Showing posts with label காவேரி. Show all posts
Showing posts with label காவேரி. Show all posts

Monday, 18 August 2025

கரிகாலச் சோழன் - முனைவர் சிங்கநெஞ்சம் அவர்களின் குறிப்புகள்


முனைவர் சிங்கநெஞ்சம் சம்பந்தம், புவியியல் துறையில் பணியாற்றி, சென்னைப் பிறிவில் தலைமை பதவி விகித்து ஓய்வு பெற்று, சுவையான பல தகவல்களை சேர்த்து, எளிமையான தமிழில் பல கட்டுரைகள் சமூக வலைதளங்களில் எழுதிவந்தார். வராகமிகிரன் அறிவியல் மன்றம் தொடங்கிய முதல் வருடம், நதிகள் வழிமாறும் வரலாறும், பல இடங்களில் கடல்  ஒரு காலம் பின்வாங்கியும்  ஒரு காலம் நிலத்தை விழுங்கியும் செய்யும் புவியியல் லீலைகளை பற்றி ஒரு உரை தருவதாக தானே முன்வந்தார். ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டோம். காணொளி மேலே.

திடீரென்று நோய்வாய்பட்டு அவரும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சில மணி நேரங்களில் இருவரும் இம்மை விலகி மறுமை எய்தினர். இருவரும் இறந்தபின் யாரோ முகநூலில் தகவல் பகிரும் போதுதான் அவர்கள் நோய்வாய்பட்ட செய்தியே அறிந்தேன். சிங்கநெஞ்சம் ஐயாவின் அகால மரணம் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பெரும் இழப்பு. 

அவ்வப்போது அவரு எழுதிய கட்டுரைகளை முகநூல் நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டுரையை (16 ஆகஸ்டு 2018 பதிவிட்டது) இங்கே பகிற்கிறேன். அனுமதி இன்றி பகிற்கிறேன். யாரிடம் அனுமதி கேட்கவேண்டும். முகநூலில் இல்லாத சில் ஆர்வலர்கள் படிக்கவும், அவருக்கு ஒரு அஞ்சலியாகவும் இதை இங்கே பகிற்கிறேன். கல்லணை படமும் அவர் பதிவிலிருந்து எடுத்தது, யார் எடுத்த படம் என்று அவர் குறிப்பிடவில்லை.

தலைப்பு ஒரு புறம் இருக்கட்டும், எவ்வளவு சிறப்பாக கரிகால சோழனை பற்றிய பல தகவல்களை பிற்கால பாடல்களிலிருந்து எடுத்து தொகுத்து வழங்கியுள்ளார்.

-----------------------------------------------------


கல்லணையைக் கட்டியது கரிகாலனா .....

