Showing posts with label ஔவை. Show all posts
Showing posts with label ஔவை. Show all posts

Tuesday, 7 November 2017

தொண்டை மண்டல காணி ஆட்சி – ஔவை பாடலும் இரட்டைப்புலவர் பாடலும்

பாணியிற்கங்கைநதி மலையினிற்கயிலைமலை  பாரழகினிற்றண்டகம்
பழமொழியிலௌவைசொல் லரசரிற்சேரமான் பத்தியிற்சிறியதொண்டன்
காணியிற்றொண்டையாம் புகழில்வேளாளர்புகழ் கான்முளையினிற்பகீரதன்

இரட்டை புலவர்கள் இயற்றிய ஏகாம்பரேசுவர பதிகம் என்னும் நூலில் இந்த பாடல் இடம்பெறுகிறது. மிராசு  உரிமைகளை கி.பி. 1806ல் பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ராஜதானி அரசின் பதினேழு கேள்விகளை எழுப்ப, பதிலளித்து ஒரு அறிக்கையை முன்சிரஸ்தாதார் சங்கரய்யன். அதை 1814ல் கலெக்டர் பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார் (ரிப்ளை). 1804ல் கர்ணல் பிளாக்பர்ண் எழுதிய ஒரு கட்டுரையும் (ரிப்போர்ட்),1822ல் மதறாஸ் ஆளுனர் தாமஸ் மன்றோ எழுதிய சிற்றறிக்கையும் (மினிட்), எல்லிஸ் எழுதிய அறிக்கையோடு இணைத்து “மிராசி உரிமையின் மூன்று ஆய்வுரைகள்” (Three Treatises on Mirasi Rights) என்ற தலைப்பில், சார்ல்ஸ் பிலிப் பிரௌண் (Philip Brown)1852ல் ஒரே புத்தகமாக தொகுத்து பதிவிட்டார்.

1. எ ரெப்ளை டு த ஃபர்ஸ்ட் செவண்டீன் குவெஸ்டின்ஸ் (A Reply to the First Seventeen Questions)
2. ரிப்போர்ட் ஆன் மிராஸி ரைட் பை மேஜர் பிளாக்பர்ண், ரெசிடண்ட் அட் டாஞ்ஜூர் கோர்ட் (Report on Mirasi Right by Major Blackburn, Resident at Tanjore Court)
3. மினிட் ஆன் மிராஸி ரைட்ஸ் பை கவர்னர் தாமஸ் மன்றோ (Minute on Mirasi Rights by Governor Thomas Munro)

மேலுள்ள பாடலை பதம் பிரிப்போம்.

எல்லிஸ் தன் கட்டுரையோடு சில சோழ, விஜயநகர, ஆங்கிலேய கால தமிழ் தெலுங்கு கன்னட் சம்ஸ்கிருத கல்வெட்டுகளையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளையும் இணைத்தார். இவ்விணைப்பின் முன்னுரை பத்தியில் இந்த இரட்டைப்புலவர் பாடலை மேற்கோள் காட்டினார். கீழே பதம்  பிரித்துள்ளேன்.

பாணியில் கங்கை நதி மலையினில் கயிலை மலை  பார் அழகினில் தண்டகம்
பழமொழியில் ஔவை சொல் அரசரிற் சேரமான் பத்தியில் சிறிய தொண்டன்
காணியில் தொண்டையாம் புகழில் வேளாளர் புகழ் கால் முளையினில் பகீரதன்

நதிகளில் கங்கையும் மலைகளில் கயிலையும் மற்றவையும் கவிநயம். அதென்ன காணியில் தொண்டை? மிராசு என்பது பாரசீக சொல். இஸ்லாமிய நவாபுகளின் ஆட்சியில் தமிழகத்தில் அன்று வரை நிலவிய காணியாட்சி என்ற சொல்லின் இடத்தை பற்றியது. மிராசு உரிமை என்று தலைப்பிட்டு நூலை அச்சிட்டாலும், சங்கரையனின் பதில்களும் எல்லிஸின் அறிக்கையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சட்ட நூல்களும் பேசும் காணி ஆட்சியையே ஆய்ந்து பேசுகின்றன.

