Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Sunday, 10 February 2019

Index of Economics essays பொருளதிகாரம்

An index of Economics essays in this blog
இந்த வலைப்பூவில் என் பொருளாதார கட்டுரைகள்


பொருளியல் உரை வீடியோ
நூல் விளக்கம் - தவறான பொருளியல் ("False Economy" by Alan Beattie)

Tuesday, 12 July 2016

கின்லீ போற்றுதும் கின்லீ போற்றுதும்

கின்லீ போற்றுதும் கின்லீ போற்றுதும்
வான்மழை பொய்ப்பினும் கோன்நெறி வழுக்கினும்
சான்றோர் ஆன்றோர் இருப்பினும் இலாவினும்
காவிரி வைகை மணல்கிடங்காயினும்
கங்கை யமுனை மலக்கிடங்காயினும்
மாளிகை என்றோ மண்குடில் என்றோ
வாள்வலியார்க்கும் தோள்வலியார்க்கும்
நூல்வழியார்க்கும் வழியல்லார்க்கும்
வேற்றுமை பாராது விலைப்பொருளாக
போற்றர்க்குரிய நீர் வழங்கும்மே
கின்லீ போற்றுதும் கின்லீ போற்றுதும்

அக்குவாபினா போற்றுதும் அக்குவாபினா போற்றுதும்
பக்குவமான தெள்ளிய நீரை
கிணறு வற்றினும் குளங்கள் வற்றினும்
கட்சி கொள்கை குல மதம் பாராது
குணம் நாடாது குற்றமும் நாடாது
பணம் நாடி பணமொன்றே நாடி
உத்தரவின்றி தொந்தொறவின்றி
பத்திரமான சுத்தமும் சுவையும்
யாதும் ஊரே யாவரும் கேளிரென
வாதும் சூதும் வழி தடுக்காமல்
தக்கார் தகவிலர் சமமாய் நீர்தரும்
அக்குவாபினா போற்றுதும் அக்குவாபினா போற்றுதும்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
மாமழை காரண ஞாயிறு போற்றுதும்
மாமழை பெய்திடும் மாநில மிகைதனை
மாபெரும் மோட்டாரால் நதிநீள குழாய்களால்
வரட்சியில் வாடும் பற்பல ஊரெலாம்
அருட்செய் மழைபோல் அள்ளி வழங்கிடும்
அரசுகள் போற்றுதும் அலுவலர் போற்றுதும்

கம்பெனி போற்றுதும் கம்பெனி போற்றுதும்
முன்பொரு பிஸ்லெரி பின்பொரு கிங்ஃபிஷர்
என்பவை போன்ற பற்பல பெயருடன்
அங்குமிங்கும் பட்டறை அமைத்து
தங்கு தடையின்றி இல்லந்தோரும்
நாளொரு போத்தலும் பொழுதொரு குடமும்
நாடு முழுவதும் ஓடோடி விற்கும்
கம்பெனி போற்றுதும் கம்பெனி போற்றுதும்

கிளை நதிகள்
உலக பொருளாதார வரலாறு - நூல் விமர்சனம்


Saturday, 20 February 2016

இரண்டு லட்சம் கோடி டாலர் - கச்சா எண்ணையின் விலை சரிவு


செல்போன், இணையதளம், முகநூல் கடந்த இருபதாண்டின் புரட்சிகள்; பெரும் வளர்ச்சிகள். இதற்கு சமமாக, ஷேல் கச்சா எண்ணையால் ஒரு பெரும் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதை விளக்கும் மேட் ரிட்லியின்கட்டுரையின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.

----தமிழாக்கம் ஆரம்பம்---

கச்சா எண்ணையின் விலை அபாரமாக சரிந்துள்ளது. 2014-இல் ஒரு பீப்பாய்க்கு 115 டாலர் இருந்த கச்சா எண்ணை 2016 பிப்ரவரியில் பீப்பாய்க்கு 30 டாலருக்கு சரிந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. எண்ணை நிறுவனங்களும் அரசுகளும் திவாலாகும் என்றும் பங்கு சந்தை சரியும் என்றும், பொருளியல் நிபுணர்கள் அச்சுறுத்துகிறார்கள். விலைவாசி வீழும், பெட்ரோல் பருகல் பெருகும், அரசியல் கலவரம் பொங்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்கின்றனர். அவர்களெல்லாம் நுகர்வோரின் சார்பாக பேசாமல் எண்ணை தயாரிப்பாளரின் சார்பாக ஓலமிடுகின்றனர். எண்ணை பெருஞ்செல்வர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் இது பிடிக்காமலிருக்கலாம். ஆனால் சமூகத்திற்கு இது மாபெரும் நன்மை. கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் எண்ணை தயாரிப்பாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர் ($ 2,000,000,000,000 = 140,000,000,000,000 ரூபாய்) கைமாறியுள்ளது.

(கோபுவின் குறிப்பு: இது ஆயிரத்து நானூற்று லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். ஒரு ட்ரில்லியன் டாலராக கணக்கிடப்படும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாராம் இதில் பாதிதான் இருக்கும்)

இன்னாள் உலக சமூகத்தின் தவிர்க்கவியலாத சரக்கில் கச்சா எண்ணைக்கே முதலிடம். தினசரி செயல்களின் சக்திவேர். ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி, இரும்பு, கோதுமை, செம்பு, பருத்தி, இயற்கை வாயு ஆகியவற்றின் மொத்த விலைமதிப்பைவிட கச்சா எண்ணை ஒரு வருடத்து விலைமதிப்பு மிகையாம்!!!!! கச்சா எண்ணை இன்றி அனைத்து தொழில்களும் சரிந்து விழும் – விவசாயம் உட்பட. எண்ணை விலை குறைந்தால், துணிவிலை, உணவு விலை, போக்குவரத்து விலை எல்லாம் குறையும். இதனால் மிஞ்சும் செலவை நாம் மற்ற பொருட்கள் வாங்கலாம், அதனால் வேலை வாய்ப்புகள் வளரும்.

சரிந்த விலைக்கு தடுமாரும் உலக பொருளாதாரமும், (வடதிசை நாடுகளில்) மிதமான குளிர்காலமும் முக்கிய காரணங்கள். சில தயாரிப்பாளர்கள் திவாலாவார்கள். மீண்டும் எண்ணை விலை ஏறும். ஐக்கிய பிரித்தானிய ராஜ்ஜியத்திலிருந்து தனிநாடு கேட்ட ஸ்காட்லண்டு தேசியவாதிகளின் பொது நிதி திட்டங்கள் வீழ்ந்தன.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஷேல் புரட்சி. ”ஷேல் புரட்சியால் பொங்குவுள்ள எண்ணை கடலால் எண்ணை விலை சரியும். ஷேல் வாயு பழைய கதை. ஷேல் எண்ணை உலகை மாற்றும்.,” என்று 2013இல் நான் எழுதினேன். அப்பொழுது எண்ணை உற்பத்தி உச்சவரம்பைத் (peak oil) தொட்டுவிட்டதே பெரும்  “செய்தியாய்” இருந்தது.

