Showing posts with label உழவு. Show all posts
Showing posts with label உழவு. Show all posts

Thursday, 7 March 2019

Index of agriculture essays உழவு கட்டுரைகள்


உழவு கட்டுரைகள்


என் வலைப்பூ - பொருளடக்கம்
Contents Page for my Blog, grouped by Subject


Tuesday, 7 November 2017

தொண்டை மண்டல காணி ஆட்சி – ஔவை பாடலும் இரட்டைப்புலவர் பாடலும்

பாணியிற்கங்கைநதி மலையினிற்கயிலைமலை  பாரழகினிற்றண்டகம்
பழமொழியிலௌவைசொல் லரசரிற்சேரமான் பத்தியிற்சிறியதொண்டன்
காணியிற்றொண்டையாம் புகழில்வேளாளர்புகழ் கான்முளையினிற்பகீரதன்

இரட்டை புலவர்கள் இயற்றிய ஏகாம்பரேசுவர பதிகம் என்னும் நூலில் இந்த பாடல் இடம்பெறுகிறது. மிராசு  உரிமைகளை கி.பி. 1806ல் பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ராஜதானி அரசின் பதினேழு கேள்விகளை எழுப்ப, பதிலளித்து ஒரு அறிக்கையை முன்சிரஸ்தாதார் சங்கரய்யன். அதை 1814ல் கலெக்டர் பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார் (ரிப்ளை). 1804ல் கர்ணல் பிளாக்பர்ண் எழுதிய ஒரு கட்டுரையும் (ரிப்போர்ட்),1822ல் மதறாஸ் ஆளுனர் தாமஸ் மன்றோ எழுதிய சிற்றறிக்கையும் (மினிட்), எல்லிஸ் எழுதிய அறிக்கையோடு இணைத்து “மிராசி உரிமையின் மூன்று ஆய்வுரைகள்” (Three Treatises on Mirasi Rights) என்ற தலைப்பில், சார்ல்ஸ் பிலிப் பிரௌண் (Philip Brown)1852ல் ஒரே புத்தகமாக தொகுத்து பதிவிட்டார்.

1. எ ரெப்ளை டு த ஃபர்ஸ்ட் செவண்டீன் குவெஸ்டின்ஸ் (A Reply to the First Seventeen Questions)
2. ரிப்போர்ட் ஆன் மிராஸி ரைட் பை மேஜர் பிளாக்பர்ண், ரெசிடண்ட் அட் டாஞ்ஜூர் கோர்ட் (Report on Mirasi Right by Major Blackburn, Resident at Tanjore Court)
3. மினிட் ஆன் மிராஸி ரைட்ஸ் பை கவர்னர் தாமஸ் மன்றோ (Minute on Mirasi Rights by Governor Thomas Munro)

மேலுள்ள பாடலை பதம் பிரிப்போம்.

எல்லிஸ் தன் கட்டுரையோடு சில சோழ, விஜயநகர, ஆங்கிலேய கால தமிழ் தெலுங்கு கன்னட் சம்ஸ்கிருத கல்வெட்டுகளையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளையும் இணைத்தார். இவ்விணைப்பின் முன்னுரை பத்தியில் இந்த இரட்டைப்புலவர் பாடலை மேற்கோள் காட்டினார். கீழே பதம்  பிரித்துள்ளேன்.

பாணியில் கங்கை நதி மலையினில் கயிலை மலை  பார் அழகினில் தண்டகம்
பழமொழியில் ஔவை சொல் அரசரிற் சேரமான் பத்தியில் சிறிய தொண்டன்
காணியில் தொண்டையாம் புகழில் வேளாளர் புகழ் கால் முளையினில் பகீரதன்

நதிகளில் கங்கையும் மலைகளில் கயிலையும் மற்றவையும் கவிநயம். அதென்ன காணியில் தொண்டை? மிராசு என்பது பாரசீக சொல். இஸ்லாமிய நவாபுகளின் ஆட்சியில் தமிழகத்தில் அன்று வரை நிலவிய காணியாட்சி என்ற சொல்லின் இடத்தை பற்றியது. மிராசு உரிமை என்று தலைப்பிட்டு நூலை அச்சிட்டாலும், சங்கரையனின் பதில்களும் எல்லிஸின் அறிக்கையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சட்ட நூல்களும் பேசும் காணி ஆட்சியையே ஆய்ந்து பேசுகின்றன.

ஊரிலேன் காணியில்லைஎன்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரமும், “காணிநிலம் வேண்டும்” என்று தொடங்கும் சுப்பிரமணிய பாரதி பாடலும் பலருக்கு தெரியும். தேசம், மண்டலம், கோட்டம், நாடு, ஊர், காணி என்பவை சோழர் காலத்து நிலப்பிறிவுகள். இஸ்லாமியார் ஆட்சியில் ஜில்லா, தாலுகா, ஜமீன் போன்ற சொற்களும் ஆங்கிலேயர் ஆட்சியில் பிரஸிடென்ஸி (ராஜதானி), டிஸ்ட்ரிக்ட் (ஜில்லா), டௌன் (ஊர்), வில்லேஜ்(கிராமம்), முனிசிப்பாலிடி போன்ற சொற்களும் புழங்கின. கிட்டத்தட்ட இச்சொற்களே இன்றும் வழக்குப்பெற்றுள்ளன.

இரட்டைப்புலவரின் உவமைகள்
இரட்டைப்புலவரின் இப்பாடலில் சில விசித்திர சொற்களை காணலாம். கால்முளையில் பகீரதன் என்பர். கால்முளை என்ற சொல் எனக்கு புதிது. சென்னையில் பிறந்து ஆங்கில வழிமுறையில் பள்ளி கல்வி பயின்ற எனக்கும் என்போன்ற பலருக்கும், தமிழில் இன்றும் நிலவும் பல சொல்வழக்கங்கள் பலவும் புதிதே. கால்முளை என்ற சொல் சங்க இலக்கியம் தொட்டு நிலவுகிறது. நற்றிணையில் “விளையாடு ஆயமெனும்” எனத்தொடங்கும் 172வது பாடலிலும்  பதிற்றுப்பத்தில் “எடுத்தேறேய கடிப்புடை அதிரும்” எனத்தொடங்கும் 84வது பாடலிலும் உள்ள சொல். செடிகளின் வம்சாவளியை குறிப்பதை இங்கே பகீரதனுக்கு புகழ் சேர்க்கும் சொல்லாக அமைந்துள்ளது.

பக்தியில் சிறியதொண்டன் என்று நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியை உவமைக்கு வைத்ததும் சாலத்தகும். ஆனால அரசரில் சேரமான் என்றும் சொல்லாடல். ஏன்? இரட்டைப்புலவர் காலத்தில் சோழர் பாண்டியர் எல்லாம் வீழ்ந்துவிட்டனர். அவர்கள் வரபதியாட்கொண்டார் என்ற சேர மன்னனிடம் பரிசு பெற்றனராம். நன்றியோ?

பார் அழகினில் தண்டகம் என்பதை, தண்டகமே தொண்டைமண்டலம் என்று எல்லீசன் தவறாக மொழிப்பெயர்த்துள்ளார் என்பது என் ஐயம். இது இராமாயணத்தில் வரும் தண்டகாராண்யம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தொண்டை நாடு இருபத்தி நான்கு கோட்டங்களாகவும், அக்கோட்டங்கள் எழுபத்தி ஒன்பது நாடுகளாகவும் பிரிந்துள்ளதை, அன்றைய காஞ்சி ஞானப்பிரகாச மடத்தில் கிடைத்த தகவலாக எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம், அதில் தண்டகம், மாகரல், கோனேரி என மூன்று நாடுகள் அடங்குமாம். ஒருவேளை அந்த தண்டகமோ?

மேலும் திருக்கழுக்குண்ற புராணத்திலிருந்து ஒரு செய்யுளை சுட்டி, அதில் தொண்டை மண்டலத்தை தண்டக வேந்தன் ஆண்டதால் தண்டக நாடு என பெயர்கொண்டதாகவும், பின்னர் சோழ மரபில் தோன்றிய தொண்டைமான் ஆண்டதால் தொண்டை நாடானது எல்லீசன் கூறுகிறான். ஒருவேளை, இதனால் இரட்டைப்புலவர் குறித்த தண்டகம் தொண்டைநாடே எனும் எல்லீசனின் கருத்து சரியாக இருக்கலாம்.


ஔவையின் பாடல் 

ஔவையாரின் இந்த புகழ் வாய்ந்த பாடலை ஆய்வோம்.

