Tuesday, 16 June 2015

தமிழில் பீரியாடிக் டேபிள் - தனிமக் கோலம்

அறிவியல்புரம் வலைப்பதிவில் திரு ராமதுரையின்  கட்டுரையில், “ஈயத்திற்கும் காரீயத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் எழுதியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆஜீவக வலேஸன் வலைப்பதிவை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு தமிழில் பீரியாடிக் டேபிள் வகுக்க ஆர்வம் வந்தது. அப்பொழுதுதான் இந்த ஈயம் காரீயம் துத்தநாகம் பெயர்கள் தெரியவந்தது.

அதைவிட முக்கியமாக, தமிழில் ஒரு பீரியாடிக் டேபிள் (என்ன பெயர் தகும்: தனிம வரிசை? தனிம மேசை? ;-) தனிமக் கோலம்?) செய்வது வீணான முயற்சி என்றே தோன்றியது. ஏனெனில் டிமிட்ரீ மெண்டலீஃபால் வகுக்கப்பட்ட பீரியாடிக் டேபிளில் பெரும்பாலான தனிமங்களின் பெயர்கள் அவரது தாய்மொழி ருஷியத்திலோ, உலகின் அறிவியல் மொழியாய் இன்று திகழும் ஆங்கிலத்திலோ இல்லை. 16-17-18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் இணைமொழியக இருந்த லத்தீனத்தில் உள்ளன. இதற்கு ஒரு எளிமையான காரணம் உண்டு : அந்த மூன்று நூற்றாண்டுகளில் தான் பஞ்சபூதங்களுக்கு அப்பால், இல்லை இல்லை, எப்பொருளுக்கும் மூலப்பொருட்களாய் அணுக்கள் இருப்பதை, ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்; பெயர்சூட்டினர்.

தமிழிலோ, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் இணைமொழியாக நிலவிய சமஸ்கிருததிலோ, இஸ்லாமிய நாடுகளின் இணைமொழிகளாகிய அரபிலோ பாரசீகமொழியிலோ பீரியாடிக் டேபிள் வகுத்தால் கூட பெரும்பான்மையான தனிமங்களின் பெயர்கள் லத்தீனத்தில் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து. அல்கலி, கலியம் (பொட்டஷியத்தின் லத்தீன பெயர்) போன்றவை அரபு மொழியிலிருந்து லத்தீனம் கொடையாய் பெற்றவை.


மேற்கண்ட கருத்தை நான் திரு ராமதுரையின் அறிவியல்புரம் வலைப்பதிவில் பின்னூட்ட அவர் இவ்வாறு பதிலளித்தார்:

தாங்கள் கூறுவதன்படி இவை லத்தினத்தில் இருப்பதே சரி. நான் பள்ளியில் படித்த காலத்தில் அப்போது தான் தமிழ் மீடியம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்த சயன்ஸ் புத்தகத்தில் 'அப்ஜஹரிதகிகா அமிலம்' என்ற சொல் இருந்தது.ஆனால் எங்கள் ஆசிரியர் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியே பாடம் சொல்லிக் கொடுத்தார். இப்போதும் அவரவர் இஷ்டத்துக்கு தனிமங்களுக்கு (Elements) பெயர் வைக்கின்றனர். பள்ளிகளில் ஆங்கிலத்திலான பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன.

முன்பு ஒரு கட்டுரையாளர் ஒருவர் கூறியது போல எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க முயன்றால் ஆயுள் பூராவுக்கும் அதைத்தான் செய்து கொண்டிருப்போம். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் முதலியவை அதே பெயர்களில் இருப்பது தான் சரி

’அப்ஜஹரிதகிகா அமிலம்' : ரசித்தேன். சிரிப்பூட்டியது.  ஸமஸ்கிருதத்தில் ஆப்-நீர்; ஆப்ஜ - நீரில் பிறந்தது (ஹைட்ரஜன்). ஸமஸ்கிருதத்திற்கும் மேல்சொன்ன இந்த கருத்து பொருந்தும். சொற்கள் அகராதிகளில் பெயரிடுவதால்  வளர்வதில்லை. எழுத்திலும் வாசிப்பிலும் பேச்சிலும் புழங்குவதால் வளர்பவை.

தொடர்புடைய பதிவுகள்


1. ஈயத்திற்கும்  காரீயத்திற்கும் வித்தியாசம் - ராமதுரையின் கட்டுரை
3. வீணான முதல் முயற்சி - தமிழில் பீரியாடிக் டேபிள்  
4. மெண்டலீவ் - கில்பர்ட் லூயிஸ் : பாரத ரத்னா சி.என்.ஆர் ராவின் ஆதங்கம்



2 comments:

  1. Periodic Table = தனிம வரிசை அட்டவணை
    (பள்ளிப் பாடத்தில் பயன்படுத்தப்படும் பெயர்)

    சரவணன்

    ReplyDelete
  2. சரவணன்,

    நன்றி! வரிசை வேறு அட்டவணை வேறு என்று எனக்கு தோன்றுகிறது. அதைவிட தனிமக்கோலம் என்ற சொல் நயமானதோ என்றுதான் அதை குறிப்பிட்டேன்.

    பள்ளி பருவத்திற்கு அப்பால் புழங்கா சொற்கள் பள்ளிப் புத்தகங்களில் மட்டுமே உறைந்து நிற்கும்.

    ReplyDelete