திரம்” இவை இரண்டும் உண்டு; ஆதலால் இது சிவனையும் அவனையும் புகழும் சிறப்பான சிலேடை. கல்வெட்டை நாட்டை ராகத்தில் பாட்டாய் பரிசளித்தர் காயத்ரி.

ராஜசிம்மன் இசை கல்வெட்டு - மல்லை அதிரணசண்டேச்சுரம்

மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்
மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,
என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

மயிலாப்பூர் ஆர்கே அரங்கில் முனைவர் நாகசாமி
நாலாயிரம் பாடல்களை படைத்த ஞானசம்பந்தர் உலகின் மாபெரும் இசைமேதைகளில் ஒப்பற்றவர் என்றும், “முத்தழல் ஓம்பும் தொழில் ஞானசம்பந்தன் தமிழ்” என்னும் வரி அவரது வேத ஞானத்தை சொல்வதென்றும், அவரைப்போன்ற வேதப் பண்டிதர் தமிழ் இசைக்கும் இலக்கியத்திற்கும் செய்த பணி மகத்தானதென்றும் சொன்னார். ஒவ்வொரு தேசத்திலும் அம்மொழியிலும் பாடவும் இசைக்கவும் படைக்கவும் பரதமுனி அறிவுறுத்துவதையும், இதையே ஞானசம்பதர் தமிழுக்கு செய்தார் என்றார்.

சம்பந்தரின் பாடலும் இசையும் கம்போடியாவிற்கு சென்று, பின்பு பதிநான்காம் நூற்றாண்டில் தாய்லாந்து நாட்டு மன்னரின் அழைப்பில் கம்போடியாவிலிருந்து அங்கு சென்றதும், அவரது பாடலும் ஆண்டாளின் திருப்பாவையும் இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இசைக்கப்படுகின்றது என்றார். சமஸ்கிருதம் என்றும் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததில்லை, சமஸ்கிருதம் சென்ற இடம் யாவும் தேசிய இலக்கியங்களும் கலையும் சீரும் செழுப்புமேறி மலர்ந்தன, என்றும் விளக்கினார்.

383 பதிகத்தில் 360 சமஸ்கிருத பெயருள்ள ராகங்களில் பாடினார் சம்பந்தர். கௌசிகம், பழம் பஞ்சரம், காந்தார பஞ்சரம், யமகம், ஈரடி [ த்விபாத்] முக்கால் [த்ரிபாத்], நாலடி [சதுஷ்பாத்], ஏகபாதம், குரிஞ்சி, மேகராக குரிஞ்சி, திருத்தாளச் சதி, வினா உரை என்று பலப் பண்களில் சம்பந்தர் பாடல்களை இயற்றியுள்ளார். பல சமஸ்கிருத ராகங்கள் சில தமிழில் பெயர்மாறின, சில அதே பெயர்களில்தொடர்ந்தன. இந்த பட்டியலை உதாரணம் காட்டினார்:

சமஸ்கிருதம் தமிழ்
டக்கராகம் தக்கராகம்
டக்கசௌவேரி தக்கேசி
நர்த்தராகம் நாட்டை
நடபாஷா நட்டப்பாடை
க்ரௌஞ்சி குரிஞ்சி
ஏகபாதம் குறள்
காந்தாரம் காந்தாரம்
கௌசிகம் கௌசிகம்
ஹிந்தோளம் இந்தளம்
சாதாரிகம் சதாரி


கிபி 850 முதல் 875 காஞ்சியில் ஆண்ட தெள்ளாற்றெறிந்த நந்தி வர்மனுக்கு, “பைந்தமிழ் ஆயும் நந்தி” என்ற பட்டமுண்டு – இது அவன் தமிழ் காதலையும், “சிவனை மறவாத சிந்தையன்” என்ற விருது அவன் பக்தியையும் காட்டுகின்றன. அவன் இயற்றிய “நந்திக்கலம்பகம்” என்ற 116 பாடல் கொண்ட நூல் தொல்காப்பியம் வகுத்த வழியில் வந்த கலித்தொகை, பரிபாடல் போன்று ஆடவும் பாடவும் அமைந்தது.

“மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்” என்ற பாடல் பஞ்ச பூதத்தையும் சிவனின் பஞ்சமுகத்தையும் வர்ணித்து வணங்குபவை. இப்பாடலையும் “சோர்மதத்த வார்குருதி” என்ற பாடலையும் விருத்தமாகவும் லயத்துடனும் மிகவும் பக்தியொழுக காயத்ரி பாடிக்காட்டினார்.


ஊழிநீ உலகுநீ உருவுநீ அருவுநீ” என்று அவர் பாடிய கடைசிப்பாடலில்

மல்லை வேந்தன் மயிலைக் காவலன்
பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி
வடவரை அளவும் தென்பொதி அளவும்


என்ற வரிகள், பல்லவர் காலத்து மயிலையம்பதியையும், வாழையடி வாழையாய் அவர்கள் சமைத்த இசைக்கலை விருந்தையும், இவற்றை தொகுத்து வழங்கிய நாகசாமியின் முத்தமிழ் ஆர்வமும் மும்மொழிப் புலமையும் காயத்ரி குழுவினர் இசையும் சுடர்விட்ட ஒளியும் செவிக்கிட்ட ஒலியுமாய் அமைந்தன.


குறிப்பு

இன்று ஜூன் 12, 2015 வெள்ளிக்கிழமை மாலை  4:30 மணிக்கு கோட்டூர்புரம் தமிழ் இணையக் கழகத்தில் “கல்லும் சொல்லும்” என்ற தலைப்பில், டாக்டர் நாகசாமி பேசுவார்.  

தொடர்புடைய பதிவுகள்

3.  Athiranachanda Surprise - Rajasimha's Third Inscription

No comments:

Post a Comment