அண்மையில் அன்பர் வீரமணி வீராசாமி அவர்கள் கரிகாலன் – கல்லணை பற்றி நாளிதழ் ஒன்றில் வந்த செய்திப் படத்தை பகிர்ந்திருந்தார் (காண்க: படம்) அதற்கு, பின்னூட்டம் ஒன்று அனுப்பியிருந்தேன். தொடர்ந்து, இது குறித்து விரிவாக எழுதும்படி நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
பலமுறை படித்தாயிற்று, பட்டினப்பாலையிலும் , புறநானூற்றிலும் கரிகாலன் கல்லணையைக் கட்டியதாக செய்தியில்லை .
சில வாரங்களுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில் மடலாடிக் கொண்டிருந்தோம். அப்போது தேமொழி அவர்கள், தஞ்சை கரந்தைத் தமிழ் சங்கத்தின் திங்கள் வெளியீடான “ தமிழ்ப் பொழில்“( தாது ஆண்டு ,1936-37, 12 ஆவது) இதழில் கல்லணையைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கூறி, சுட்டியையும் இணைத்திருந்தார். அவருக்கு நன்றி.
இந்த இதழில் “வல்வடுகு நான்கு” எனும் கட்டுரையில், ‘திரு கே. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், 'அச்சுதப்ப நாயக்கர்’செய்த நற்பணிகளைப் பற்றி எழுதும் போது கல்லணையைப் பற்றி குறிபிடுகிறார். . மாற்றம் அதிகம் செய்யாமல் அதை அப்படியே கீழே இணைக்கிறேன்
"செல்லார் பணியும் செம்பியர்கோன்
செழுங்கா விரியின் சிறந்தகரை
கல்லால் அணைகட் டுதற்கேவு
கருமம் முடித்த சோழியர்கள்
பல்லார் மேழி நெடுங்கொடியைப்
பாயும் புலியி னொடுபதித்த
வல்லாண் மையினார் குடிவாழ்வு
வளம்சேர் சோழ மண்டலமே" 41
(இந்தப் பாடல் சோழ மண்டல சதகத்தில் உள்ளது.)
கரிகால் வளவன் காவேரிக்குக் கரை கட்டும்போது சோழியர் மிகவும் உதவினர். கரிகாலன் ஏவலால் கல்லணை கட்டியவர்கள். சோழிய வேளாளர்கள் தங்கள் மேழிக் கொடியைச் சோழர்தம் புலிக் கொடியுடன் இணையாக வைத்தவர்கள்.
கரிகாலன் காவிரியில் கரையையே கல்லால் கட்டுவித்தான்; அணை கட்டவில்லை என்றும் கூறுவர். இப்பாடலிலும் கரை கட்டியதையே கல்லணை என்று கூறப்படுகிறது.
இனி,
"தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில்
மிக்க கரிகால வேந்தனுந்தான் - பக்கம்
அலைக்கும் புனல்பொன்னி ஆறுகரை இட்டான்
மலைக்கும் புயத்தானும் வந்து"
என்பது பழம்பாடல். இதன்படி கி.மு. 11-இல் கரைகட்டிய செய்தி புலப்படுகிறது. முதல் அடிக்கு ‘தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றில்’ என்ற பாடபேதமும் உண்டு (பெருந்தொகை - 778) அதன்படி காலம் கி.பி. 1068 ஆகிறது.
இந்தப் பாடலுக்கு
"- பக்கம்
அலைக்கும் புனற்பொன்னி ஆற்றணையை
இட்டான்
மலைக்கும் கொடைக் கரத்தான் வந்து"
எனும் பாட பேதமும் உண்டு.
தொடர்ந்து, 'மூவர் உலா', ' பரணி' போன்ற இலக்கியங்களிளிளிருந்து பாடல் வரிகளைத் தருகிறேன்.
"அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
கஞ்சி காவேரிக் கரைகண்டு – தஞ்சையிலே
எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து"
என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779).
"உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்
எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை"
என்பதும் ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 2154).
கரிகாலனைப்
"பொன்னிக் கரைகண்ட பூபதி"
என்று விக்கிரம சோழன் உலாவும் [13]
"மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்"
என்று குலோத்துங்க சோழன் உலாவும் [18]
"தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
என்று கலிங்கத்துப் பரணியும்" (இராசபாரம்பரியம் 20)
"ஈரருகும்
எண்கரை செய்யாது எறிதிரைக் காவிரிக்குத்
தண்கரை செய்த தராபதி"
என்று சங்கர ராசேந்திர சோழன் உலாவும் [13] கூறுகின்றன.
கரைகட்ட ஈழத்திலிருந்து பிடித்து வந்த கைதிகளைப் பயன்படுத்தினான் என்பர்.( தமிழ் இணையப் பல்கலைகழகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை )
இதுகாறும் கண்ட பாடல்கள் , கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியை சொல்கின்றனவே தவிர, ஆற்றின் குறுக்கே நீரை மறித்து அணை கட்டிய செய்தியை சொல்லவில்லை.
(தொடர்வோம்)


Sunday, 29 July 2018

தாலாட்டும் காவேரி

படம் - சண்முகப்ரியா 
கண்ணுக்கினிய காவிரி நீலச்சேலை பூண்டு நிலமளந்து பாய திருச்சி மலைக்கோட்டை மேலே வீற்றிருக்கும் கங்காதரனும் தாயுமானவரும் உச்சிப்பிள்ளையாரும் காணும் இந்த படம் இணைத்தில், சில நாட்களாக பரவி வருகிறது. நான் முதலில் பார்த்தது சண்முகப்ரியா வெங்கட் பகிர்ந்த படம். நேற்று முகநூலில் ஜடாயு ஏதோ ஒரு ஆற்றங்கரையில் பல பெண்கள் காவிரியை வணங்கும் காட்சியை பகிர்ந்தார். ரேவதி வெங்கட் உடனே ஒரு பாடலை பதிவிட்டார். உள்ளம் கொள்ளைக்கொண்ட இப்படம் இப்பாடலை எழுத தூண்டியது; நேற்று முகநூலில் பதிவிட்டேன்;  பல நண்பர்கள் பாடி பார்த்துவிட்டேன் என்று மகிழ்ந்து பின்பதிவிட்டார்கள்.
காவிரியை வணங்கும் பெண்கள் படம்- ஜடாயு
மலர்ந்து மணம்வீசும் சோலை பலகொண்ட பொன்னி நதி அன்னையே – தமிழ்
புலர்ந்து எழில்கொஞ்சும் சேலை வயல்பூண்டு சிலிர்த்த கலை அன்னமே

மலையில் விளையாடி கடலை மணம்சூட நடந்த இளந்தென்றலே - வளர்
குடகு மலை தோன்றி அரங்கன் நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

நாணல் செடி நாண நாடும் மடம் பழக பாயும் தாயல்லவா – நலம்
பேணும் பயிருயர அச்சம் தவிர்த்து வரும் புதுமை பெண்ணல்லவா

சங்க கவியாரம் சிலம்பு மணியாரம் தந்த புகழ் ஓங்குமே – உன
ங்க கரையிரண்டும் பொங்கும் கலையழகில் எங்கும் தமிழ் வீசுமே

அணைகள் அடைத்தாலும் ஆணை தடுத்தாலும் பிணைகள் உடைத்தோடுவாள்
சொல்லில் பொருள்போல அன்பில் அறம்போல அணைத்து தாலாட்டுவாள் 
காவேரி தாலாட்டுவாள்.


பரவலாக பகிரப்பட்டதால் மேலுள்ள படங்களை இங்கே சேர்த்துள்ளேன். எடுத்தவர்கள் யாராயிருப்பினும் இவ்வலைப்பூவிலிருந்து நீக்கச்சொன்னால் உடனே நீக்கிவிடுவேன்.

சலைவன்வாழ்த்துதிணை கமழும் உதகை வனம்

Saturday, 19 April 2014

நைல் நதியும் காவிரியும்


கோதுமை பயிரிட எகிப்தை சிறந்த நாடுண்டோ நிலமுண்டோ? மாபெரும் வான் மழை பெய்யா நாட்டினில், தான் பொய்யா நைல் நதியின் பாசன நிலமல்லவா எகிப்து? சோழனும் வளவனோ? ஃபாரோ அன்று ஒப்பில்லா வளவன்? பல்லாயிர ஆண்டாக வண்டல் மண்ணை வள்ளலாய் தந்து ஓங்கு சென்னெல் பெருக வழங்கிய வற்றா நதி நைலுக்கும் ஒப்புளதோ, அதன் புகழுக்கு பரிசுளதோ?

என்னே நைல் பாயும் மண்ணின் பசுமை? என்கொல் அதன் செழுமை? ஏரிழுக்க வேண்டாம், ஏர்பூட்டும் எருது வேண்டாம், தூவி தெளித்த நெல்லை  மிதித்து புதைக்க பன்றிக்கூட்டம் போதுமே உழவிற்கு. அருவடை செய்த பின், நெல்லையும் உமியையும் மிதித்து பிரிக்கும் அதே பன்றிக்கூட்டங்களை அகமகிழ்ந்து புகழ்ந்து பாடாத புலவர் உண்டோ?

அக்கம்பக்கத்து நகரங்களுக்கும் அண்டை நாட்டு மக்களுக்கும் சோறூட்டும் நெற்களஞ்சியம் எகிப்து.

சரி அது இருக்கட்டும். யார் ஐயா போயும் போயும் எகிப்தில் கோதுமை பயிரிடுவான்? ஜனத்தொகை பெரிது, பெருகி வழிகிறது. மழையில்லா நிலம். பாலை சூழ்ந்த அளவான நஞ்சை. வெள்ளத்தை நம்பும் வேளான்மை. குடிக்கவே நீருக்கு கவலை, இதில் உழவும் ஒரு கேடா? அதுவும் போயும் போயும் கோதுமை – தாகமுள்ள பயிர், பெரிதாய் விலை போகாத பயிர். தூர தூர நாடுகளிலிருந்து பெருங்கடல்களை தாண்டி அள்ளி பணங்கொடுத்து நெல்லை வாங்கும் நாடல்லவா எகிப்து? புலவன் கிடக்கான், வெண்டைக்காய். லாரி ஓட நல்ல சாலை உண்டா, நெல் அரைக்க மில் எத்தனை?

நாடும் நதியும் ஒன்றே, நாளும் நிலைமையும் மாறிவிட்டன. காலத்தின் கோலத்தால், தொழில்நுட்ப பெருவளர்ச்சியால், வணிகத்தின் விரிதலால், இம்மாற்றங்கள் வந்துள்ளன. பன்றி மிதித்து உழுததும் உமிபிரித்ததும், கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்று பிதாமகன் ஹெரடாடஸ் எழுதியது. மூவாயிர ஆண்டு ஃபாரோ ஆட்சியிலும் அலெக்ஸாண்டர் ஜூலியஸ் சீஸர் நிறுவிய கிரேக்க ரோமானிய ஆட்சியிலும், மெடிட்டரேனிய கடல் சூழ்ந்த நாடுகளுக்கு எகிப்தே பெரிய நெற்களஞ்சியம். பாய்மரக் கப்பலும், எருது இழுத்து ஏர் உழவும் கோலோச்சிய காலம்.

இன்றோ ருஷியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கப்பல் நெல்சுமந்து எகிப்தில் இறக்குகின்றன. மக்கள் என்னவோ அதே ஃபாரோ காலத்து ரொட்டியை தான் சமைத்து உண்ணுகின்றனர்.

என்ன வேற்றுமை? மெடிட்டரேனிய நாடுகளில் எகிப்து நீர்வள நாடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் பட்டியலில் அதன் நீர்வளம் குறைவே. எகிப்திலிருந்து சீஸர் காலத்து ரோமாபுரி நெல் இறக்குமதி செய்ததுபோல் இன்று மற்ற நாடுகளிலிருந்து எகிப்து நெல் இறக்குமதி செய்கிறது. நெல்லை மட்டுமல்ல, நீரையும் இறக்குமதி செய்கிறது. எப்படி? கப்பலில் நீர் வரவில்லை. ஆனால் வாங்கும் நெல்லுக்கு பாய்ச்சிய நீர், நெல் வளர்த்த நாடுகளில் அல்லவா பாய்ந்தது? சத்தமின்றி, யுத்தமின்றி, ஒப்பந்தமின்றி, உரத்தை மலிவாய் தரும் அரசின்றி, கொள்முதல் செய்யும் மண்டியின்றி, இதில் பங்கு திருடும் அரசியல்வாதியும் அதிகாரியும் தொழில் சங்கத்தலைவரும் இன்றி, வணிகத்தால் நெல் வளம் காண்கிறது எகிப்து.
காவேரி கதை எப்படி?


நூல் குறிப்பு ஆலன் பீட்டி (Alan Beattie - Twitter:@alanbeattie) எழுதிய False Economy (பொருளாதார முறைகேடு) என்ற நூலின் மூன்றாம் காண்டத்தின் மொழிபெயர்ப்பு இந்த கட்டுரை. நூலை வாங்கினால் இந்த காண்டத்தை முதலில் படிக்கவும், முதல் இரண்டு காண்டங்கள் பொருளாதாரமும் வரலாறும் அறியாதவர்களுக்கு அவை கடினமாக இருக்கலாம். நவீன பொருளாதாரத்தின் ஒன்பது முக்கிய அம்சங்களை எடுத்துக்கொண்டு, அற்புதமாய் உதாரணங்களுடனும் சம்பவங்களுடனும் ஆர்வமுள்ள பாமரருக்கு புரியும்படி எழுதியுள்ளார்.