Saturday 19 April 2014

நைல் நதியும் காவிரியும்


கோதுமை பயிரிட எகிப்தை சிறந்த நாடுண்டோ நிலமுண்டோ? மாபெரும் வான் மழை பெய்யா நாட்டினில், தான் பொய்யா நைல் நதியின் பாசன நிலமல்லவா எகிப்து? சோழனும் வளவனோ? ஃபாரோ அன்று ஒப்பில்லா வளவன்? பல்லாயிர ஆண்டாக வண்டல் மண்ணை வள்ளலாய் தந்து ஓங்கு சென்னெல் பெருக வழங்கிய வற்றா நதி நைலுக்கும் ஒப்புளதோ, அதன் புகழுக்கு பரிசுளதோ?

என்னே நைல் பாயும் மண்ணின் பசுமை? என்கொல் அதன் செழுமை? ஏரிழுக்க வேண்டாம், ஏர்பூட்டும் எருது வேண்டாம், தூவி தெளித்த நெல்லை  மிதித்து புதைக்க பன்றிக்கூட்டம் போதுமே உழவிற்கு. அருவடை செய்த பின், நெல்லையும் உமியையும் மிதித்து பிரிக்கும் அதே பன்றிக்கூட்டங்களை அகமகிழ்ந்து புகழ்ந்து பாடாத புலவர் உண்டோ?

அக்கம்பக்கத்து நகரங்களுக்கும் அண்டை நாட்டு மக்களுக்கும் சோறூட்டும் நெற்களஞ்சியம் எகிப்து.

சரி அது இருக்கட்டும். யார் ஐயா போயும் போயும் எகிப்தில் கோதுமை பயிரிடுவான்? ஜனத்தொகை பெரிது, பெருகி வழிகிறது. மழையில்லா நிலம். பாலை சூழ்ந்த அளவான நஞ்சை. வெள்ளத்தை நம்பும் வேளான்மை. குடிக்கவே நீருக்கு கவலை, இதில் உழவும் ஒரு கேடா? அதுவும் போயும் போயும் கோதுமை – தாகமுள்ள பயிர், பெரிதாய் விலை போகாத பயிர். தூர தூர நாடுகளிலிருந்து பெருங்கடல்களை தாண்டி அள்ளி பணங்கொடுத்து நெல்லை வாங்கும் நாடல்லவா எகிப்து? புலவன் கிடக்கான், வெண்டைக்காய். லாரி ஓட நல்ல சாலை உண்டா, நெல் அரைக்க மில் எத்தனை?

நாடும் நதியும் ஒன்றே, நாளும் நிலைமையும் மாறிவிட்டன. காலத்தின் கோலத்தால், தொழில்நுட்ப பெருவளர்ச்சியால், வணிகத்தின் விரிதலால், இம்மாற்றங்கள் வந்துள்ளன. பன்றி மிதித்து உழுததும் உமிபிரித்ததும், கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்று பிதாமகன் ஹெரடாடஸ் எழுதியது. மூவாயிர ஆண்டு ஃபாரோ ஆட்சியிலும் அலெக்ஸாண்டர் ஜூலியஸ் சீஸர் நிறுவிய கிரேக்க ரோமானிய ஆட்சியிலும், மெடிட்டரேனிய கடல் சூழ்ந்த நாடுகளுக்கு எகிப்தே பெரிய நெற்களஞ்சியம். பாய்மரக் கப்பலும், எருது இழுத்து ஏர் உழவும் கோலோச்சிய காலம்.

இன்றோ ருஷியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கப்பல் நெல்சுமந்து எகிப்தில் இறக்குகின்றன. மக்கள் என்னவோ அதே ஃபாரோ காலத்து ரொட்டியை தான் சமைத்து உண்ணுகின்றனர்.

என்ன வேற்றுமை? மெடிட்டரேனிய நாடுகளில் எகிப்து நீர்வள நாடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் பட்டியலில் அதன் நீர்வளம் குறைவே. எகிப்திலிருந்து சீஸர் காலத்து ரோமாபுரி நெல் இறக்குமதி செய்ததுபோல் இன்று மற்ற நாடுகளிலிருந்து எகிப்து நெல் இறக்குமதி செய்கிறது. நெல்லை மட்டுமல்ல, நீரையும் இறக்குமதி செய்கிறது. எப்படி? கப்பலில் நீர் வரவில்லை. ஆனால் வாங்கும் நெல்லுக்கு பாய்ச்சிய நீர், நெல் வளர்த்த நாடுகளில் அல்லவா பாய்ந்தது? சத்தமின்றி, யுத்தமின்றி, ஒப்பந்தமின்றி, உரத்தை மலிவாய் தரும் அரசின்றி, கொள்முதல் செய்யும் மண்டியின்றி, இதில் பங்கு திருடும் அரசியல்வாதியும் அதிகாரியும் தொழில் சங்கத்தலைவரும் இன்றி, வணிகத்தால் நெல் வளம் காண்கிறது எகிப்து.
காவேரி கதை எப்படி?


நூல் குறிப்பு ஆலன் பீட்டி (Alan Beattie - Twitter:@alanbeattie) எழுதிய False Economy (பொருளாதார முறைகேடு) என்ற நூலின் மூன்றாம் காண்டத்தின் மொழிபெயர்ப்பு இந்த கட்டுரை. நூலை வாங்கினால் இந்த காண்டத்தை முதலில் படிக்கவும், முதல் இரண்டு காண்டங்கள் பொருளாதாரமும் வரலாறும் அறியாதவர்களுக்கு அவை கடினமாக இருக்கலாம். நவீன பொருளாதாரத்தின் ஒன்பது முக்கிய அம்சங்களை எடுத்துக்கொண்டு, அற்புதமாய் உதாரணங்களுடனும் சம்பவங்களுடனும் ஆர்வமுள்ள பாமரருக்கு புரியும்படி எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment