Saturday, 20 February 2016

இரண்டு லட்சம் கோடி டாலர் - கச்சா எண்ணையின் விலை சரிவு


செல்போன், இணையதளம், முகநூல் கடந்த இருபதாண்டின் புரட்சிகள்; பெரும் வளர்ச்சிகள். இதற்கு சமமாக, ஷேல் கச்சா எண்ணையால் ஒரு பெரும் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதை விளக்கும் மேட் ரிட்லியின்கட்டுரையின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.

----தமிழாக்கம் ஆரம்பம்---

கச்சா எண்ணையின் விலை அபாரமாக சரிந்துள்ளது. 2014-இல் ஒரு பீப்பாய்க்கு 115 டாலர் இருந்த கச்சா எண்ணை 2016 பிப்ரவரியில் பீப்பாய்க்கு 30 டாலருக்கு சரிந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. எண்ணை நிறுவனங்களும் அரசுகளும் திவாலாகும் என்றும் பங்கு சந்தை சரியும் என்றும், பொருளியல் நிபுணர்கள் அச்சுறுத்துகிறார்கள். விலைவாசி வீழும், பெட்ரோல் பருகல் பெருகும், அரசியல் கலவரம் பொங்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்கின்றனர். அவர்களெல்லாம் நுகர்வோரின் சார்பாக பேசாமல் எண்ணை தயாரிப்பாளரின் சார்பாக ஓலமிடுகின்றனர். எண்ணை பெருஞ்செல்வர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் இது பிடிக்காமலிருக்கலாம். ஆனால் சமூகத்திற்கு இது மாபெரும் நன்மை. கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் எண்ணை தயாரிப்பாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர் ($ 2,000,000,000,000 = 140,000,000,000,000 ரூபாய்) கைமாறியுள்ளது.

(கோபுவின் குறிப்பு: இது ஆயிரத்து நானூற்று லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். ஒரு ட்ரில்லியன் டாலராக கணக்கிடப்படும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாராம் இதில் பாதிதான் இருக்கும்)

இன்னாள் உலக சமூகத்தின் தவிர்க்கவியலாத சரக்கில் கச்சா எண்ணைக்கே முதலிடம். தினசரி செயல்களின் சக்திவேர். ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி, இரும்பு, கோதுமை, செம்பு, பருத்தி, இயற்கை வாயு ஆகியவற்றின் மொத்த விலைமதிப்பைவிட கச்சா எண்ணை ஒரு வருடத்து விலைமதிப்பு மிகையாம்!!!!! கச்சா எண்ணை இன்றி அனைத்து தொழில்களும் சரிந்து விழும் – விவசாயம் உட்பட. எண்ணை விலை குறைந்தால், துணிவிலை, உணவு விலை, போக்குவரத்து விலை எல்லாம் குறையும். இதனால் மிஞ்சும் செலவை நாம் மற்ற பொருட்கள் வாங்கலாம், அதனால் வேலை வாய்ப்புகள் வளரும்.

சரிந்த விலைக்கு தடுமாரும் உலக பொருளாதாரமும், (வடதிசை நாடுகளில்) மிதமான குளிர்காலமும் முக்கிய காரணங்கள். சில தயாரிப்பாளர்கள் திவாலாவார்கள். மீண்டும் எண்ணை விலை ஏறும். ஐக்கிய பிரித்தானிய ராஜ்ஜியத்திலிருந்து தனிநாடு கேட்ட ஸ்காட்லண்டு தேசியவாதிகளின் பொது நிதி திட்டங்கள் வீழ்ந்தன.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஷேல் புரட்சி. ”ஷேல் புரட்சியால் பொங்குவுள்ள எண்ணை கடலால் எண்ணை விலை சரியும். ஷேல் வாயு பழைய கதை. ஷேல் எண்ணை உலகை மாற்றும்.,” என்று 2013இல் நான் எழுதினேன். அப்பொழுது எண்ணை உற்பத்தி உச்சவரம்பைத் (peak oil) தொட்டுவிட்டதே பெரும்  “செய்தியாய்” இருந்தது.

டெக்ஸாஸ், வட டக்கோடா மாநிலங்களில் ஷேல் புரட்சியால் பெருகிய எண்ணையால், சவுதி அரபுதேசத்தையும் ருஷியாவையும் மிஞ்சிவிட்டது அமெரிக்கா. இது உலகின் மிக முக்கிய புதுமைகளில் ஒன்று. இப்புதுமைக்கு இது குழந்தை பருவமே, வளரந்து ஓங்க நல்ல எதிர்காலம் உள்ளதாக எண்ணையின் விலை என்ற நூலில் ஆஸ்திரேலிய பேராசிரியர் ராபெர்த்தோ அகுலேரா, ஸ்வீடன் பேராசரியர் மரியன் ரடெட்ஸ்கி விளக்குகின்றனர். ஆர்ஜண்டைனா, மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியாவிற்கு இந்த தொழில்நுட்பம் பரவுமாம். இதனால் எண்ணை விலை 2035 வரை தாழ்ந்தே இருக்குமாம். 40 முதல் 60 டாலருக்குள் நிலவுமாம். சர்வதேச எரிசக்தி கழகமும் அமெரிக்க அரசின் எரிசக்தித்துறையும் 2035இல் எண்ணைவிலை 130 டாலரை தொடும் என்பதை ஒப்பிட்டலாம்.

எண்ணை விலை இப்படி நிலையற்று மேலும் கீழும் ஊஞ்சலார்டுகிறது? ஓபெக் (எண்னை உற்பத்திக்கு நாடுகளின் சங்கம்) நிறுவனத்தின் எண்ணை கட்டுப்பாடு கொள்கை ஒரு காரணம், எண்ணை பற்றாகுறை மற்றொரு காரணம், என்று நான் நினைத்துவந்தேன். இந்நூல் பற்றாகுறையோ எண்ணைகிணறு வற்றுவதோ ஓபெக் நிர்மாணமோ எண்ணை விலையை பாதிப்பதில்லை என்கிறது.

1960கள் முதல் பல நாடுகளில் எண்ணை கம்பெனிகள் நாட்டுடைமையாகின. (அமெரிக்காவில் மட்டும் நாட்டுடைமையாகவில்லை).இன்று 90 சதவிகிதம் எண்ணை நாட்டுடைமையான கம்பெனிகளின் கையில் உள்ளது. சவுதி அரெபியா, வெனிசுவாலா, ஈரான், ஈராக், குவைத்து, அமீரகம், நைஜீரியா, ருஷியா ஆகிய நாடுகளின் தேசிய கம்பெனிகளோடு ஒப்பிட்டால் அவை திமிங்கலங்கள், எக்ஸான்மோபில், ப்ரிடிஷ் பெட்ரோலியம் போன்ற சர்வதேச தனியார் கம்பெனிகளெல்லாம், வாலமீனும் விலாங்குமீனும்தான்.

இதன் விளைவு – தேசிய கம்பெனிகளின் பணத்தை அரசியல்வாதிகள் சுரண்டுவதால் அவை தொழில்நுட்பங்களில் புத்தாய்வு செய்யவோ, வீணாக்கலை தவிர்த்து சீராக நிர்வகிக்கவோ எந்த ஊக்கமுமில்லை.

அரசியல்வாதிகள் குறுக்கிடவில்லையேல், இருபதாண்டுகளுக்கு மலிவான எண்ணை கிடைக்கும். பெட்ரோல் சர்வாதிகரிகளுக்கும், ஐசிஸ் தீவிரவாதிகளுக்கும், காற்றாலை, சூரிய சக்தி, அணுமின் சக்தி, மின்சார கார் தயாரிப்பாளருக்கும் கெட்ட காலம் தான். நுகர்வரோக்கு அது நல்ல செய்தியே.
----தமிழாக்கம் முற்றும்----

கோபுவின் பின்னுரை

செய்தி என்றால் என்ன? என்று தலைப்பிட்டு முன்பு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். வக்லவ் ஸ்மில் சொன்ன தகவல் – 2011 முதல் 2013 மூன்றாண்டில் சீனாவின் சிமெண்ட் பயன்பாடு, 1900 முதல் 2000 வரை நூறாண்டில் அமெரிக்கா பயன்படுத்திய சிமெணடை விட அதிகம் என்பது அச்செய்தி. ஆனால், அரசியல் சர்ச்சையும், லஞ்சமும், ரகசிய காதலிகளும், நடிகர் எழுத்தாளர் பித்துக்குளித்தனங்களும் ஊடகங்களில் செய்தி. இதுவே நம் விருப்பம் போல. வணிகச்செய்திகளில் இவ்வித செய்திகள் அலசப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ஊழல் என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) விவகாரத்தை விட, இந்த அளவு பெரிது. செய்திகளில் பேச்சுமூச்சு காணவில்லை! வெங்காய விலையை விட மிக அடிப்படை கச்சா எண்ணை விலை. பாமரருக்கும் ஊடகங்களுக்கு பொருளாதாரத்தை பற்றிய அறியாமையை இது காட்டுகிறது.

3டி அச்சு இயந்திரத்தால் மற்றுமொரு இயந்திர புரட்சி நடக்குமா என்றும் ஒரு முறை எழுதினேன். நடக்கலாம், நடக்க பல ஆண்டுகளாகும். ஆனால் இதுவரை பெரிதாக ஒன்றுமில்லை. ஷேல் புரட்சி சாலப்பெரிது.


தேசிய கம்பெனிகள் பெருமளவில் எண்ணை வைத்திருக்கலாம். ஆனால் எக்சான்மோபில் போன்ற தனியார் கம்பெனிகள் அவர்களுக்கு சமமாக சம்பாதிக்கின்றன. இதை மேட் ரிட்லி கட்டுரையில் சொல்லவில்லை. 

இருபதாண்டு ஆருடமெல்லாம் சந்தேகத்துக்கு உரியதே. இருபதாண்டுக்கு முன்னால் நிபுணர்கள் சொன்ன ஆருடங்களை பார்க்கவும். 

தோற்று பின்வாங்கும் நோய்கள் நற்செய்தி கட்டுரை எழுதினேன். பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் டெங்குவும் சிக்கன்குனியாவும் பெற்ற விளம்பரம் மருத்துவ முன்னேற்றங்களுக்கும் கிடைப்பதில்லை. நற்செய்தி மேல் ஓர் அலட்சணம் ஏன்?


தொடர்புடைய கட்டுரைகள்

Big Oil's Bigger Brothers - Economist article

செய்தி புதுமை பற்றி என் வலைப்பதிவுகள்

பொருளாதாரம் பற்றி என் வலைப்பதிவுகள் 

முன்னேற்ற சூனாமி மேட் ரிட்லி கட்டுரை - தமிழாக்கம்
உலக பொருளாதார வரலாறு - ஆலன் பீட்டி நூல் விமர்சனம்

No comments:

Post a Comment