வேழம் உடைத்து மலைநாடு மேதக்க
சோழ வள நாடு சோறுடைத்து – பூழியூர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து


தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு
காவிரியால் சோழ நாடு வளமுற்றது. தொண்டை நாட்டில் பாலாறு ஓடினாலும், மழையில்லா காலத்தில், ஔவை சொன்ன வயல்களுக்கு தெண்ணீர் ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் தாங்கல்களிலிருந்தும் பாய்ந்தது. தொண்டை மண்டலத்து ஒரு வருடத் நீர் தேவைக்கு ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழையை பெரும்பான்மையாக நம்பவேண்டும். அந்த மழைநீரை சேமிக்க எழுந்த ஏரி குளம் கண்மாய்களின் மகிமையும், அவற்றை அளக்கவும் ஆளவும் கையாண்ட முறைகளும், நிலத்தின் விளைச்சலை அரசும், குடியும் பங்கிடும் சமூக சட்டங்களே காணியாட்சி. பாரதம் முழுதும் காணியாட்சி வெவ்வேறு பெயர்களில் முறைகளில் நடந்தாலும், தொண்டை மண்டலத்து காணி மிகச்சிறந்தது என்று இரட்டை புலவர்கள் கருதியுள்ளனர். அதனால் காணியில் தொண்டை என்று சிறந்த உவமைகளை குவித்து புகழ்ந்துள்ளனர். மன்னரையும் சமயக்குறவரையும் புலவரையும் மட்டுமே பாடும் தமிழகத்தில், புகழில் வேளாளர் புகழ் என்ற வாழ்த்தே அற்புதம். அதி அற்புதமோ?  அவ்வேளாளரின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் இன்றி, காணியாட்சி சீராக நடக்க வாய்ப்பில்லை.

தொண்டை மண்டலத்து சான்றோரை புகழ்வதே ஔவையின் சித்தமாயினும், அச்சான்றோரும் அவரை பேணும் சமூகமும் நம்பிய வயல்களை குறிக்காமல் விட ஔவைக்கு மனமில்லை. இரட்டைப்புலவரின் செய்யுளில் பழமொழியில் ஔவைசொல் என்ற கருத்து சாலத்தகும்.

காணியாட்சி – ஆராய்ச்சி களம்
காணியாட்சியை விவரித்த எல்லீசனின் பரிந்துரைகளை சில காலம் ஆங்கிலேயர் ஏற்றாலும், எல்லீசன் மறைந்த பின் மதறாஸ் கவர்னராக பதிவியேற்ற தாமஸ் மன்றோ, காணியாட்சியை அதன் வழிமுறைகளையும் எல்லீசன் தவறாக புரிந்துகொண்டதாக கருதினார். மன்றோவின் கருத்துகள் அவரது சிற்றறிக்கை (மினிட்). இவற்றை நான் படித்து வருகிறேன். மெக்காலேயின் 1835 சிற்றறிக்கையால் (அதுவும் ஒரு மினிட்) இந்திய கல்விமுறையும் சட்டமுறையும் மாறியது போல், மன்றோவின் சிற்றறிக்கையால்  தமிழக காணியாட்சி அபாரமாக மாறியது. இதை யாராவது அராய்ந்துள்ளனரா என்று தெரியவில்லை. சங்கரையனின் அகால மரணமும், எல்லீசனின் அகால மரணமும் தமிழக்த்திற்கும் பாரதத்திற்கும் மாபெரும் இழப்புகள். ஒரு யுகத்தின் முடிவு.

மன்றோவின் பரிந்துரைகளை பற்றியும் காணி முறைகளை பற்றியும் தனியாக ஆராயவேண்டும், எழுதவேண்டும். பரம்பரை வேளாளர் ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அதிலும் பொருளாதாரமும், இந்திய சட்ட நூல்களும், கற்றவர் செய்யவேண்டும்.

என் கட்டுரைகள்
1.    உழவு
b.    டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி 
c.    நார்மன் போர்லாக் – வரப்புயர்த்திய வல்லவன் 
d.    உழவர் தற்கொலை – சுவாமினாதன் ஐயர் கட்டுரை 
e.    வான்மழை பொய்ப்பினும் – சுவாமினாதன் ஐயர் கட்டுரை  
2.    எல்லீசன்
a.    ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு 
c.    எல்லீசனின் தமிழ் சம்ஸ்கிருத கவிதை 

Thursday, 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

Thursday, 21 May 2015

உழவர் தற்கொலை

சுவாமிநாத ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பொருளியல் கட்டுரைகளை எழுதிவருபவர். இடதுசாரி எண்ணங்கள் பரவலாயுள்ள இந்திய நாளிதழ் சூழலில் தெளிவாக வலதுசாரி சிந்தனைகளை முன்வைப்பவர். பல வருடங்களாக இவரை படித்து வருகிறேன். பொருளியல் பார்வையில் சமூகத்தை அலசி, புதிதாக பல தகவல்களை சொல்வார். இந்தியாவில் இது செவிடன் காதில் சங்கு ஊதும் பிழைப்பு. இந்த கட்டுரை பிடித்ததாலும், உழவர் தற்கொலைகளை பற்றி புலம்பல்களே அதிகம் இருப்பதாலும், நான் இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பகிர்கிறேன். இதன் ஆங்கில மூலம் இங்கே