ஊரிலேன் காணியில்லைஎன்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரமும், “காணிநிலம் வேண்டும்” என்று தொடங்கும் சுப்பிரமணிய பாரதி பாடலும் பலருக்கு தெரியும். தேசம், மண்டலம், கோட்டம், நாடு, ஊர், காணி என்பவை சோழர் காலத்து நிலப்பிறிவுகள். இஸ்லாமியார் ஆட்சியில் ஜில்லா, தாலுகா, ஜமீன் போன்ற சொற்களும் ஆங்கிலேயர் ஆட்சியில் பிரஸிடென்ஸி (ராஜதானி), டிஸ்ட்ரிக்ட் (ஜில்லா), டௌன் (ஊர்), வில்லேஜ்(கிராமம்), முனிசிப்பாலிடி போன்ற சொற்களும் புழங்கின. கிட்டத்தட்ட இச்சொற்களே இன்றும் வழக்குப்பெற்றுள்ளன.

இரட்டைப்புலவரின் உவமைகள்
இரட்டைப்புலவரின் இப்பாடலில் சில விசித்திர சொற்களை காணலாம். கால்முளையில் பகீரதன் என்பர். கால்முளை என்ற சொல் எனக்கு புதிது. சென்னையில் பிறந்து ஆங்கில வழிமுறையில் பள்ளி கல்வி பயின்ற எனக்கும் என்போன்ற பலருக்கும், தமிழில் இன்றும் நிலவும் பல சொல்வழக்கங்கள் பலவும் புதிதே. கால்முளை என்ற சொல் சங்க இலக்கியம் தொட்டு நிலவுகிறது. நற்றிணையில் “விளையாடு ஆயமெனும்” எனத்தொடங்கும் 172வது பாடலிலும்  பதிற்றுப்பத்தில் “எடுத்தேறேய கடிப்புடை அதிரும்” எனத்தொடங்கும் 84வது பாடலிலும் உள்ள சொல். செடிகளின் வம்சாவளியை குறிப்பதை இங்கே பகீரதனுக்கு புகழ் சேர்க்கும் சொல்லாக அமைந்துள்ளது.

பக்தியில் சிறியதொண்டன் என்று நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியை உவமைக்கு வைத்ததும் சாலத்தகும். ஆனால அரசரில் சேரமான் என்றும் சொல்லாடல். ஏன்? இரட்டைப்புலவர் காலத்தில் சோழர் பாண்டியர் எல்லாம் வீழ்ந்துவிட்டனர். அவர்கள் வரபதியாட்கொண்டார் என்ற சேர மன்னனிடம் பரிசு பெற்றனராம். நன்றியோ?

பார் அழகினில் தண்டகம் என்பதை, தண்டகமே தொண்டைமண்டலம் என்று எல்லீசன் தவறாக மொழிப்பெயர்த்துள்ளார் என்பது என் ஐயம். இது இராமாயணத்தில் வரும் தண்டகாராண்யம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தொண்டை நாடு இருபத்தி நான்கு கோட்டங்களாகவும், அக்கோட்டங்கள் எழுபத்தி ஒன்பது நாடுகளாகவும் பிரிந்துள்ளதை, அன்றைய காஞ்சி ஞானப்பிரகாச மடத்தில் கிடைத்த தகவலாக எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம், அதில் தண்டகம், மாகரல், கோனேரி என மூன்று நாடுகள் அடங்குமாம். ஒருவேளை அந்த தண்டகமோ?

மேலும் திருக்கழுக்குண்ற புராணத்திலிருந்து ஒரு செய்யுளை சுட்டி, அதில் தொண்டை மண்டலத்தை தண்டக வேந்தன் ஆண்டதால் தண்டக நாடு என பெயர்கொண்டதாகவும், பின்னர் சோழ மரபில் தோன்றிய தொண்டைமான் ஆண்டதால் தொண்டை நாடானது எல்லீசன் கூறுகிறான். ஒருவேளை, இதனால் இரட்டைப்புலவர் குறித்த தண்டகம் தொண்டைநாடே எனும் எல்லீசனின் கருத்து சரியாக இருக்கலாம்.


ஔவையின் பாடல் 

ஔவையாரின் இந்த புகழ் வாய்ந்த பாடலை ஆய்வோம்.