டெக்ஸாஸ், வட டக்கோடா மாநிலங்களில் ஷேல் புரட்சியால் பெருகிய எண்ணையால், சவுதி அரபுதேசத்தையும் ருஷியாவையும் மிஞ்சிவிட்டது அமெரிக்கா. இது உலகின் மிக முக்கிய புதுமைகளில் ஒன்று. இப்புதுமைக்கு இது குழந்தை பருவமே, வளரந்து ஓங்க நல்ல எதிர்காலம் உள்ளதாக எண்ணையின் விலை என்ற நூலில் ஆஸ்திரேலிய பேராசிரியர் ராபெர்த்தோ அகுலேரா, ஸ்வீடன் பேராசரியர் மரியன் ரடெட்ஸ்கி விளக்குகின்றனர். ஆர்ஜண்டைனா, மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியாவிற்கு இந்த தொழில்நுட்பம் பரவுமாம். இதனால் எண்ணை விலை 2035 வரை தாழ்ந்தே இருக்குமாம். 40 முதல் 60 டாலருக்குள் நிலவுமாம். சர்வதேச எரிசக்தி கழகமும் அமெரிக்க அரசின் எரிசக்தித்துறையும் 2035இல் எண்ணைவிலை 130 டாலரை தொடும் என்பதை ஒப்பிட்டலாம்.

எண்ணை விலை இப்படி நிலையற்று மேலும் கீழும் ஊஞ்சலார்டுகிறது? ஓபெக் (எண்னை உற்பத்திக்கு நாடுகளின் சங்கம்) நிறுவனத்தின் எண்ணை கட்டுப்பாடு கொள்கை ஒரு காரணம், எண்ணை பற்றாகுறை மற்றொரு காரணம், என்று நான் நினைத்துவந்தேன். இந்நூல் பற்றாகுறையோ எண்ணைகிணறு வற்றுவதோ ஓபெக் நிர்மாணமோ எண்ணை விலையை பாதிப்பதில்லை என்கிறது.

1960கள் முதல் பல நாடுகளில் எண்ணை கம்பெனிகள் நாட்டுடைமையாகின. (அமெரிக்காவில் மட்டும் நாட்டுடைமையாகவில்லை).இன்று 90 சதவிகிதம் எண்ணை நாட்டுடைமையான கம்பெனிகளின் கையில் உள்ளது. சவுதி அரெபியா, வெனிசுவாலா, ஈரான், ஈராக், குவைத்து, அமீரகம், நைஜீரியா, ருஷியா ஆகிய நாடுகளின் தேசிய கம்பெனிகளோடு ஒப்பிட்டால் அவை திமிங்கலங்கள், எக்ஸான்மோபில், ப்ரிடிஷ் பெட்ரோலியம் போன்ற சர்வதேச தனியார் கம்பெனிகளெல்லாம், வாலமீனும் விலாங்குமீனும்தான்.

இதன் விளைவு – தேசிய கம்பெனிகளின் பணத்தை அரசியல்வாதிகள் சுரண்டுவதால் அவை தொழில்நுட்பங்களில் புத்தாய்வு செய்யவோ, வீணாக்கலை தவிர்த்து சீராக நிர்வகிக்கவோ எந்த ஊக்கமுமில்லை.

அரசியல்வாதிகள் குறுக்கிடவில்லையேல், இருபதாண்டுகளுக்கு மலிவான எண்ணை கிடைக்கும். பெட்ரோல் சர்வாதிகரிகளுக்கும், ஐசிஸ் தீவிரவாதிகளுக்கும், காற்றாலை, சூரிய சக்தி, அணுமின் சக்தி, மின்சார கார் தயாரிப்பாளருக்கும் கெட்ட காலம் தான். நுகர்வரோக்கு அது நல்ல செய்தியே.
----தமிழாக்கம் முற்றும்----

கோபுவின் பின்னுரை

செய்தி என்றால் என்ன? என்று தலைப்பிட்டு முன்பு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். வக்லவ் ஸ்மில் சொன்ன தகவல் – 2011 முதல் 2013 மூன்றாண்டில் சீனாவின் சிமெண்ட் பயன்பாடு, 1900 முதல் 2000 வரை நூறாண்டில் அமெரிக்கா பயன்படுத்திய சிமெணடை விட அதிகம் என்பது அச்செய்தி. ஆனால், அரசியல் சர்ச்சையும், லஞ்சமும், ரகசிய காதலிகளும், நடிகர் எழுத்தாளர் பித்துக்குளித்தனங்களும் ஊடகங்களில் செய்தி. இதுவே நம் விருப்பம் போல. வணிகச்செய்திகளில் இவ்வித செய்திகள் அலசப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ஊழல் என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) விவகாரத்தை விட, இந்த அளவு பெரிது. செய்திகளில் பேச்சுமூச்சு காணவில்லை! வெங்காய விலையை விட மிக அடிப்படை கச்சா எண்ணை விலை. பாமரருக்கும் ஊடகங்களுக்கு பொருளாதாரத்தை பற்றிய அறியாமையை இது காட்டுகிறது.

3டி அச்சு இயந்திரத்தால் மற்றுமொரு இயந்திர புரட்சி நடக்குமா என்றும் ஒரு முறை எழுதினேன். நடக்கலாம், நடக்க பல ஆண்டுகளாகும். ஆனால் இதுவரை பெரிதாக ஒன்றுமில்லை. ஷேல் புரட்சி சாலப்பெரிது.


தேசிய கம்பெனிகள் பெருமளவில் எண்ணை வைத்திருக்கலாம். ஆனால் எக்சான்மோபில் போன்ற தனியார் கம்பெனிகள் அவர்களுக்கு சமமாக சம்பாதிக்கின்றன. இதை மேட் ரிட்லி கட்டுரையில் சொல்லவில்லை. 

இருபதாண்டு ஆருடமெல்லாம் சந்தேகத்துக்கு உரியதே. இருபதாண்டுக்கு முன்னால் நிபுணர்கள் சொன்ன ஆருடங்களை பார்க்கவும். 

தோற்று பின்வாங்கும் நோய்கள் நற்செய்தி கட்டுரை எழுதினேன். பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் டெங்குவும் சிக்கன்குனியாவும் பெற்ற விளம்பரம் மருத்துவ முன்னேற்றங்களுக்கும் கிடைப்பதில்லை. நற்செய்தி மேல் ஓர் அலட்சணம் ஏன்?


தொடர்புடைய கட்டுரைகள்

Big Oil's Bigger Brothers - Economist article

செய்தி புதுமை பற்றி என் வலைப்பதிவுகள்

பொருளாதாரம் பற்றி என் வலைப்பதிவுகள் 

முன்னேற்ற சூனாமி மேட் ரிட்லி கட்டுரை - தமிழாக்கம்
உலக பொருளாதார வரலாறு - ஆலன் பீட்டி நூல் விமர்சனம்

Tuesday, 29 September 2015

உலக பொருளாதார வரலாறு - நூல் விமர்சனம்

ஆலன் பீட்டி எழுதிய போலி பொருளியல்  நூலை செப்டம்பர் 30, புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு, டக்கர் பாபா பள்ளியில், காந்தி மையத்தில், தமிழில் கருத்துரை செய்யவுள்ளேன்.


“ஆச்சிரியமான உலக பொருளாதார வரலாறு” என்று அதற்கு ஆசிரியர், துணைப் பெயரிட்டுள்ளார். போர், புரட்சி, மதம், இயற்கை அழிவுகள், அறிவியல் புரட்சி என்ற காரணங்களால் நாம் அறிந்த வரலாற்று நிகழ்வுகளை மாற்றங்களை போல், பொருளாதார கொள்கைகளும் முடிவுகளும் வரலாற்றை எவ்வழி நடத்தியுள்ளன என்பதை இந்நூல் விளக்கும்.

பருத்தி புரட்சி, மாஞ்செஸ்டர் நூலாலைகள், அதனால் மாறிய ஆங்கிலேய, ஐரோப்பிய, இந்திய வரலாறு, பருத்தி புரட்சியை எதிர்த்த தொழிலாளிகள், சட்டங்கள், வணிகர்கள் பற்றியும் நூலில் உள்ளதை அலசுவேன். ஏன் ஊழல் நேர்மையை வெல்கிறது, நீர் நிலைகளின் ஆளுமை என்ன, வளநாடு தேய்வதும் வரண்ட நாடு வளர்வது, ஏரியும் நதியும் வணிகப்பொருளானதும், நூலின் முக்கிய அம்சங்கள். 

நைல் நதியும் காவிரியும் இந்நூலின் இப்பகுதியை தழுவி நான் எழுதிய கட்டுரை இங்கே

I will review the book False Economy by Alan Beattie, at Gandhi study center, in Thakkar Bapa Vidyalaya, T Nagar this Wednesday September 30 at 6.45 pm. I will speak mostly in Tamil.

This book is subtitled  "A Surprising Economic History of the World" and explains the economic forces and choices shaping the histories of nations or regions. I will select some aspects, only some chapters and explain them in detail.

Among them, I will cover the Cotton revolution, the mills of Manchester, how it altered England, the business, labour and legal resistance to it, first in England, then elsewhere, and how it impacted India a century later. I will also deal with chapters on why corruption sometimes defeats honesty, and water management and mismanagement. Why did Egypt once a source of grain for the Roman Empire become a country importing half its food?

1. An interview with Alan Beattie

2. இந்த உரையின் ஒளிப்பதிவு (video link)

Thursday, 21 May 2015

உழவர் தற்கொலை

சுவாமிநாத ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பொருளியல் கட்டுரைகளை எழுதிவருபவர். இடதுசாரி எண்ணங்கள் பரவலாயுள்ள இந்திய நாளிதழ் சூழலில் தெளிவாக வலதுசாரி சிந்தனைகளை முன்வைப்பவர். பல வருடங்களாக இவரை படித்து வருகிறேன். பொருளியல் பார்வையில் சமூகத்தை அலசி, புதிதாக பல தகவல்களை சொல்வார். இந்தியாவில் இது செவிடன் காதில் சங்கு ஊதும் பிழைப்பு. இந்த கட்டுரை பிடித்ததாலும், உழவர் தற்கொலைகளை பற்றி புலம்பல்களே அதிகம் இருப்பதாலும், நான் இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பகிர்கிறேன். இதன் ஆங்கில மூலம் இங்கே

Monday, 9 March 2015

மீனவர் செல்வம்


நில பிரபுக்களை பற்றி நம் யாவருக்கும் தெரியும். நீர் பிரபுக்கள்?

கார்ள் மார்க்ஸ் தொடங்கி பொது உடைமைவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன்? யாவருக்கும் சொந்தமான நிலத்தை, சிலர் ஆயுத பலத்தாலும் அதனால் வரும் பண பலத்தாலும் கைவசப்படுத்தி, தொழிலாளர்களை கூலிகளாகவும் வாடகைக்காரராகவும் அமைத்து, மேலோர் கீழோர் என் வகுப்பாய் பிரித்து வாழ்வது. ஆயிரமாயிரம் ஜாதியுள்ள பாரதத்தில் இருவகுப்பாய் பேசுவது அர்த்தமற்றது என்பதை இப்போது விட்டுவிடுவோம்.

வயலை பார்க்கும் தரிசனத்தில் கடலை பார்ப்போம். இங்கு வேலி போட்ட பிரிவுகளோ, எஜமான்-கூலி, சொந்தம்-வாடகை வேற்றுமைக்கோ வாய்ப்பில்லை. விவசாயத்தை போல் உழுதல், உரமிடல், விதைத்தல், நாத்து நடல், பாசனம், அருவடை, எதுவும் இல்லை. இயற்கையாய் வளரும் மீன்களை பிடித்து சந்தையில் விற்று தக்க பணம் சம்பாதிக்கலாம். ஏன் மீனவ கோடீஸ்வரர்கள் இல்லை? நீர் பிரபுக்கள் எங்கே?

பொது உடைமை மீனவம்

1954 இதை ஆய்ந்து கார்டன் ஸ்காட் என்ற கெனேடிய பொருளாதாரர் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதினார். இதன் தலைப்பு “The Economic Theory of a Common Property Resource: The Fishery.” “ஒரு பொது உடைமை பண்டத்தின் (மீனவத்தின்) பொருளாதார விதிமுறை” என்று தமிழில் மொழிபெயர்க்கலாம்.

பொதுவான பொருள் (நிலமானால் புறம்போக்கு என்று சொல்வோம்) என்பதால் அதில் தனிலாபம் இல்லை என்பதே அதன் அடிப்படை கருத்து. எல்லைகள் இல்லாததால் மீனவருக்கு வரம்பு ஏதும் இல்லை. இவ்வளவே மீன்கள் பிடிக்கலாம் என்று சட்டம் போட்ட அரசும் இல்லை, போட்டால் அதை அமல் படுத்த எந்த அரசுக்கும் திறமையும் இல்லை. மீனவர் சமூகமே தன்னலம் கருதி கட்டுப்பாடாக இல்லையேல், அப்படிபட்ட சட்டத்தை மீறுவதும் எளிது. அஞ்சாநெஞ்சத்து மீனவர்கள் படகு கொள்ளும் அளவு மீன் பிடிக்க தயங்குவதில்லை. ஒவ்வொரு மீனவரும் மற்ற மீனவரோடு போட்டியிடுவதால், மீன்களின் விலை ஒரு அளவுக்கு மேல் ஏறாது. அவர்களுள் தனிப்பட்டு யாரும் பெரும் நீர்பிரபுவாக மாறமுடியாது.