Friday, 15 November 2013

டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி


கிமு 1900 இல் உலக ஜனத்தொகை 200 கோடியை எட்டியது. அங்கும் இங்கும் அவ்வபொழுது பஞ்சம் நிலவியது. காளையும் குதிரையும் ஏரில் பூட்டியே விவசாயமே யதார்த்தம். இதற்கு ஜப்பான் நாடு விதிவிலக்கு – 1940கள் வரை, அன்னாட்டில் மனிதர்களே ஏர் இழுத்து உழுதனர். ஏனெனில், ஜப்பானின் ஜனத்தொகை அதிகம் நஞ்சை நிலம் குறைவு. மாட்டுக்கும் தீனி போடும் அளவு நெல் வளர்க்க நிலம் போதவில்லை.

1880க்களில் ஜர்மனியில் ருடால்ஃப் டீஸல், நிக்கலோஸ் ஆட்டோ, கார்ள் பென்ஸ் ஆகியோர் டீஸல் பெட்ரோல் எஞ்ஜின்களை உருவாக்கினர். டீஸல் இஞ்ஜின் பொருத்தி டிராக்டர், ஹார்வஸ்டர், புல்டோஸர் போன்ற விவசாய துறைக்கு ஏற்ற வண்டிகள் வந்தன. காளைகளும் குதிரைகளும் ஏரிழுக்கும் காலம் தேய்ந்தது. போக்குவரத்து வண்டிகளான மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் வேகமாக மறைந்து கார்களும் பஸ்களும் லாரிகளும் பறவின. பொது போக்குவரத்தில் கரிப்புகை ரயில்வண்டியை விட இவையே பெரும் புரட்சி செய்தன.

நாம் அரிசியும் கோதுமையும் சோளமும் கம்பும் காய்கறிகளும் மனிதருக்கு வளர்க்கும் உணவாகவும், வைக்கோலும் புல்லுமே கால்நடை விலங்குகளின் உணவாக நினைக்கிறோம். ஆனால் கால்நடைகளுக்கு புல் வளர்க்க எத்தனை நிலம் வேண்டியிருக்கும்? அன்றைய ஜனத்தொகையான 200 கோடியில் எத்தனை நபருக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்தன? 700 கோடி மக்களுக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தேவை பட்டால் அந்த மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் எத்தனை புல்லும் நெல்லும் வேண்டும்? அதற்கு எவ்வளவு நிலம் வேண்டும்? டீசல் பெட்ரோல் இஞ்ஜின் வாகனங்கள் வந்த பின் கோடிக்கணக்கான மாடுகளும் குதிரைகளும் தேவையற்று போயின. அவற்றிர்கு உணவு வளர்க்க தேவையான நிலமும் குறைந்தது. விளைநிலங்களின் வளர்ந்த உணவுகளில் மூன்றில் இரண்டு பகுதி கால்நடைகளுக்கு வேண்டியிருந்தன, என்கிறார் மாட் ரிட்லி, ’The Rational Optimist’ புத்தகத்தில். [கேள்வி: ’The Rational Optimist’ என்பதை தமிழில் எப்படி மொழிப்பெயர்க்கலாம்?]

டிராக்டரும் லாரியும் ஹார்வஸ்டரும் உழவை நேரடியாக மாற்றின. அதாவது கால்நடைகளால் உழ இயலும் நில அளவை பெருக்கின; உழும் வேகத்தை அதிகரித்தன; அவற்றிர்க்கு செலவாகும் உணவு வளர்க்கும் நிலதின் அளவை மிகவும் குறைத்தன. இது உணவு தயாரிக்கும் முறையில் நடந்த பெரும் புரட்சி.

ஆனால் பஞ்சமும் பசியும் தீர படைக்கும் திறன் மட்டுமே போதாது. பஞ்சம் நிலவும் ஊர்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் பயிர் மிகுதி உள்ள இடங்களிலுருந்து பெரும் அளவில் கொண்டு வர வேண்டும். காரும் பஸ்ஸும் லாரியும் வந்ததால் உலகெங்கும் தார் சாலைகள் போடப்பட்டன. மாத கால பயணம் சில நாளளவிலும் நாளளவு பயணம் சில மணிநேரங்களிலும் குறைந்தது டீஸல் எஞ்ஜின்களால் தான். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒழிக்க டீஸல் எஞ்ஜின் இன்றி அரசுகளுக்கு திறன் இருக்காது.
நல்லெண்ணமோ அறியாமையோ, கார்களின் புகையிலும் நிலக்கரி மின்சார நிலையங்களாலும் சுற்றுச்சூழல் அழிந்தது ஐயோ ஐயோ என்று புலம்பும் ஆர்வலர்களும், ஓலத்தை பெரிதாக்கும் ஊடகங்களும் ஓயாத ஒப்பாரி பாடும் போது, இவை சொகுசுகள் மட்டுமல்ல, இவையின்றி பஞ்சமும் வருமையும் உலகில் கோலோச்சும் என்று நாம் உணர வேண்டும்.