வேழம் உடைத்து மலைநாடு மேதக்க
சோழ வள நாடு சோறுடைத்து – பூழியூர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து


தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு
காவிரியால் சோழ நாடு வளமுற்றது. தொண்டை நாட்டில் பாலாறு ஓடினாலும், மழையில்லா காலத்தில், ஔவை சொன்ன வயல்களுக்கு தெண்ணீர் ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் தாங்கல்களிலிருந்தும் பாய்ந்தது. தொண்டை மண்டலத்து ஒரு வருடத் நீர் தேவைக்கு ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழையை பெரும்பான்மையாக நம்பவேண்டும். அந்த மழைநீரை சேமிக்க எழுந்த ஏரி குளம் கண்மாய்களின் மகிமையும், அவற்றை அளக்கவும் ஆளவும் கையாண்ட முறைகளும், நிலத்தின் விளைச்சலை அரசும், குடியும் பங்கிடும் சமூக சட்டங்களே காணியாட்சி. பாரதம் முழுதும் காணியாட்சி வெவ்வேறு பெயர்களில் முறைகளில் நடந்தாலும், தொண்டை மண்டலத்து காணி மிகச்சிறந்தது என்று இரட்டை புலவர்கள் கருதியுள்ளனர். அதனால் காணியில் தொண்டை என்று சிறந்த உவமைகளை குவித்து புகழ்ந்துள்ளனர். மன்னரையும் சமயக்குறவரையும் புலவரையும் மட்டுமே பாடும் தமிழகத்தில், புகழில் வேளாளர் புகழ் என்ற வாழ்த்தே அற்புதம். அதி அற்புதமோ?  அவ்வேளாளரின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் இன்றி, காணியாட்சி சீராக நடக்க வாய்ப்பில்லை.

தொண்டை மண்டலத்து சான்றோரை புகழ்வதே ஔவையின் சித்தமாயினும், அச்சான்றோரும் அவரை பேணும் சமூகமும் நம்பிய வயல்களை குறிக்காமல் விட ஔவைக்கு மனமில்லை. இரட்டைப்புலவரின் செய்யுளில் பழமொழியில் ஔவைசொல் என்ற கருத்து சாலத்தகும்.

காணியாட்சி – ஆராய்ச்சி களம்
காணியாட்சியை விவரித்த எல்லீசனின் பரிந்துரைகளை சில காலம் ஆங்கிலேயர் ஏற்றாலும், எல்லீசன் மறைந்த பின் மதறாஸ் கவர்னராக பதிவியேற்ற தாமஸ் மன்றோ, காணியாட்சியை அதன் வழிமுறைகளையும் எல்லீசன் தவறாக புரிந்துகொண்டதாக கருதினார். மன்றோவின் கருத்துகள் அவரது சிற்றறிக்கை (மினிட்). இவற்றை நான் படித்து வருகிறேன். மெக்காலேயின் 1835 சிற்றறிக்கையால் (அதுவும் ஒரு மினிட்) இந்திய கல்விமுறையும் சட்டமுறையும் மாறியது போல், மன்றோவின் சிற்றறிக்கையால்  தமிழக காணியாட்சி அபாரமாக மாறியது. இதை யாராவது அராய்ந்துள்ளனரா என்று தெரியவில்லை. சங்கரையனின் அகால மரணமும், எல்லீசனின் அகால மரணமும் தமிழக்த்திற்கும் பாரதத்திற்கும் மாபெரும் இழப்புகள். ஒரு யுகத்தின் முடிவு.

மன்றோவின் பரிந்துரைகளை பற்றியும் காணி முறைகளை பற்றியும் தனியாக ஆராயவேண்டும், எழுதவேண்டும். பரம்பரை வேளாளர் ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அதிலும் பொருளாதாரமும், இந்திய சட்ட நூல்களும், கற்றவர் செய்யவேண்டும்.

என் கட்டுரைகள்
1.    உழவு
b.    டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி 
c.    நார்மன் போர்லாக் – வரப்புயர்த்திய வல்லவன் 
d.    உழவர் தற்கொலை – சுவாமினாதன் ஐயர் கட்டுரை 
e.    வான்மழை பொய்ப்பினும் – சுவாமினாதன் ஐயர் கட்டுரை  
2.    எல்லீசன்
a.    ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு 
c.    எல்லீசனின் தமிழ் சம்ஸ்கிருத கவிதை 