1970 வரை.

2008ஆம் ஆண்டு – உலக பொருளாதார சீர்குலைவு

நிற்க. மீன்களை பற்றியோ மீனவரை பற்றியோ அதிகம் நினைத்து பார்க்காதவன் நான். மைக்கெல் லூயில் எழுதிய “பூமெராங்” (Boomerang) புத்தகத்தை, சென்ற ஜனவரி மாதம், சென்னை புத்தக விழாவில், கடைசி நாளில் கடைசி நேரத்தில், வாங்கினேன். 2008இல் அமெரிக்காவில் நிகழ்ந்த பெரும் பொருளாதார சீர்குலைப்பையும் சர்வதேச விளைவுகளையும் சொல்லும் நூல் அது. 2008இல் அமெரிக்க வங்கிகள், வீட்டு கடன்களை அளவுக்கு மீறி கொடுத்து, பெரும் நஷ்டத்தில் சிக்கி தள்ளாடின. உலகப்பொருளாதாரமே ஸ்தம்பித்தது. அயர்லேண்ட், கிரேக்கம், இத்தலி, ஸ்பெய்ன், போர்த்துகல் போன்ற நாட்டு பொருளாதாரங்கள் ஆடிப்போயின.

ஐஸ்லேண்ட் நாடும். ஐஸ்லேண்டா?!!?! இரண்டரை லட்சம் மக்களே உள்ள ஐஸ்லேண்டிற்கும் அமெரிக்க வங்கிகளுக்கும் என்ன சம்பந்தம்?! கிபி 1000 முதல் மீனவர்களை தவிர யாரும் வாழாத, வரலாற்றில் எந்த பெயரோ புகழோ பாதிப்போ இல்லாத ஐஸ்லேண்ட் இந்த கதையில் எங்கு வந்ததது?

ஐஸ்லேண்டில் 1970-களில் மீன் பஞ்சம் ஏற்பட்டது. அதாவது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கடலில் மீனவர்கள் பிடித்த மீன்களின் எண்ணிக்கை பெரிதும் சரிந்தது. வருமை நாட்டையே மிரட்டியது. அரசு மீன்பிடிப்பிற்கு புதியதோர் சட்டம் வகுத்தது.

ஒருவிதத்தில் மீன்களை பங்குசந்தை பொருளாக்கியது என்று சொல்லலாம். மற்றொருவிதத்தில் இட ஒதுக்கீடு செய்தது என்று சொல்லலாம். 

முந்தைய வருடங்களின் மீன்பிடிப்பை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு வருடமும் இந்த மீனவர் இத்தனை மீன்களை பிடிக்கலாம் என்று ஒரு உச்சவரம்பை அறிமுகம் செய்து, அதற்கு சான்றிதழ்கள் அளித்தது. இச்சான்றிதழ்களை சந்தை பொருளாக்கவும் சட்டம் வழிசெய்தது. கடல் ஆராய்ச்சி கழகம் (Marine Research Institute) என்ற நிறுவனத்தின் விஞ்ஞானிகள் வருடா வருடம், மீன் தொகைக்கு பெரும் நஷ்டமின்றி எத்தனை மீன்களை பிடிக்கலாம் என்று ஆராய்ந்து, அந்த வருடத்து மொத்த பிடிப்பளவை (நெல் கொள்முதல், கரும்பு கொள்முதல் போல்) வகையறுப்பார். அதன் விகிதமாக விதிக்கப்பட்ட பங்குவரை அவரவர் மீன் பிடிக்கலாம். 

கம்பெனியின் பங்குகளை பங்குசந்தையில் வணிகம் செய்வது போல், மீன்பிடிப்பு பங்கு உரிமையை சந்தையில் வாங்கி விற்கலாம். மீன்பிடிக்க விரும்பாதோர் தம் உரிமைகளை மற்றவருக்கு விற்கலாம். வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது போல், மீன்பிடிப்பு  உரிமையை அடகு வைத்து, கடன் வாங்கலாம்.

சட்டம் தந்த பெருஞ்செல்வம்

மைக்கேல் லூயில் இதை 1. தனியார்மயமாக்கல் (privatization) 2. நோட்டுமயமாக்கல் (securitization)என்று வர்ணிக்கிறார். ஐயோ எப்பேர்பட்ட அநியாயம் என்கிறார். எனக்கென்னவோ மிக சிறந்த சமூக நன்மை செய்த திட்டமாக தெரிகிறது. 1980களில் வங்கிகள் அரசுகளுக்கு தரும் கடன்களுக்கு, இவ்வகையான ஒரு திட்டத்தை அமெரிக்க நிதி அமைச்சர் ஜேம்ஸ் பிரேடி அறிமுகப்படுத்தினார். முட்டாள்தனமாக கட்டுப்பாடின்றி தேசிய கடன்வாங்கி காசைவீணடித்த சோஷியலிச அரசியல்வாதிகளின் பொருளாதார மூடநம்பிக்கைகளுக்கு, ஜேம்ஸ் பிரேடியின் திட்டம் மரணச் சங்காக அமைந்தது.

ஐஸ்லேண்ட் மக்கள் இதை ஏற்றுகொண்டது மட்டுமில்லாமல், செல்வச்சமூகமாக மாறியதும் இதனால் தான். ஐஸ்லேண்டில் மாபெரும் கோடீஸ்வரர்கள் உருவானார்கள். கம்புக்கூலி கேப்பைக்கூலி பொருளாக இருந்த மீன்கள், சீரான செல்வ பொருளாய் மாறின. மீன் பிடிக்கும் தொழிலிலிருந்த பல்லாயிரம் மக்கள் விடுதலை பெற்றனர். கல்வியும் செல்வமும் கலையும் அறிவியலும் தொழிலும் பெருகின. ஒரு சட்டத்தால், ஒரு பொருளாதார திட்டத்தால் ஆயிரம் ஆண்டுகள் மீனவர் குடியாக வாழ்ந்த சமூகம், முப்பதாண்டில் பல்லாயிர பட்டதாரிகளையும் கலைஞர்களையும் உண்டாக்கியது.

எந்த பாட புத்தகத்திலும் எந்த செய்தித்தாளிலும் எந்த புத்தகத்திலும் சொல்லாத மாபெரும்  சாதனை அல்லவா இது? கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சியை விட, ஃப்ரெஞ்சு ருஷிய புரட்சியைவிட, சீனாவின் சமீப பொருள் வளர்ச்சிக்கும் பெருஞ்செல்வத்திற்கும் நிகரான விந்தை அல்லவா ஐஸ்லேண்டின் கதை? இந்நூல் எழுதுமுன் மைக்கேல் லூயிஸுக்கும் உலகின் பெருவாரியான பொருளாதார நிபுணர்களுக்கும் ஐஸ்லேண்டின் வரலாறோ அதன் திடீர் பெரும் வளர்ச்சியோ தெரியாது, என்பது குறிப்பிடதக்கது.