ஹாபர்பாஷ் ரசாயன முறையும், நார்மன் போர்லாக்கின் பசுமை புரட்சியும் உழவு தொழிலை நேராக மாற்றின. ருடால்ஃப் டீசலும் நிக்கலாஸ் ஆட்டோவும் கார்ள் பென்ஸும், போக்குவரத்தை மட்டுமல்ல உழவையும் பிரம்மாண்டமாக மாற்றி புரட்சி செய்தனர். இதுவே நவீன உலகின் முதல் பசுமை புரட்சி என்றும் சொல்லலாம். பெரும் கல்லணைகளாலும் நீர் குழாய்களாலும் விவசாயம் பெருகியதை நான் மறக்கவில்லை. அவற்றின் பாதிப்பின் அளவு தெரியாததால், குறிக்காமல் விடுகிறேன்.



மாட் ரிட்லியின் புத்தகமும், இணையத்தில் அவரது உரைகளும், வச்லாவ் ஸ்மில், ஹுவான் எனிர்கே ஆகியோரின் உரைகளும் படித்தும் பார்த்தும் இக்கட்டுரை எழுதினேன். ஆங்கிலத்தில் இந்த கட்டுரை இங்கே.

Thursday, 12 September 2013

வரப்புயர்த்திய வல்லவன்

செப்டம்பர் 11, நியூ யார்க் நகர உலக வர்த்தக மைய கட்டிடங்கள் விமானங்களால் இடிந்து விழுந்ததற்காக உலகத்தாலும், சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளாக தமிழராலும், பூமிதான திட்டம் வகுத்து நடத்திய வினோபா பாவேவின் பிறந்த நாளா சிலராலும், விவேகாநந்தரின் சிகாகோ உரைக்காக சிலராலும் அனுசரிக்கப்படும்.

செப்டம்பர் 12, நார்மன் போர்லாக் என்ற விவசாய ஆய்வாளரின் நினைவு நாள். இவர் இறந்தது 2009 ஆம் ஆண்டு. இன்று இரவு (செப்டம்பர்) சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா பள்ளியில் வி.எஸ்.ஸ்ரீநிவாச சாஸ்த்திரியை பற்றி திரு.விப்ரநாராயணனின் உரைக்குப் பின், ரசாயன ஆசிரியர் மோகன், வினோபாவை பற்றி சிறு உரையாற்றினார். நாளை போர்லாக் நினைவு நாள் என்றேன். யார் அவர் என்றார். உலகில் பாமரர் மட்டுமன்றி அறிஞர் பலரும் சான்றோர் பலரும் போர்லாகை பெயர்கூட அறியார் என்று நம்பலாம்.

இளம் வயதில் போர்லாக்
யார் இந்த போர்லாக்? காந்தி மாவோ டெங் ஹிட்லர் சர்ச்சில் அடாடர்க் ஸ்டாலின் கோர்பாசெவ் அடேனார் ரூசவெல்ட் ரீகன் தாச்சர் போன்ற அரசியல் தலைவர்களை மிஞ்சி, ஐன்ஸ்டைன் ருதர்போர்ட் வாட்சன் பார்டீன் வான்நியூமன் ஃபார்ண்ஸ்வர்த் மார்ட்டின்கூப்பர் ஜாப்ஸ் ஸுகர்பர்க் பில்கேட்ஸ் போன்ற விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளை மிஞ்சி, கீன்ஸ் ஹாயக் ஃப்ரீட்மன் ஆகிய பொருளியல் வல்லுனர்களை மிஞ்சி, இருபதாம் நூற்றாண்டு மாமனிதராய், அருட்பெருஞ்சுடராய், சான்றோராய், உலகெலாம் ஓதற்கறியவராய், நான் நினைப்பவர் நார்மன் போர்லாக். நான் மட்டும் அல்ல…

“வரப்புயர” என்ற ஔவையின் காலம் கடந்த கவிதைக்கு தக்கதோர் தலைவன் இவனே.

