Thursday, 12 September 2013

வரப்புயர்த்திய வல்லவன்

செப்டம்பர் 11, நியூ யார்க் நகர உலக வர்த்தக மைய கட்டிடங்கள் விமானங்களால் இடிந்து விழுந்ததற்காக உலகத்தாலும், சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளாக தமிழராலும், பூமிதான திட்டம் வகுத்து நடத்திய வினோபா பாவேவின் பிறந்த நாளா சிலராலும், விவேகாநந்தரின் சிகாகோ உரைக்காக சிலராலும் அனுசரிக்கப்படும்.

செப்டம்பர் 12, நார்மன் போர்லாக் என்ற விவசாய ஆய்வாளரின் நினைவு நாள். இவர் இறந்தது 2009 ஆம் ஆண்டு. இன்று இரவு (செப்டம்பர்) சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா பள்ளியில் வி.எஸ்.ஸ்ரீநிவாச சாஸ்த்திரியை பற்றி திரு.விப்ரநாராயணனின் உரைக்குப் பின், ரசாயன ஆசிரியர் மோகன், வினோபாவை பற்றி சிறு உரையாற்றினார். நாளை போர்லாக் நினைவு நாள் என்றேன். யார் அவர் என்றார். உலகில் பாமரர் மட்டுமன்றி அறிஞர் பலரும் சான்றோர் பலரும் போர்லாகை பெயர்கூட அறியார் என்று நம்பலாம்.

இளம் வயதில் போர்லாக்
யார் இந்த போர்லாக்? காந்தி மாவோ டெங் ஹிட்லர் சர்ச்சில் அடாடர்க் ஸ்டாலின் கோர்பாசெவ் அடேனார் ரூசவெல்ட் ரீகன் தாச்சர் போன்ற அரசியல் தலைவர்களை மிஞ்சி, ஐன்ஸ்டைன் ருதர்போர்ட் வாட்சன் பார்டீன் வான்நியூமன் ஃபார்ண்ஸ்வர்த் மார்ட்டின்கூப்பர் ஜாப்ஸ் ஸுகர்பர்க் பில்கேட்ஸ் போன்ற விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளை மிஞ்சி, கீன்ஸ் ஹாயக் ஃப்ரீட்மன் ஆகிய பொருளியல் வல்லுனர்களை மிஞ்சி, இருபதாம் நூற்றாண்டு மாமனிதராய், அருட்பெருஞ்சுடராய், சான்றோராய், உலகெலாம் ஓதற்கறியவராய், நான் நினைப்பவர் நார்மன் போர்லாக். நான் மட்டும் அல்ல…

“வரப்புயர” என்ற ஔவையின் காலம் கடந்த கவிதைக்கு தக்கதோர் தலைவன் இவனே.

பசுமை புரட்சியின் தந்தை.
நார்மன் போர்லாக்

“ஜனத்தொகை பேரபாயம்” என கற்றோரை கதிகலக்கும் ஒரு பூச்சாண்டி, இன்றும் உண்டு. உலக வெப்பமயமாக்கல் பூச்சாண்டியும், பொருளாதார சீரழிவு பூச்சாண்டியும், சில வருடங்களாக பெரிதாய் ஊதப்பட்டு, ஜனத்தொகை பூச்சாண்டி கொஞம் சோணியாகிவிட்டான். 1960களில் பஞ்சத்தால் இந்தியாவும் சீனாவும் பெரும் இன அழிவு காணும், மக்கள் கோடி கணக்கில் செத்து மடிவர், என்றெல்லாம், உலகமே மிரண்டு, அமெரிக்காவிலிருந்து இந்திரா காந்தி கையேந்தி கெஞ்ச கப்பல் கப்பலாய் கோதுமை மூட்டை வந்திறங்கி, ஒரு பெரும் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. என் தலைமுறை பிறந்தது; வாழ்கிறது. அன்று இருபது கோடிக்கு சோறில்லை என்று பெரும் பீதி. இன்று நூற்றி இருபது கோடி இந்தியருக்கும் நூற்றி நாற்பது கோடி சீனருக்கும் எந்த பஞ்ச பயமும் இல்லை.

எப்படி?

கோதுமை செடிகளுக்கு ரஸ்ட் என்று ஒரு வியாதி வரும். இரும்புக்கு வரும் துரு அல்ல; இது ஒரு வகை காளான். அதை அகற்ற ஆய்வு செய்தார் போர்லாக். ரஸ்ட் கிருமிகள் காற்றில் பரவின. ஜெட் விமானங்கள் அப்பொழுது இல்லை. ஆனால் உலகெங்கும் வீசும் அதிவேக ஜெட் காற்றில் ரஸ்ட் கிருமிகள் பரவுவதை அவர் ஆய்வு காட்டியது. அருவடை காலத்தில் இக்காற்றில் ஏறி ரஸ்ட் கிருமி உலகெங்கும் பரவி பெரும் பஞ்சம் செய்தது. பூச்சிகொல்லிகளால் மட்டும் இதை அழிக்கமுடியாது. வெவ்வேறு காலத்தில் அருவடைக்கு தயாராகும் கோதுமையை செயற்கையாக உருவாக்கி அருவடை கால இழப்பை பெரிதும் குறைத்தது போர்லாகின் முதல் வெற்றி. “இயற்கை விவசாயம், அந்த்கோ” என்மனார் ஊடகப்புலவர். “விவசாயம் என்பதே முழுக்க முழுக்க செயற்கை” என்று எதிர்த்துப் பேச ஒரு நக்கீரனையும் காணோம்.