முப்பதாண்டில் ஐஸ்லேண்டின் வளர்ச்சி அங்கே வங்கித்துறை நிபுணர்களை உண்டாக்கி, அவர்கள் பன்னாட்டு வங்கிகளில் பெரும்பங்கை வாங்கி, சில முட்டாள்தனமான திட்டங்களால் உலகின் பொருளாதார நிலையையே ஆட்டும் சக்தியாக மாற்றியது. அந்த முட்டாள்தனத்தையும் பேராசையையும் பெருங்குற்றத்தையும் சொல்வது தான் மைக்கேல் லூயிஸின் நூல் செய்யும் சேவையும் நோக்கமும். அது ஒரு புறம் இருக்கட்டும். அதன் பின்னணியை சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தொடர்புடைய பதிவுகள்
WallStreet on the Tundra – Michael Lewis

நான் எழுதிய பொருளாதார பதிவுகள்
3. ஒட்டகமும் சக்கரமும் - ஒரு வரி கதை
4. டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி
5. Margaret Thatcher – In memoriam

Wednesday, 10 December 2014

Lady and Gentlemen


1970. Or maybe late 1969. Evening. Ranade Library in Luz, Mylapore. Malcolm Adiseshiah was about  to deliver a lecture on economics at the Srinivasa Sastri Hall.

Malcolm Adiseshiah and wife - photo at MIDS, Adayar, Madras
“Ladies and Gentlemen,” he began. Then he corrected himself.

“Lady and Gentlemen,” he said, smiling at the only lady in the room.

After a pause, while other necks craned to glimpse the only lady in the room, he improved upon his correction.

“Lady with a baby in her hand, and Gentlemen,” he grinned, and this time the audience broke into 
laughter and approval.

My father, Rangarathnam, told me this story. At that time he was an upcoming lawyer in the Madras High Court - a Mylapore vakeel in Tamil parlance; a part time lecture on Mercantile and Commercial Law at the Vivekanda College; an amateur novelist – at least one of his stories had been published in either Kumudam or Ananda Vikatan, under the pseudonym Athreyan; with a suspended career in politics – he had contested the 1967 Madras elections under a Congress ticket for post of Corporation Councillor and had lost in the DMK wave.

The lady with the baby was Pushpa. She had written her MA (Economics) final papers in April 1969, while eight months pregnant.

She was my mother.

I was reminded of the incident when I attended a lecture at MIDS, in Adayar, yesterday. MIDS was founded by that very Adiseshiah.

There is famous incident in the life of Subrahmanya Bharathi, when he went to meet Sister Nivedita and she asked him why she hadn't brought his wife.

My dad always beamed with pride when he told me this story. I think about this when I see the rare couple attend a program together.

The photo below is of my parents, at a School Day function in CIT Colony English Primary School, Mylapore where my sister, my brother and I studied first. This photo is from 1978 - my father was Chief Guest and my mother gave away the prizes.

Pushpa and Rangarathnam
Related Posts
1. On Teacher's Day
2. அப்பாவுக்கு பிடித்த கவிதை

Saturday, 25 October 2014

Bus Stop Index

I have a fascination for buses, as some people do for trains, ships, trams, cars, motorbikes, and yes rockets. I take being a connoisseur of the commonplace seriously. Buses are perhaps the least appreciated, definitely the least glamorous, of motorized vehicles. Even bicycles are far more fashionable. Bicycle snobs abound; no bus snob exists. Part of the static infrastructure of buses is bus stops, where people wait. I believe buses and bus stops reflect a community, a government and the economy.

Buses are one of the miracles of the 20th century, far more important for freedom and prosperity than most measures dealt with by economists. Economists use such measures as Consumer Price Index(CPI), Gross National Product (GNP), inflation, growth rates and the Gini coefficient - most people understand these poorly, and journalists, bureaucrats and social activists often have such a poor understanding of these, that their ignorance might be more useful. Mathematicians, fortunately, find these so practical, that they avoid them altogether.

I think a bus index and a bus stop index may be one useful index of the economy. The former is a index for the economy, with fares, people transported, times of operation, seating capacity, and being useful information. A bus stop index would merely reflect the aesthetic standards of a community, or the degree of apathy or engagement of local government. In Madras for the last few years, there are no bus stops in most places, so no shelter from rain and sun. This is purely a contractor issue and political one-up-manship.

Here are a few regular and a few unusual bus stops, that caught my eye, usually, when I was in a bus and had my hands free.

Kerala

Politics permeates every aspect of Kerala life, bus stops are no exception.

Thiripparaiyaar
Notice the post box on one of the pillars. And the complete absence of movie or business or siddha doctor pamphlets plastering the surfaces, unlike in Tamil Nadu.

Thiru Vallam - Congresss pillar
Thiruvallam - I took the photo from inside the bus stop. These are Congress colors not India colors, there are party flag posts outside. It has 3 seats, not in photo.

Trivandrum East Fort
I found this bus stop in Trivandrum city, near the Padmanabha Swamy temple. I like the aesthetic touch of the paavai vilakku (Lady with Lamp) statue aesthetically pleasing, though orange paint would not be my choice.

TamilNadu

Thiruneelakkudi - near Mayiladuthurai
You have to admit, that the bus stop at Thiruneelakkudi is more fancy than some houses or government buildings.

Suchindram
This one at Suchindram, the bus stop for the main temple, has a roof, slight modeled on a temple vimana, with kalasams on top!

Gujarat

My bus stop index idea is a recent one, and I took a few pictures of bus stops and buses while in Gujarat. This first yellow paint square shelter, outside Bhuj, is typical of rural areas, even in TamilNadu.

Bhuj

Naroda, Ahmedabad
This is a bus stop in Naroda, a suburb of Ahmedabad, with a long bus stop, and a few seats and a tea shop. Also quite typical. The next two, are the interior and exterior of BRTS bus stops in Ahmedabad - very atypical. Pune and Delhi are two other cities with BRTS. The one in Pune is a farce; I haven't been to Delhi.

BRTS bus stop - interior - Ahmedabad

BRTS  bus stop Ahemdabad
This one below, in Baroda, is actually more typical. A simple bus stop in Baroda, one of the cleanest cities I have seen. I did not see many buses in the early mornings, though. In Tamilnadu and Kerala buses are quite common, even in the early mornings. North Indian winters are cold, those states wake up late, so that's not a surprise.

Baroda

Mehsana
Finally, Mehsana, a small town with a simple bus stop. Sadly, still better than most of Madras.

Wednesday, 14 May 2014

ஒரு வரி கதை


“ஒட்டகம் பாலைவனத்து கப்பல்” என்று பள்ளி புத்தகத்தில் படித்த ஞாபகம் இருக்கலாம். சென்னையில், ஆங்கில மொழி பள்ளிகளில் கல்விகற்ற நான் “The camel is the ship of the desert” என்று படித்திருக்கிறேன். குஜரத் ராஜஸ்தான் வீதிகளில் ஒட்டக வண்டிகளை தொலை காட்சியில் பார்த்திருக்கிறேன். அரபு நாடுகளையும் வட ஆப்பிரிக்காவையும் பாலை நாடுகளாகவே நினைத்ததாலும் அங்கு ஒட்டக வண்டி உள்ளதா என்று யோசித்ததில்லை.


கணித இயற்பியல் விஞ்ஞானி ஃப்ரீமன் டைசனின் எழுதிய ‘Infinite in All Directions’ (’எத்திக்கும் ஈறில்லை’) என்ற நூலை 2005இல் வாசித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் அறிவியலையோ வரலாற்றையோ சமூகத்தையோ ஒரு அறிவியல் நோக்கத்தோடு, எளிய நடையில் அலசியதும், புதிய கருத்துக்களை அள்ளி வீசியதும், என் எண்ணத்தை இன்புருக்கியது. என் தம்பி ஜெயராமனுக்கு பிறந்தநாள் பரிசாய் அளித்தேன்; முதல் அத்தியாயம் மூன்று முறை படித்தும் புரியவில்லை என்று வருந்தி கைவிட்டான். ஓரிரு முறை டைசனின் சில கருத்திக்களை விளக்கிய போது, புரிதலின் ஆனந்தம் அவனுக்கும் கிடைத்தது. Alchemy of Air நூலை மிகவும் ரசித்து படித்தான். Newton and the Counterfeiter படித்துக்கொண்டிருக்கிறான். நிற்க.

ரோமப்பேரரசு சாலைகள் ரோம கல் சாலை கட்டுமானம்

ரோம நாகரீகத்தின் கல் சாலைகளை மாபெரும் சாதனையாகவும் ரோம பேரரசின் செல்வத்திற்கு முக்கிய காரணமாகவும் வரலாற்று அறிஞரும் பொருளியல் அறிஞரும் கருதுவர். அலெக்ஸாண்டர் காலத்தில் கிரேக்க ஆட்சிக்குட்பட்ட மேற்காசிய – சிரியா, ஈராக், ஈரான் - ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரியின் ஆட்சிக்குட்பட்டது. ரோமானிய மன்னர்கள் இந்த அரபு நாடுகளிலும் தங்கள் கல் சாலைகளை செய்தனர். 

அற்புத சாலைகள் – மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் ரதங்களும் வேகமாகவும், பாரமேந்தியும் சென்று, வணிகம் பெருக வழி வகுத்த சாலைகள். ஆனால் ஏதோ ஒரு காலத்தில் சாலைகள் பழுதாகி, சீராகாமல், மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் அரபு நாடுகளில் காணாமல் போயின. இது தொழில்நுட்ப பின்னேற்றம். வரலாற்றில் பொதுவாக முன்னேற்றங்களை தான் பார்க்க முடியும்; நோய்களாலும், போர்களாலும் அவ்வப்பொழுது பின்னேற்றம் அடையலாம். 

வணிகம், செல்வம், மதம், மொழி, விஞ்ஞானம், கல்வி, அமைதி, கலை, மனித வளம், இவை எல்லாம் பின்னேறினாலும், பொதுவாக சமூகங்கள் தொழில்நுட்பத்தில் பின்செல்வதில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் ரோம ராஜ்ஜியம் வீழ்ந்தபின் ஐரோப்பா 700 ஆண்டுகள் இருளில் சூழ்ந்தது என்மனார் வரலாற்றுரைஞர். அரபு நாடுகளில் சாலைகள் ஒழிந்து ஒட்டகம் மேலோங்கியது எப்படி? பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சியால் ரயிலும், இருபதாம் நூற்றாண்டில் கார்களும் பேருந்துகளும் லாரிகளும் வரும் வரை, அரபு நாடுகளிலும் ஈரானிலும் சக்கரம் போட்ட வண்டிகளே இல்லையாம். டூனிஸ் முதல் ஆஃப்கானிஸ்தான் வரையும், மங்கோலிய ஆட்சியில் சீனதேசம் முதல் பல்கேரியா வரையும், சாலைகளில் வண்டிப்போக்குவரத்தும் இருந்ததென்றும், பாரதத்தில் மாட்டு வண்டிகள் எக்காலத்திலும் இருந்தன என்பதும், மன்னன் ஷெர்ஷாசூரி பெஷாவர் முதல் வங்கதேசத்து டாக்கா வரை நெடுஞ்சாலை அமைத்தான் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

ஒரு வரியில் கதை எதிர்ப்பார்தவர்கள் ஏமாற வேண்டாம்.

The Camel and the Wheel  ‘ஒட்டகமும் சக்கரமும்’ என்று Richard Bulliet ரிச்சர்டு புல்லியே ஒரு நூல் எழுதியுள்ளார். இதை ஃப்ரீமன் டைசன் சுருக்கி சொல்கிறார்.

சிரியா நாட்டில் பல்மைரா நகரம், இன்றைய சிங்கப்பூர் போல் வர்த்தக மையமாய் திகழ்ந்து, வரலாற்று முக்கியம் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டில் பல்மைராவில் ஒரு வரி பட்டியலை புல்லியே சோதித்தார்; மாட்டுவண்டியின் சரக்கு சுமை நான்கு ஒட்டகச் சுமைக்கு சமமாக இருந்தது. ஒட்டகம் சுமார் 300 கிலோ சுமையும் மாட்டு வண்டி 600 கிலோ சுமையும் தாங்குமாம். அதாவது, ஒரு மாட்டு வண்டி, இரண்டு ஒட்டகச் சுமையே தாங்கும். எடை கணக்கில் மாட்டுவண்டி சுமை இருமடங்கே இருந்திருக்க வேண்டும். ஏன் இந்த பாரபட்சம்?

ஒருகால், ஒட்டக வர்த்தகருக்கும் வரி அதிகாரிகளுக்கும் ஏதோ தொடர்புண்டோ என்று கேட்கிறார் டைசன். ஒட்டகங்களுக்கு சாலைகள் முக்கியமில்லை, எவ்வித பாதையிலும் செல்லும். ஆனால் மாட்டு வண்டிகளுக்கு தரமான சாலைகள் வேண்டும். வரிகளின் பாரபட்சத்தினால், காலப்போக்கில் ஒட்டக போக்குவரத்து மேலோங்கியது மாட்டுவண்டி போக்குவரத்து சரிந்தது. வரி குறைந்ததால் சாலைகளை பராமரிக்கும் தேவையான பணமும், அதனால் பணியும் குறைந்தது. சாலைகள் சீர்கெட்டன. மாட்டுவண்டி மட்டுமல்ல, சக்கரவண்டிகள் யாவும் சரிந்தன. ஆயிரம் ஆண்டு ஒட்டகங்கள் கோலோச்சின. 