பசுமை புரட்சியின் தந்தை.
நார்மன் போர்லாக்

“ஜனத்தொகை பேரபாயம்” என கற்றோரை கதிகலக்கும் ஒரு பூச்சாண்டி, இன்றும் உண்டு. உலக வெப்பமயமாக்கல் பூச்சாண்டியும், பொருளாதார சீரழிவு பூச்சாண்டியும், சில வருடங்களாக பெரிதாய் ஊதப்பட்டு, ஜனத்தொகை பூச்சாண்டி கொஞம் சோணியாகிவிட்டான். 1960களில் பஞ்சத்தால் இந்தியாவும் சீனாவும் பெரும் இன அழிவு காணும், மக்கள் கோடி கணக்கில் செத்து மடிவர், என்றெல்லாம், உலகமே மிரண்டு, அமெரிக்காவிலிருந்து இந்திரா காந்தி கையேந்தி கெஞ்ச கப்பல் கப்பலாய் கோதுமை மூட்டை வந்திறங்கி, ஒரு பெரும் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. என் தலைமுறை பிறந்தது; வாழ்கிறது. அன்று இருபது கோடிக்கு சோறில்லை என்று பெரும் பீதி. இன்று நூற்றி இருபது கோடி இந்தியருக்கும் நூற்றி நாற்பது கோடி சீனருக்கும் எந்த பஞ்ச பயமும் இல்லை.

எப்படி?

கோதுமை செடிகளுக்கு ரஸ்ட் என்று ஒரு வியாதி வரும். இரும்புக்கு வரும் துரு அல்ல; இது ஒரு வகை காளான். அதை அகற்ற ஆய்வு செய்தார் போர்லாக். ரஸ்ட் கிருமிகள் காற்றில் பரவின. ஜெட் விமானங்கள் அப்பொழுது இல்லை. ஆனால் உலகெங்கும் வீசும் அதிவேக ஜெட் காற்றில் ரஸ்ட் கிருமிகள் பரவுவதை அவர் ஆய்வு காட்டியது. அருவடை காலத்தில் இக்காற்றில் ஏறி ரஸ்ட் கிருமி உலகெங்கும் பரவி பெரும் பஞ்சம் செய்தது. பூச்சிகொல்லிகளால் மட்டும் இதை அழிக்கமுடியாது. வெவ்வேறு காலத்தில் அருவடைக்கு தயாராகும் கோதுமையை செயற்கையாக உருவாக்கி அருவடை கால இழப்பை பெரிதும் குறைத்தது போர்லாகின் முதல் வெற்றி. “இயற்கை விவசாயம், அந்த்கோ” என்மனார் ஊடகப்புலவர். “விவசாயம் என்பதே முழுக்க முழுக்க செயற்கை” என்று எதிர்த்துப் பேச ஒரு நக்கீரனையும் காணோம்.

ஆள் உயரம் வளர்ந்த நெல் கதிர்களில் ஒரு கையளவு நெல் இருக்கும். அதில் பாதி உயரம் வளரும் நெல்லில் இரண்டு கையளவு நெல் இருக்கும். ஒரே நிலத்தில் இருமடங்கு நெல் வளர்ந்தால் இரு மடங்கு மக்கள் உண்ணலாம். இது தான் போர்லாக் செய்த பசுமை புரட்சியின் அடிப்படை கணக்கு. இதற்கேற்ற குள்ள கோதுமையை செய்தது போர்லாகின் இரண்டாம் வெற்றி. ஆனால் மெக்ஸிகோவில் விஞ்ஞானத்திற்கு எட்டிய வெற்றி வயலுக்கு எட்டவில்லை. அங்குள்ள பல விவசாயிகளுக்கும் அரசிற்கும் போர்லாகின் விஞ்ஞானத்தின் மீது சந்தேகங்கள் பெரிதும் இருந்தன. (மரபணு பூச்சாண்டி காட்டி நகரத்தில் வாழும் நடுத்தர மக்களை மிரட்டுவது ஊடக மேதைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு. விஞ்ஞானம் கிலோ என்ன விலை என கேட்கும் கலையுலக ஜாம்பவான்களும் சமூக முன்னேற்ற வண்டு முருகர்களுக்கும் இது ஒவ்வா நன்மை.)

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் இங்கே தன் கோதுமையை பரிசோதித்தார். முதலில் மெக்ஸிகோவைப் போல இங்கும் பல தடைகளும் சவால்களும் இருந்தன. நெல்லுக்கு பிச்சை எடுக்கும் நிலையிலும் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளும் நிலையும் வந்ததாலும், சி சுப்ரமணியன் என்ற அமைச்சரின் ஆதரவாலும், இரு நாட்டின் பஞ்சாப் மாநில விவசாயிளின் வரவேற்பினாலும், அணைகள் கட்டியதால் தண்ணீர் வசதிகள் இருந்ததாலும், போதுமான செயற்கை எரு தயாரிக்க முடிந்ததாலும், மெக்ஸிகோவில் விதையா நெல், பருவத்தை மீறி பாரதத்தில் பழுத்தது. சில வருடங்களில் ஐஆர்20, ஐஆர் 8 போன்ற அரிசி வகைகளும் படைக்கப்பட்டு, அதற்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் நெல்மல்கும் நாடாய் மாறின. ஐஆர் என்பது International Rice Research Institute என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலெழுத்துக்கள். எம் எஸ் சுவாமிநாதன் தலைமையில் இந்தியாவில் இந்த ஆய்வுகள் நடந்தன.