ஆள் உயரம் வளர்ந்த நெல் கதிர்களில் ஒரு கையளவு நெல் இருக்கும். அதில் பாதி உயரம் வளரும் நெல்லில் இரண்டு கையளவு நெல் இருக்கும். ஒரே நிலத்தில் இருமடங்கு நெல் வளர்ந்தால் இரு மடங்கு மக்கள் உண்ணலாம். இது தான் போர்லாக் செய்த பசுமை புரட்சியின் அடிப்படை கணக்கு. இதற்கேற்ற குள்ள கோதுமையை செய்தது போர்லாகின் இரண்டாம் வெற்றி. ஆனால் மெக்ஸிகோவில் விஞ்ஞானத்திற்கு எட்டிய வெற்றி வயலுக்கு எட்டவில்லை. அங்குள்ள பல விவசாயிகளுக்கும் அரசிற்கும் போர்லாகின் விஞ்ஞானத்தின் மீது சந்தேகங்கள் பெரிதும் இருந்தன. (மரபணு பூச்சாண்டி காட்டி நகரத்தில் வாழும் நடுத்தர மக்களை மிரட்டுவது ஊடக மேதைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு. விஞ்ஞானம் கிலோ என்ன விலை என கேட்கும் கலையுலக ஜாம்பவான்களும் சமூக முன்னேற்ற வண்டு முருகர்களுக்கும் இது ஒவ்வா நன்மை.)

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் இங்கே தன் கோதுமையை பரிசோதித்தார். முதலில் மெக்ஸிகோவைப் போல இங்கும் பல தடைகளும் சவால்களும் இருந்தன. நெல்லுக்கு பிச்சை எடுக்கும் நிலையிலும் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளும் நிலையும் வந்ததாலும், சி சுப்ரமணியன் என்ற அமைச்சரின் ஆதரவாலும், இரு நாட்டின் பஞ்சாப் மாநில விவசாயிளின் வரவேற்பினாலும், அணைகள் கட்டியதால் தண்ணீர் வசதிகள் இருந்ததாலும், போதுமான செயற்கை எரு தயாரிக்க முடிந்ததாலும், மெக்ஸிகோவில் விதையா நெல், பருவத்தை மீறி பாரதத்தில் பழுத்தது. சில வருடங்களில் ஐஆர்20, ஐஆர் 8 போன்ற அரிசி வகைகளும் படைக்கப்பட்டு, அதற்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் நெல்மல்கும் நாடாய் மாறின. ஐஆர் என்பது International Rice Research Institute என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலெழுத்துக்கள். எம் எஸ் சுவாமிநாதன் தலைமையில் இந்தியாவில் இந்த ஆய்வுகள் நடந்தன.

1970 இல் நார்மன் போர்லாக் அமைதிக்கு நோபல் பரிசு பெற்றார். சி சுபரமணியன் பாரத் ரத்னா விருது பெற்றார். நார்மன் போர்லாகும் எம் எஸ் சுவாமிநாதனும் பத்ம விபூஷன் பெற்றனர். அவர் பிறந்த நாளான மார்ச் 25 இல் நான் என் முதல் வலைப்பதிவில் ஹாபர்-பாஷ் பற்றி எழுதினேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
நெல்லாண்ட வரப்புயர் போர்லாகே, நின் பணி செவ்வி திருகாப்பு.


திருத்தம் 28-3-2015

1. எம் எஸ் சுவாமிநாதன் பாரத் ரத்னா பெற்றதாக தவராக எழுதியிருந்தேன். அவர் பத்ம ஸ்ரீ, பத்ம் பூஷன், பத்ம் விபூஷன் பரிசுகள் பெற்றுள்ளார். 

2. இருபதாம் நூற்றாண்டில் நான்கு பசுமை புரட்சிகள் நடந்திருக்கின்றன என்பது என் கணிப்பு. அந்த வரிசையில் போர்லாகின் பசுமை புரட்சி நான்காம் புரட்சி. இவற்றுள் மூன்றை பற்றி எழுதியுள்ளேன் - சுட்டிகள் கீழே. பாசன புதுமைகளை நான்காவது புரட்சியாக கருதுகிறேன் - பெரும் அணைகட்டுகள், மின்சார பம்புகள், நெடுநீள கால்வாய்கள், சொட்டுநீர் பாசனம் போன்றவை இதனுள் அடங்கும். இதை பற்றி நான் எழுதவில்லை. ஆனால் பக்ரா நங்கல் போன்ற பெரும் அணை திட்டங்களும், அவற்றை ஜவஹர்லால் நேரு பாரதத்தின் புதிய கோவில்கள் என்று புகழ்ந்ததும் நாடறிந்தவை.மற்ற பசுமை புரட்சிகள்

1. செயற்கை எரு - காற்றை கறந்து எரு படைத்த மேதையர் 
2. டீசல் வண்டிகள் - டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி

1 comment:

  1. GOPU SUPER N MSS IS D FATHER OF G R IN OUR COUNTRY!SUPER

    ReplyDelete