Sunday, 27 December 2015

தமிழ் நாடக இசை


டி.கே.எஸ் கலைவாணன்  இசைக்குழுவினருடன்
இன்றைய கர்நாடக சங்கீதம் ஒரு சில இடங்களில் கச்சேரிகள் என்ற மிக குறுகிய ரசிகர் சமூகம் கொண்ட கலையாக சுருங்கி உள்ளது. நூற்றில் ஒரு சினிமா பாடலிலும், தொலைகாட்சி போட்டிகளிலும், ஒலித்து, ராகத்திற்கும் மெட்டிற்கும் வேற்றுமை தெரியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
சினிமா யுகம் தொடங்கும்முன் தமிழகத்தில் மேடை நாடகங்களும் தெருக்கூத்துக்களும் வெகுஜன கலைகளாக கோலோச்சின. ஐரோப்பியரின் நாடகங்கள் இந்திய நாடகங்களில் ஒரு புது யுகத்தை தொடங்கின. பல ஆங்கிலேய நாடகங்கள் தமிழில் உருமாறி வந்தன. ஆனால் வள்ளித்திருமணம், ராமாயணம், மகாபாரத கதைகள், திருவிளையாடல், பழைய புராண கதைகள், காளிதாசன் தெனாலி ராமன் போன்ற கதைகளையே மக்கள் பெரிதும் வரவேற்றனர். முக்கியமாக பாடல்களின்றி நாடகமில்லை என்ற காலம் நிலவியது. 1960கள் வரை நிலவிய இச்சூழ்நிலை இன்று மிகவும் மாறிவிட்டது. தெருக்கூத்தில் தொடர்ந்து வரும் பாடல்கள், தமிழக நகரங்களில் மேடை நாடகங்களில் இருப்பதில்லை. இருபதாண்டுகளாக மெகா தொடர்களே கோலோச்சுகின்றன.

நாடக இசை பாடல்களில் கர்நாடக சங்கீதமும் பரவலாக இருந்தது. கேபி சுந்தராம்பாள், எம் கே தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் மேடை நாடக உலகிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்களே. பாகவதர் சின்னப்பா காலத்தில் படத்திற்கு நாற்பது பாட்டு சாதாரணம். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் வசனமும் சண்டைகாட்சிகளும் முன்னுக்கு வந்து பாட்டு பின்சென்றது. பின்னணி பாடகர் உதயமானார்.

பழைய சினிமாக்களில் நாம் கேட்கும் பாடல்களுக்கும் பழைய நாடகங்களில் பாடப்பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும் ஏராளம். சென்னை சங்கீத சபைகளில் மார்கழி மாதம் மேடை கச்சேரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வரும் சூழ்நிலையில், இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி(Indian Fine Arts Society) பத்து வருடகங்களாக நாடக இசைக்கும் ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கிவருகிறது. புகழ்பெற்ற நாடக மேதை ஔவை சண்முகத்தின் மகன் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் வருடா வருடம் ஒரு நாள், அவர்களது அரங்கத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் முதல் ஔவை சண்முகம் வரை பாடப்பட்ட பல பாடல்களை பாடி காட்டி, அவற்றின் நுணுக்கங்கள், நாடக உலகிற்கு ஏற்ற விசித்திரங்கள், அவர்கள் பட்ட இன்ப துன்பங்கள், கலைஞர்களும் புலவர்களும் தங்களுக்கு அமைத்து கொண்ட பாணிகள், மக்களின் வரவேற்பு, எதிர்பார்ப்பு, போன்றவற்றை விளக்கி, தன் இசை குழுவுடன் பல பாடல்களை பாடி வருகிறார்.

ஒலிப்பெருக்கிகள் வருவதற்கு முன் பாடும் திறமையே நடிகருக்கு முக்கியமான தகுதி. அதுவும் ஆயிரம் பேர்கூடிய அரங்கில் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும் நாடகங்களில் அயராமல் பாடவேண்டும். பெண்குரல்களை போல் உச்சஸ்தாயியில் பாடும் ஆண்கள் தேவைபட்டனர். எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் இவற்றில் முக்கியமானவர்கள். பெண்கள் பலரும் ஆடவர் வேடத்தில் நடிப்பதும், ஆண்கள் பெண் வேடத்தில் நடிப்பதும் சகஜம். கேபி சுந்தராம்பாளின் குரலும் வீச்சும் அவர் செல்வத்தின் மூலதனம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் சேர்ந்து நடிக்க, ஒரே நாளில் மாலை நாடகத்தில் கிட்டப்பா முருகனாகவும் சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடிக்க, இரவு நாடகத்தில் சுந்தராம்பாள் முருகனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் வேடமேற்ற நாட்களும் உண்டு!

புராண நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், “காயாத கானகத்தே”, “தசரத ராஜ குமாரா” போன்ற சில பாடல்கள் மிக பிரபலமாயின.

மான் வேட்டை காட்சியில் மான் துள்ளும் வேகத்தில் பாடப்படும் பாடலை கலைவாணன் சொல்லி பாடி காட்ட எத்தனை முறைகேட்டாலும் சுவையும் சிரிப்பும் குறைவதில்லை.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை விட்டுவிடுவாரா கலைவாணன்? இதோ அவரை பற்றி.