1970 இல் நார்மன் போர்லாக் அமைதிக்கு நோபல் பரிசு பெற்றார். சி சுபரமணியன் பாரத் ரத்னா விருது பெற்றார். நார்மன் போர்லாகும் எம் எஸ் சுவாமிநாதனும் பத்ம விபூஷன் பெற்றனர். அவர் பிறந்த நாளான மார்ச் 25 இல் நான் என் முதல் வலைப்பதிவில் ஹாபர்-பாஷ் பற்றி எழுதினேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
நெல்லாண்ட வரப்புயர் போர்லாகே, நின் பணி செவ்வி திருகாப்பு.


திருத்தம் 28-3-2015

1. எம் எஸ் சுவாமிநாதன் பாரத் ரத்னா பெற்றதாக தவராக எழுதியிருந்தேன். அவர் பத்ம ஸ்ரீ, பத்ம் பூஷன், பத்ம் விபூஷன் பரிசுகள் பெற்றுள்ளார். 

2. இருபதாம் நூற்றாண்டில் நான்கு பசுமை புரட்சிகள் நடந்திருக்கின்றன என்பது என் கணிப்பு. அந்த வரிசையில் போர்லாகின் பசுமை புரட்சி நான்காம் புரட்சி. இவற்றுள் மூன்றை பற்றி எழுதியுள்ளேன் - சுட்டிகள் கீழே. பாசன புதுமைகளை நான்காவது புரட்சியாக கருதுகிறேன் - பெரும் அணைகட்டுகள், மின்சார பம்புகள், நெடுநீள கால்வாய்கள், சொட்டுநீர் பாசனம் போன்றவை இதனுள் அடங்கும். இதை பற்றி நான் எழுதவில்லை. ஆனால் பக்ரா நங்கல் போன்ற பெரும் அணை திட்டங்களும், அவற்றை ஜவஹர்லால் நேரு பாரதத்தின் புதிய கோவில்கள் என்று புகழ்ந்ததும் நாடறிந்தவை.



மற்ற பசுமை புரட்சிகள்

1. செயற்கை எரு - காற்றை கறந்து எரு படைத்த மேதையர் 
2. டீசல் வண்டிகள் - டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி

Thursday, 28 March 2013

காற்றை கறந்து எரு படைத்த மேதையர்



ஃபிரிட்ஸ் ஹாபர், கார்ல் பாஷ் என்ற இரு ஜெர்மானிய விஞ்ஞானிகள், முதல் உலகப் போரில், தங்கள் நாட்டுப்படைக்கு குளோரின் விஷ வாயு ஆயுதங்களை தயாரித்தனர். ஹாபரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டாள். பல்வேறு புதுப்புது வெடிகளையும் இவ்விருவர் படைத்தனர். இரண்டாம் உலகப்போரில், அடோல்ஃப் ஹிட்லரின் கட்டளையில், நிலக்கரியிலிருந்து லாரிகளுக்கும் டாங்கிகளுக்கும் விமானங்களுக்கும் பெட்ரோலையும் தயாரிக்க புதுமுறைகளை கண்டுபிடித்தனர்.

இவ்விருவரை பற்றி சென்ற ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இவர் இருவரும் என் மதிப்பிற்கும் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவராக கருதி, இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

ஏன்?

1900 ஆம் ஆண்டில் உலகின் ஜனத்தொகை 200 கோடி. நிகழும் 2013 ஆம் ஆண்டில் 700 கோடி. இந்த அதிசய இனப்பெருக்கம் எப்படி சாத்தியம்? உணவு பற்றாக்குறையால் பஞ்சம் வந்து ஏன் கோடிகள் சாகவில்லை? கடந்த இருநூறு ஆண்டுகளின் பஞ்சங்கள் யாவும் போர்களினாலோ, விநியோகத் தடைகளாலோ, நிர்வாக குறைகளாலோ உண்டானவை; உணவு பற்றாக்குறையால் அல்ல.