“சக்கரவண்டி” என்ற சொல்லே அரபு மொழியின் புழக்கத்திலிருந்து மறைந்தது.

வணிகமும், தொழில்நுட்பமும், சாலைகளும், கப்பல்களும், வரிகளும் வரலாற்றை ஆட்டிப் படைக்கும் மாபெரும் சக்திகள். காதலும் வீரமும் சூழ்ச்சியும் யுத்தமும் ஆட்சியும் வீழ்ச்சியும் ததும்பி வழியும் வரலாற்று கதைகளில், வணிகமும் வரியும் புலவருக்கு புளிக்கும். ரசிகருக்கு கசக்கும். 

இது ஒரு வரி கதை. எனக்கு புளிக்கவில்லை, உங்களுக்கு கசந்ததா?

எச்சரிக்கை: நான் புல்லியே எழுதிய புத்தக்த்தை படிக்கவில்லை. டைசனின் புத்தகத்தில் ஒரு பக்கத்தின் சாராம்சத்தை, என் பாணியில் எழுதியுள்ளேன். இதன் தொடர்பாக தொடர்ந்து நான் படித்த சில விஷயங்களை சில நாட்கள் கழித்து எழுதுகிறேன்.


Saturday, 19 April 2014

நைல் நதியும் காவிரியும்


கோதுமை பயிரிட எகிப்தை சிறந்த நாடுண்டோ நிலமுண்டோ? மாபெரும் வான் மழை பெய்யா நாட்டினில், தான் பொய்யா நைல் நதியின் பாசன நிலமல்லவா எகிப்து? சோழனும் வளவனோ? ஃபாரோ அன்று ஒப்பில்லா வளவன்? பல்லாயிர ஆண்டாக வண்டல் மண்ணை வள்ளலாய் தந்து ஓங்கு சென்னெல் பெருக வழங்கிய வற்றா நதி நைலுக்கும் ஒப்புளதோ, அதன் புகழுக்கு பரிசுளதோ?

என்னே நைல் பாயும் மண்ணின் பசுமை? என்கொல் அதன் செழுமை? ஏரிழுக்க வேண்டாம், ஏர்பூட்டும் எருது வேண்டாம், தூவி தெளித்த நெல்லை  மிதித்து புதைக்க பன்றிக்கூட்டம் போதுமே உழவிற்கு. அருவடை செய்த பின், நெல்லையும் உமியையும் மிதித்து பிரிக்கும் அதே பன்றிக்கூட்டங்களை அகமகிழ்ந்து புகழ்ந்து பாடாத புலவர் உண்டோ?

அக்கம்பக்கத்து நகரங்களுக்கும் அண்டை நாட்டு மக்களுக்கும் சோறூட்டும் நெற்களஞ்சியம் எகிப்து.

சரி அது இருக்கட்டும். யார் ஐயா போயும் போயும் எகிப்தில் கோதுமை பயிரிடுவான்? ஜனத்தொகை பெரிது, பெருகி வழிகிறது. மழையில்லா நிலம். பாலை சூழ்ந்த அளவான நஞ்சை. வெள்ளத்தை நம்பும் வேளான்மை. குடிக்கவே நீருக்கு கவலை, இதில் உழவும் ஒரு கேடா? அதுவும் போயும் போயும் கோதுமை – தாகமுள்ள பயிர், பெரிதாய் விலை போகாத பயிர். தூர தூர நாடுகளிலிருந்து பெருங்கடல்களை தாண்டி அள்ளி பணங்கொடுத்து நெல்லை வாங்கும் நாடல்லவா எகிப்து? புலவன் கிடக்கான், வெண்டைக்காய். லாரி ஓட நல்ல சாலை உண்டா, நெல் அரைக்க மில் எத்தனை?

நாடும் நதியும் ஒன்றே, நாளும் நிலைமையும் மாறிவிட்டன. காலத்தின் கோலத்தால், தொழில்நுட்ப பெருவளர்ச்சியால், வணிகத்தின் விரிதலால், இம்மாற்றங்கள் வந்துள்ளன. பன்றி மிதித்து உழுததும் உமிபிரித்ததும், கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்று பிதாமகன் ஹெரடாடஸ் எழுதியது. மூவாயிர ஆண்டு ஃபாரோ ஆட்சியிலும் அலெக்ஸாண்டர் ஜூலியஸ் சீஸர் நிறுவிய கிரேக்க ரோமானிய ஆட்சியிலும், மெடிட்டரேனிய கடல் சூழ்ந்த நாடுகளுக்கு எகிப்தே பெரிய நெற்களஞ்சியம். பாய்மரக் கப்பலும், எருது இழுத்து ஏர் உழவும் கோலோச்சிய காலம்.

இன்றோ ருஷியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கப்பல் நெல்சுமந்து எகிப்தில் இறக்குகின்றன. மக்கள் என்னவோ அதே ஃபாரோ காலத்து ரொட்டியை தான் சமைத்து உண்ணுகின்றனர்.

என்ன வேற்றுமை? மெடிட்டரேனிய நாடுகளில் எகிப்து நீர்வள நாடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் பட்டியலில் அதன் நீர்வளம் குறைவே. எகிப்திலிருந்து சீஸர் காலத்து ரோமாபுரி நெல் இறக்குமதி செய்ததுபோல் இன்று மற்ற நாடுகளிலிருந்து எகிப்து நெல் இறக்குமதி செய்கிறது. நெல்லை மட்டுமல்ல, நீரையும் இறக்குமதி செய்கிறது. எப்படி? கப்பலில் நீர் வரவில்லை. ஆனால் வாங்கும் நெல்லுக்கு பாய்ச்சிய நீர், நெல் வளர்த்த நாடுகளில் அல்லவா பாய்ந்தது? சத்தமின்றி, யுத்தமின்றி, ஒப்பந்தமின்றி, உரத்தை மலிவாய் தரும் அரசின்றி, கொள்முதல் செய்யும் மண்டியின்றி, இதில் பங்கு திருடும் அரசியல்வாதியும் அதிகாரியும் தொழில் சங்கத்தலைவரும் இன்றி, வணிகத்தால் நெல் வளம் காண்கிறது எகிப்து.
காவேரி கதை எப்படி?


நூல் குறிப்பு ஆலன் பீட்டி (Alan Beattie - Twitter:@alanbeattie) எழுதிய False Economy (பொருளாதார முறைகேடு) என்ற நூலின் மூன்றாம் காண்டத்தின் மொழிபெயர்ப்பு இந்த கட்டுரை. நூலை வாங்கினால் இந்த காண்டத்தை முதலில் படிக்கவும், முதல் இரண்டு காண்டங்கள் பொருளாதாரமும் வரலாறும் அறியாதவர்களுக்கு அவை கடினமாக இருக்கலாம். நவீன பொருளாதாரத்தின் ஒன்பது முக்கிய அம்சங்களை எடுத்துக்கொண்டு, அற்புதமாய் உதாரணங்களுடனும் சம்பவங்களுடனும் ஆர்வமுள்ள பாமரருக்கு புரியும்படி எழுதியுள்ளார்.

Tuesday, 31 December 2013

டிசம்பர் 31 – செல்வத் திருநாள்

டிசம்பர் 31, 1879. வரலாற்றின் மிக முக்கிய நாள் என நான் கருதுகிறேன். என் கருத்தில் அது செல்வத் திருநாள். உங்கள் அனைவருக்கும் என் செல்வத் திருநாள் வாழ்த்துக்கள்.

அதென்ன வரலாற்றின் மிக முக்கிய நாள்? நாம் நாட்களை மதத்தோடும் நாட்டோடும் மட்டுமே நோக்குகிறோம். ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் சுதந்திர தினம், ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு; ஜூலை 4, 1776 அமெரிக்காவிற்கு சுதந்திர தினம். அக்டோபர் 25 [ருஷிய பஞ்சாங்கத்தில் நவம்பர் 7] 1917 ருஷிய புரட்சி தினம். மாவோவின் நெடும் பயண தொடக்கம், பெர்லின் சுவர் விழுந்த நாள், பிரஞ்சு புரட்சி நாள், கிழக்கு இந்தியா கம்பெனி ஜார்ஜ் கோட்டை கட்ட கிடைத்த நாள் ஆகஸ்ட் 22; அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள்; நவம்பர் 14 குழந்தைகள் தினம். இவை அந்தந்த தேசங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மத ரீதியாக, டிசம்பர் 25 யேசு பிறந்தநாள்.  புத்த பூர்ணிமா, வர்த்தமான மஹாவீரர் ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, ராம நவமி, வைகுந்த ஏகாதேசி, தை பூசம், கந்த சஷ்டி - இவை எல்லாம் இந்திய பஞ்சாங்கத்தின் மரபு வழி வருவதால் கிறுஸ்துவ நாள்காட்டி நாளில் விழுவதில்லை. சீன புத்தாண்டு, பாரசீக புத்தாண்டு, இஸ்லாமிய விழா நாட்கள் இவையும் கிறுஸ்துவ பஞ்சாங்க வழி வருவதில்லை. மய நாகரீக யுகத்தொடக்கம் சமீப புதுமை. இவை அந்தந்த மதங்களுக்கே பொருந்தும்.

மகர சங்கராந்தி, தமிழ் வருட பிறப்பு, யுகாதி போன்ற வானியல் தொடர்புடைய நாட்களும் தொழிலாளர் தினம், காதலர் தினம், மாதர் தினம் இவற்றில் சேரா.

நிற்க. ஒரு சின்ன வரலாற்று புதிர். 1879-இல் யார் இந்திய வைஸ்ராய்? மதறாஸின் ஆளுநர்? இங்கிலாந்தில் பிரதமர், அரசர்? ஜப்பானில், சீனாவில், பர்மாவில், துருக்கியில், எகிப்தில், பாரசீகத்தில், ஜெர்மனியில், ருஷியாவில்? அமெரிக்க பிரஞ்சு ஜனாதிபதிகள் யார்? வரலாற்றில் முக்கியமான நாள் என்று நான் கருதினால் இவர்களில் யாரேனும் ஒருவர் ஏதாவது முக்கிய சாதனைகள் செய்திருக்க வேண்டுமே? ஒரு போர், ஒரு முக்கிய சட்டம், சீர்திருத்தம், தானம், திருமணம்…. வாசகர் பலருக்கு அன்றைய ஆட்சியாளரோ மதகுருக்களோ யார் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் அதிசயம் தான்.

அப்படி என்ன தான் நடந்தது அன்று? இரு நாடுகளில் இரு வேறு சம்பவங்கள்: ஒன்று படாடோப அமர்க்களமாக, பத்திரிகையில் பரப்பரப்பு கிளப்பி, கண்டவரை மிரளச்செய்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி. மற்றது அவை இல்லாமல். ஆனால் அரசியல் மத சம்பவங்களை விட மிக பிரம்மாண்டமாக, வரலாற்று திருப்புமுனையாக, உலகில் பல நூறு கோடிகள் பயனுற, செல்வம் வெடித்து பெறுக, சமூகங்களின் புது யுகமாக.

தாமஸ் ஆல்வா எடிஸன்
முதல் சம்பவம்: தாமஸ் ஆல்வா எடிஸன், மென்லோ பார்க் என்னும் இடத்தில் நூற்றுக்கணக்கான மின் விளக்குகளை ஏற்றி மக்களுக்கு மின்சார யுகத்தை தொடக்கி வைத்தார். இதற்கு முன் தந்தி ஒன்றே மின்சாரத்தின் முக்கிய கருவியாக இருந்தது.

இரண்டாம் சம்பவம்: ஜெர்மனியில் கார்ள் பென்ஸ் பெட்ரொல் என்ஜினை ஒரு குதிரை வண்டியில் பொருத்தி, ஓட்டி, கார் யுகத்தை தொடங்கி போக்குவரத்து பெரும்புரட்சி ஆற்றினார். காரை இயக்கும் கார்புரெட்டர், கிளட்ச், கியர் ஷிஃப்ட், ஸ்பார்க் ப்ளக் ஆகிய முக்கிய துணைக்கருவிகளையும் இவர் படைத்தார். எமில் லெவஸார், காட்லீப் டைம்லர், வில்லியம் மேபக், ருடோல்ஃப் ஆக்கர்மன் ஆகியோரின் படைப்புகளும் கார்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனால் கார் பாமர மனிதர்களும் வாங்கும் அளவு மலிவான பொருளாக மாற்றிய பெரும் புகழ் ஹென்ரி ஃபோர்ட்டுக்குச் சேரும்.

கார்ள் பென்ஸ் 
கார் யுகமும் மின்சார யுகமும் உலகின் செல்வப் பெருக்கு மிக முக்கிய காரணிகள். எடிசனுக்கு பின் நிக்கோலா டெஸ்லா, வெஸ்டிங்கவுஸ், சார்லஸ் பார்ஸன்ஸ் போன்றோர் மின்சார யுகத்தின் முக்கிய இயக்குனர்கள்.

டிசம்பர்31 : வரலாற்றின் முக்கிய நாளாக கொண்டாட வேண்டும். தேசிய மத எல்லைக்குள் இன்னாளை வைக்கமுடியாது. விசை திரு நாள் என்று நினைத்தலும், செல்வத் திருநாள் என்று நினைத்தலும் தகும்.


பென்ஸ் வெலோ - விற்பனைக்கு வந்த முதல் கார்