நாடக கம்பெனிகள், நாடக சபைகள், போன்ற அமைப்புகள் முளைத்து வளர்ந்தன. இவைகளின் பெயர்கள் கூட சுவையானவ – கேளுங்கள்.

எல்லாம் இங்கே எழுதிவிட்டால் எப்படி?

டிசம்பர் 28 2015, திங்கள் காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை, டிடிகே சாலையிலுள்ள எத்திராஜ கல்யாண மண்டபத்தில் கலைவாணன் தமிழ் நாடக இசை பற்றி பேசி பாடுவார். வந்து ரசிக்கவும்.

பாடல்களின் சுட்டிகள்


போகுதுபார் அதிவேகமதாய் ஒரு மான்
அவ்வை சண்முகம்
எஸ் ஜி கிட்டப்பா
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்
நாடக சபைகளின் பெயர்கள்

தொடர்பான கட்டுரைகள்

Tuesday, 20 August 2013

ஔவை எத்தனை ஔவையடி- How many Avvaiyaars

“ஔவையை பற்றி எதுவும் நூல்கள் இல்லையே. ஏழெட்டு வருடமாக சென்னைப் புத்தக காட்சியில் ஆத்திச்சூடி கூட கிடைக்கவில்லை,” என்று 2009 ஆம் ஆண்டு பலரிடம் புலம்பினேன். நண்பர் , ஆசான், ரசிகர், பண்டிதர், இலக்கியக் களஞ்சியம் திரு. கண்ணன் அவர்கள் அடுத்தவாரமே பின்வரும் கையெழுத்துக் கட்டுரையை எழுதி வழங்கினார்! அவர் அனுமதியுடன் வலைப்பதிவில் சேற்க்கிறேன். அவர் தமிழில் எழுதியதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் எழுதியதை தமிழிலும் நான் மொழிமாற்றி, சமர்ப்பிக்கிறேன். பரோடா வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவர். பல்லாயிர்ம் கர்நாடக இசைப் பாடல்களின் முதல் வரிகளையும், ராகத்தையும் புத்தகமாக வெளியிட்டவர்.

Around 2009, I complained to several people, “There are no good books on (or by) Avvaiyaar. Even Aathichchoodi is not available in the Madras book fair for the last several years.” A friend, scholar, connoisseur, walking library and teacher, Mr S Kannan, gave me this handwritten note the next week! With his permission, and my translations of his English paragraphs to Tamil and vice versa, I submit this. He’s a retired employee of Bank of Baroda, well known in Carnatic music circles, as the man who created a book listing the first lines of several thousand songs and their ragas.

ஔவை : பெண்; தாய்; தெய்வப்பெண்; துறவு பூண்ட பெண்

சங்க கால ஔவையார்: (குறிப்புகள் – புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, திருவள்ளுவமாலை) இவள் சமகாலத்து மனிதர்களையும், அரசர்களையும் பற்றி பாடியுள்ளார்.
                References: puRanaanooRu, akanaanooRu, kuRunthokai, naRRiNai, thiruvaLLuvamaalai. She has composed poems on contemporary people and kings.
\
ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஔவையார்:
1.        “நல்லம்பர்… நின்னாட்டுடைத்து நல்ல தமிழ்,” என்றவர்.
2.        இவளைக்குறித்து பல கதைகள் உண்டு; நிறைய தனிப்பாடல்கள்; இனிய செய்யுட்கள்; புராணமாய் மருவிய கவிதைகள்; பழைய வரலாற்று சம்பவங்கள் இந்த ஔவையின் மேல் குவிந்துள்ளன.

1.        This was the Avvaiyaar who said, “Nallambar, your country has beautiful Tamil.”
2.        There are several stories about her; isolated poems; sweet stanzas; poems blown into popular legends. Ancient historical legends were superimposed on her.

சுமார் கி.பி. 1120 கால ஔவையார்:
                கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி இயற்றியவர். அகளங்கன் (என்ற விக்கிரம சோழன்) காலத்திலும் அவனுக்கு பின்னும் வாழ்ந்தவர்.
                பல தெய்வங்களோடும், சான்றோரோடும், புலவரோடும் இவளை பிணைத்து பொய்யான, குறும்பான, தவறான, ஒதுக்கக்கூடிய கதைகள் உள்ளன. கிடக்கட்டும்! ரசமும் சிரிப்பும் யதார்த்தமும் எள்ளலும் கிண்டலும் எளிமையும் புலமையும் நயமுடை நுட்பமும் இவளது கவிதையில் கண்ணோடு இமையாக, மண்ணோடு மழையாக கலந்து காணலாம்.
                இக்கால ஔவையார் செய்தவை யாவும் அறநூல்களே.

                Her works include KonRaivEnthan, Aaththiccoodi, mooturai, nalvazhi. She lived in the time of AkaLangan (Vikrama Chozha) and his successors.
                Many wrong, mischievous, mistaken, dismissable accounts are there associating her with great poets, personalities, or even gods/goddesses. Leaving them all aside, here is a poetess, who dabbled in interesting, humorous, worldly-wise, sweet, simple, elegant and scholarly pieces. Her works were all didactic – moralistic.

பதிநான்காம் நூற்றாண்டின் ஔவையார்:
                இரண்டு நூல் செய்துள்ளார் – 1. ஞானக்குறள் 2. விநாயகர் அகவல். பின்னது தோத்திர நூல் – பரவலாக அறியப்பட்டுள்ளது. மரபு வழி சைவர்கள் இல்லங்களில் நாள்தோறும் பாராயணம் செய்யப்படுவது. முந்தியது சாத்திர நூல்; ‘அவ்வைக்குறள்’ என்றும் சொல்லப்படுவது – 31 அதிகாரம், 310 பாடல்கள்.

                She has written two books – 1. JnaanakkuRaL 2. Vinaayakar agaval. The latter is a widely known prayer song, ritually sung everyday in some Saiva families for generations. The former is dharma literature, also called ‘OwvaikkuRaL.’ It has 310 stanzas in 31 chapters.

உலக வாழ்க்கையில் சுதந்திரமாக இருந்த ஔவையார், ஆன்ம சுதந்திரத்தை தம் பாடல்களில் வலியுறுத்தினார். பலத்தனிப்பாடல்களும் வழக்கிலுள்ளன. பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இவரிடம் இருக்கக்காணலாம்.

“காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” (இல்லறம்) என்ற வாக்கு இவருடையது.

A lady who had an independent life (not that of a housewife), this Owvaiyaar emphasized freedom of the soul in her poetry. To her is attributed the famous line: “Two lovers, united in thinking and supporting each other – that is bliss.” The bhakti movement’s impact on her is discernible.

பதினேழாம் நூற்றாண்டின் ஔவையார்:  தனிப்பாடல்கள்.  Isolated verses.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஔவையார்: பந்தனந்தூதி இயற்றியவர். Composed ‘Panthananthoothi’

பொதுவாக எல்லா ஔவைகளுமே ஓரிடத்தில் நிலையாக வாழாது, எல்லா இடங்கட்கும் சுற்றிக்கொண்டிருந்தவர்கள். இந்த இயல்பு பற்றிதான் போலும், ஒருவருக்கேனும் தம் இயற்பெயர் விளங்காது  “ஔவை” என்ற பலர் அறி சுட்டாக இருந்து வருகிறது.

மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாய் இருந்த மூதாட்டியாதலால் ஔவையார்களை பற்றி ஏராளமான கதைகளும், சம்பவங்களும் எழுந்துள்ளன; எழுதப்பட்டுள்ளன; பெரும்பாலும் புனைவே; பொருந்தாதனவே.

Generally, all Owvaiyaars were nomadic bards, restless with wanderlust, constantly moving from town to town, village to village, kingdom to kingdom. Perhaps because, we don’t know the original names of any of them; but only know them by the collective epithet “Owvaiyaar.”

Loved and respected by the people, there are several legends and myths about these Avvaiyaars, all attributed to one women. Mostly these stories are imaginary.              

இவரைப்பற்றிய நூல்கள்:
1.        விநோத ரஸ மஞ்சரி
2.        அவ்வை சரித்திரம்
3.        புலவர் சரித்திர சார சங்கிரகம்
4.        தமிழ் நாவலர் சரிதை
5.         அவ்வையார்: அனவரத விநாயகம்  பிள்ளை, 1919.
6.         சைவ இலக்கிய வரலாறு: சு. துரைசாமிப்பிள்ளை 1958, அண்ணாமலை பல்கலைக்கழகம்.


முதல் நான்கும் செவிவழி மரபு, வரலாறும் இல்லை, வாழ்க்கை சரித்திரமும் இல்லை. 5,6 சிறந்த ஆய்வு நூல்கள்.