Saturday 6 January 2018

மங்காது தமிழ் காத்த மரபினர்க்கு அடியேன்


காற்றில் கரையும் பேச்சு மொழியில் தொடங்கிய மொழிகள், கவிதை வடிவில் வந்தபின் இலக்கியமாய் தோன்றின. கர்ணப்பரம்பரை என்னும் செவிவழி மரபில் பற்பல மொழிகளில் இவை தொடர்ந்தன. சில செய்யுள்களும் கதைகளும் மட்டுமே காலத்தில் நிற்பவை. ஆராயிரம் மொழிகள் இன்று பேச்சு வழக்கிலிருப்பதாக மொழியியலார் கணிப்பு. அதில் சில நூறு மொழிகளுக்கே எழுத்துள்ளன. தொன்மையான இலக்கியம் உள்ள வெகு சில மொழிகளில் தமிழும் ஒன்று.

ஓலைச்சுவடியிலும் துணியலும் பின்னர் செப்பேட்டிலும் பாறையிலும் எழுத்துள்ள தமிழ் மொழியின் இலக்கியங்கள், இருநூறு ஆண்டுகளுக்கு முன் காகித அச்சிலும் (கி.பி.1812 எல்லிஸ் மொழிபெயர்த்த திருக்குறள் காகித அச்சில் வந்த முதல் தொல்லிலக்கியம் என நினைக்கிறேன்). முப்பது ஆண்டுகளுக்கு முன் கணினி என்னும் கம்ப்யூட்டரிலும் தமிழ் எழுத மென்பொருள் உருவாகின. பிறகு இணையத்தில் தமிழ் இலக்கியங்கள் ஏற்றப்பட்டன. ப்ராஜக்ட் மதுரை, விக்கிப்பீடியா, தமிழ் இணைய கல்விக்கழகம்  திராவிட வேதா, தேவாரம் போன்ற இணைய தளங்கள் பண்டாரங்கள், நூலகங்கள், செய்த பணியை தொடர்ந்து வருகின்றன. வரும் பொங்கல் திருநாள் ப்ராஜக்ட் மதுரையின் இருபதாம் ஆண்டு கொண்டாடவுள்ளது என முகநூலில் நேற்று கு.கல்யாணசுந்தரம் தெரிவித்தார். 

அவர்களுக்கும், அதைப்போன்ற மற்றவர்களின் தொண்டையும் பணிந்து பாராட்டி நான் எழுதிய செய்யுள்.


சங்க தமிழ் செய்த புலவர்க்கும் அடியேன் 
மங்காது அவை காத்த மரபினர்க்கும் அடியேன் 
எச்சமயத் தமிழ் குரவர் அடியார்க்கும் அடியேன் 
இச்சமயம் கற்றுகளும் மாணவர்க்கும் அடியேன்
செப்போலை கற்பொறித்த செந்தமிழர்க் கடியேன் 
ஒப்பில்லா மேகன்சீ சாமிநாதற் கடியேன் 
அணையா சுடர்காக்கும் அன்பர்க்கும் அடியேன் 
இணையவலை தமிழேற்றும் பணியார்க்கும் அடியேன்

7 comments:

  1. மிக நன்று .

    "..கற்றுகளும்.." என்றால்?

    ReplyDelete
    Replies
    1. கற்றுகளும் = கற்று + உகளும்

      Delete
  2. Very nice. Especially after hearing u recite it - it's a double whammy to read it, in context.

    ReplyDelete