மனிதக்குலத்தின் உணவுகளில் எடையால் எண்பது சதவிகிதம் பன்னிரெண்டே செடி இனங்கள் மூலமாகும். இவை – அரிசி, கோதுமை, சோளம், பார்ளி, சோர்கம், சோயா, மானியோக், உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, சுகர்பீட், வாழை ஆகியவை. மானியோக் ஒரு ஆப்பிரிக்க கிழங்கு. தகுந்த மண்ணும், தருணத்தில் நீரும், தரமான உரமும் இப்பயிர்கட்குத் தேவை. உரத்தில் முக்கியம் நைட்ரோஜென். காற்று மண்டலத்தில் 80% நைட்ரோஜென் இருப்பினும், இதை இவ்வடிவில் உரிஞ்சும் திறன் செடிகளுக்கு இல்லை. மின்னல் அடித்து உறுவானதோ, மண்ணில் இயற்கையாய் உள்ள நைட்ரேட் உப்புகளிலுள்ள நைட்ரோஜெனோ, அல்லது சாணியிலும், அழுகும் இலைகளிலும் உள்ள நைட்ரோஜெனோ, ஒரு சில பருப்புகளிலிருந்தும் கிழங்குகளிலிருந்தும் வரும் நைட்ரோஜெனோ செடிகளுக்கு வேண்டும்.

இயற்கையில் கிடைக்கும் நைட்ரோஜென், விவசாய பயிரின் அளவை ஆளுகிறது. புஞ்சை நிலங்களையும், காடுகளையும், பாலைகளையும், கழனிகளாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டன. இதை தவிர, தென் அமெரிக்காவில், மலை மலையாய் குவிந்திறுந்த வௌவால் சாணியையும், பறவை சாணியையும், ஸால்ட்பீட்டர் என்ற உப்பையும், நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இறக்குமதி செய்தும், பயிரினங்களையும் உணவு உற்பத்தியையும் பெருக்கின. சீனம்கண் தேயிலையும் பட்டும் போல, பாரதம்கண் பங்சும் மிளகும் போல, தென்னமெரிக்கம்கண் சாணமும் எரு உப்பும் கப்பலேரின.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவை தீர்ந்துவிட்டன. நைட்ரொஜென் நலிவினால் பஞ்சம் படையெடுக்க மிரட்டியது. காற்றுமண்டல நைட்ரோஜெனை செயற்கை எருவாக மாற்ற புது கருவிகளும் தொழில்நுட்பமும் ஆலைகளும் தேவையாயின. இதைத்தான் ஹாபரும் பாஷும் ஆய்ந்து படைத்தனர். அம்மோனிய எருவும், அதை மாபெரும் அளவில் தயாரிக்க பிரமாண்ட ஆலகளையும், இவ்விருவர் உருவாக்கினர். இவர்கள் ஆய்ந்தளித்த தொழில்நுட்பத்திற்கு ஹாபர் பாஷ் முறை என்று பெயர்.

இதற்கு 1918 இல் ஹாபருக்கும், 1931 இல் பாஷுக்கும் ரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. முதலாம் உலகப்போரில் தம் படைகள் மேல் ஏவிய குளோரின் விஷவாயு ஆயுதங்களை படைத்த போர் குற்றத்திற்காக, ஹாபரை கைது செய்ய ஃபிரெஞ்சு அரசு தேடியது. அவர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். ஹாபருக்கு நோபல்குழு பரிசு வழங்கிய பின், ஃபிரெஞ்சு அரசு அவரை மன்னித்து, தேடலை கைவிட்டது. பிறகு சில ஆண்டுகள், ஆங்கில ஃபிரெஞ்சு அரசுகள் இந்த தொழில்நுட்பத்தை திருட பல முயற்சிகள் செய்தன. திருடும் வகை அம்முறை விஞ்ஞானிகளுக்கும் எளிமையாக இல்லை; ஈடற்ற பயனுள்ளதால் அழிக்கவும் மனம் வரவில்லை. இம்முறையால் படைகளுக்கு வெடிகளும் தயாராயின. செம்புலப்பெய்நீர் போல நன்மையும் தீமையும் கலந்தது ஹாபர்-பாஷ் முறை.

இன்று உலகின் நைட்ரொஜென் எரு யாவும் ஹாபர்-பாஷ் முறையில் தான் தயாராகின்றன. ஹாபர் பாஷ் என்றிரு மானிடர் வாழ்ந்ததும், ஆய்ந்தெடுத்த புதுமுறை மாட்சியும், ஆலையமைத்து ஞாலம் வளர்த்ததும், உணவிற்கும் வாழ்விற்கும் நன்றிக்கடன் பட்ட நானூறு கோடி மக்களில் யாவர் அறிந்தனர்? யாவர் அறிந்திலார்?

தாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Air  என்ற புத்தகத்தில் இதை தெரிந்துகொண்டேன்.

இப்புத்தகத்தை நீளமாகவும் ஆழமாகவும் விமரிசித்த பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே.