Wednesday 23 April 2014

அறிவியலின் எல்லை


அறிவியலா? விஞ்ஞானமா? “சயன்ஸ்” என்ற ஆங்கில சொல்லுக்குத் தமிழில் எது சரியான சொல்? “சயன்ஸ்” என்பதே சமீப கால ஆங்கிலச் சொல். வில்லியம் வெவல்லின் அறிமுகத்தால் பரவலடைந்த சொல் – அதற்கு முன் “இயற்கை தத்துவம்” (Natural Philosophy) என்றே அதே ஆங்கிலேயர் அழைத்தனர்.

“விஞ்ஞானத்தின் எல்லை” (The Limits of Science) என்ற நூலில், பீட்டர் மெடவார், சயன்ஸ் எனும் சொல்லின் பல்வேறு எழுத்துவடிவங்களை (spelling) பட்டியலிடுகிறார். தமிழில் இந்த இன்னல் இல்லாததால் விட்டுவிடுவோம்.

அறிவியல் என்றால் அறிவா? ஞானமா? வெறும் ஞானம் மட்டும் அல்ல, முயற்சி திருவினையாக்கி, சீரமைத்த ஞானமே விஞ்ஞானம் என்கிறார், மெடவார். அவர் மேலும் சொல்வது: விஞ்ஞானம் “இண்டக்டிவ்” inductive மட்டுமல்ல “டிடக்டிவ்” deductive ஆகவும் உள்ளது. சில நேரம் தற்செயலாகவும், சந்தர்ப்பங்களினாலும், விஞ்ஞானம் வளர்கிறது. கற்பனையும் ஆழ்ந்தும் அகன்றும் தேடலும் தேவை.

            இடைசெருகல் – இந்த பத்தி கோபுவின் சிந்தனையோட்டம். இண்டக்டிவ், டிடக்டிவ் போன்ற சொற்கள் தமிழிலும் தமிழர் சிந்தனையிலும் இல்லை. தமிழுலகின் விஞ்ஞானிகள் சிவி ராமன், சந்திரசேகர் போன்ற மேதைகளாயினும், சுஜாதா போன்ற ஆர்வலர்களாயினும், தமிழில் அறிவியல் சிந்தனையை வளர்க்க முன்படவில்லை. ஆங்கில கடலெங்கே தமிழ் குட்டை எங்கே? இலக்கிய திறமையுள்ளோருக்கு விஞ்ஞான ஆர்வமோ பற்றோ இல்லை, விஞ்ஞான பற்றுள்ளோருக்கு இலக்கிய ஆர்வமும் திறமையும் இல்லை. கடந்த நூற்றாண்டில் ராஜாஜியை தவிற யாரொருவரும் தமிழில் அறிவியல் சிந்தனை வளரவேண்டும் என்று யோசிக்கவில்லை. தமிழில் எழுதுபவர்களுக்கு அறிவியக்கத்தை செய்ய ஆர்வமோ திறமையோ இல்லை. விஞ்ஞானம் என்பது வெள்ளையர் செய்யும் விந்தை, அதை நாம் ஆங்கிலத்தில் அறிந்துகொண்டு தமிழில் தனித்தனியாய் மொழிப்பெயர்ப்போம் என்ற சிந்தனை ஒரு சிலரிடம் இருந்தாலும், விஞ்ஞான சிந்தை என்ன செயல்பாடு என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், அதை தமிழில் எழுதி மட்டும் அழகு பார்க்கும் நிலையே நிதர்சனம். பாரத நாட்டில் மற்ற மொழிகளிலும் இதே நிலை தான்; ஆங்கிலத்திலும் நாம் ஒன்றும் பெரிதாய் சாதிக்கவில்லை. மரமே மரமே கனிப்போடு என்று அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இந்திய விஞ்ஞானம் இன்றும் திகழ்கிறது. போதாக்குறைக்கு, வேதமும் வள்ளுவனும் மற்ற புலவனும் புண்ணாக்கும் இழுத்துவந்து அவர்சொன்னதல்லவா அறிவியல் என்று தஞ்சாவூர் கோவில் கோபுரத்து நிழலில் தாண்டவாமாடி தன்முதுகைத் தட்டிக்கொள்ளும் அனுகூல சத்துருக்களின் முயல் கர்ஜனை வேறு. இந்த வம்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

            திணையின் கைதியாய் திகைக்கிறது தமிழ்.

மீண்டும் மெடவாரின் நூலுக்கு வருவோம். 1. புரிய இயலாமை 2. தீர்க்கும் திறன். இவ்விரண்டும் இன்றைய அறிவியலின் முக்கிய அங்கங்கள் என்மனார் மெடவார்.

1. புரிய இயலாமை பல விஞ்ஞான கருத்துக்களை சட்டென்று புரிந்துகொள்ளலாம், ஆனால் முறைகளை புரிதல் அரிது. பூமியின் எடை என்றால் அதன் பொருள் புரிகிறது. ஆனால் அதை அளக்கும் முறையை புரிதல் அரிது.

2. தீர்க்கும் திறன்  “இந்த காரியம் இப்படிச்செய்யலாம் என்னும் கலையே அரசியல்” என்றார் பிஸ்மார்க்.  “இந்த பிரச்சனையை இப்படி தீர்க்கலாம் என்பது அறிவியல் கலை” என்கிறார் மெடவார். உதாரணமாக கண் தானம், கிட்னி தானம் போன்ற மருத்துவத்தை முன்வைக்கிறார். அதன் சிக்கல்கள் என்ன, அவற்றை முடிச்சவிழ்க்க என்ன முறைகள் என்று ஆய்ந்து, அன்றாட மருத்துவ முறைகளை உருவாக்கியது அறிவியல்.

ஆங்கிலத்தில்நான் எழுதிய பதிவை 40 நபரே படித்தனர். தமிழில்? இதை விட சிறப்பாக மற்றவர் எழுத இயலும். எழுதினால் சொல்லுங்கள். அறிவியலை எழுத அடிப்படை முறை, அழகு நடை, ஆர்வம், கலைச்சொல் புழக்கம் இவை தமிழில் வேண்டும்.



இக்கட்டுரை ஒரு சுமாரான அறிவியல் கட்டுரை தான். ஆனால் மெடவார் சொல்லும் கருத்துக்கள் மிக முக்கியமானவை. மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்வதிலும், அதிலுள்ள தடைகளையும், ஒருவிதம் புரிந்துகொள்ள மெடவாரின் நூல் எனக்கு உதவியது. நாமே அறிவியலை புரிந்துகொள்ளவும், ஒரு விஞ்ஞானி விஞ்ஞானத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்பதாலும் இதை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment